வனம் 5

செப்டம்பர்-அக்டோபர் 2005

ஆசிரியர்கள்: ஜீ.முருகன், ஸ்ரீநேசன்

ஆத்மாநாமும் கவிதையும்

ஓர் உரையாடல்

ஜீ. முருகன்: நம் இருவருக்குமே 89 இல்தான் (முழுத்தொகுப்பு மீட்சி வெளியீடாக வந்த பிறகு) ஆத்மாநாமின் கவிதைகள் அறிமுகமாகியிருக்கின்றன. அவருடைய கவிதைகளை அப்போது வாசித்ததற்கும் இப்போது வாசிப்பதற்கும் எப்படி உணர முடிகிறது?

ஸ்ரீநேசன்: ஆத்மாநாம் அறிமுகமாவதற்கு முன் நகுலனின் சுருதி’, கலாப்ரியாவின் மற்றாங்கே , ஞானக்கூத்தனின் அன்று வேறு கிழமை’, விக்கிரமாதித்யனின் ஆகாசம் நீல நிறம், பசுவய்யாவின், யாரோ ஒருவனுக்காக, கலயாண்ஜியின் புலரி போன்ற நவீன கவிதைத் தொகுப்புகளை வாசித்திருந்தேன். 87-88 இல்தான் எனக்கு நவீன இலக்கியப்பரிச்சயமே உண்டானது. தொடக்க நிலையில் நான் கவிதைகளின் கவித்துவத்தை கவனத்தில் கொள்ளாமல் கருத்துக்களிலேயே ஆர்வம் கொண்டி ருந்தேன். கவிதைகள் எவ்வாறு எழுதப்பட்டுள்ளன என்பது பற்றியெல்லாம் எனக்கு யோசனையில்லை. என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பது தான் முதன்மையாக இருந்தது. அந்த வகையில் ஆத்மாநாமின் புதிய கருத்தாடல்களைக் கொண்ட வெளிப்படையான எளிமையான கவிதைகளே என்னை மிகவும் கவர்ந்தன. அதுவரையிலான பாடநூல் கவிதை, மேடைக்கவிதை, ஜனரஞ்சகமாகப் புகழ்ப்பெற்றிருந்த கவிஞர்களின் கவிதை ஆகியவற்றிலிருந்து இத்தகைய நவீன கவிதைகளின் தன்மையும் பாடு பொருள்களும் வித்தியாசமான தளத்திலிருந்ததைக் கண்டு கொண்டேன். என் இலக்கிய புத்துணர்வுக்கு இணக்கமான ஒரு அலைவரிசையை அவைக் கொண்டிருந்தன. இவ்வாறுதான் ஆத்மநாமின் கவிதைகளோடு ஒரு இனம்புரியாத நெருக்கம் ஏற்பட்டது. பின்பு குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் நான் அதிகமாக வாசித்த கவிதைகள் ஆத்மாநாமுடையவைதாம், பலவித மனநிலைகளில், பருவங்களில், இடைவெளிகளில் ஆத்மாநாமைப் பயின்றுக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு வாசிப்பின் போதும் சில புதிய கவிதைகளைக் காண நேரும். இதுவரை இக்கவிதையைக் கவனிக்கக் காணோமே என எண்ணும் அளவுக்கு அவைப் புதியனவாக இருக்கும். இந்த விநோதத் தன்மை இன்றுவரை ஆத்மாநாமை வாசிக்கும் போதும் தொடர்கிறது. தொடக்கத்தில் வாசித்தபோது பிடித்தக் கவிதைகள் பலவும் இன்னும் பிடித்திருக்கிறது. ஆச்சரியம் என் கவிதை வாசிப்பனுபவம் பல நிலைகளை, நூல்களைக் கடந்த பின்னும்; வாசகனாக இருந்து இன்று கவிதைகள் எழுதுபவனாக மாறிய பின்பும். ஆனால் சில கவிதைகள் அலுப்பூட்டவும் செய்கின்றன ; காரணம் என் அதிகப்படியான ஆத்மாநாம் வாசிப்பினாலும் பாடுபொருள்களின் கருத்தாக்கங்களில் பல இன்று பழமை கொண்டிருப்பதாலும் என நினைக்கிறேன். ஆனாலும் இன்று தொடக்க நிலை வாசகனுக்கு அறிமுகப்படுத்தவோ, வகுப்பறைகளில் மாணவர்களுக்கு கவிதைகளைப் பரிச்சயப்படுத்தவோ நினைக்கையில் நான் ஆத்மாநாமையே முதன்மைப்படுத்துகிறேன்.

ஜீ. முரு: ஆத்மாநாம் மீதான ஈர்ப்புக்கு அவருடைய பெயருடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தற்கொலை என்ற விஷயம் காரணமாகிறதா?

நே: ஆத்மாநாம் கவிதைகளின் அறிமுகத்துக்கு முன்பே அவரது தற்கொலை சம்பவத்தைக் கேள்விப்பட்டிருந்தேன். அது எனக்கு வினோதமாகவும் அதிர்ச்சியும் வியப்புமளிப்பதாகவும் இருந்தது. அச்சம்பவம் அவருடைய பெயருக்குக் கூடுதலாக ஒரு கவர்ச்சியை எனக்குள் ஏற்படுத்தத்தான் செய்தது. அகாலத்தில் செத்தவர்களின் கூற்றுகளை நாம் மிகையாகப் புரிந்து கொள்வதைப் போலவே சற்று விசேஷமாக கவனித்துப் படிக்கச் செய்தது. உலக அளவில் எடுத்துக்கொண்டாலும் ஆன்செஸ்ட்டர்ன், சில்வியா பிளாத் போன்ற கவிஞர்களின் தற்கொலை நிகழ்ச்சிகள் அவர்களது கவிதைகளின் மீது ஒரு கூடுதல் கவனத்தைத் திருப்பவே செய்துள்ளன.

முரு: அவருடைய இல்லாத தலைப்பு, நாங்களும் நீங்களும் அவர்களும், போய்யா போ, நிஜம் போன்ற கவிதைகள் காம்போசிசன் – அதாவது செய்து பார்த்தல் வகையானது என்றே தோன்றுகின்றன. ஆனால் பிரத்யேக அனுபவங்களும், மனநெருக்கடிகளும், உணர்வெழுச்சிகளுமே கவிதையின் தோற்றுவாய்க்குக் காரணமானவையாக நாம் கொள்வோம் எனில் இது போன்ற வகை மாதிரிகளை எப்படிப் பார்ப்பது?

நே: இரண்டு வகையிலுமே கவிதைகள் சாத்தியமாகின்றன என்பதுதான் உண்மை. கவிஞனின் கவனம் மீறிய உணர்வெழுச்சி மட்டுமல்ல, கவனத்துடன் மொழி ரீதியாக செய்துபார்க்கும் காம்போசிசன் வகையானவைக் கூட கவிதைகளாகின்றன. ஒரு கருத்தை, உணர்ச்சி வேகமாக புனைவாக வெளிப்படுத்தும்போது அது உணர்ச்சியைச் சார்ந்ததாகவும், ஓர் உணர்ச்சி வேகத்தை, நின்று நிதானமாக ஆராய்ந்து சித்திரிக்கும்போது அது ஒரு கருத்தாகவும் மாறக்கூடிய வாய்ப்பு உண்டுதானே? தவிர இன்றைய நடைமுறை வாழ்வில் முழுநேரமும் கவிஞனுக்கான உணர்ச்சி நிலையுடன் இருப்பது என்பது முடியாதே! பாரதி போன்றவர்கள் பலவகையில் அவ்வுணர்ச்சியை உருவாக்கி வேகப்படுத்திக் கொண்டவர்கள் என அவர்களது கவிதைகளை வாசிக்கும் போதே நாம் தெரிந்து கொள்கிறோம். அதே பாரதியிடம் வாழ்த்துப் பா வகையான உணர்வெழுச்சியற்ற செய்யுள்களும் காணக்கிடைக்கின்றன. கடமை சார்ந்த சடங்கார்த்தமான அவ்வகைச் பாக்கள் ஆய்வாளர்களுக்கு உதவக் கூடும். அதை நாம் பொருட்படுத்துவதேயில்லை. தவிர கவிதை எழுத வேண்டும் என்ற ஆர்வத்தில் பல நேரங்களில் அதற்கான மனவெழுச்சி உருவாகியும் அதற்கான பொருண்மையோ களமோ அமையாத போதுதான் இந்த செய்துபார்த்தலும் நேர்கிறது எனத் தோன்றுகிறது. இவ்விரண்டு நிலைகளையும் மீறி மரபுக் கவிதைகளில் இலக்கணத்துக்கு தக வார்த்தைகளைக் கோர்க்கும் போது கவிதையின் போக்கு அமைவது போலவே, ஆத்மாநாமிலும் வார்த்தைகளை (அ) காட்சிகளைத் தொடர்ச்சியாக சங்கிலியாகக் கோர்த்து அதன் அர்த்தப் போக்கில் வளர்த்தெடுத்து உருவான மூன்றாம் விதமான கவிதைகளையும் பார்க்கிறோம். களைதல், தும்பி, அழிவு, ஒன்றும் இல்லை, இவர்களை எல்லாம் எனக்குத் தெரியும் போன்ற கவிதைகளும் இவ்வகையைச் சார்ந்தவைதான். கவிதை அதன் இயல்பில் கிடைத்ததா அல்லது செய்துபார்த்தலில் கிடைத்ததா என்பதையெல்லாம் மீறி, கிடைத்த கவிதை கவிதையாக உள்ளதா என்பதைப் பொறுத்துதான் நாம் பேச வேண்டும். ஆத்மாநாமே, கவிதைகளில் நல்ல கவிதை, கெட்ட கவிதை என்றெல்லாம் இல்லை; கவிதை, கவிதையல்லாதது என்று மட்டுமே உண்டு என்பதுபோல சொல்லியிருக்கிறாரே! ஆத்மாநாம் மறைவுக்குப் பின்பு தமிழில் அறிமுகமான நவீன கவிதைக் கோட்பாடுகள் செய்து பார்த்தல் வகையான கவிதைகளுக்கும் போதிய இடமிருப்பதை வலியுறுத்தி யுள்ளனவே. கொல்லாஜ் வகையான வெட்டி ஒட்டுதல் – ஓவியத்தில் மட்டுமல்ல; மொழி சார்ந்த கவிதையிலும் சாத்தியமாகலாம் என்பதை ஒத்துக் கொள்ள மாட்டீர்களா என்ன? ஆழ்ந்த அனுபவங்களும் உணர்ச்சியும் கூடிய கவிதைகளை Deconstruction முறையில் கட்டுடைத்துப் படித்து வேறொரு பொருள் கொள்ள வாசகனுக்கு உரிமையுள்ளதெனில் அறிவார்த்தமான மொழி விளையாட்டில் புதுவகைக் கவிதைகளை எழுதிப்பார்க்க கவிஞனுக்கும் தேவையிருக்கத்தானே செய்கிறது.

முரு: மேலான கலை உணர்வும், உள்ளார்ந்த தேடுதலும், சமூகப்பிரக்ஞையும் ஒன்று குவியும் மையமாக அவருடைய கவிதைகள் இயக்கம் கொள்கின்றன. பிரம்மராஜனுடனான உரையாடலில் ஆத்மாநாம் சொல்கிறார்: ‘‘ ஒரு கவிஞனை முழுமையான கவிஞன்னு சொல்லணும்னா அவனுக்கு சோஷியல் ஆகவும் ஒரு கமிட்மென்ட் இருக்கணும் பர்சனலாகவும் ஒரு கமிட்மென்ட் இருக்கணும்.’’ அப்போது எழுதிய நிறைய கவிஞர்கள் இந்தத் தகுதி படைத்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது எழுதும் பெரும்பாலானவர்களிடம் இது தென்படுவதில்லையே இதை ஒரு குறையாகப் பார்க்கலாம்.

நே: முருகன், இது ரொம்ப விரிவா பேச வேண்டிய விஷயம் எனத் தோன்றுகிறது. மணிக்கொடி இதழ்களில் ந. பிச்சமூர்த்தி, பாரதிதாசன் இருவருமே கவிதைகள் எழுதியிருக்கிறார்கள். பிச்சமூர்த்தி அதில்தான் ஒளியின் அழைப்பு என்ற தலைப்பிலான சோனி கமுகு பற்றிய கவிதையை எழுதியிருக்கிறார். பாரதிதாசனோ அன்று வடநாட்டில் ஏற்பட்ட பூகம்ப அழிவு ஒன்றுக்கு நிவாரணம் வேண்டி நிதி கேட்டுக் கவிதை எழுதியிருக்கிறார். இதை வைத்துக் கொண்டு பாரதிதாசனுக்குதான் சமூக ஈடுபாடு அதிகம் இருந்தது என முடிவுக்கு வந்து விட முடியாது. பிச்சமூர்த்தியின் கவிதை, அதிகாரத்தின் கீழ் பலமிழந்து கிடக்கிறவர்களின் எதிர்ப்புணர்ச்சியை, வாழ்வெழுச்சியை மிகவும் தேர்ந்த சொற்களில் இயற்கை சார்ந்த குறியீட்டில் அழுத்தமாக வெளிப்படுத்துவதாக வாசிக்க இடமிருக்கிறது. ஆனால் என்னவாயிற்று? ந.பிச்சமூர்த்திக்கும் பாரதிதாசனுக்கும் இச்சமூகத்தில் கிடைத்த அங்கீகாரங்களின் வேறுபாட்டை நாம் தாம் கண்டிருக் கிறோமே! எழுத்து அதை வாசிக்கும் வாசகனோடு அந்தரங்கத் தொடர்புடையது. அந்தரங்கமாகவே அவனது அனுபவத்தை வளர்த்தெடுத்து அடுத்த நிலைக்கு இட்டுச்செல்வது. எழுத்து, மேடைகளிலோ ஊடகங்களிலோ இடம் பெறும்போது ஒரு கருவியாகி விடுகிறது. பாரதிதாசன் தான் கவிஞராக மட்டுமின்றி சமூக செயல்பாடு மிக்க இயக்கத்தின் பிரச்சாரகராகவும் இருந்திருப்பதை கவனிக்க வேண்டும். அதை நான் குறையாகச் சொல்லவில்லை. ஆனால் கவிதைகளில் கவிஞனது பிரச்சாரம் தலையெடுக்கும் போது கவிதை குன்றிப் போக நேரும். கூரிய வாசகனுக்கு மாற்றாக கோஷங்களை முழக்கமிடும் தொண்டர்கள் உருவாகி விடுகிறார்கள். கலை என்பது இவ்விதத்தில் ஓர் அபத்தமான பயன்பாட்டுப் பொருளாக ஆக்கப்பட்டுவிடுகிறது.

ஆத்மாநாமைப் பொருத்தவரை சமூகச் சொல்லாடல் கவிதைகளை இந்த அளவுக்குக் கொண்டுபோகாமல், சீரிய வாசகனிடத்தில் தனிமையில் பொருமு வதான தொனியில் வெளிப் படுத்துகிறார். இதன் மூலம் கிடைக்கும் வாசக அனுபவம் வாசக அனுபவமாகவே முழுமைபெறுகிறது. இவ்வகையான சமூகச் சார்புத்தன்மை வாசகருக்குப் பயன்படுகிறது என்பதைக் காட்டிலும் கவிஞனின் அக்கறையை புரிந்து கொள்வதற்கும் அவனது ஆளுமையை மதிப்பிடவுமே அதிகம் உதவலாம். மட்டுமில்லாமல் வேறுபட்ட ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்ட வாசகர்கள் அவர்களுக்கான கவிதைகளாகவே அவற்றை எடுத்துக் கொள்வர். ஆத்மாநாம் கவிதை எனும் வார்த்தைக் கூட்டம் பற்றி என்ற கட்டுரையின் பின்பகுதியில் பாரதிதாசனை நான்கு மேற்கோள்களில் எடுத்துக்காட்டியிருக்கிறார். அவருடைய Social commitment’ என்ற கருத்து ஆதரவுக்கு இது அடையாளமாகிறது. இது ஆத்மாநாமின் சமூக அக்கறை சார்ந்த கருத்தியலின் அழகியலை முன்னி றுத்துகிறது. ஒரு வகையில் இத்தன்மை கவிஞர்களின் பார்வை – நம்பிக்கையைச் சார்ந்ததுதான். ஆனால் நகுலனிடம் என்ன சோசியல் கமிட்மென்டைப் பார்க்கிறோம்? ஜென் கவிதைகளில் அது எவ்வாறு பதிவாகிறது? வானம்பாடிக் கவிஞர்கள் பலரும் தம் கவிதைகளுக்குச் சமூக நோக்குப் பார்வையைத்தானே பலமாகக் கொண்டார்கள். என்ன மிஞ்சியது? இன்குலாப் ஒரு பேட்டியில் ஓர் உண்மையை உணர்ந்து வெளிப்படுத்தி யிருக்கிறார். கசடதபற கவிதைகளின் மொழியையும், வானம்பாடி கவிதைகளின் உள்ளடக்கத்தையும் கொண்ட கவிதைகள் தமிழில் உருவாகியிருக்க வேண்டுமென்று. அவைதான் மொழியில் மேலும் எளிமை கொண்டுள்ளதான ஆத்மாநாமின் அரசியல் கவிதைகள். அவரது அரசியல் கவிதைகளைப் பொருத்தமட்டில் ஓர் இலக்கிய வாசகனுக்குப் பயன்படுவதைக் காட்டிலும் மேலானதாக அரசியல் இயக்கத்தாருக்கோ, கட்சி ஊழியனுக்கோ உதவிவிடும் என நாம் நம்பத் தேவையில்லை. அரசியல் கவிதை களுக்காக ஒரு காலத்தில் கொண்டாடப்பட்ட பாப்லோ நெரூடா தற்போது அரசியல் தவிர்த்துப் பிற கவிதைகளுக்காக கவனிக்கப்படுவதை தமிழ்ச் சூழலைக் கொண்டே அறியவும் முடிகிறதே தவிர வெளிப்படையான அரசியல் அல்லது சமூகப் பார்வை என்பது ‘content’ அளவில் ஒரு தேய்ந்த பாடுபொருளே. இன்றைய நுண்ணிய பார்வை சார்ந்த மொழிதலின் காலகட்டத்தில் அதுவொரு பெருங்கதை யாடல்தானே?

முரு: ஆத்மாநாமின் தீவிர நிலைக்கு அவருடைய அற உணர்வுதான் காரணமாக அமைகிறதா?

நே: அவர் எழுதிய காலகட்டம் வரையிலும் கூட அறவுணர்வு குறித்த நம்பிக்கையும் அதையே வாழ்வின் மைய சக்தியாகவும் கருதி வலியுறுத்தும் போக்குமிருந்தது. சமூகப் பிரக்ஞையும் மனசாட்சியும் கொண்ட கலைஞர்களுக்கு அறத்தை நம்பவேண்டியும் அதைப் பரவலாக்க வேண்டிய கனவும் இருந்தது. அதை நனவாக்க முயற்சிக்கும் படைப்புச் செயல்பாடுகளும் தோன்றின. இன்றும் கூட அறத்தை வலியுறுத்தி சூளுரைக்கும் கலைஞர்கள் உண்டு. ஆயினும் இன்று இலக்கியத்தின் போக்கு நவீனத்துவத்தைத் தாண்டி அமைப்பியல், பின் அமைப்பியல், பின் நவீனத்துவம் போன்ற புதிய கருத்தாடல்களின் வழியே தாவிச் சென்று கொண்டிருக்கிறது. அறம் என்ற சொல்லே இன்று கேள்விக்குள்ளாக்கப் படுவதைப் பார்க்கிறோம். அறமே அதிகாரம் என்ற புதியப் புரிதலை அடைந்திருக்கிறோம். இலக்கியத்தில் பேசப்படும் அறமும் அதிகார மையமாகக் கூடாது என கவனம் கொள்ள தொடங்கியிருக்கிறோம். அறம் என்றால் யாருடைய, யாருக்கான அறம் என்றெல்லாம் உபகேள்விகள் கிளம்பு கின்றன. நீதி இலக்கியங்கள், காப்பியங்கள் வலியுறுத்தியவையும் அறம்தான். ஆத்மாநாம் நம்புவது அத்தகையதான அறமாக இருக்கவில்லை. நல்லது கெட்டது என்ற பேதத்தை நகையாடுபவர் எப்படி யாரிடம் அறத்தைக் கோருவார். அறமே ஒரு கெட்டித்தட்டிப்போன அதிகாரமாக மாறிய நிலையில் அதைக் கேள்விக்குட்படுத்தும் புதுவிதமான அறச்சீற்றம்தான் ஆத்மநாமுடையது. ‘‘உண்மையைத் தவிர வேறு எதுவும் இலக்கியமாக முடியாது என்பதில் நம்பிக்கை உள்ளவர்’’ என அவரே அவரைப் பற்றிக் கூறிய கூற்றில் வெளிப்படும் உண்மைதான் அறம் எனில் ஆத்மாநாம் அற உணர்வு கொண்ட வர்தான்.

முரு: அவருடைய பெரும்பாலான கவிதைகளில் தொடரும் சில கூறுகள் அலுப்பூட்டுவதாக இல்லையா?

நே: ஆத்மாநாமின் அக்கறை அணுவிலிருந்து ஆகாயவெளியளவுக்கு அகண்டிருப்பினும் அனுபவப்பரப்பு குறிப்பிட்ட எல்லைகளையே வைத்துக் கொண்டிருக்கின்றது. நிறைய கவிதைகளில் அவர் கவிதைப் புனைவு குறித்துப் பேசுபவராகவும், தான் கவிஞன் என்ற கவனத்துடன் கவிதைக்குள் இயங்குபவராகவும் உள்ளார். பெரும்பாலான கவிதைகளில் நான் என்ற அம்சம் தூக்கலாக ஒலித்தும், திரும்பத் திரும்பப் பயன்படுத்தவும் பட்டிருக்கிறது. இயற்கையும் இயற்கைக்கு எதிரான மனிதச் செயல்பாடுகளும் செயல்பட் டுள்ளன. அன்பு என்ற கோரலை பல கவிதைகளில் வலியுறுத்தும் போக்கில் பலவீனமாகியுள்ளன. மேற்கண்ட இவற்றுக்குள்ளாகவே பல கவிதைகளின் இயங்குதளம் இருப்பதால் கூறியது கூறல் போன்ற ஒரு தன்மை தலைகாட்டதான் செய்கிறது. இது அலுப்பில்லை. போதாமையை நிறைவு செய்யும் பணியே இன்றைய கவிஞர் களுக்கான கடமையாக உள்ளது எனலாம்.

முரு: கடவுள் என்ற கருத்தாக்கம் ஆத்மாநாமிடம் எப்படி அர்த்தம் கொள்கிறது?

நே: கடவுள் குறித்து உண்மை,தரிசனம் ஆகிய இரண்டு கவிதைகளில் வெளிப்படையாகப் பேசியிருக்கிறார். இரண்டிலுமே அவர் கடவுளைப் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை என்றே தோன்றுகிறது. இந்த நூற்றாண்டுக் கலைஞனுக்குக் கடவுளின் தேவை மிக அரிதாகவே இருக்கிறது. கடவுளின் இடத்தைக் கவிதை பிடித்துக் கொண்டதை ஆத்மாநாமும் அறிந்தி ருப்பார். இயக்கம் ஒன்று கவிதையில் உடும்புப் பிடியில் சிதைந்தஞிகடவுளைஞிஇழுத்துத் தெருவில் வருகின்றார் என்ற சித்திரிப்பின் வழியாக அவர் கடவுளைக் கவனித்த விதம் புலப்படுகிறது. ஆத்மாநாமின் கோரிக் கைகள் அனைத்தும் சக மனிதர்களை நோக்கியதுதான். அவர் கடவுளை அணுகுவதேயில்லை. தரிசனம் கவிதையில் கடவுளைக் கண்டாலும் எதையும் கேட்கவே தோன்றவில்லை என்கிறார். அவரும் புன்னகைத்துப் போய்விடுகிறார். அது அவர் பலவிடங் களில் கோரும் அன்பின் அடையாளம். ஆயினும் மனதினிலே ஒரு நிம்மதி என்பதும் கூட அதன் பொருட்டாகத்தான் இருக்கக்கூடும். களைதல் கவிதையிலும் தன்னை, தன் உடலை, நானை, சூன்ய வெளியை என அனைத்தையும் களைந்து பார்த்தாலும் ஒன்றுமே இல்லை ; (கடவுளைக் கூட). முடிவு கவிதையில் ஒரு பிரஸ்தாபம்: ‘‘யார் நீ என்றொரு குரல்/ உன்னைத் தேடி அலுத்தஞ/ ஆரம்பம் என்று கூற/ உன்னுள்தான் இருக்கிறேன்/ என்றது முடிவு.’’ இவ்வரிகளில் கடவுள் தன்னுள்ளே இருப்பதான முடிவுக்கு வருகிறார் எனலாம். நான்தான் நான் கவிதையிலும் இதை வெளிப் படையாகவே அறிவிக்கிறார்.பூஜை கவிதையில் ஆயுதங்களை ஆராதிக்க இயற்கை சார்ந்த விளைபொருளான பூசணிகளை உடைத் து பூஜை செய்வதை வயிறு வெடிக்கச் சிரிக்கும் /பூசணிகள் நடுத்தெருவில் எனக் கூறி அபத்தத்தையே வெளிப்படுத்துகிறார். தறுதலை மரத்தைச் சுற்றிப் பிறந்த பிள்ளைக் குறித்துக் கூறும் சுற்றி கவிதை கடவுள் நம்பிக்கையைக் கிண்டலடிக்கும் ஒன்றுதான். வேலை கவிதையில் உரத்தே ஒலிக்கிறர் இறை வழிபாடு உணவாகாது என்பதை.

மேற்கூறிய கவிதைகளில் ஒரு நாத்திகக் கிண்டல் வெளிப்பட்டாலும் அது எவ்வகையிலும் தி.க. கட்சிப்பிரச்சாரம் போலல்லாத வேறு தள வெளிப்பாடு.

முரு: அணுகுண்டு, அழிந்து கொண்டி ருக்கும் மனித வாழ்நிலையைப் பல கவிதைகளில் காணமுடிகிறது. எதிர் காலத்தின் மீது நம்பிக்கையற்ற ஓர் ஆன்மா என்று அவரைச் சொல்லலாமா?

நே: அணுகுண்டு பற்றி இரண்டு அல்லது மூன்று கவிதைகளில் சில வரிகளில் மட்டுமே பதிவாகியிருக்கிறது என நினைக்கிறேன். ஆனால் மிகப் பெரிய வீச்சோடு அவை வாசகனை அச்சுறுத்தும் படி தாக்குகின்றன. அணுக்கசிவைக் குறித்த பதற்றத்தை ஒரு முழுக் கவிதை கொண்டுள்ளது. நான் கவிதையில் இடம் பெறும் அணுப் போர் குறித்த ஒரு வரி ஒரு காலகட்டத்தையே பதிவாக்கியுள்ளது. ‘2083 ஆகஸ்ட் 11’ கவிதையில் ஞானக்கூத்தனும் ஆத்மாநாமும் உரையாடிக் கொண்டிருக்கும்போதே அணுகுண்டு வெடித்த சப்தம் கேட்க, அகதிகள் முகாமிற்குத் திரும்புவதாய் ஒரு காட்சி. அணுச்சோதனையின் விளைவை வேறு சில கவிஞர்கள் உவமை, உருவகப்படுத்தி (ராட்சச நாய்க்குடைக் காளான்?) எழுதியிருக்க, ஆத்மாநாம் இக்கவிதையில் அதை அனுபவப் படுத்தவே செய்திருக்கிறார். எதிர் காலத்தில் அதாவது 2083 இல் ஏற்படப்போகும் இவ்வவலச் சித்திரத் தைக் கொண்டு நாம் அவரை எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்ற ஆன்மா என வரைவு செய்துவிட முடியாது. பிற கவிதைகள் சிலவற்றின் மூலம் அதிக நம்பிக்கை கொண்டவராகவே தெரிகிறார். அழிப்பது இயல்பு தோன்றுதல் இயற்கை’’ என்ற வரிகளாகட்டும் நாளை நமதே என்ற அறிவிப்பாகட்டும், ‘அந்தப் புளிய மரத்தை கவிதையில் வெட்டப்பட்ட புளிய மரத்தின் இலை தழைகளுக்கிடையே ஒரு புளியஞ்செடி தன்னைப்பார்த்துக் கொண்டது எனச் சுட்டிக்காட்டு வதிலாகட்டும், ‘முடிவில் என்ற கவிதை மூலம் காட்டும் எல்லாவற்றிலுமே ஒரு நம்பிக்கையின் வேர் படர்ந்திருப்பதைப் பார்க்கிறோம். வீடு என்ற கவிதையில் என்னை எரித்துவிடு, புதைத்து விடு எனச் சொல்லி வருகிறவர் இறுதியில் என்னை வாழவிடு, பறக்க விடு என முடித்திருப்பதையும் கவனிக்க வேண்டும். ரோஜாப் பதியன்கள் கவிதையை காலை வருவதை எண்ணியபடி என முடித் திருப்பதும்; கவிதையில் கற்பாறைகள் படகாவதும் எழுதுங்கள் கவிதையில் எழுதுங்கள் பேனா முனையின் உரசலாவது கேட்கட்டும் என்பதெல்லாமும் நம்பிக்கை சார்ந்ததே. அணு ஆயுதம் போன்றவற்றை மனிதகுல நாச சக்தியாக அன்றைய சூழலின் காரணமாக முன்வைத் தாரெனினும், அது ஒரு அறிவுபூர்வமான எச்சரிக்கைப் பதிவுதான். இன்றைய சூழலில் மனிதனால் ஆக்கப்பட்ட அணு ஆயுதங்களைக் காட்டிலும், இயற்கையால் நிகழ்ந்து கொண்டிருக்கும் பேரழிவுகள் குறித்த அச்சம் பன்மடங்கு அதிகம். இயற்கை வளங்களை நாம் நம் சுயநலத்தினால் அழித்ததன் காரணமாகவே மழையின்மை, வெப்பமிகுதி, நில நடுக்கம், கடல்மட்டம் உயர்வு, சுனாமி போன்ற தீர்க்கவே முடியாத பிரச்சனைகள் ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் ஆத்மாநாமின் செடியுடன் ஒரு உரையாடல் கவிதை மிக முக்கியமாகிறது. அவரது மிகச் சிறந்த கவிதைகளுள் ஒன்றான இது அவர் அணு ஆயுதங்களைக் குறித்து பேசியது எல்லாவற்றையும் விட அதிக முக்கியமானதாகப்படுகிறது.

முரு: அவர் தனது கவிதைகளில் தொடர்ந்து உரையாடலை ஒரு உத்தியாக மேற்கொள்கிறார் இல்லையா?

நே: ஆமாம், என் ரோஜாப் பதியன்கள், செடியுடன் ஓர் உரையாடல் போன்ற சிறந்த கவிதைகள் உரையாடல் உத்தியோடு எழுதப்பட்டவைதான். அன்றைய புதுக் கவிதைகளில் இத்தகைய உரையாடல் ஒரு புதுவகை. ஒரு வகையில் குழந்தை களுக்கானப் புனைவுலக தர்க்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. தாவரங்களுடன் உரையாடுதல் என்பது மிகு புனைவுத் தன்மையானது எனினும் அதன் உள்ளார்ந்த அதீத உணர்வு தளம் மிக முக்கியமானது. அதற்கேற்பவே அவற்றின் மொழியும் மிக எளிதானது. இந்த எளிய உரையாடல் தன்மை வாசகனுக்குக் கவிதைகளில் நுழைவதற்கான லகுத் தன்மையை தருகின்றன. ஒருவிதமான நாடகியத்தையும் அது கொண்டுள்ளதால் கவிதைகளை அதன் ஆழம் வரை சென்று பார்க்க இடமளிக்கிறது. இயற்கை குறித்தாகட்டும், அரசியல் மையக் கவிதைகளாகட்டும், தன்மையில் நிகழ்த்தும் தனிமொழியாகட்டும் எல்லா நிலையிலும் இவ்வுரையாடல் உத்தி சிறப்பாகவே கையாளப்பட்டுள்ளது. டெலக்ஸ்’, ‘2083 ஆகஸ்ட் 11’ போன்ற கவிதைகளில் இத்தன்மை தீவிர நிலையையும், ‘பேச்சு’, ‘வெளி நாட்டு மனிதர்கள் போன்றவற்றில் எள்ளல் தன்மையை உருவாக்கவும் செய்துள்ளது.

முரு: ஆத்மாநாம், நகுலன் இருவரும் சிலாகித்துப் பேசப்பட்டாலும் அவர்களின் தன்மை கொண்ட கவிதைகள் ஏன் தமிழில் உருவாகவில்லை?

நே: பின்பற்றத் தயக்கம் தருகிற எளிமை இருவரிடத்திலும் இருக்கிறது, அல்லது கடினம். அறிவார்த்தமும் தனிமையும் கூடிய தீவிரம் ஆத்மாநாமுடையது. உணர்ச்சி நிலையும் தனிமையும் கூடியது நகுலனுடையது. இருவரிடத்திலுமே எளிமை என்பது மொழியளவிலெனினும் மொழிதலில் பிதற்றல் தன்மை கொண்டது. பிரத்யேகமான அப்பிதற்றல் நகலாக்கவோ பின்பற்றவோ முடியாதது. செய்யத் துணிந்தால் சட்டெனத் தெரிந்துவிடக்கூடியது. பிறவிக் கவிஞர்கள் என்போமே அந்தத் தகுதி இருவரி டத்திலும் மிகுதி. கவனம், கவனமின்மை அல்லது புனைவு மனம் குறித்து நினைவு, நினைவின்மை போன்ற வேறு பாடுகளில்தான் நாம் ஆம்மாநாமையும் நகுலனையும் வரையறைப் படுத்த வேண்டும். இன்று எழுதப்படும் நவீன இளம் கவிஞர்களின் புனைவுத் தன்மையும் எளிமையும் ஆத்மாநாமையும் நகுலனையும் உள்வாங்கிக்கொண்டதுதான். இன்றைய கவிதைகளில் உருவாகியுள்ள உரைநடைத் தன்மையிலான அதிபுனைவுத் தன்மைக்கும் இவர்கள் இருவரும்தான் முன் மாதிரிகள். ஒரு நிஜக்கதை, மறுபக்கம், ஒரு நகர்வு கேள்விக்குறி உலகமகாயுத்தம், நாளை நான், முத்தம் போன்ற ஆத்மாநாமின் கவிதைகள் இன்றைய நவீன இளம் கவிஞர்களுக்கு ஒரு வகையில் முன்மாதிரியான முக்கியமான கவிதைகள் எனலாம். ஆத்மாநாமின் சமூகப் பிரக்ஞை, நவீன வாழ்வியலின் மதிப்பீடுகள், உலகளாவிய பார்வை போன்றவற்றில் இன்றைய இளந்தலைமுறையினர்க்கு ஈடுபாடு குறைவு. அதே போன்று நகுலனின் தனிமையுற்ற மனத்தின் கூரிய கவனிப்பும், தனிமொழியும் கூட இவர்களுக்கு அப்பாற்பட்டதே. தவிர üSchool of Thoughtý என்பது போலில்லாத தனித்துவ ஆளுமைகளைக் கொண்டவர்கள் இருவரும். தனிமை நிலை அல்லது துறவு நிலை என்பதில் தாவோ, ஜென் தத்துவங்களின் மனநிலை இருவரிலுமே படிந்திருக்கிறது எனலாம்.

முரு: பெரும்பாலும் கவிஞர்கள் கவிதைகளை வடிவமைக்கும்போது அதன் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே வித தீவிரத்தைக் கொண்ட வரிகளை நிரப்புவபர்களாக இருக்கும்போது ஆத்மாநாம், எளிதான ஒரு தொடக்கத்திற்குப் பின்னால் அதன் மையப் பகுதியில் வந்து ஒரு திருப்பத்தை நிகழ்த்தி, யூகிக்க இயலாத வேறு தளங்களுக்கு நகர்த்துபவராக இருக்கிறார். இந்த உத்திமுறை பற்றி?

நே: ஓர் உணர்ச்சிப் பெருக்கில், மந்திர உச்சாடனம் போன்று தோன்றும் சொற்களின் பதிவில் தோன்றும் கவிதை, தொடக்க சில வரிகளுக்குப் பின் நின்றுவிட, அதை கவனத்துடன் வளர்த்தெடுக்கும்போது இத்தகைய மாற்றம் உருவாகியிருக்க வாய்ப் பிருக்கிறது. அதனால்தான் ஆத்மாநாமின் சில கவிதைகளின் தொடக்க வரிகளுக்கும் அதன் தொடர்ச்சிக்கும் சம்பந்தமில்லாதது போன்று அமைந்துள்ளது. தொடக்கத்தில் மட்டுமின்றி இறுதிப் பகுதியிலும் தொடர்ச்சியற்றத் தன்மை சில கவிதைகளில் உள்ளதெனினும் கவிதையை வேறொரு தளத்திற்குக் கொண்டு போகவோ, திருப்பத்தை அளிக்கவோ, முத்தாய்ப்பாய் முடித்து வைக்கவோ உருவாக்கப்பட்டதாய் கொள்ளலாம். இத்தகையத் திருப்பங்களைக் கையா ளாமல் விட்டால் வெற்றுச் சொல்லாடலாக கவிதைகள் தோன்றக் கூடும். இதை, கவிஞன் உத்தியாக உருவாக்குகிறான் எனவும் நாம் கொண்டுவிடக்கூடாது. கவிதையில் செயல்படும் மொழியோட்டத்திற்கும் கருத்தோட்டத்திற்கும் ஏற்பவே இத்திருப்பங்களை கவிதைகள் தாமே உருவாக்கிக்கொள்கின்றன. கவிதையாக்கத்தின் மர்மங்களில் இதுவும் ஒன்று.

முரு: ஆத்மாநாமின் இசைத்தன்மையுள்ள கவிதைகள் பற்றி…

நே: கவிதை மனமே ஒரு வித இசைத்தன்மை கொண்டதுதான். அது தான் கண்டு சலனமுறும் சம்பவங்களை, அனுபவங்களை இசைத்தன்மை கொண்ட மொழியில்தான் அடுக்கிப்பார்க்கிறது. கவிஞர் வெளிப்படுத்தியவை மட்டு மில்லை; வெளிப்படுத்தாது அவனது அவநம்பிக்கையால் கைவிடப்படும் எத்தனையோ உணர்ச்சிப் பெருக்குகள் பதிவாகாமல் காற்றில் அல்லது மறதியில் கரைந்து போகவும் செய்கிறது. தீவிரமடையும் மனநிலை அதை வேகம் குன்றாமல் பதிவு செய்யும் போது அதன் இசைத்தன்மை குறையாமல் சிறப்பாக வந்திருப்பதாகவும் வேகம் மட்டுப்படும் போது இசைத்தன்மை குன்றுவதால் சிறந்த கவிதையாக வரவேண்டியவை ஒருபடிநிலை இறக்கமடைவதையும் உணர்ந்திருக்கலாம். நீங்கள் வினாவுவது ஆத்மாநாமின் வெளிப்படையான இசைத்தன்மை கொண்ட கவிதைகளான மஹாஜனம், இன்னும், மறுபடி மறுபடி போன்றவற்றை என எண்ணுகிறேன். இவை மரபுக் கவிதைகளின் இசையை தூக்கலாகக் கொண்டிருக்கின்றன. ஆத்மாநாமின் காலகட்டம்வரை புதுக்கவிதையாக எழுதப்பட்டிருப்பினும் அவை ஓசை நயத்தில் மரபுக்கவிதைகளின் தன்மையைக் கொண்டிருந்தன. இன்று உரைநடையில் ஆக்கப்பட்ட கவிதைகள் என்றில்லை; உரைநடை படைப்புகளிலும் கூட இந்த இசையமைதியைக் காணலாம். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமெனில் மொழியால் ஆக்கப்படும் புனைவுகள் அனைத்துமே இத்தகையதான சூட்சுமமான இசைத்தன்மையை கொண்டே பிறக்கின்றன.

முரு: எனது இரண்டு ரோஜாப் பதியன்கள் கவிதை அவருடைய மாஸ்டர்பீஸ் எனும் அளவுக்குப் பலராலும் சிலாகிக்கப்படுகிறதே…

நே: இத்துடன் செடியுடன் ஒரு உரையாடல்’’ கவிதையையும் சேர்த்து கொள்ளலாம் இவ்விரண்டு கவிதைகளுமே சிறார்களுக்கானப் புனைவியல் தர்க்கத்தைக் கொண்டவை. குழந்தைகளின் உலகில் குறியீடுகளுக்கோ, படிமங்களுக்கோ இடமில்லை; அதற்கானத் தேவையுமில்லை. நாம்தான் நமக்குப் பிடிபடாத விஷயங்களைப் புரிந்து கொள்ள புத்தியை நாடுகிறோம். இக்கவிதைகளில் கவிமனம் தாவரங்களுடன்தான் உரையாடுகிறது. நாமோ தாவரங்களை வேறெவற்றின் படிமமாகவோ, குறியீடாகவோ காண முயன்று ஏமாறுகிறோம். அந்த ஏமாற்றமே இக்கவிதைகளைச் சிறந்த கவிதைகளாக்குகின்றது. மனுஷ்யபுத்திரன் தம் கவிதையொன்றில் மரமொன்று மெல்ல படியேறி என் அறைக்கு வந்தது என்றொரு வரி எழுதியிருந்தார். அந்தக் காட்சி என்னைத் துணுக்குற செய்தது. நேர்பேச்சொன்றில் அதை வினவ, மரத்தைப் பெண்ணுக்கான குறியீடாக அவர் தெரிவிக்க படு ஏமாற்றமடைந்தேன். இந்த ஏமாற்றம் மனுஷ்யபுத்திரனுடையது, ஆத்மாநாமுக்கு முந்தைய காலகட்டத்துக் கவிதையாய் உள்ளதே அதனால். ஆத்மாநாமின் அரசியல் கவிதைகளின் நேரடித்தன்மையும், மனுஷ்யபுத்திரனின் அரசி கவிதையின் தன்மையையும் ஒப்பு நோக்கினாலும் இது உறுதிபடும். ஆத்மாநாம் மெனக் கெடமலேயே பூர்ணமானக் கவித்துவத்தைத் தம் புதிய எளிய வெளிப்படையான Plain poetry வடிவில் உருவாக்கி விடுகிறார். அதற்கான உதாரணக் கவிதைகள்தாம் இவ்விரு கவிதைகளும்; ஏனைய நேரடித் தன்மையான அரசியல் கவிதைகளும். தவிர இயற்கையைப் பாடுதல் என்ற ரொமாண்டிக் தன்மையைக் கடந்து, ‘இயற்கையுடன் பேசுதல்’’ என்ற நவீனத் தன்மையை இவ்விருக் கவிதைகளும் கொண்டுள்ளன. ரோஜாப் பதியன்களில் உணர்ச்சி சார்ந்த உறவு நெருக்கத்தை ஏற்படுத்தும் குழந்தைமையையும் செடியுடன் ஒரு உரையாடலில் வாழ்வு குறித்தத் தெளிவு ஏற்படுத்தும் ஞானியையும் தரிசிக்கிறோம்.இந்த வகையில் ஒரு புதிய மரம் கவிதையும் மிக முக்கியமானது.

முரு: ஆத்மாநாமின் கவிதைகளை மேற்கத்திய கவிதைகளின் தொடர்ச்சியாகப் பார்க்கலாமா? (அ) தமிழ்க்கவிதை பாரம்பரியத்திலிருந்து அவரை இனம் காணலாமா?

நே: கண்டிப்பாக ஆங்கிலக் கவிதைகளின் தொடர்ச்சியாகத்தான். வெளிப்படை யாகவே ஆத்மாநாமின் கவிதைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகளின் எளிமையும் கவர்ச்சியும் கொண்டவை. ஆங்கிலக் கவிதைகளின் பாதிப்பில் அதன் தாக்கத்தால் அவரது கவிதைகள் தோன்றியிருப்பதை பிரம்மராஜனின் அடிக்குறிப்புகளும் சுட்டுகின்றன. இவை வடிவ வெளிப்பாட்டளவில் பெரும்பங்கு ஆற்றுகின்றன. கீழை நாடுகளின் ஆன்மிகச் சார்பு, அரசியல் பார்வை, இயற்கை ஈடுபாடு, மனிதாபிமானம், அன்பு, வாழ்வையும் சமூகத்தையும் புரிந்து கொள்வதற்கான தனிமை கொள்ளும் துறவு மனம், அதன்வழி எதிர்ப்புணர்வும் எழுச்சியும் கொள்ளும் கவி மனம் இவையெல்லாம் கவிதைகளின் உள்ளடக்கத்தைத் தீர்மானித்துள்ளன எனலாம். ஆத்மாநாமின் உரை நடைத்தன்மையிலான கவிதைநடைக்கும் இத்தகைய மேலை கவிதைகள் ஒரு காரணம். ஆங்கிலக் கவிதைகளை உரைநடையாகவே மொழி பெயர்த்து படிக்கவும், தரவும் வேண்டியிருப்பதால் அவ்வகையான உரைநடையிலான ஒரு கவிமொழி ஆத்மாநாமை ஆட்கொண்டு விட்டதாகவும் கருதலாம்.

முரு: பிரம்மராஜன் வனம் –2 நேர்காணலில் (உரையாடலில்) ஒரே காலகட்டத்தில் எழுத வந்தாலும் ஆத்மாநாமின் கவிதைகள் எளிமையாக இருப்பதற்கும் எனது கவிதைகள் சிக்கலாக இருப்பதற்கும் பர்ஸ்னாலிட்டிதான் காரணம் என்கிறார். ஒரு கவிஞனாக இதை எப்படி எதிர்கொள்கிறாய்?

நே: பிரம்மராஜன் கூறும் ஆளுமை என்பது அவர்கள் தம் சுயத்தைச் சார்ந்ததா அல்லது படைப்புகளில் தோன்றியிருப்பதா எனப் புரியவில்லை. நாம் இதைப்பற்றி பிரம்மராஜனிடம் மேலும் கேட்டுத் தெளிவு பெற வேண்டும். ஏனெனில் அவர் பைத்திய மன நிலைக்கும் படைப்பு மன நிலைக்கும் உள்ள சம்பந்தம் பற்றிக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நமக்குத் தெரிந்த அளவில் ஆத்மாநாமின் மனநிலை தற்கொலையை அடையுமளவுக்கு சிதைவுகள் கொண்டதாக இருந்திருக்கிறது. சிதைவு கொள்ளவில்லையெனினும் தற்கொலை என்ற வெறுமைக்குள்ளோ அல்லது உச்சத்திற்குள்ளோ தன்னை செலுத்திக் கொண்டுள்ளார். ஆனால் படைப்பளவில் – கவிதைகளில் பெரும் பான்மையும் பிரம்மராஜன் உடனான உரையாடலின் தர்க்க மனமும் தெளிவானவையாக உள்ளன. பிரம்மராஜனின் கட்டுரை மொழி எளிமையானதே – மொழிப் பயன்பாடல்ல கருத்து வெளிப்பாடு – ஆனால் கவிதைகள் எளிமையும் பூடகமும் பின்னிப் பிணைந்தவை. முழுக்கவிதையையும் புரிந்து கொள்ள அநேக தடைகளேற் படுத்துபவை. வாசகர்கள் அவருடைய கவிதையை வாசிப்பதைவிடவும் அதில் தம்முடைய கவிதைகளை வாசித்துக் கொள்ள அதிக இடமளிப்பவை. இங்கு நான் இன்னொன்றைப் பற்றியும் நினைவு படுத்த வேண்டும். பிரமிளின் கவிதைகளும் விமர்சனக் கவிதைகளும் இருவேறு தன்மையானவை. அவருடைய படைபாளுமைக்கும், விமர்சன கவிதையாளுமைக்கும் உள்ள பேதத்தை எப்படிப் பார்ப்பது? நகுலனைப் பெறுத்தவரை கவிதைகள்- குறிப்பாக நீண்ட கவிதைகளிலும் அவரது நாவல்களிலும் தோன்றியுள்ள ஆளுமைகள் வெவ்வேறானதா ஒன்றா? அவருடைய விமர்சனக்குறிப்புகளையும் கூட இதில் சேர்த்துக் கொள்ளலாம். கவிதைகளைத் தவிர்த்தும் உரை நடையிலேயே புதுவகை மொழிதலால், சிக்கல் கொண்டவையாக நாம் கோணங்கியின் எழுத்துக்களைக் கணிக் கிறோம். அவருடைய கட்டுரை மொழியும் அவரது புனைவு மொழியின் தன்மை கொண்டவைதாம். கோணங்கியின் உரையாடல் மொழியும் யதார்த்தத்துக்கும் அப்பாற்றப்பட்ட புனைவியல் தன்மை கொண்டவை. பிரம்மராஜன் மேலும் விரிவாக இது பற்றி ஆழமாக கூறியிருக்கவேண்டும். இல்லையெனில் இனியாவது கூற வேண்டும்.

முரு: ஆத்மாநாமிடம் அடுக்குதல் முறை மற்றும் கவிதையைத் திட்டமிடுதல் போன்றவை இருப்பது போலத் தோன்றுகிறது. திட்டமிடுதல் கவிதையின் இயங்கியலுக்கு எதிரான தன்மை யில்லையா?

நே: அடுக்குதல் முறை – ஒரு வடிவம் சார்ந்த உத்தி. திட்டமிடுதல் புனை கதையாளர்களில் போலில்லை எனினும் கவிஞர்களிலும் ஒரளவில் ‘Out line’ ஆக பணியாற்றத்தான் செய்கிறது. இவ்வி ரண்டுமே கவிதை தர்க்கத்துக்கு அப்பாலான ஒரு வெளிப்படையையும் எளிமையையும் உருவாக்கி விடும்போது ஓர் எதிரான தன்மையாகத் தோன்றுகிறது. Conscious நிலையிலும் Unconcsious நிலையிலும் இவை தோன்றவே செய்கின்றன. மொத்தக் கவிதையின் ஒருங்கமைப்பிலும் அது தரும் பூர்ண அனுபவத்திலும் இவை பின்னடை வதையும் உணர்ந்து விடலாம். அறிவார்த்த வகை கவிதைகளுக்கு திட்டமிடுதல் ஒருமறைமுக பலம்.

முரு: ஞானக்கூத்தனின் சாயல் ஆத்மாநாமிடம் இருப்பதாகத் தோன்று கிறதே.

நே: ஞானக்கூத்தனை நினைவுபடுத்தவா செய்கிறார் ஆத்மாநாம்? சில இசை/ ஓசை அமைப்பானக் கவிதைகளை அப்படிக் கொள்ளலாம். எனினும் ஆத்மாநாம் ஞானக்கூத்தனது அடுத்தத் தலைமுறை கவிதைகளைத்தான் எழுதியுள்ளார். ஞானக்கூத்தனுக்கும் ஆத்மாநாமுக்கும் கூறுமுறையில் மட்டுமல்லாமல் பொருள் தேர்வின் அடிப்படையில் கூட வேறுபாடுகள் உண்டு. ஆத்மாநாமிடம் ஞானக்கூத்தன் சில பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கலாம். அவரது சூழல் இவரால் ஓரளவில் அமைத்துத் தரப்பட்டதாகக் கூட இருக்கலாம். ஆத்மாநாம் இரவுகளில் தாம் எழுதிய கவிதைகளை விடியற்காலையில் சென்று ஞானக்கூத்தனிடம் காண்பிப்பவராக இருந்ததை ஞானக்கூத்தன் சொல்லக் கேட்டிருக்கிறேன். அன்று வேறு கிழமை தொகுப்பின் சில கூறுகள் ஆத்மாநாமிடம் படிந்திருக்கிறது எனினும் ஓர் உடனடி யாகத் தோன்றும் சாயல் என்பது கிடையாது. கவிதைகளில் இருவரும் இருவேறு நோக்கங்களை வெளிப்படுத்து பவர்களாக இருக்கின்றனர். தீவிரத்தைக் கூட எள்ளலாக்கிக் காட்டுவார் ஞானக்கூத்தன். எள்ளலைக் கூட தீவிர மாக்கி விடுபவர் ஆத்மாநாம். உதாரணத்திற்கு திருஷ்டி கவிதையை ஞானகூத்தனும் எழுதியிருக்க வாய்ப்புண்டு எனினும் இறுதி வரிகளில் ஆத்மாநாம் ஏற்படுத்தியுள்ள தீவிரத்தை இவர் ஏற்படுத்தியிருக்கவே மாட்டார்.

முரு: அவசரநிலைக் காலத்தில் எழுதியிருக்கும் கவிதைகள்தாம் ஆத்மாநாமை ஒரு தீவிரம் கொண்ட படைப்பாளியாக இனம் காட்டுகிறதா?

நே: ஆத்மாநாம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய அரசியல் பிரக்ஞை கொண்டவரும்தான். படிகள் இதழில் வெளியான அவர் மொழி பெயர்த்த தென்னமெரிக்கப் பாதிரியாரின் அரசியல் கட்டுரையும், மன ஓசையோடு அவருக்கிருந்த தொடர்பும் அதில் வெளியான கவிதைகளும் அவருடைய அரசியல் ஆர்வத்தை நமக்குக் காட்டுவன. பிரம்மராஜனுடன நேர்காணலிலும் இதை உரத்தே பதிவு செய்துள்ளார். ஆயினும் அவருடைய மொத்தக் கவிதைகளையும் வாசிக்கும் அரசியல் ஈடுபாடு கொண்ட வாசகரும் வேறொரு தளத்தில் அவரை நிறுத்துமளவுக்கு அவருடைய பிற கவிதைகள் உள்ளதை கவனிக்க வேண்டும். அடிப்படையில் அவருக்கிருந்த இந்த சமூக பார்வையிலான தீவிரத்தை வெளிப்படுத்த நெருக்கடி நிலைக் காலச் சூழல் கச்சாப் பொருளாகப் பயன் பட்டிருக்கிறது. அதனால் அவரசநிலைக் காலத்துக்கும் ஆத்மாநாமின் படைப் பெழுச்சி நிலைக்கும் உள்ள தொடர்பு எதேச்சையானதாகப் பார்க்கலாம். ஏனெனில் எந்த நடைமுறைச் சம்பவத்தையும் நேரடியாகப் பதிவு கொள்ளும் கவிதைகள் வரலாறாக நிற்குமே தவிர கவிதையாக நீட்சிக்காது. ‘‘வளமான எதிர்காலத்துக்கு/ உழைப்பின்றி இட்டுச்செல்ல தேசிய பரிசுச்சீட்டுகளின் /புதிய வரிசை வெளிவந்துள்ளது/ எதற்காகப் பதறுகிறீர்கள்/ அமைதி அமைதி’’ என்ற வரிகள் எமர்ஜென்சி காலத்ததாக கருதப்படக்கூடிய கவிதையின் இறுதிப் பகுதி. இன்று சட்டபூர்வமாக லாட்டரி தடைப்படுத்தப்பட்டுள்ளதால் கவிதையில் அச்செய்தி வரலாற்றுப் பதிவாக மட்டுமே எஞ்சிவிடுவதையும் பார்க்கிறோம். அவருக்கு முன்னும் பின்னுமாக வர்க்கப்போராட்டம், சாதி,பெண் விடுதலை தொடர்பான பொருளாம்சங்களும் இத்தகையதே! தொடக்க கால சமூகக் கவிதைகளில் இடம்பெற்ற பெண் கல்வி போன்றவை, பெண் விடுதலையாக, பெண்ணியமாக, பெண் அதிகாரமாக மாறியிருப்பதை கவனிக்க வேண்டும். பாரதிதாசனின் பெண் அபிமானம் அவரையே பிற்போக்காளராக ஆக்கிவிடும் அளவுக்கு வெடிப்புற்று வேகம் பெற்று வளர்ச்சியுற்றிருப்பதைக் காண்கிறோம். ஆத்மாநாமைப் பொறுத்தவரை நவீன உலகின் மீதான பார்வையும், கவன ஈர்ப்பும் அதை எதிர்வினையாக்க வேண்டிய அக்கறையுமே அவரைத் தீவிரம் கொண்ட படைப்பாளியாகக் காட்டுகிறது. சுதந்திரம் கவிதையில் அவசரக்கால சூழலின் அடிப்படை, என்றைக்குமான அரசியல் அதிகார நெருக்கடியை விமர்சிப்பதாக உள்ளது. அவசரம் கவிதை சற்றே நேரடியானது எனினும் என்றும் மக்கள் சுபிட்சமாய் இருந்தனர் / அவசரமாய் அவ்வப்போது ஒன்றுக்கிருந்து என எள்ளலாக்கி முடிக்கும் போது அதற்கு எதிர்மறையான தீவிரத்தை அடைந்திருக்கிறது. தவிர இவ்விரண்டு கவிதைகளை விடவும் நெருக்கடி நிலையை நேரடியாக அடையாளப் படுத்தாமல் வேறொரு எளிய தளத்தில் கழிவறைப் பிரச்சினையாக முன்னிறுத்திய அவள் கவிதை முக்கியமாகிறது. அவள்ள ஆட்சியதிகாரத்திலிருந்த அன்றைய பிரதமரைக் குறிப்பதாகக் கொள்ளலாம். ஒன்றுக்கு எனக் குறிக்கப் பெறும் மூத்திரம் ஆத்மாநாமின் பல கவிதைகளில் எதிர்ப்புணர்வின் குறியீடாக உள்ளதையும் குறிப்பிடவேண்டும். ஒரு சீரிய படைப்பாளிக்கு இவை போன்ற விஷயங்கள் இரண்டாந்தரமானவையாகக் கூட படலாம். தாம் சந்திக்க நேரும் எத்தனையோ பதைபதைப்பூட்டும், அச்சமூட்டும், கோபமூட்டும், துயர மூட்டும் சம்பவங்களையெல்லாம் அவன் படைப்பாக்க வேண்டிய கட்டாய மிருக்கிறதா என்ன? யாரும் பொருட்படுத்தாத வேறொரு மிகச் சாதாரண நிகழ்வைச் சுட்டுவதன் மூலம் கூட இவ்வகையானப் பிரச்சனைகளை முன்வைத்துவிடலாம். சுதந்திரப் போராட்டத்தை மையப்படுத்தி நாவல் எழுதிய கல்கியை சமூக அக்கறைக் கொண்ட கலைஞனாகவும், ஒரு சிறுகதையையும் அதற்குக் களனாக்காத புதுமைப்பித்தனை அதற்கு எதிரானவ ராகவும் கொண்டு விட முடியாதே! இன்றைய ஈழப்பிரச்சனையை மையப் படுத்தி முக்கியமான நாவல்களை எழுதியுள்ள ஷோபாசக்தி போன்றோர் அவரது பாலியல் தொடர்புடைய புனைவியல் அம்சங்களுக்காக சமூக அக்கறையாளர்களாகக் காட்டிக் கொள்ளும் படைப்பாளிகளாலும் எதிர்க்கப்படுவாரே. சமூக அக்கறை கொண்டவர்களுக்கு இது போன்ற விஷயங்களை (பாலியல் குறித்த கதையாடல்) புரிந்து கொள்ள முடிவதில்லையே அது ஏன்? உண்மையான கலைஞனுக்கு எழுதும் விஷயங்களை அன்றாடங்களிலிருந்து பெற வேண்டிய தேவை எதுவுமில்லை. அவனுடைய பார்வைகளும், பொருட்படுத்தும் விழுமியங்களும், உள்வாங்கும் அனுபவங்களும் தனித்துவமானது; அந்தரங்கமானது; நெருக்கடி நிலையே இல்லையெனினும் ஆத்மாநாம் இக்கவிதைகளை எழுதியிருக்கக்கூடும் தான். அவரது கவிதைகளில் ஒரு தேசத்தின், கால கட்டத்தின் நெருக் கடியைக் காட்டிலும் உலகளாவிய காலங்காலமான மனித வாழ்வின் நெருக்கடியை அதிகமாகவே காணலாம். மறுபரிசீலனை, இடமொன்று வேண்டும், நாளை நமதே, நான், ஏதாவது செய், பிச்சை, தடை போன்ற கவிதைகளின் தீவிரம் அவசர காலக் கவிதைகளாகக் கருதப்படுவனவற்றிலிருந்து வேறானவை. ஈழத்தின் இன்றைய ரத்தமும் சதையுமான நெருக்கடியையும் அடக்குமுறைகளையும் அதனாலான அவலங்களையும் நேரில் அனுபவித்து படைப்பாகப் பதிவு செய்தவர்களில் முக்கியமானவர்கள் சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன் போன்ற கவிஞர்கள். ஆயினும் ஆத்மாநாமில் கிடைக்கும் தீவிர மன எழுச்சி அவர்களில் குறைவு. காரணம் அவர்கள் நேரடி வாழ்வின் விவரணைக்கு முக்கியத்துவமும் ஆத்மாநாம் அடிப்படை எதிர்ப்பு உணர்வெழுச்சிக்கு முக்கியத் துவம் தந்திருப்பதுதான். ஏதாவது செய்கவிதையை எடுத்து வாசித்துப் பாருங்கள். மிக பலவீனமானவனின் போர்க்குணம் அப்பட்டமாகத் தெரியும். கலையும், கலைஞனும் அதை மட்டுமே உருவாக்க முடியும்.

முரு: தன்னை அழித்துக் கொள்ளுதல் – எழுச்சிக் கொள்ளச் செய்தல் இரண்டும் சங்கமிக்கும் இடமாக ஆத்மாநாமைப் பார்க்கலாமா?

நே: தன்னை அழித்துக் கொள்பவராகக் கவிதைகளில் அவர் தம்மைச் சித்தரித்துக் கொள்வதேயில்லை. சமூகத்திலிருந்து தனிமைப்படுப்வராக, அன்பைக் கோருபவராக, இயற்கையின் ஒரு முக்கிய அம்சமாக தன்னை உணர்பவராக, பொறுப்பற்ற சமூகப் பிரஜைகளாலும், சமூக கட்டமைப்பின் இயல்புக்கு மாறாக செயல்படுபவர்களாலும் தானும் தன் சூழலும் அழிக்கப்படலாம் என அஞ்சுபவராக வேண்டுமெனில் அவரைக் கொள்ளலாம். அத்தகையப் பின்னணிகளை விமர்சனங்களாகக் கவிதைகளில் வைத்து அந்நிலையிலிருந்து தான் எழுச்சிக் கொள்பவராக தேவையெனில் கூறலாம்.

முரு: ஆத்மாநாமுக்குத் தமிழில் கிடைத்திருக்கும் அங்கீகாரமும் போற்றுதல்களும் அதிகப்படியான ஒன்றாகத் தோன்றுகிறதா?

நே: அவருடைய தற்கொலை என்ற துர்சம்பவம், அவரை நாம் ஆழ்ந்து வாசிக்கச் செய்திருப்பது உண்மை யெனினும் அவருடைய மொத்த அங்கீகாரமும் அதைச் சார்ந்ததல்ல. தவிர நீங்களும் நானும் இங்கு அவரைப் பேசிக் கொண்டிருக்கிறோம் என்பதனால் அவரைத் தமிழ்ச் சூழலில் எல்லோரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என நினைத்துவிடாதீர்கள். இன்றைய இளம் வாசகனுக்கு, ஏன் இளம் கவிஞனுக்குக் கூட ஆத்மாநாம் என்ற பெயர் தெரியுமளவுக்கு அவருடைய கவிதை களைத் தெரியாது. உண்மையான வாசகர்கள் ஆளுமைமிக்கக் கவிஞர்களை மறக்காமல் நினைவில் கொண்டிருக்கவும் புதுப்பித்து அங்கீகரிக்கச் செய்யவும் தயாராகவே உள்ளனர். தமிழ்ச் சூழலைச் பொறுத்தமட்டில் மிகையாக்கப் பட்டவர்கள் எவருமில்லையெனத் தோன்றுகிறது. வாசகத் தளங்களிலும், இலக்கியத்தர படிநிலைகளிலும் இது மாறுபடக்கூடும் . சங்க இலக்கியத்தில் செம்புலப்பெயல் நீரார், அணிலாடு முன்றிலார், தேய்புரிப் பழங்கயிற்றினார், குப்பைக் கோழியார் போன்றவர்கள் ஒரே பாடல்களை மட்டுமே எழுதியவர்கள். இத்தனைக்கும் அவர்களுடைய பெயரைக் கூட அறிய முடியவில்லை. பாடலின் சிறந்த அம்சம் கருதி பாடல் வரிகளிலிருந்தே பெயர் சூட்டப் பெற்றவர்கள் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களில் ராமாயணத்தை எழுதிய கம்பரைப் போன்றே இவர்களும் இலக்கியத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். இவ்வளவு ஏன் ஒரு தொகுப்பும் இரு தொகுப்புமாக வெளியிட்டுவிட்டு இன்று எழுதாமல் போன சத்யன், சமயவேல், பாதசாரி, சம்பத் போன்றோரை நாம் கவனத்தில் கொண்டுதானே இருக்கிறோம். தற்காலிக உத்வேகத்தால் ஆர்ப்பரிப் பவர்கள்தாம் விரைவில் அடையாள மிழந்து காலாவதியாவார்கள். உண்மையான ஈடுபாடும் தீவிர செயல்பாடும் மிக்கவர்கள் ஓய்ந்து போனாலும் ஏன் ஆத்மாநாம் போல மறைந்தே போனாலும் அவர்கள் வாசகர்களோடு உரையாடிக் கொண்டே தான் இருப்பார்கள், வாசகர்களும் நம்மைப்போல் அவரை உரையாடிக் கொண்டேதான் இருப்பார்கள்.

முரு: ஆத்மாநாமிடம் எதிர்நிலையாகக் காண்பதற்கு – விமர்சிப்பதற்கு எதுவுமே இல்லையா?

நே: இருக்கிறது மிகக்குறைவாக. ஆனால் முக்கியமானது. பெண்கள் பிரச்சனைகள் கவிதையில் இடம் பெறவேயில்லை. அப்புறம் பாலியல் பிரச்சனைகள், காதல் உள்பட – மற்றது சராசரியான ஒரு சமூக மனத்துக்கு எதிரான, அதாவது சமூக மதிப்பீடுக்கு எதிரான கருத்தாக்கங்களும் குறைவு. கோயிலிலிருந்து திரும்பும் மாமி, நடுத்தெருவில் கற்பிழக்கும் சகோதரி, கைவிரலில் ஊசியேறிய பெண், விதவையான தாய் போன்று ஒரு வரி விவரணைகளில் மட்டுமே பெண்கள் இடம் பெற்றுள்ளார்கள். பாலியல் அவஸ்தைகள் எனில் ஒரு கவிதையில் காமஅவஸ்தைகள் என்ற பிரயோகமும், வெளிவராத கவிதைகளில் இவள் என்பதிலும் மட்டும் உண்டு. முத்தம்கவிதை பாலுணர்ச்சி சார்ந்தல்ல- விடுதலையின் சின்னமாக முன்னிறுத்தப் படுகிறது. சமூக விழுமியங்களைப் போலவே பீடியும், சுருட்டும் புகைப்பதுதான் இவருக்கும் கெட்டதாக உள்ளது. இதையெல்லாம் எழுதியிருக்க வேண்டும் என்பதல்ல என் எதிர்ப்பார்ப்பு. மொழியளவில் இன்றைய இளம் தலைமுறையினரின் மீது ஆதிக்கம் செலுத்தியவர் அவர். ஆனால் இவர்கள் பாடுபொருளாகக் கொண்டுள்ள பலவும் அவரால் தொடங்கி வைக்கப் பட்டிருக்கவில்லை என்பது தான் என் சுட்டிக்காட்டல். நகுலன், பிரம்மராஜன் , விக்கிரமாதித்யன் கலாப்பிரியா போன்றவர்களை வாசித்தாலும் நான் கூறுவதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

முரு: தனது இறப்புப் பற்றி அதிக பிரக்ஞையுடன் இருந்திருக்கிறார் இல்லையா?

நே: ஆமாம், மரணம் குறித்த மனநிலையை மரணத்துக்கு முன்பாக வெளிப்படுத்தியவராக ஆத்மாநாம் இருந்திருக்கிறார். வெளிப்படையாக ஆத்மாநாமைப் பற்றியும் கவிதைப் பற்றியும் ஆத்மாநாம் ஐ என்ற கட்டுரையில் இலக்கியத் தொடர்பின் காரணமாக வாழ்க்கை வாழத் தகுதியுள்ளதாக நினைக்கும் இவர் இலக்கியத் தொடர்பாலேயே வாழ்க்கை முடியுமோ’’ என அஞ்சியுள்ளார். தவிர மறுபரிசீலனை, மனத்தின் கவிதைகள், இயக்கம், சாதனை போன்ற கவிதைகளில் தற்கொலைக் குறியீடுகளும் மரணம் குறித்த பிரஸ்தாபங்களும் இடம் பெற்றிருப்பதும் இதை மெய்ப்பிக்கின்றன.

முரு: ஒரு கவிஞனின் மரணத்தை எப்படிப் பார்க்கிறாய்?

நே: நீங்கள் ஸ்தூலமான இறப்புக் குறித்து கேட்க மாட்டீர்கள். ஸ்தூலமான உடலோடு தொடர்புடையதுமில்லை ஒரு கவிஞன் பிறப்பதும் இறப்பதும். மதுசூதனுக்குள்ளிருந்து ஆத்மாநாம் பிறந்த தருணத்தை யோசிக்கிறேன் அதேபோன்று ஆத்மாநாம் என்ற பெயரை உச்சரிக்கும் கடைசி வாசகன் யார்? இதையும் கற்பனை செய்து வியப்படைகிறேன். ஆத்மாநாமின் முடிவில் கவிதையோடு இந்த உரையாடலை முடித்துக் கொண்டால் பொருத்தமாக இருக்கும்.

ராணிதிலக் கவிதைகள்

காகத்தின் சொற்கள்

உலகம் தூய்மையைப் பரப்புகிறது. நான் துர்கனவுகளில் வாழ்பவன். நான் காக்கைகளை வெறுக்கிறேன். அவை என் உறக்கத்தைக் கலைக்கின்றன. தன் சிறகுகளில் கள்ளத்தனத்தை விரித்தபடி இப்பூமி மேல் உறங்கிக் கொண்டிருக்கும் கருத்த இரவை தன் அலகால் கொத்திச் செல்கின்றன. வழக்கம் போல், அதிகாலையில், என்னை எழுப்பிவிட்ட காகம் ஒன்று, என்னை உற்றுப்பார்க்கிறது. என் ஆன்மா விழிக்கிறது. அது பேசத் தொடங்கி விட்டது எனது நயவஞ்சகத்தை, குற்றத்தை, பரிசுத்தமற்ற ஆன்மாவை. நான்கு திசைகளைப் பார்த்தபடி நீங்கள் காகத்தின் சொற்களை நம்பத் தொடங்கினால், உங்கள் தூக்கத்தில் துர்கனவுகள் படரக்கூடும். அதன் சொற்கள் கருப்பாய் இருக்கக்கூடும். நான் தூய்மையின்மையைப் பரப்புவேன்.

என் காதுகள் திறக்கப்படவில்லை. அவற்றின் அருகில், பறவைகளின் ஓசை செத்துக் கிடக்கின்றன. நான் எழும் வேளை வானம், மேகங்களற்று நிர்மூலமாகத் தெரிகிறது. அது கடலை நினைவூட்டுகிறது. அலைகள் ஓயாமல் கதறுகின்றன. அதன் கதறலைக் கடந்து பறக்கும் காகம் ஒரு சொல்லை உதிர்க்கிறது. அது என் மனதில் விழுகிறது. ஒரு கருப்புச்செடி முளைக்கிறது. அதில் துளிர்த்த இரண்டு மலர்களில் ஒன்றைப் பறித்து எதிர்படும் உங்களுக்குப் பரிசாக அளிக்கிறேன். அம்மலரின் நறுமணத்தை நீங்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டீர்கள். என்னைப் போலவே அதிகாலை எழுந்து, சூரியனைப் பார்க்கத் தவறுகிறீர்கள்.

பா. தேவந்திர பூபதி

 

புகைப்படம் பற்றிய கவிதைகள்

1

நெடுநாளாய் தொடர்கிறது

புகைப்படம் எடுக்கவேண்டுமென்ற எனது ஆசை

என்னை எனக்கு அடையாளம் காட்டும்

புகைப்படமாய் அது இருக்க வேண்டும்

நாற்காலியின் ஓரத்தில் அமர்ந்து

மெல்லத் தலைசாய்த்து அளவான புன்னகையுடன்

முகவாட்டில் பேனாவுடன் கூடிய கையை தாங்கிப் பிடித்து

மயில் நடமாடும் ஒரு வனத்தையோ

பூச்சாடிகளையோ பின்புலமாக்கி

ஒரு கணத்தை முடுக்கி எடுத்து விட்ட

என் புகைப்படத்தில் ஆச்சரியம்

என்னைத்தவிர அனைத்தும் இருந்தன

விநாடி நேரப் பதிவுதான்

ஒளியின் வசீகரிப்பில் அனைத்தும் இப்படி

மாறிப் போயிருந்தன

தாங்கிப்பிடித்த கையோடு வேறொருவன்

சாய்ந்து பார்க்கும் முகத்தோடு யாரிவன்

நாற்காலியில் அமர்ந்திருக்கும் புதியவனோடு

மாறிமாறி இழந்து போன பின்புலத்தின் நினைவுகளில்

எங்கே என்னுருவம்

நிச்சயமாய் நானில்லை அவன்

புகைப்பட அடையாள அட்டையில்

நியாயவிலை புத்தகத்தில்

போக்குவரத்து உரிமத்தில்

வங்கிக் கணக்கில் தொலைபேசி விண்ணப்பத்தில்

அப்புகைப்படத்தை எல்லோரும் அப்படியே

ஏற்றுக் கொண்டது குறித்த வியப்பில் இப்போது இருக்கிறேன்

யாருக்கும் யாரையும் அடையாளம் காட்டாத

புகைப்படத்தை தாங்கிக் கொண்டு

திரியும் உலகில்

தொடர்ந்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன புகைப்படங்கள்

2

புகைப்படத்தின் சூட்சுமம் அடங்கிய

நூல் ஒன்றினை என் மூதாதையர்

பாதுகாத்து வைத்திருந்தார்கள்

புகைப்படம் பற்றிய விளக்கங்கள்

பலவற்றைத் தன்னுள் கொண்டிருந்தது அது

இடதை வலதென்றும்

ஒளியை இருளென்றும் நகலையே

நிஜமென்றும் அது இயம்பிக் கொண்டிருந்தது

ஒரு கணத்தின் உறைவென அசலானவற்றின்

நகலை உண்மைக்கு மறுப்பாய்

அது தீர்மானிக்கும் போது

அனுதினமும் ஒரு நிலைக்கண்ணாடி காட்டும்

சலனத்தின் உயிரசைவுமற்ற

என் மூதாதையர்களின் புத்தகத்திலிருந்து

என் நகலை போன்ற

ஒருவன் இறங்கிச்

சென்று கொண்டிருக்கிறான் தினமும்.

பயணி

சாத்தான் குரல்

என் கடவுள் பிரசங்கத்தில்

சாத்தான் குரல் ஒலிக்கிறது

புழுக்கள் நெளிந்தாலும்

நான் உயிருடனே இருக்கிறேன்

யாரோ திட்டுகிறார்கள்

நான் கடந்து போகிறேன்

கடவுளைப் போல

பொ. செந்திலரசு

ஆட்டம்

கடவுள் ஒருநாள்

என்னைப் பிரசவித்தார்

நான் விளையாட

தேவர்கள் பரிசளித்த

பொம்மைக் குவியல்களில்

என்னைக் கவர்ந்தது

தலைக்குப் பதிலாய்

ஏவாளின் ஆப்பிள் பொருத்திய

தலையாட்டி பொம்மை

நாளெல்லாம்

அதனுடனே விளையாடி

அதனிடமே பாலருந்தி

அதன் மடியிலேயே உறங்க

நேற்று கனவில் இருந்து

மெல்ல நகர்ந்து வந்து

என் கழுத்தில் ஒட்டிக்கொண்டது ஆப்பிள் .

இலக்கியா

இருளின் வீடு

தெருவெங்கும் நள்ளிரவின் வீடு

தேடிப் பார்த்தேன் எனது வீட்டைக்

காணவில்லை.

பளிச்சிட்டது ஒரு மின்மினியின் கூடு

தேடிப்பார்த்தேன் இப்போது

இருளின் வீட்டைக் காணவில்லை.

கோவிந்தராஜ் கவிதைகள்

வயதின் தூக்கம்

பாலத்தின் மீது வாகனங்கள்

பெருத்த இரைச்சலோடு செல்கின்றன

மூன்று சக்கர சைக்கிளை

ஒருவர் எழுந்து மிதிக்கிறார்

ஒரே வயதுடைய

குழந்தைகள் அதில் தூங்குகின்றன

எல்லாமும் மறந்து அவை

அவற்றின் நினைவில் இருக்கக் கூடும்

ரயிலோ பேருந்தோ படுக்கையறையோ

இல்லையேல் ஊஞ்சலோ இல்லை

எப்போதும் தூங்கும் அம்மாவின் மடியோ

எப்படி இருந்தாலும்

தூக்கம் ஒன்றுதான் அவைகளுக்கு

வார்த்தைகள் தெறிக்கின்றன

எல்லாமும்

எல்லாருக்குள்ளேயும்

ஏதோவொன்றாய் நிகழ்ந்து கொண்டிருக்கிறது

அவர்களுக்குள்

உன்னைப் பற்றியும்

உனக்குள்

அவர்களைப் பற்றியும்

அதன் அர்த்தம்

யாதெனத்

தெரிந்தபின்

அவன் அப்படி செய்வானென்று

இவனுக்குள்ளும்

இவன் அப்படி செய்வானென்று

அவனுக்குள்ளும்

எல்லாம் ஒரு நிகழ்வாக நிர்ணயிக்கக்கூடும்

பின் யாவும் வார்த்தையாகத்

தெறித்து வெளியேறும்

மண்குதிரை

களைப்பு

ஒரே அறையில்

வசிக்கிறோம்

ஒரே பாத்திரத்தில்

உணவருந்துகிறோம்

ஒரே ஆடையை

மாற்றி அணிகிறோம்

ஒரே வகையானவைகளைப் பற்றி

வாய்வலிக்கப் பேசுகிறோம்

இருவருமே

இறந்த காலத்தைப் போற்றுகிறோம்

அவற்றையே

அசை போட்டுக்கொண்டிருக்கிறோம்.

ஒரு நாளில்

களைப்பு மேலெழும்பவே

ஒரே படுக்கையில்

ஆழ்ந்து உறங்குகிறோம்.

 

 

 

குலசேகரன் கவிதைகள்

விடியாத இரவு

அவர்கள் சுற்றிச் சுவர்களால்

சூழப்பட்டிருக்கிறார்கள்

கதவையும் இறுகச் சாத்திவிட்டார்கள்

ஜன்னலைக் காற்றும் வரவியலாமல்

பிரிவுறாதப் படுக்கையில் கிடக்கிறார்கள்

அவன் மரணமுற்றதைப் போலிருக்க

சாம்பலாக வேர்வைப் பூக்கிறது

அருகில் சுருண்டிருக்கும் அவளின்

உடல் வெம்மை அடங்காதிருக்கிறது

ஆடைகளைத் தீய்த்துவிடும் போல்

அவள் மேலிருந்த கையையெடுக்கிறான்

அவன் முதுகில் அழுந்தியிருக்கும்

அவளின் மார்புநுனிகள் அடியாழத்தில்

விஷ முட்களாக உறுத்துகின்றன

இன்னும் மறைக்கப்படாமல்

அவளின் திறந்த யோனி

பெரும் கானகம் போல் விரிகிறது

அவனால் காண முடியாமல்

அறை முழுக்க வளர்ந்து

அவள் மல்லாந்து படுத்திருக்கிறாள்

கண்கள் நெருப்பாக ஒளிர்கின்றன

களைப்போடு உறக்கத்தில் நழுவி

அவன் திரும்பிப் படுக்கிறான்

சிறிது நேரம் வெறித்திருந்து

அவள் சுற்றியிருக்கும் இருளை

மேலே போர்த்திக் கொண்டாள்.

அறிந்திராத இடம்

புது உலகில் பிரவேசிப்பது போல்

அவன் அறைக்குள் நுழைந்தான்

உள்ளே புதிதாய்த் தோன்றியவள்

அவன் கண்கள் முன்னால்

ஆடை நழுவிட நின்றாள்

அம்முகம் நினைவில்லையெனினும்

அவள் பழகியவளைப் போலிருந்தாள்

பல நூற்றாண்டுகள் முன்பாக

திருவிழாக் கூட்டத்தின் நெரிசலில்

அவளுடையத் தோற்றம் கண்டிருக்கிறான்

பலமுறை நடமாடுகின்ற வழிகளில்

அவள் அடிக்கடி குறுக்கிட்டிருக்கிறாள்

ஒரு நீண்ட பயணத்தையும்

அக் கண்களுடன் சென்றிருக்கிறான்

எல்லா நாட்களையும்

அவளோடு கடந்து வந்திருக்கிறான்

அவளின் பெயர் தெரியாமல்

அந்த மணத்தை மட்டும்

சிறு வயது முதலே அறிந்திருந்து

ஒவ்வொரு இடங்களிலும் தேடுகிறான்

அவனை முன்னே சந்தித்திருப்பதாக

ஏதோ ஒரு பெயரால்

அவள் அறிமுகப்படுத்திக் கொண்டாள்

அவன் அவளை நெருங்கி

தன்னுடைகளைக் களைந்தெறிகிறான்

ரெங்கநாயகி

 

கல்நாகம் பசியாறிய கதை

மார்க்வெஸ் கதை மூதாட்டி போல

மனம் இலேசாகி இனிய

கலவிக் களைப்புப் போல

சிலிர்க்கிறது உயிர்ச்சிறகு

நிதானமாக சிறு

நீர் பிரித்து நிமிரும் போது

இவ்வளவுதானா என்று

சந்தேகங் கொள்ளும் அங்கம்

ஆயகலைகளின் தேவனுடன் சேர்ந்து

நானும் மற்றவரும்

நகைப்பதைக் கேட்டு

கோபித்துக் கொண்டு நடக்கிறாள்

பாதையெங்கும் மகிஷன் தலையாய்

தேடல் சுரப்பிகளை

மிதித்துக் கொண்டு பாலா திரிபுர சுந்தரி

சீறிக்கொண்டு அவளைப்

பின் தொடர்ந்தன அவை

செய்வதறியாது நாங்கள்

திகைத்திருக்க

எட்டி நின்றவளின்

மகுடி வித்தை

கல்லாய் சமைத்தது நாகங்களை

முலைப்பால் வார்க்காத

தேவமாதா ஸ்நேகத்தில்

கல்நாகம் பசியாறிய கதையை இன்னொரு மார்க்வெஸ் எழுதக்கூடும்.

சேக்கிழார்

உங்கள் மீதொரு புகார்

உங்கள் மீது ஒரு புகார் இருக்கிறது

பிரத்யேக கருத்துக் கணிப்புகளும் அதையே உறுதி செய்கிறது

பாலியல் தொழிலாளியிடம்

வாய்ப்புணர்ச்சிக்காகவே அதிகம் செல்லுகிறீர்களாம்

நிமிடத்திற்கு இன்ன தொகை பேசி

யொரு யோனி வாங்குகிறீர்கள்

பால்யத்தில் வேனல் கொப்புளங்கள் நிரம்பிய

உங்கள் தலையில்

நாயின் நாவை மிதக்க விடுவார்களே அதுபோல

அருவருப்பின்றி

அழல்நாற்றமும் உவர்ப்பு சுவையுடைய யோனியை

வாயால் புணருகிறீர்கள்

திடீரென

யோனியை விழுங்க முயற்சிக்கும் போது

உங்கள் வாடகை நேரம் முடிகிறது.

ஜீவன் பென்னி

ஒரு வானம் ஒரு பறவை

தவறிவிட்ட பறவையொன்றின் வெளி

மிகவும் அவசரமானது

மிகத் தெளிவற்றது

சற்றுத் தடிமனானது

புரியாதது

எல்லையற்றது

கை விலங்கு போன்றது

எரிச்சலூட்டும் சுதந்திரம் கொண்டது.

பாலமுருகன்

எறும்புகளும் ஈக்களும்

மரணத்தைக் கொண்டு வந்து

உடல் மீது தூவுகின்றன

உடலுக்கும் உயிருக்கும்

இடையேயான தொடர்பைத் துண்டிக்கின்றன.

பின் அவை உங்களைக் கண்டு

ரகசியமாய்ச் சிரித்தபடி

தங்களுடையாதாகிவிட்ட உடலை

ஆனந்தமாய் ருசிக்கின்றன.

ஹஸன்

கதவிடுக்கு

விட்டுக் கொடுத்த பாதங்கள்

தாங்கள் ஆரம்பங்களை

அடுக்கி வைத்த மாடத்தின்

கதவிடுக்குளில் நயிந்துபட்ட பல்லிகளாக

வாடி வதங்கி வீழ்ந்த போது

அவனின் சடலம்

மண்ணறை நோக்கி போய் கொண்டிருந்தது

முளைவிட்ட

அந்த பயிற்றஞ் செடிக்குத் தெரியாது

இன்றோ நாளையோ

தான்

பிடுங்கியெறியப்படுவோமென்று

முளைத்த குரோட்டன்ஸ் செடிகளுக்கு

தண்ணீர் பாய்ச்சுபவள்

இணையத்தில் அழைத்து

குரோட்டன்ஸின் வளர்ச்சியைக் கேட்டாள்

தகவல் வலைக்குள் அவள் பின்னி விட்டதால்

பயிற்றஞ் செடியின் இறப்பும் தள்ளி வைக்கப்பட்டது!

எல்லாம் அவள் கையில்!

அவனின் சடலம்

மண்ணறை நோக்கி போய்க் கொண்டிருந்தது.

யவனிகா ஸ்ரீராம்

கண்கள் ஒளிரும் வருகையாளர்

முதியவர்களை அதிகம் மரணிக்கச் செய்யும்

பனிக்காலம் கடந்தபிறகு

நீளும் வெப்பத்தால் துருவேறிய பொருட்கள்

சிதிலமடைகின்றன

நாள் முதிர்ந்து முதிர்ந்து குழந்தைகளை

தனக்குள் தொலைத்து விடுகிறது

யானைகள் வசிக்கும் பூமியை வந்தடைகின்றன

வயலெலிகள்

செம்படவனின் கண்கள்

நிறமாறும் கடலை நோக்கி

உற்சாகமாக கூக்குரலிடுகிறது

இங்கு வருகைதர இருப்பதுயார்

முன்பு எத்தனைமுறை அந்த வருகை நிகழ்ந்தது

நிலைத்திருக்கும்படி வற்புறுத்தியது எந்த ஆசீர்வாதம்

பூனையின் பாதங்களால் உலகை அளக்கும்போது

எலிவளையில் மழைக்காலத்தின் குட்டிகள்

பிசுபிசுப்பதை நெருப்பு எறும்புகள்

மோப்பம் பிடிக்கின்றன

இச்சம்பவத்தின்போது தனது கண்கள் ஒளிர்ந்ததாக

ஒரு தீர்க்கதரிசி கூறியிருக்கிறார்

வந்து போகிறவர்களுக்கு அடையாளமாக

சில சொற்கள் நடப்படுகின்றன

அந்தச் சின்னஞ்சிறிய பெண்

கடந்து போகும் தார்ச்சாலை

கூழாங்கற்களும் நாணலும் மலிந்து

மஞ்சள் மலர்கள் மிதக்கும்

ஒரு ஓடையாய் இருந்தது.

ஸ்ரீசங்கர் கவிதைகள்

பார்த்திராத வர்ணங்களின் மாலை

சமன் குலைந்த மனத்தின் காலம்

இன்னும் வடியவில்லை

சாரலில் நனைந்த நெடிய

மரங்களும் குன்றுகளும்

வெள்ளிச் சாம்பலொளியில் மின்னுகின்றன

நான் பார்த்திராத வர்ணங்களின் மாலையில்

மிதந்துவரு முன் கண்களில் வழிகிற

ஊதாவர்ண மொழியை மௌனமாயதன்

நிறத்திலேயே

அர்த்தம் கொள்கிறேன்

இரகசியங்களேதுமற்ற செவ்வகக் கடல்

மீன்கள் காட்சிகளை மென்றபடி

மேசைமீது நீந்தித் திரிகின்றன

வீசும் கடுங்குளிரிலிருந்து

அவர்கள்

கதகதப்பை நோக்கி விரைகின்றனர்

தயங்கி கவிழத்தொடங்கின

மாலைச் செடியில் பூத்த

வெண்ணிறப்பூ ஒளிர்கிறது

சரிவொன்றின் விளிம்பை அடைந்த

யாருமறியா மஞ்சள் பறவை

நீந்த ஆரம்பித்துவிட்டது.

மேய்ப்பன்

அவர்கள்

சூளை வெம்மையிலிருந்து மீண்டு

தங்கள் குடிசை நோக்கித்

திரும்புகின்றனர்

அணுவணுவாய் சிவந்த

அங்கமெல்லாம் சிவந்த

வேளை

அந்தியென நிகழ்கிறது

சலசலவென

படிந்தயென் நிழல்மீதூரும்

தங்கநிற ஓடையை அருந்துகிறேன்

மேய்ச்சலினின்று திரும்பும்

ஆட்டுமந்தை கிசுகிசுத்து

பட்டிகளை புழுதிச் சுழலோடு அண்மிக்கிறது

நிறைந்து வழியும்

களைப்புக் குடுவை காலியாகிறது

வர்ணம் மங்கிய செர்ரிக் கோளத்தை

விழுங்கும்

நீலப்படலின் விளிம்பிலிருந்து

தோளில் கிடக்கும் மேய்ப்பனின்

நீளத் தொரட்டி வலையை

இழுத்துப் போர்த்திக் கடக்கையில்

எங்கும்

சாம்பல் பிரகடனமொலிக்கிறது.

நீலகண்டன் கவிதைகள்

ஓயாது சப்தம் எழுப்பிக் கொண்டு

இருக்கும் அலை

எப்போதும் என் மன

ஓசையை மிஞ்சி விடமுடியாது

என்றாலும் அது கடலையே

அசைத்துக் கொண்டிருக்கிறது

மேல் நோக்கி எழும் கேசத்தைக்

கைகள் கோதிக் கலைக்கும்போதெல்லாம்

வெள்ளை நாரைகள் வான் நோக்கி பறக்கின்றன

வெற்றுவெளியில்

சுற்றித் திரியும் அவற்றைத்

தேடி அலைமோதும் கருங்கூந்தல்

ஓய்விற்குப்பின் கண்மேல்

இறங்கிய கருங்கடல்

காலடிக்கு வர கடலாகிறேன் கரையில்

தத்தளித்துக் கொண்டிருந்த

பேரழகியின் பெரிய வீடும்

நகரமும் நட்சத்திரங்களோடு

பேசத் தொடங்கிவிட்டன.

0

வெம்மைப் பிரதேசத்தில் அவன்

மேகமாகக் கருகருக்க

எதைப் பற்றியுமே

பேசமுடியாத மனோநிலையில்

எதையோ கேட்டபடி

மேகத்தைக் கலைத்துக் கொண்டிருந்தவளின்

ரகசியம் ஒன்று

உள்ளுக்குள் என்றைக்குமே சொல்லமுடியாமல் இருக்க

மழைத்துளி ஒன்று விழுந்ததில்

துள்ளி எழுந்து அடங்கும் மார்பகம்

எவற்றையோ கொன்று

எதையோ உயிர்ப்பித்துச் செல்ல

வேகமாக கீழே இறங்கிய

தேகை

அப்போதுதான்

இரைதேடி வெளி வந்த

கோழிக்குஞ்சைக் கொத்தி சென்றது

அலையென மோதிச் சுழன்றடிக்கும்

காற்றில்

கதறுகிறது அவன் அழுகுரல்

காலத்தை உடைத்து உள்ளே நுழைகிறாள்

அங்கே

அவன் வளர்த்த

தோட்டத்துச் செடியொன்று

கண்ணீர் விட்டு விசும்புகிறது

அது அவள் துக்கத்தை மேலும் கூட்டுகிறது.

பழனிவேள் கவிதைகள்

திடீர் மழை

திகைத்த நடவுப்பெண்கள் கரையேறாமல்

வயிலில் விளையாட்டாக பெய்யும் மழையை முக்காடிட்டு நின்றனர்

கூடுதலானதோடு மழை

உருமாறத்துவங்கியது

அப்பெண்களின் மேல் அலங்காரமாக

விலகியமுடிகளில் திரளும் முத்துகள்

நெற்றியில் மூக்கின்நுனியில்

உதட்டு விளம்புவரை அரும்பி

தோடுடைய செவிகள் உருகுகின்றன

கழுத்தில் புதிய மணிச்சரம்

விரல்கள் கைகளில் திண்மையாக கலகலக்கிறது

காலில் நிலையற்று நழுவும் கொலுசுகள்

மழை தீவிர மடைந்துவிட்டது

அவர்கள் முன்னிலும் தெப்பலாகி

பார்க்க மழை நடுங்குகிறது

ஒருத்தி அண்ணாந்து மழையை விலக்கமுயல

ஒரு துளி நழுவி

நழுவி

அல்குளில்பட்டது

இன்னதென புரியாமல் பரவசப்படுகிறாள்

பிறகு அவள் புதைந்து நிற்கும் சேற்றில்

விசையற்று துளிர்விடத்துவங்கினாள்.

பூர்ணிமா

பைத்தியக்காரி ஒருத்தி

நடனமாடத் துவங்கினாள்

தார் உருகும் சாலையில்

ஸ்தம்பிக்கும் போக்கு

வரத்து சபிக்கிறது நீள்ஹார்ன்

அவளுக்கான பாடலின் பின்னனியாக

பாடுவது யார்தான்

தெரியவில்லை

அவள் நடனத்தின் உக்கிரத்தில்

நீராடி குளிக்குமளவு

அவளுக்குள் கோடைமழை நிகழுகிறது

ஓய்ந்து சாலையோரச் சுவற்றருகே

மூத்திரம் பெய்கிறாள

சுவற்றில் ஒட்டிய

போஸ்டர் கடவுள் கைநீட்டியிருக்கிறார்

அவள் தன்னை துழாவுகிறாள்

பிறகு தன் முலையில் ஒன்றைக்கிள்ளி

கடவுளின் கையில் வைத்துவிட்டு

மீண்டும் நடனமாடுகிறாள்

தொகுத்தலும் பகுத்தலும்

கண்டடைவதின் சூதாட்டம்

கடவுளின் நிறுவனம்

(கவிதைகள்) யவனிகா ஸ்ரீராம்

ஓர் இயக்கத்தின் விதிகள் நாளடைவில் கெட்டிதட்டி மாற்றமற்றதாகிற போது அது ஒரு நிறுவனமாகி விடுகிறது. அச் சட்டதிட்டங்களின்படியே அதை உருவாக்கியதாக உருவகிக்கப்படுகிற கடவுளும் நடக்க வேண்டியதாகிறது. சுதந்திரமானவனாக நினைக்கும் ஒருவன் அதன் சுவர்களுக்குள் அலைவுறுகிறான். அவனில் எழும் சொல்லிலிருந்து அடிக்கடி கடவுளை சந்தித்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாடோடி இசைக் கலைஞனான தன்னைக் கொல்ல அக் கடவுள் வெறியுடன் தேடுவதாகப் புலம்புகிறான். கடவுள் வசம் ஒரு கொலைப்பட்டியலும் இருக்கிறது. கடவுளைக் கொல்ல அவரிடமே துப்பாக்கி வேண்டுகிறான். கண்ணி வெடிகளைப் போல் அவர் விதைக்கும் வார்த்தைகள் வெடிக்கின்றன. கடவுள் கிழடாகி வெறி கொண்டு எல்லாவற்றையும் அபகரித்து விடுகிறார். அவர் குடிவெறி கொள்வது நாறும் பிணங்களை சடங்குகளுடன் அகற்றுவதற்கே. கடவுள் ஒரு நபும்சகனாகிறார். காம வெறியுடன் ஒரு பெண்ணைக் கோயிலில் துரத்துகிறார். அவரொரு ஹோமோசெக்ஷுவல். கடவுள் நிர்வாணமடைந்து புணர்ச்சியை ஒரு வாசகமாக்குகிறார். காளான் குடையின் கீழ் போய் அழுகிறார். கடவுளின் இருப்பு அறிவார்த்தத்தால் உருவாவது. அவர் நவீனமறியாத நிலவுடமைக்காலத்தவர். தன் குரலே கடவுளின் குரலாக ஒலிப்பது. அவர் காது கேட்காதது. ஆனால் நீதி மான்களை விட நல்லவர். கடவுள் தெருவில் திரிபவர். மத்தியகாலத்திய அவர் வாய் நாறுகிறது. அவர் வழங்குவது பழைய இறைச்சி, பொருந்தாத சாராயம். அவரை சாக்கடையிலும், அரசுக் கழிவறை களிலும் பைத்தியங்கள் தேடுகிறார்கள். உழைப்பையும் விசுவாசத்தையும் வேண்டும் தன் நிறுவனத்தைக் கவிஞர்களுக்கு கடவுள் திறப்பதில்லை.

அடக்கப்பட்ட புணர்ச்சி ஒரு விடுதலைக்கான பயிற்சியாகவே ஆகிவிடுகிறது. மனதில் நிமிரும் குறி எதிலாவது நுழைந்து கொள்ளத் துடிக்கிறது. அடக்கமாட்டாத வேட்கை வார்த்தை களாகின்றன. இதனாலேயே ஏறக்குறைய ஒரு வகையும் விட்டு வைக்கப்படு வதில்லை. வன் புணர்ச்சி, மீண்டும் மீண்டும் புணர்ச்சி. புலர் காலைப் புணர்ச்சி, குளியலறைப் புணர்ச்சி, நெடிய புணர்ச்சிக்கான கனவு, கனவில் புணர்ச்சி, ஓரினப் புணர்ச்சி, குதப் புணர்ச்சி சுயமைதுனம், போத்தல் வழிப்புணர்ச்சி, புதிய பிணத்தைப் புணர்தலென எங்கும் நிரம்பியுள்ளன. வரைமுறையற்ற புணர்ச்சிகள் போலி மதிப்பீடுகளுக் கெதிரான சமூக நடவடிக்கையாக கவிதை வரிகளில் காட்டப்படுகின்றன.

குடியும் கூட விடுபடுதலின் அம்சமாகிறது. மது பற்றிய குறிப்புகள் பிரக்ஞை நிலையென்றால் குடித்தல் மறத்தலையும் சிதைத்தலையும் கொண்டாடுவதாகிறது. இந்தக் கவிதைகளில் போதைக் குணமும் மனச்சிதைவும் அருகருகே வைக்கப் படுகின்றன. நகரத்தின் இயந்திரமயத்தை மதுக்கடை வழியாகவே பங்கேற் பில்லாமல் பார்க்க முடியும். மது ஒரு பரிசாக இருக்கிறது. காதலிலும் அது கலக்கிறது. நகரத்தின் எதிரிடையாகப் பாழ் கிராமம் குடிபோதையில் காட்சியாகிறது. பயந்த அறிவு மிருகம் தனியே குடித்து அழுது தீர்க்கிறது. குடியும் பைத்தியமும் ஒன்றாகிறது. அடைக்கப் பட்ட மதுக்கடை வாசலிலேயே உயிருள்ள வார்த்தை கிடைக்கிறது. இசையோடு மதுவருந்தும் தேசம் மேன்மையடைகிறது. கடவுளுக்குள் நம் இசை புகுந்து புயலாகி அனைத்தையும் புரட்டுவதின் கேளிக்கை தான் குடி. மதுவும் புணர்ச்சியுமான நீண்ட கால்களால் இந்த நிறுவனமான உலகைக் கடப்பதும் நிகழும். கடவுள் ஊர்வலத்தில் ஒரு நாடோடிக் கலைஞன் மதுப் போத்தலோடு இசைக்கிறான். இவ்வாறாக இசையும் மீறலின் ஓர் உப அங்கமாகிறது. ஊமைப் பாடகனா யிருந்தவன் மேல் இசை எழுதப்படுகிறது. இசையும் புணர்ச்சியும் ஒன்றாகிறது. குறிகள் இசைக்கருவிகளாகின்றன. நாதம் நம்முள் மென்னுணர்வுகளை மீட்கும் என்றும் நம்பப்படுகிறது.

இக்கவிதைகள் தமக்குள் ஒரு புறம் நகரத்தையும் மறுபுறத்தில் கடவுள், புணர்ச்சி, மதுவையும், இடையே சூறாவளி, கனவு, கடல் போன்றப் புள்ளிகளைக் கொண்டுள்ளன. அடிக்கடி இவற்றைத் தொட்டு மீண்டு கொண்டேயி ருக்கின்றன. மீதியான இடங்களில் சரளமான மொழியின் வார்த்தை களையிட்டு இணைத்து எழுப்பும் வினோதக் கோலங்கள் உருவாகின்றன. நிலத்துள் வசிப்பது, இருபதினாயிரம் வருட டைரி எழுதுதல், குருவி முட்டைகள் விழுந்து கம்ப்யூட்டர் பழுதாதல், நிலம் தேனீரின் பீங்கான் கோப்பையாதல், குழந்தைகளை இளம் பெண்கள் கூவி விற்றல், உயரக்கட்டிடத்தின் உச்சியான தொங்கு பலகையில் மனிதன் வசித்தல், புகைக் கூண்டில் கனவுகள் கசிதல், ஆலய மணியின் நிமிட முள்ளில் இரத்தம் ஒழுகுதல் எனப் பல மாயங்கள் தோற்று விக்கப்படுகின்றன. வாழ்க்கையில் சாதாரணமாகக் கிடைக்கும் அனுபவங் களும் கூட யதார்த்தம் எனும் தளத்திலிருந்து புனைவை மேற் கொள்கின்றன. விதையில்லாத திராட்சை களூடே என்பது உண்பதாகவும், செடி வளர்ப்பது தொட்டிகளில் பசுங்காடுகள் வைப்பதாகவும், உயிர் தொழில் நுட்பம் நிலங்களில் வலை விரிப்பதாகவும், நினைவுகளுடன் என்பது விதைக் கடலைகளுடன் நகர் திரும்புவதாகவும், மௌனநதியில் நீந்திச் செல்வதாக இறப்பு என்பவையெல்லாம் மொழியால் கவிதையாக உருமாற்றம் பெறுபவை.

குறுகிய ஒரு பரப்பிற்குள்ளாக சுற்றிவராமல் ஒரே வீச்சில் நவீன நிலமான நினைவு வெளியையும் அளக்கக் கவிதைகள் முற்படுகின்றன. ஆறாவது நிலமும் திணையும் உருவாக்கப்படுவதாக பின்னட்டைக் குறிப்பில் நவீன இலக்கணம் கற்பித்து ஒரு புதிய திறப்பாக பிரேம்-ரமேஷ் கூறுகிறார்கள்.

இதன் காலம் பெரும்பாலும் நிகழ்காலமாயிருக்கிறது. அவ்வப்போது இறந்த காலத்திற்கு ஊடாடி உடனடியாக தற்சமயம் நடந்தேறுபவையாக மாற்றப்படுகின்றன. ஒளிச் செவ்வகம், கனச் செவ்வகக் கடல், தாமிர இருட்டு, சிவந்த அபிப்ராயம், ஊமைப்பாடகன் போன்ற சொல்லாடல்களின் மூலமாக மொழியில் அர்த்தம் ஒளித்து வைக்கப்பட்டு அது ஒரு பூரண விளையாட்டாக நடத்தப்படுகிறது. கண்டடைவதின் சூதாட்டமாக வாசிப்பு உண்டாகிறது. சொற்களின் பயன்பாட்டுக்கு எவ்விதத் தடைகளையும் ஏற்படுத்திக் கொள்ளாமல் மேலே வந்து விழும் அனைத்துச் சொற்களுமே கவிதையாகின்றன. உள்ளார்ந்த இசையால் மீட்டப்பட்டு பல புதிய வாக்கியங்கள் அமைந்து அர்த்தங்கள் மோதிக் கொள்ளும் போர்க்களமாக இக்கவிதைகள் உருவாகின்றன. விண்வெளி நகரங்கள் சொர்க்கம் பற்றிய கருத்துருவாக்கத்தின் முடிவு போன்று எழுதப்படும் தூய தர்க்க அமைப்பாலும் பற்பல உணர்வுகள் ஒன்றோடொன்று குறுக்கிட்டு உண்டாகும் உத்வேகத்தாலும் இதிலுள்ள கவிதைகள் எழுதிச் செல்லப்படுகின்றன. கவிதை எனப்படுவது எல்லோரிலுமுள்ள கலக உணர்வுவையும், நிலவைப் பகிரும் அழகியலையும், எங்கும் பசியின் குரலைக் கேட்கும் அரசியலையும் கொண்டது, அது மாற்றம் மறுக்கும் நிறுவனத்தைக் திறக்கும் வேடிக்கையானதும் விபரீதமானதுமாகும் என்று இந்தத் தொகுப்பு முடிக்கப்படுகிறது.

குலசேகரன்

 

ஜோசப் ஜேம்சும் நானும்

ஜீ. முருகன்

1986, அப்துல் ரகுமான், பாலகுமாரன், சுஜாதா போன்றவர்களின் வசிய எழுத்துக்களால் சிறைபிடிக்கப்பட்டிருந்த காலமது. திருக்கழுக்குன்றத்தில் டிப்ளமோ படிப்பின் மூன்றாவது வருஷத்தை நிறைவு செய்து கொண்டிருந்தேன். முன்பே ஜெயகாந்தன், கி. ராஜநாராயணன், அசோகமித்திரன், லா.சா.ரா. என்று வாசித்திருக்கிறேன் என்றாலும் முதலில் சொன்ன மூவர்களைப் போல இவர்கள் அவ்வளவுக் கவர்ச்சியானவர்களாக எனக்குத் தோன்றவில்லை. அப்துல் ரகுமானைப் பின்பற்றி கவிதை எழுதவும் கட்டுரைகள் எழுதவும் முயன்று கொண்டிருந்தேன். என்னோடு படித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் ஜே.ஜே: சில குறிப்புகள்ள என்றொரு புத்தகம் வந்திருக்கிறதென்றும், அது பற்றி பரபரப்பாக பேசப்படுவதாகவும் சொன்னான். பாலகுமாரனின் அகல்யா நாவலைக் கொடுத்த ஒரு நண்பரும் (இவர்களுடைய பெயர்கள் எனக்கு ஞாபகமில்லை) இதேப் புத்தகத்தின் பெயரை மீண்டும் ஒரு முறை சொல்லி என்னை ஆர்வப்படுத்தினார். அந்தக் காலகட்டத்தில்தான் இனி முதல் இதழை ஜே.டி.தினகரன் என்ற ஆங்கில ஆசிரியரின் கையில் பார்த்தேன். (இப்போது காஞ்சிபுரத்தில் இருக்கும் இவர், ‘சாரம் என்ற முதல் சிறுகதை தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறார்) 87-ல் டிப்ளமோ படிப்பை முடித்து விட்டு ஊருக்கு வந்துவிட்டேன். 88 மார்ச் மாதம் ஒரு டி.வி. கம்பெனியில் வேலைக்குச் சேர்வதற்காக சென்னைக்கு வருகிறேன். பயிற்சி காலம். திருத்தணியிலிருந்து தினமும் ரயிலில் பயணம் செய்து கொட்டிவாக்கம் போக வேண்டும். முப்பது நாட்கள் பயிற்சி. விடுமுறையே இல்லை. மாலையில் சென்ட்ரலுக்கு திரும்புவதற்கு முன்னால் சாந்தி புத்தகக் கடைக்கும்(இது சாந்தி தியேட்டர் வளாகத்தில் உள்ளது) போய்விட்டு வருவேன். ஜே.ஜே: சில குறிப்புகள் என்ற அந்த புத்தகத்தை எப்படியாவது வாங்கிட வேண்டும் என்ற ஆர்வம்தான். அந்தக் கடையின் நிர்வாகி அதை வாங்கித் தருவதாக எனக்கு வாக்குறுதி அளித்திருந்தார்.

பயிற்சியின் கடைசி நாள். அன்று இரவு 9.00 மணிக்கு கோவைக்குச் செல்ல வேண்டும். அங்குதான் எனக்கு பணி நியமனம் செய்யப்பட்டிருந்தது. திரும்பவும் நான் அந்தக்கடைக்குச் சென்று நிலைமையை விளக்கி அந்தப் புத்தகம் எங்குக் கிடைக்குமென்று சொன்னால் வாங்கிக் கொள்வதாகச் சொன்னேன். அவர் க்ரியா வின் விலாசத்தைச் சொன்னார். அப்போது க்ரியா அலுவலகம் பைலட் தியேட்டருக்குப் பக்கத்தில் ஒரு மாடியில் இயங்கி வந்தது. கடை ஊழியர் (இவர்தான் சிறுகதை எழுத்தாளர் திலீப்குமார் என்று பின்னால் தெரிந்து கொண்டேன்) எனக்கு ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலை எடுத்துத் தந்தார். நான் படிக்க வேண்டுமென்று நினைத்திருந்த மீராவின் கனவுகள் + கற்பனைகள் = காகிதம் தொகுப்பையும் வாங்கிக் கொண்டேன்.

ரயிலிலேயே என் கையிலிருந்து அந்தப் புதிரான நாவலைப் படிக்கத் தொடங்கினேன். அதுவரைப் படித்திருந்த எந்த புத்தகத்தோடும் தொடர்பில்லாமல் அது வேறு எங்கோ சஞ்சாரம் கொண்டிருந்தது. படித்து முடிப்பதற்கு பத்து நாட்களுக்குமேல் ஆனது. வழக்கமாக கதைப்புத்தகங்கள் வாசிப்பது போல அதை என்னால் வாசிக்க முடியவில்லை. ஒரு பத்தியை வாசித்து முடிக்கு முன்பே அந்த வரிகளிலிருந்து விடுபட்டு, என்னுடைய கனவுலகில் பயணம் செய்யத் தொடங்கியிருப்பேன். அந்தக் காலகட்டத்தில் வேறு எந்தப் புத்தகங்களையும் நான் வாசிக்கவில்லை. திரும்ப திரும்ப அதையே வாசித்துக் கொண்டிருந்தேன். எனது கால்கள் தரையிலிருந்து சற்று மேலே உயர்ந்து நடக்கத்தொடங்கின. சராசரி மனிதர்கள் யாரையுமே எனக்கு மதிக்கத் தோன்றவில்லை. ஜோசப் ஜேம்சின் ஜுரம் எனக்குள் ஏறி, ஒரு போர்வைக்குள் ஒடுங்குவது போல எனக்குள் சுழலத் தொடங்கினேன்.

ஜே.ஜே: சில குறிப்புகள் நாவலைப்பற்றி பகிர்ந்து கொள்ள நண்பர்களே இல்லை என்பதால் தனிமைப்பட்டுப் போயிருந்தேன். கோவை நகரம் என்னைப் பொருட்படுத்தாமல் வேறு விதமாக இயங்கிக் கொண்டிருந்தது. புத்தகங்கள் படிக்கும் பழக்கம் உள்ளவரான எனது அலுவலக மேலாளரிடம் இந்த நாவலைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன். ஒரே இரவில் படித்துவிட்டு மறுநாள் காலை கொண்டுவந்து கொடுத்துவிட்டார். எப்படி இருந்தது என்று கேட்டதற்கு நல்லாத்தான் இருக்கு என்பதற்கு மேல் எதுவும் சொல்லவில்லை. நான் பெரும் ஏமாற்றம் அடைந்தேன். புத்தகத்தைப் படித்துவிட்டு ஆளே மாறிப்போய்விடுவார் என்ற என் எதிர்பார்ப்புகள் வீணானது. அவருடைய வேலைகளில் புதிய லயம் எதுவும் தென்படவில்லை. வழக்கமாக எப்படிக் கோப்புகளைப் புரட்டிப் பார்ப்பாரோ அப்படித்தான் பிறகும் செய்து கொண்டிருந்தார். எங்கள் அலுவலகத்திற்கு அடுத்த வளாகத்தில்தான் சிந்தாமணி சூப்பர் மார்கெட் இருந்தது. சிந்தாமணி என்றாலே கேட்டதெல்லாம் கிடைக்கும்தானே? அதில் புத்தகம் என்ற வஸ்துவும் ஒன்று. ஒரே புத்தகக் கடைதான். உண்மையில் அது ஸ்டேஷ்னரி ஸ்டோர். பக்தி, புராணம், ஜோசியம், சமையல், வெகுஜன இலக்கியம் வகைகளுக்கு ஊடே காலச்சுவடு என்ற புத்தகமும் இடம் பெற்றிருந்தது. வித்தியாசமான அதன் அட்டை அமைப்பால் கவரப்பட்ட நான் வாங்கிப் பார்த்தேன். கீழே ஆசிரியர்: சுந்தர ராமசாமி என்றிருந்தது. 2 வது இதழ் என்று நினைக்கிறேன். எதிர்பாராமல் ஒரு கதவு திறந்து வெளிச்சம் உள்ளே பாய்ந்தது போல உணர்ந்தேன். இது போன்ற புத்தகங்கள் எங்கே கிடைக்குமென்று அவரை விசாரித்தேன். அவர் விஜயா பதிப்பகம் விலாசத்தைச் சொன்னார். கோவை நகருக்கு அது ஒரு பெரிய பொக்கிஷம் என்றுதான் சொல்ல வேண்டும். அங்குதான் நிகழ், கனவு, கிரணம் போன்ற சிறுபத்திரிகைகளைப் பார்த்தேன். நிகழ் விலாசம் நான் தங்கியிருந்த பகுதியிலேயே இருந்ததால் அவ்விலாசத்தைத் தேடிப்போனேன் ளகி.பழனிச்சாமி என்கிற மனிதரை அங்குதான் சந்தித்தேன். அப்போது அவர் முற்றாகப் பார்வையை இழந்திருந்தார். இரண்டு சந்திப்புகளுக்குப் பிறகுதான் கோவை ஞானி என்பவர் அவர்தான் என்று எனக்குத் தெரிந்தது. கோவை ஞானி என்ற அந்தக் கதவுதான் பல கதவுகள் திறக்கக் காரணமாக இருந்தது. சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள், பிரசாதம், நடுநிசி நாய்கள், பள்ளம், புளியமரத்தின் கதை போன்ற புத்தகங்களை அப்போதுதான் நான் வாசித்தேன். பத்திரிகைகளில் வெளிவந்த அவருடைய கதைகள் வசீகரமாய் இருந்தன. அதுவரை அவர் எழுதியிருந்த சிறுகதைகளை க்ரியா வெளியிட்டது. திரும்பத் திரும்ப அந்த கதைகளை வாசித்து களம் நண்பர்கள் வட்டத்தில் விவாதித்துக் கொண்டிருந்தோம். சிறுகதையின் வடிவம் குறித்த அதீத பிரக்ஞை அவரிடம் இருந்தது. ஒரு சிறுகதை என்றச் சட்டகம் எவ்வளவு கச்சிதமானதாக இருக்க வேண்டும் என்பதை அவரிடம்தான் நான் தெரிந்து கொண்டேன். இதே ஈர்ப்பு புதுமைப்பித்தன் கதைகள் மேல் இருந்தாலும் அவை எதிலும் அடங்காதுக் காட்டுத்தனமாக ஓடிக்கொண்டிருந்தன. கதையின் பகுதிகளை ஒரு மையத்தில் இணைக்கும் சு.ரா.வின் லாவகத்தை நிச்சயமாக நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அவருடைய நடை வசீகரமாய் இருப்பதற்கு அதற்குள் இருக்கும் லயம்தான் காரணம். தம்புராவின் இசையைப்போல அவருடைய வரிகளுடன் பின்னிப் பிணைந்து உடன் வந்து கொண்டே இருக்கும். புளிய மரத்தின் கதையில் தொடங்கும் அந்த இசை ஜே.ஜே. வில் உச்சம் பெற்று குழந்தைகள், பெண்கள், ஆண்கள் நாவலில் தேய்ந்த தன்மையை பெற்றுவிட்டதாகவே நான் உணர்கிறேன். பழக்கத்தின் பாசி படிந்த நாவலாகவே எனக்கு குழந்தைகள், பெண்கள், ஆண்கள் தோன்றியது. அதிகப்படியான நிதானமும், கவனமும், பழக்கப்பட்ட நடையும், தூக்கலான ரொமான்டிசிசக் கூறுகளும் அதைப் பின் தள்ளியதாகவே கருதுகிறேன். இதனுடைய தொடர்ச்சியைப் போல சமீபத்தில் வந்த சிறுகதைகளும்கூட அவ்வளவு சிலாகிக்கும்படி அமையவில்லை.

அவருடைய உரைநடை வாசகனில் பெரும் ஆதிக்கம் செலுத்தக் கூடியது. அதைத் தொடர்ந்து வாசிப்பவன் அதிலிருந்து மீட்சிபெற பெரும் பிரயத்தனம் கொள்ள வேண்டும். அவருடைய ஆதிக்கத்தைப் பல எழுத்தாளர்களிடம் கண்டிருக்கிறேன். அதை உதறிவிட்டு முன்னேறியவர்களும் உண்டு. அதை இன்று சுமந்து கொண்டிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். புதுமைப்பித்தன், மௌனி, பிரமிளுக்கு பின் பெரிய ஆளுமை என்று சு.ராவை நிச்சயமாகச் சொல்ல முடியும். நாவல், சிறுகதை, கவிதை, விமர்சனம், பத்திரிகை என்று எல்லாத் துறைகளிலும் அவர் பெரும் பங்களிப்பை செய்திருக்கிறார். இன்று புதிதாக வரும் வாசகர்களுக்கு இந்த எழுத்துக்கள் அளப்பரிய கொடை என்றே சொல்ல முடியும்.

காலச்சுவடு இதழின் இரண்டாவது காலகட்டத்தில்தான் அவருக்கு நிறைய அதிருப்தியாளர்கள் உருவானார்கள். அவருடைய எழுத்துக்களால் உருவான முரண்களாக அவை இருக்கவில்லை. அவருக்கு நண்பர்களாக இருந்த சிலர் தங்களுடைய தனிப்பட்ட மனக்கசப்புகளையே பொதுத்தளத்திற்கு கொண்டு வந்திருந்தனர். இந்த சண்டைச் சச்சரவுகள் சுந்தர ராமசாமி என்ற ஆளுமையின்மேல் வாசகர்களின் மனதில் ஒரு தோய்வும் உருவாகவே செய்தது. நாகரீக எல்லைகளைத் தாண்டிய தாக்குதல்களும் அவர்மேல் நிகழ்த்தப்பட்டன. அவருடைய சாவை வரவேற்கும் அளவுக்கு அவர் என்னக் கொடுமை செய்தார் என்றுதான் விளங்கவில்லை. சகஎழுத்தாளனை இப்படி வசைபாடவும், குற்றவாளியாக்கவும், தண்டிக்கவும் நாம் ஏன் இவ்வளவு ஆர்வம் காட்டுகிறோம்?

சாதி என்ற அடையாளத்தோடுதான் இப்போதெல்லாம் எழுத்தாளர்கள் புரிந்துகொள்ளப்படுகிறார்கள். குழு மனப்பான்மை என்ற இடத்தை இப்போது சாதி என்ற வார்த்தை பிடித்துக்கொண்டுவிட்டது. தகுதியானவர்கள், தகுதியில்லாதவர்கள் எல்லோருமே இந்தக் குற்றச்சாட்டை இன்று சுமக்கவேண்டியிருக்கிறது.

சு.ராவின் மௌனம் சாதிக்காததை அவருடைய மரணம் சாதித்திருக்கிறது. அது எல்லாவற்றையும் சமன் செய்துவிட்டிருக்கிறது. காலச்சுவடு, உயிர்மை, தீராநதி, புதியபார்வை இதழ்களில் வந்த கட்டுரைகள் இதை நிரூபிக்கின்றன. துதிபாடுதல்களும், போற்றுதல்களும், சங்கடங்களும், வசைபாடல்களும் நிறைந்த குழிகளில், கண்ணீர் தேங்கி நிற்கிறது. அதன் பரப்பில் சு.ராவின் உருவம் புன்னகையுடன் அசைகிறது.

உண்மையில் ஒரு எழுத்தாளனுக்கு செய்யும் மரியாதை, அவனைச் சந்தித்துப் பேசுவதிலோ, அவனை வரவழைத்து விருந்து வைத்து மகிழ்வதிலோ, பரிசு கொடுத்து கொண்டாடுவதிலோ இல்லை; அவனை வாசிப்பதில்தான் இருக்கிறது. தமிழ் வாசக உலகம் அந்த மரியாதையை சுந்தர ராமசாமிக்குச் செய்யும் என்று நம்பலாம்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: