வனம் 6

மே-ஜூன் 2005

ஆசிரியர்கள்: ஜீ.முருகன், ஸ்ரீநேசன்

தலையங்கம்:

சண்டைக்கோழியும்

பின்நவீனத்துவ கிண்டல்களும்

சண்டைக்கோழி பட வசன விவகாரத்தை சமீபத்தில் நாம் கண்டு களித்தோம். சான்றாயர்களாக இருந்து வாக்களித்தோம். ரசிகர்களாக இருந்து விசில் அடித்து உற்சாகப்படுத்தினோம். சிலர் நட்சத்திரமாகப் பிரகாசித்தார்கள். நாடக ஏற்பாட்டாளர்களோ திருப்தியுடன் வீடு திரும்பினார்கள். பெண்ணியக்குரலாக ஒலிக்கத்தொடங்கிய இவ்விவகாரம் சாதியமாக மாறி பின்நவீனத்துவக் கூத்தாக இப்போது இறுதி வடிவம் எடுத்திருக்கிறது. உண்மையில் இந்தச் செயல்பாடுகளுக்கும் கலை, கலகம், போராட்டம், புரட்சி போன்ற மேலான நோக்கம் கொண்ட வழி முறைகளுக்கும் என்ன சம்பந்தம்? குறைந்த அளவு இவர்கள் பெண்ணியத்தையும், தலித்தியத்தையும், பின்நவீனத்துவத்தையும் கிண்டல் செய்வதையாவது விட்டுவிடலாம்.

இவர்கள் தங்களுடைய எழுத்தின் பலத்தில் நிற்பவர்களாக இல்லாமல் தங்களுடைய குரல் வலிமையில் நிற்பவர்களாக இருக்கிறார்கள். சிறந்த படைப்பாளியாக அறியப்படவேண்டுமானால் ஆழ்ந்த வாசிப்பும் நேர்மையான எழுத்தும் அவசியம். சிலர் இதை நம்பாமல் மலிவான உத்திகளைத் தேடிப் போகிறார்கள். எவ்வளவு நாளைக்கு இந்தக் கூத்து எடுபடும்? மேம்போக்கான வாசகன்கூட இந்தப் பெயர்களை உச்சரிப்பதை விட்டு வேறு பெயர்களுக்குப் போய்விடுவான். குறைந்தது 10 ஆண்டுகள் வாசிப்பு அனுபவம் கொண்ட ஒருவர் யோசித்தப் பார்த்தால் தெரியவரும் எஞ்சியவை எவையென்று.

க.நா.சு கல்லறையிலிருந்து கிளம்பும் பட்டியல் பூதங்கள்

க.நா.சு தொடங்கி வைத்தப் பட்டியல் சமாச்சாரம் இன்றும் தொடர்கிறது. தங்களுடைய இலக்கிய ஆய்வு (?) கட்டுரைகளிலோ, பேட்டிகளிலோ தரவரிசைப் பட்டியலிடுவதை சிலர் ஆர்வத்துடன் செய்து வருகிறார்கள். பெரும்பாலும் இவை ஆதரவாளர்களின் பட்டியலாகவே இருக்கும். தமிழின் தலைசிறந்த நாவலாசிரியர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்களின் வரிசைகள் இவை. பெண்களுக்கும், தலித்துகளுக்கும் இதில் உப பிரிவுகளும் உண்டு. தினசரியில் வெளியாகியிருக்கும் தேர்வு முடிவில் எண்களைத் தேடுவது போல ஆர்வத்துடன் ஒவ்வொரு படைப்பாளியும் இந்தப் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என்று தேடும் மன நோய்க் கூறு கொண்டவர்களாக ஆக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் ஒவ்வொருவருக்கும் ஆதரவாளர்களும் அதிருப்தியாளர்களும் இன்று பெருகிப் போயுள்ளார்கள். யாருடையப் பட்டியலிலும் இடம்பெற முடியாத துரதிர்ஷ்டசாலிகளுக்காக வனம் தன்னுடைய ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

சிறுகதைகள்:

போஸ்ட் மார்ட்டம்

பாபநாசப்பெருமாள்

காலை 7.00 மணிக்கு நீதிபதியும் அதிகாரிகளும் வந்துவிட்டனர். நிபுணர்கள் வந்திருக்கவில்லை. பாலத்தின் மீதும் ஆற்றினுள்ளும் கூட்டம் அதிகமாக இருந்தது. மொத்த காலனியும் அங்கே கூடிவிட்டதாகத் தோன்றியது. எல்லோர் முகத்திலும் ஆவேசமும் ஆர்வமும் பரபரப்பும் தெரிந்தது. காற்றில் துயரம் கலந்திருந்தது. உச்சநீதிமன்றம் தலையிட்டிருப்பதால் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவியது. கடப்பாரை, மண்வெட்டிகளுடன் தோண்டுபவர்கள் இருவர் தயாராக இருந்தனர். புதிதான சவப்பெட்டியுடன் ஆம்புலன்ஸ் காத்திருந்தது. பத்திரிகை நிருபர்களும் தொலைக்காட்சி வீடியோ கிராபர்களும் தாமதமாவதற்காக அலுத்துக்கொண்டனர். டாட்டா-சுமோ ஒன்றில் நிபுணர்கள் மூவர் வந்திறங்கினர். ஒருவர் மட்டுமே தமிழ் தெரிந்தவராக இருந்தார். மற்ற இருவரும் கொங்கணி பேசும் கோவானியர்கள். நீதிபதி, அதிகாரிகள், நிபுணர்கள் எல்லோரும் கைகளில் உறைகளை மாட்டிக்கொண்டார்கள். வாய், மூக்கை மறைக்கும் வெள்ளைத் துணிகளைக் கட்டிக் கொண்டார்கள். சீருடைக் காவலர்கள் இல்லாததைக் கவனித்த நீதிபதி, அதிகாரியிடம் அது பற்றி வினவினார். காவல் நிலையத்தில் சித்திரவதைச் செய்துக் கொன்றுவிட்டதாகப் புகார் செய்திருக்கும் நிலையில் பிணத்தை எடுக்கும்போது காவலர்கள் இருந்தால், பதற்றம் அதிகமாகி, ஏதாவது பிரச்சனை ஏற்படலாம் என்பதால் காவலர்கள் அங்கே செல்லவேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததையும், சாதாரண உடையில் அதிரடிப் படையினர் கும்பலோடு கும்பலாகக் கலந்து நிற்பதாகவும், பத்திரிகை, தொலை காட்சியினரும்கூட சடலத்தைப் படம்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும்படியும், நிர்வாகம் வாய்மொழியாக எச்சரித்திருந்தது எனவும் அதிகாரி நீதிபதிக்கு மட்டும் கேட்கும் தணிந்த குரலில் விளக்கிக் கூறினார். ஆனால் அது எல்லோரும் அறிந்த ரகசியமாகவே இருந்தது.

இறந்தவனின் மனைவி காட்டிய இடத்தில் தோண்ட ஆரம்பிக்கும்போது, காலை ஒன்பது மணியாகிவிட்டது. சிலர், ‘அந்த இடம் இல்லை; வேறு இடம் என்று சந்தேகத்தைக் கிளப்பினார்கள். வெட்டியான் உறுதியாகச் சொன்ன அந்த இடத்திலேயே தோண்ட ஆரம்பித்தார்கள். கிராம நாட்டாமை போலத் தெரிந்த ஒருவர் அப்படி தோண்டு; மண்ணை எட்டிப் போடு எனக் கட்டளை இட்டுக் கொண்டிருந்தார். சுற்றி நின்றவர்களும் ஆளாளுக்கு ஒரு யோசனை சொல்ல ஆரம்பித்தனர். உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எனத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், ‘இது அக்கறையோடும் பொறுப்போடும் கவனமாகச் செய்ய வேண்டிய வேலை;மிகவும் சென்ஸ்டிவ்வான விவகாரம் என்று கையை நீட்டி நீட்டிப்பேசிக் கொண்டிருந்தார். வாழ்வுரிமைப் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் என்ற அட்டையைச் சட்டையில் அணிந்திருந்த ஒருவரும் அங்கிருந்தார். ஆளுங்கட்சியின் உள்ளூர்ச் செயலாளர், எதிர்க்கட்சிப் பிரமுகர், ஊராட்சித் தலைவர், பிரதிநிதிகள், இன்னும் பலரும் இருந்தனர். இறந்தவனின் மனைவி, காவல் துறையை அசிங்கம் அசிங்கமாகத் திட்டிக்கொண்டே இருந்தாள். அவளது அழுகையும் ஓலமும் இரங்கத்தக்கதாக இருந்தது.

கேமராக்களும் வீடியோக்களும் உன்னிப்பாகப் பதிவு செய்யத் தொடங்கின. சுற்றி நின்று சலசலத்தவர்களை அதிகாரிகாரியொருவர் தள்ளிநிற்குமாறு வேண்டியபடி இருந்தார். யாரும் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. சுமார் மூன்றடி ஆழம் தோண்டுவதற்குள்ளாகவே இரு தொழிலாளிகளும் கலைத்துப்போனார்கள். அவர்கள் போதையில் தள்ளாடி விழுந்தார்கள். நிர்ப்பந்தத்தின் பேரில் சிப்பந்திகள் தோண்ட ஆரம்பித்தார்கள். மேலும் இரண்டடி தோண்டியபோது, துர்நாற்றம் எழத் தொடங்கியது. எல்லாரும் மூக்கைப் பிடிப்பதும் தேய்ப்பதும் பொத்திக் கொள்வதும், ‘ச்சை என்று அருவெறுப்பதுமாக நின்றனர். சவப்பெட்டியின் மூடி தட்டுப் படுவதுபோல் உணர்ந்தனர். வழக்குரைஞர் பதற ஆரம்பித்தார். பெட்டியை மிதித்துவிடாமல் இருக்குமாறு எச்சரித்தார். எல்லோருமே, ‘மெதுவா…மெதுவா… எனப் பதைத்தனர். நாற்றமும் வீச்சமும் அதிகரித்தது. சிப்பந்திகள் குழியிலிருந்து மேலேறி ஓடினார்கள். என்னமோ ஏதோ என்று எல்லோரும் விலகி ஓடினார்கள். ஒன்றுமில்லை என்றதும் திரும்பி வந்தார்கள். மேற்கொண்டு தோண்ட சிப்பந்திகள் மறுத்தனர். ஊராட்சித் தோட்டிகளும், ‘முடியாது என்று தட்டிக் கழித்தனர். எல்லோரும் அலுத்துக் கொண்டார்கள். நிபுணர்கள் அவசரப்படுத்தினார்கள். நீதிபதி, ‘இன்னும் நல்ல ஏற்பாடுகள் செய்திருக்கலாமே என்று அங்கலாய்த்தார். பார்வையாளர் ஒருவர் உதவ முன்வந்தார். அதிகாரி அனுமதித்ததால் குழிக்குள் இறங்கினார். பெட்டி மூடியின் மேலிருந்து சிறிது மண் எடுத்து, சோதனைக்காக, நிபுணர்களின் ஆலோசனையின்படி, சோதனைக்குப்பியில் பத்திரப்படுத்தப்பட்டது. மூடியின் மேலிருந்த மண் முழுவதையும் கைகளால் அவர் விலக்கினார். பெட்டியின் மீது ஒட்டப்பட்டிருந்த கருப்புத் துணியும் சிலுவைக்குறியும் தெரிந்தன. கடப்பாரையின் மெல்லிய கூர்ப்பகுதியை மூடியின் அடியில் கொடுத்து மெல்ல நெம்பி எடுக்க எடுக்க தாங்க முடியாத வீச்சம் மேலெழுந்தது. நின்றவர்கள் அருவெறுத்து ஓடி, மீண்டும் வந்து சுற்றி நின்றனர். மேல் மூடியை அகற்றி, அதனுள்ளிருந்த நீலநிற பிளாஸ்டிக் மூட்டையைப் பிளேடால் கிழித்து விரிக்க, தலை தெரிந்தது. கருப்புத் தலைமயிரும் மீசை முடிகளும் அப்படியே இருந்தன. ஒரு பல்லின் சிறுபகுதி வெளியே துருத்தி நின்றது. அவன் தான்.. அவன்தான்… என்று ஒருவர் கூச்சலிட்டார். குழியிலிருந்து பரவிய நாற்றம், சகிக்கமுடியாமல் இருந்தது. இறந்தவனின் மனைவியின் ஓலம் காற்றைப் பிளந்தது. அவளை வேறு பக்கமாகச் சிலர் அழைத்துச் சென்றனர்.

பிரேதத்திற்குச் சிறுசேதமும் இல்லாமல் வெளியே எடுக்கவேண்டும் என்று வழக்கறிஞர் எச்சரித்துக்கொண்டே இருந்தார். பெட்டியோடு எடுக்க முயன்றார்கள். முடியவில்லை. தாம்புக் கயிறுகள் கொண்டுவந்து பெட்டியைச் சுற்றிக் கட்டி, இழுக்க முயற்சித்தும், இயலவில்லை. பெட்டி நொறுங்க ஆரம்பித்ததை உணர்ந்தார்கள். பிரேதத்தை மட்டும் அலாக்காகத் தூக்கிவிடுமாறு எல்லோரும் ஊக்குவித்தார்கள். அந்தப் பார்வையாளன் இரண்டு கைகளையும் பெட்டிக்குள், பிளாஸ்டிக் மூட்டைக்குக் கீழாகக் கொடுத்து, அதனை ஒரு பயில்வானைப் போலத் தூக்கிப் பிடித்தான். மேலே, வாங்கிக் கொள்ள யாரும் தயாராக இல்லை. சதைத் துண்டுகள் உருகி வழிய ஆரம்பித்தன. வீசிய கெட்ட வாடையில், எல்லோரும் ஓடிப்போய்த் தூரமாக நின்றுக் கொண்டார்கள். அதிகாரி, ‘பிடி…பிடி.. என்று கூச்சலிட்டுக் கொண்டே., ஓடிச் சென்று, துண்டுகள் கீழே விழாதப்படி, ஒரு மூலையைத் தாங்கிப் பிடித்தார். வி.ஏ.ஓவும் சிப்பந்திகளும் ஓடிவந்து, மற்ற மூன்று மூலைகளையும் பிடித்தனர். காடாத் துணியில் வைத்து மூடினார்கள். துர்நாற்றம் தாங்க முடியாததாக இருந்தது. அனைத்தும் அழுகி, கூழாகத்தான் இருக்கும் என்று பேசிக் கொண்டார்கள். அதனைப் புதிய பெட்டிக்குள் வைத்து, மூடி, ஆணிகள் அடித்து, ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள். பிரேதக் குழியில் இருந்த பெட்டியின் அடிமண்ணைக் கொஞ்சமாக எடுத்து, பரிசோதனைக்குப் பத்திரப்படுத்தினார்கள்.

நிபுணர்கள் டாடா-சுமோவில் ஏறிக்கொண்டனர். ஸ்கார்ப்பியோவின் முன்னிருக்கையில் நீதிபதி அமர, அதிகாரிகள் பின்னிருக்கைகளில் அமர்ந்தனர். சுமோ, ஆம்புலன்ஸ், ஸ்கார்பியோ மூன்றும் ஒன்றன்பின் ஒன்றாகத் கிளம்பின.

நீதிபதி, ‘கிராமத்தில் ஏன் இவ்வளவு பதற்றம் என வினவினார். அவரவருக்குத் தெரிந்ததைப் பேசிக் கொண்டார்கள். இறந்தவன் கேபிள் டிவியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். நகரத்தில் நான்கு கொலைகள் நடந்துவிட்டிருந்தன. வங்கி ஒன்றைக் கொள்ளை அடிக்க முயற்சி நடந்திருந்ததாகவும் வதந்தி உலவியது. குடியிருப்புப் பகுதிகளிலும், பூட்டிய வீடுகளில் திருட்டுகள் நடந்தன. ஒரு இரவு கூட ஆளில்லை என்றால், வீட்டில் புகுந்து விடுகின்றனர். இரு சக்கர வாகனங்கள், தொடர்ந்து காணாமல் போய்க்கொண்டிருந்தன. குடியிருப்பு நலச் சங்கத்தினர் வீட்டிற்கு ஒரு ஆள் என முறை வைத்து, நான்கு பேராக இரவுகளில் கம்புகளுடன் ரோந்து சுற்றி, திருட்டைத் தடுக்க முயன்றனர். நடந்த கொள்ளைகளில் துப்புக் கிடைக்கவில்லை. பக்கத்து மாநிலத்தில் ஜெயிலிலிருந்து விடுதலையாகியிருந்த ஒரு கொள்ளைக் கூட்டம் இங்கு வந்து கைவரிசை காட்டுவதாகப் பேசிக் கொண்டார்கள். காவல்துறை மீது, வெறுப்பும் அவநம்பிக்கையும் மிகுதியானது. ஒரு சில விஷமிகள் திருட்டிலும் கொள்ளையிலும் காவல்துறைக்கும் பங்கு கிடைக்கிறது என்ற அளவிற்குக் கதை கட்டினார்கள். சிலர் புதிய அதிகாரியின் ராசி சரியில்லை என்றார்கள். அவர் அமாவாசைக்கு மறுநாளான அரைமுட்டில் பணிப் பொறுப்பேற்றதால்தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று ஒருவர் விசனப்பட்டார். நெருக்கமான நகரக் குடியிருப்பொன்றில் பட்டப் பகலிலேயே ஒரு தாயும் அவளது பத்துவயது மகளும் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டிருந்த வழக்கில் அவனுக்கும் சம்பந்தம் இருப்பதாகக் காவல்துறை சந்தேகப்பட்டது. கொலை நடந்த நாளில், அந்த வீட்டிற்கு அவன் சென்றிருந்ததைக் காவல்துறை புலனறிந்துவிட்டதாகப் பேசிக் கொண்டார்கள். முதல் விசாரணையில் குற்றத்தை அவன் மறுத்தான். ஊர்க்காரர்கள், நாட்டாமையுடன் காவல்நிலையத்திற்குச் சென்று அவனை மீட்டு வந்தனர். அப்போதே அவன் மிகவும் களைத்துப் போயிருந்தான். அவனது உடலில் காயங்கள் இருக்கவில்லை. மூன்று நாட்களுக்குப்பின், காவல்நிலையத்திற்கு அவனை மீண்டும் அழைத்துப்போய் காவல் ஆய்வாளர் விசாரித்துக் கொண்டிருந்தார். அவனோ அப்போதும் மறுத்தான். அவன் மனைவியும் நாட்டாமையும் உள்ளூர் பிரமுகர் சிலருமாகச் சென்று, உயர் அதிகாரியைச் சந்தித்து, ‘ஒரு பாவமும் அறியாத வாயில்லாப் பூச்சியைக் கொடுமைப் படுத்துவதாகப் புகார் செய்தனர். அவனை விடுவிக்கக் கோரினர். அவரோ, ‘விசாரணை தானே செய்கிறார்கள். சாட்சி இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். இப்போது ஒன்றும் செய்யமுடியாதுஎன்று சமாதானம் சொல்லி அனுப்பினார். மறுநாள், கிராம நாட்டாமையிடம் அந்தச் சரகக் காவல் ஆய்வாளர், ‘அவன்தான் குற்றத்தைச் செய்தவன். எங்களிடம் ஆதாரம் இருக்கிறது. குற்றத்தை ஒத்துக் கொள்ளச் சொல்.. இல்லை என்றால் காலனி தாங்காது என்று மிரட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

மறுநாளே அவனை விசாரணைக்காகக் கொலை நடந்த வீட்டுக்கு அழைத்துச் செல்லும்போது, அவன் தப்பியோட முயற்சித்ததாகவும், தடுத்த காவலர்களைத் தாக்கியதாகவும், அப்போது நடந்த மோதலில் அவன் சுடப்பட்டதாகவும் செய்தி வெளியானது. அவனது நெஞ்சில், இடது புறம் குண்டு பாய்ந்திருந்ததாகச் சொன்னார்கள். தலைநகர மருத்துவமனையின் பிரேத பரிசோதனையிலும், ஆர்.டி.ஓ. விசாரணையிலும் காவல்துறையின் செயல்பாட்டில் குற்றம் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று சட்டமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. கிராம மக்களும் இறந்தவனின் மனைவியும் மனித உரிமை ஆணையத்திற்கும் பிரதமருக்கும் குடியரசுத் தலைவருக்கும் உயர் அதிகாரிகளுக்கும் தொடர்ந்து புகார் மனு அனுப்பிக் கொண்டிருந்தார்கள். வாழ்வுரிமைச் சங்கத்தின் சார்பில், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுமீதுதான் இப்போதைய மறுபிரேத விசாரணைக்கு உத்தரவு இடப்பட்டது. காவல்துறையினர் இப்போதும்,’இறந்தவன்தான், இரு நண்பர்களை அழைத்துச் சென்று, மூன்று பேராகக் கற்பழித்துக் கொன்றார்கள் என்று சாதிக்கிறார்கள். காவல்நிலையத்தில் அடித்துக் கொன்றதை மறைப்பதற்காக, மோதல் என்றும், துப்பாக்கிச் சூடு என்றும் கதை பரப்புவதாக ஊர்மக்கள் நம்புகின்றனர்.

பயணத்துக்கு நடுவே ஊர்திகள் ஓரிடத்தில் நின்றன. அப்போதே மணி இரண்டாகியிருந்தது. யாரும் சாப்பிடவில்லை. குடிப்பதற்குத் தண்ணீர் பாட்டில்கள் மட்டும் வாங்கிக் கொண்டு விரைந்தனர். பக்கத்து மாநிலத் தலைநகரில் உள்ள அந்த மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்குக் கொண்டு போய் நிறுத்திய போது மாலை மணி ஐந்தாகியிருந்தது. இறந்தவனின் மனைவி, உறவினர்கள், கிராம நாட்டாண்மை, வாழ்வுரிமைச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆக மொத்தம் இருபது பேராக ஒரு வேனில் முன்னமேயே அங்கு வந்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆம்புலன்ஸிலிருந்து பெட்டியை இறக்கி, மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறைவாயிலில் வைத்தார்கள். பெட்டியைத் திறந்து பிண மூட்டையை ஸ்ட்ரெச்சரில் வைத்துத் தூக்கிச் சென்று பரிசோதனை மேசை மீது வைத்தனர். எல்லோருமே பிணப்பரிசோதனையைப் பார்வையிட அனுமதி கேட்டனர். இரண்டு பேரை மட்டுமே அனுமதிக்க முடியுமென்றார் நிபுணர். வாழ்வுரிமைச் சங்கத்தைச் சேர்ந்தவர் இறந்தவனின் மனைவியிடம் ‘‘நீங்கள் மிகப்பெரிய அதிகார அமைப்பை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறீர்கள். தைரியமாகச் செல்லுங்கள். நாங்கள் உங்களுக்கு முழுமையாக ஆதரவளிக்கிறோம்’’ என்று உணர்ச்சி வசப்பட்டார். இறந்தவனின் மனைவியுடன் நாட்டாமை மட்டும் பிரேத பரிசோதனை அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். நீதிபதியும் அவருடன் ஒரு அதிகாரியும் பரிசோதனை அறைக்குள் நுழைந்தனர்.

தமிழ் பேசும் மருத்துவ நிபுணர் இறந்தவன் மனைவியிடம் சடலத்தைப் பார்த்த பிறகும் தைரியமாக இருப்பதற்காக அவளைப் பாராட்டினார். வேறு சிலர் உள்ளே வந்து மயங்கி விழுந்திருக்கின்றார்கள் என்றும் தெரிவித்தார். அந்த மருத்துவமனையிலுள்ள பிரேத பரிசோதனை அறை மிக நவீன கருவிகள் கொண்டதென்றும் பரிசோதனை நேர்மையாக நடத்தப்படும் என்றும், பரிவுடன் பேசினார். அவள் இறந்த தனது கணவன் நிரபராதி என்று சொல்லி அழுதாள். போலீஸ் அவனை அடித்துச் சித்தரவதை செய்ததில்தான் இறந்துவிட்டான் என்றாள், உறுதியாக. குண்டு பாய்ந்த இடத்தில் ரத்தச் கசிவு இல்லை என்றாள். அதனால் இறந்த உடலில் தான் சுட்டிருக்கிறார்கள் என்றும் உடம்பு பூராவும் ரத்தக் காயங்கள் இருந்ததாகவும் சொன்னாள். கன்னம் வீங்கியிருந்ததென்றும் நகக்கண்களில் ஊசி ஏற்றிய அடையாளங்கள் இருந்ததென்றும் சொன்னாள். இடது கைச்சுண்டுவிரலில் நகமே இல்லாமலிருந்ததென்றும் உடலில் சில இடங்களில் தோல் கருகிப் புண்ணான அடையாளம் கூட இருந்ததென்றும், விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது அவன் அணிந்திருந்த ஜட்டி பிரேதத்துடன் வரவில்லையென்றும் வேறு ஜட்டி இருந்ததென்றும் ஆண்குறியிலும், விதைகளிலும் கூட ரத்தம் கசிந்திருந்ததாகவும் அழுது கொண்டே சொன்னாள். ‘‘எனக்கு நியாயம் கொடு, தெய்வமே’’ என்று அவரின் கால்களில் விழப்போனாள். அவர் தடுத்தார். ‘‘தப்பு செய்த போலீசுக்கு தண்டனை கிடைக்க வேண்டும்’’ என்று வாய்குழறினார் நாட்டாமை. பிரேதம் இருந்த மூட்டையைக் கிழித்தார்கள் . தலையைத் தவிர மீதிப்பகுதி எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே குவியலாக இருந்தது. மண்பாண்டம் செய்ய மிதித்துப் பிசைந்து சக்கரத்தில் சுற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் சேறு போல் இருந்தன. அந்தச் சேற்றினுள்ளிருந்து ஒவ்வொரு எலும்பாக எடுக்க ஆரம்பித்தார்கள். விலா எலும்புகள், முழங்கை எலும்புகள், தோள்பட்டை எலும்புகள், இடுப்பெலும்பு, தொடை கால் எலும்பு எல்லாமே தந்த நிறத்தில் ரத்தம் பூசியது போல் ஈரத்துடன் இருந்தன. சகிக்க முடியாத நாற்றம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. பிணம் முழுவதுமாக அழுகிக் கூழ் போலாகி விட்டிருந்ததால் உடலில் இருந்ததாக அந்தப்பெண் கூறிய காயங்கள் பற்றியெல்லாம் சோதனை இடமுடியாததைக் கூறிய அந்த நிபுணர் தலையை மட்டும் தனியாகக் கையில் எடுத்துக் காட்டினார். வெளிப்பக்கமாக கபால எலும்புகள், தாடை போன்றவற்றில் முறிவோ, காயமோ இல்லாததைக் கூறினார். ‘‘வாய்க்குள் இரும்புக் கம்பி போன்றவற்றை நுழைத்து தொண்டைக்குழியில் இடித்திருந்தால் மண்டை ஒட்டின் உட்புறம் பல்லியின் வால்போல ஒரு கீறல் தெரிய வாய்ப்புண்டு. அதுபோல ஏதாவது இருக்குமா, பார்க்கலாம்.’’ சொல்லிக் கொண்டே அவர் சிறிய ஆக்சாவினால் நெற்றிப்பகுதியில் அறுக்க ஆரம்பித்தார். ஏற்கனவே அறுத்து ஒட்ட வைக்கப்பட்டிருந்த அது உடனேயே பிளந்து கொண்டது. மூளை என்று எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. மண்டையின் மேல்பகுதியை மட்டும் தனியாக எடுத்து உட்புறத்தைத் தடவிக் காட்டினார். எவ்வித கீறலும் இல்லாமலிருந்தது.

பற்களிலும் ரத்தக்கறை இருந்ததென்றும், உதடுகள் கிழிந்திருந்ததென்றும் வாயில் குத்தியிருப்பார்கள் என்றும் அப்பெண் கூறியதும் ‘‘ஒரு பல் இல்லாமலிருந்தால் அல்லது சிதைந்திருந்தால் கூட அது கொடுங்குற்றம்’’ எனப் பதிவு செய்யலாம் எனச் சொன்ன நிபுணர் மேல் தாடையையும் கீழ்த்தடையையும் கைகளால் பிளக்க முயற்சித்தார்; கிட்டிப்போயிருந்தது. சிறிய இரும்புத் தகடு எடுத்து பற்களுக்கிடையில் வைத்து நெம்பித் திறந்து அதன் வாய்க்குள் விரலை நுழைத்து ஒவ்வொரு பல்லாக அசைத்துக் காட்டினார் எல்லாப் பற்களும் சரியாக இருக்கின்றன’’ என்று சொன்னார். நாற்றம் குடலைப்பிடுங்குவதாக இருந்தது. அறுவை சிகிச்சை அறைக்குள் இயங்குவது போல் ஊழியர்கள் எலும்புகளைச் சேகரிப்பதும் எக்ஸ்ரே கருவியில் வைத்து படம் எடுப்பதுமாக இருந்தனர். சேறாகக் குவிந்திருந்த சதைப்பகுதியிலிருந்து ஒரு துளி எடுத்து ‘‘விஸ்ரா’’ சோதனைக்கெனப் பத்திரப்படுத்தினர்.

நேர் பார்வையில் எலும்புகளில் கீறலோ முறிவோ தெரியவில்லையென்றாலும் எக்ஸ்ரே படத்தில் தெரிந்துவிடுமென்றும் படமெடுத்து முடித்தபின் எக்ஸ்ரே நிபுணர் படங்களை ஆராய்ந்து அறிக்கை கொடுப்பாரென்றும் அதில் ஏதாவது தெரிவரலாமென்றும் சமாதானம் சொன்னார்.

பரிசோதனைகள் முடிந்தன. எல்லாவற்றையும் மீண்டும் பிளாஸ்டிக் தாளால் மூட்டையாகக் கட்டி சவப்பெட்டியில் போட்டு மூடியபின் படிவங்கள் நிரப்புவதும் கையொப்பம் வாங்குவதுமான சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவேறின.

‘‘தினசரி இப்படித்தானா சார், வாரத்திற்கு ஒன்றிரண்டு சோதனைகள் இருக்குமா’’ என்று கேட்ட அதிகாரிக்கு, நிபுணர்’’ இந்த வெட்டியான் வேலை எப்போதும் உண்டு’’ என்று சலிப்புடன் சொன்னார். ‘‘பேண்ட் போட்ட சயின்ஸ் வெட்டியான்’’ என்று சொல்லிச் சிரித்தார். எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு சவப்பெட்டியை ஆம்புலன்ஸில் ஏற்றிப்புறப்படும்போது இரவு 9.00 ஆகிவிட்டிருந்தது. வரும் வழியில் எல்லோருக்கும் பசித்தது. நகர விளிம்பில் சாலையோர உணவகம் ஒன்றில் கிடைத்ததை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு கிளம்பி ஆற்றங்கரைக்கு வரும் போது மணி மூன்றாகியிருந்தது. எடுத்த இடத்திலேயே வைத்து மீண்டும் அவனுடைய சடலத்தைப் புதைத்தார்கள். இறந்தவனின் மனைவி பாலத்தின் மீதிருந்து சாபமிட்டுக் கொண்டிருந்தாள். ஊர்க்காரர்கள், அதிகாரிகள் எல்லோரும் அங்கிருந்து விலகிப் போய்க் கொண்டிருந்தார்கள். அவளுடைய அழுகை மிகுந்து, அதுவும் தேய்ந்து கரைந்து கொண்டிருந்தது. அங்கே இருள் மட்டுமே மிச்சமிருந்தது. வெறும் இருள்.

மறுபிறவி

இரா.சோமசுந்தரம்

‘‘இந்த ஆயிரம் ரூபா வந்துதானா ஆவப்போவுது. நீங்களே வச்சுக்கங்க ஐயரே’’

செட்டியார் பணத்தை வாங்க மறுத்தார்.

‘‘பதிமூனு வருஷமாச்சி. உங்க தாயார் சுகமில்லன்னு ஐயர் இந்தப் பணத்தை வாங்கினாரு. அவரும் கொடுக்கல. நானும் கேக்கல. அதுக்காக இப்ப நீங்களே வந்து கொடுக்கறீங்க. அப்படி என்ன அவசியம்?’’. செட்டியார் அவனைப் பார்க்காமல் பதில் பேசினார்.

பால் டெப்போவுக்கு கறவைக்காக போன பசுமாட்டை வேலைக்காரன் ஓட்டி வந்தான். கன்று துள்ளி வந்து வெங்கட்ராமனை மோதி முகர்ந்தது. அவன் பூணூலை நாக்கினால் சுழற்றித் தின்றுவிட பாவனைக் காட்டியது. பூணூலை காப்பாற்றினான்.

வேலைக்காரனிடம் செட்டியார் கண்ணைச் சுழற்றினார். அவன் ஓடிப்போய் புல் கட்டிலிருந்து ஒரு கற்றை உருவிக் கொண்டுவந்தான். செட்டியார் அதை வாங்கிக் கன்றிடம் நீட்டினார். அது அவரைக் கண்டுகொள்ளவே இல்லை.

மாடுகள் கிட்டத்தில்கூட அவன் போனதில்லை. ஒருமுறை அப்பா சொன்ன காரணத்துக்காக, பசுமாட்டுக் கோமியத்தை செம்புப் பாத்திரத்தில் நான்கு அடி எட்டிநின்று பிடித்தான். மாடு அசைந்து கொடுத்தபடி பெய்தது. அவன் கைகளில் பெய்து வழிந்த கோமியத்தின் சூடு அருவருப்பாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது. அன்று இரவு அடக்க முடியாமல் மூத்திரம் போக அப்பா துணையுடன் தோட்டத்தில் உட்கார்ந்தபோது பசுமாடு நினைவுக்கு வந்ததும் ஆள்காட்டி விரலை வீறிட்டுப் பாயும் சிறுநீரில் நனைத்துப்பார்த்தான்.

அந்தக் கன்றினைப் பார்த்தபோது அத்திம்பேர் வீட்டில் இருக்கும் அல்சேஷன் நினைவுக்கு வந்தது. அவர் நாயின் கழுத்தை எப்படி நீவிவிடுவாரோ அதே போல கன்றுக்குட்டியிடம் செய்தான்.

கன்றினை அதன் பிடறியில், கழுத்தின் பக்கவாட்டில் நீவிவிட வேண்டும் என்பது தெரியாமல் நாயை நீவிவிடுவதைப் போல கழுத்தின் கீழே கையை வைத்து வருடினான். கன்று எதையும் பொருட்படுத்தாமல் விளையாடியது. அந்த நாயைத் தொட்டுப் பார்த்திருக்க வேண்டும் என்று இப்போது தோன்றியது.

அத்திம்பேர் அந்த நாய்க்கு அப்பாவின் பெயரை வைத்திருந்தார், மணி என்று. கல்யாணத்துக்கு முன்பு மாமனார் பெயர் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனாலும் வத்சலாவுக்கு இது மிகப் பெரிய சங்கடமாக இருந்தது. அத்திம்பேர் புரிந்துகொண்டு நாயைப் பெயர் சொல்லி அழைத்ததில்லை. மை டியர் என்பதோடு நிறுத்திக் கொள்வார். வத்சலாவையும் பெயரில்லாமல் மை டியர் என்று அழைக்கத் தொடங்கியிருப்பது இவனுக்கு சங்கடமாக இருந்தாலும் தொனியை வைத்தே நாயும் அவளும் யாருக்கான அழைப்பு என்பதைப் புரிந்துகொண்டார்கள்.

சடாரென்று ஒரு பாட்டா செருப்பு கன்றின் முகத்துக்கு நேராகப் பறந்து, அதன் முதுகில் பட்டு தூரப்போய் விழுந்ததும் சப்த நாடியும் ஒடுங்கி நின்றான். தன்மீது எறிந்ததாகவே பட்டது. ‘‘போ’’ என்ற கத்திய செட்டியாரைப் பார்த்தான். ‘‘அத இழுத்துப் புடிடா’’ என்றார் செட்டியார். பதற்றம் குறைந்தது.

அதே கோபம் குறையால் ‘‘சரி வச்சிட்டுப் போங்க’’ என்றார் இவனிடம்.

திண்ணையில் ஏற்கெனவே வைத்திருந்த பிரசாத கிண்ணத்தின் அடியில் பத்து நூறு ரூபாய் தாள்களைச் செருகி வைத்துத் திரும்பி நடந்தான். கன்றுக்குட்டி, தன்னை இழுத்துச் செல்லும் வேலைக்காரனிடமிருந்து திமிறிக்கொண்டு இவனிடம் ஓடி வர, வேலைக்காரன் குறுக்கே பாய்ந்து மூக்கணாங்கயிரைப் பிடித்து பின்னுக்கு இழுத்தான். மூக்குத் துளை கிழியுமோ என்ற அச்சம் அங்கு பரவிக்கொண்டிருக்க, அது மெல்ல அடங்கியது. வெங்கட்ராமன் கண்களில் நீர் நின்றது.வேகமாக வெளியேறினான்.

வெங்கட் தலை மறைந்தவுடன் செட்டியார் முணுமுணுத்தார். ‘‘மதிப்பு தெரியாதவனுங்க. அன்னிக்கு ஆயிரம் ரூயாய்ன்னா இன்னிக்கு என்னடா மதிப்பு?’’. வேலைக்காரனிடம் கேட்டார். அவர் வீசி எறிந்த பாட்டாவை பொறுக்கிவந்து அவர் காலடியில் போட்டுவிட்டு பதில் பேசாமல் நின்றான். ‘‘பாங்க்ல போட்டிருந்தா மூவாயிரம் ரூபாய் ஆயிருக்கும். மந்தரம் சொல்லத் தெரிஞ்சவனுக்கு பணத்தோட மதிப்பு தெரியல.’’ பிரசாத கிண்ணத்தைத் திறந்தார். வெண்பொங்கல் மணம் விடுதலை பெற்றது. சூழலே ஒரு கணம் பொங்கலாகியது. கிண்ணத்தை மூடினார். ‘‘உள்ள குடுள என்றார். எடுக்க வந்தவனைக் கண்களால் எரித்தார். ‘‘மூதி, கையக் கழுவடா. செருப்ப தொட்டுப்புட்டு அப்படியே கிண்ணிய தொடுவியா’’

கையைக் கழுவச் சென்றான்.

‘‘ஏன்டா அவன் பாவத்தைக் கழுவறானோ?. செட்டியார் பணத்த வச்சிக்கிட்டிருந்தா பாவத்துல பங்கு எடுத்துக்க வேண்டியிருக்கும்னு திரும்பத் தரானோ?’’

கை கழுவப் போனவன் போகாமல் நின்றான்.

‘‘என்ன மயித்துக்குடா இப்ப குடுக்கறான்’’.

பேசமால் நின்றான்.

‘‘கேட்டுப்பாக்கறதுதானே.’’ கொஞ்சம் நேரம் அவனையே பார்த்தார். ‘‘அவன் கெடக்கறான். இந்தச் சனியன் ஏண்டா அவன் மேல போய் விழுது.’’ திண்ணையில் வைத்திருந்த புல் கற்றையை எடுத்து வீசினார். ‘‘இந்த ஓடுகாலிய வித்துப்புட்டு இந்த ஆயிரத்தைப் போட்டு வேற மாடு வாங்குடா’’ என்றார். பொங்கல் கிண்ணத்தை அவரே எடுத்துக்கொண்டு உள்ளே போனார்.

0

இத்தனை வருஷம் கழித்து ஏன் தருகிறாய் என்று செட்டியார் திரும்பத் திரும்ப செட்டியார் கேட்டபோது இந்தக் கன்றுக்குட்டிதான் காரணம் என்று சொல்ல வாய் வரை வந்தது. ஆனால், அதை விளக்கினால் கேலிக்கு இடமாகும் என்பதோடு, செட்டியார் வன்மத்துடன் பணத்தை வாங்க மறுத்தால் சிக்கலாகிவிடும். பெரியஅகரம் முழுதும் இந்த விஷயம் பரவிவிடும் என்று பயந்தான்.

‘‘செட்டியார் ஆத்துல ஒரு கன்னுக்குட்டி என்னோட எப்பவும் பிரியமா விளையாடறது. அது என்ன பாந்தமோ தோணல…’’ சாதாரணமாக ஒரு தகவலாகத்தான் ஒரு நாள் இதை அவன் அம்மாவிடம் சொன்னான். ‘‘ரொம்ப அழகு. முகமெல்லாம் வெள்ளை. ஒரு இடத்துல மட்டும் கருப்பு வட்டம். திருஷ்டி கழிச்சாப்ல’’ அவன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அம்மா இடைமறித்தாள்.

‘‘வலது கண்ணுக்குக் கீழேயா’’

‘‘ஆமா, உனக்கெப்படி தெரியும்?. நீயும் பாத்தியா?’’

இல்ல’’ தயக்கத்துடன் சொன்னாள், ‘‘உன் அப்பாவுக்கு அந்த இடத்தில்தான் மரு இருக்கும். நான் நெனச்சது சரியாயிடுத்து’’ அம்மா சொல்லச் சொல்ல மனசு பரிகசித்தது. என்ன இது அர்த்தமில்லாமல் என்றும் சாடியது.

பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு அம்மாவுக்கு வயிற்று வலி வந்தபோது ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் சொன்னார். டாக்டர் அப்பாவுக்கு ரொம்ப தெரிந்தவர். வெறும் மருந்து செலவு மட்டும் பாத்துக்க என்று சொல்லிவிட்டார். அதற்கும்கூட வழியில்லை என்பதையெல்லாம் அவரிடம் சொல்ல முடியுமா?. செட்டியாரிடம் போய் நிற்கவேண்டியதாயிற்று. நடையாய் நடந்து கூத்தாடி ஆயிரம் ரூபாயை வாங்கினார். சாகிற மட்டும் அதைத் தரும் வாய்ப்பு ஏற்படவே இல்லை. செட்டியாரை அப்பாவுக்கு எப்போதுமே பிடிக்காது. அந்தப் பாவி என்றுதான் சொல்வார். உடனே ஆயிரம் ரூபாய் நினைவுக்கு வரும். ஈஸ்வரா என்று மண்டையில் அடித்துக் கொள்வார். அடுத்த ஜென்மத்துல அந்த வீட்டுக்கு மாடா உழைச்சியாவது கடனை அடைச்சுடுவேன். பகவான் சாட்சி என்பார். சாகிற மட்டும் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்காக…?

அம்மா தனக்கு வத்சலா கொடுத்த பணத்தையெல்லாம் (பிள்ளை படிக்கலன்னாலும் பொண்ணு நன்னா படிச்சு பாங்க்ல வேல செய்றா) எடுத்து ஆயிரம் ரூயாயை நீட்டினார், ‘‘கொண்டுபோய் கொடு. அப்பா ஒரு பாவமும் செய்யாதவர். அவருக்கு வேறு கர்மாவே இல்லை. நிர்விகல்ப சமாதியை எட்டினவர். உனக்கு என்னடா தெரியும் அவரப் பத்தி? இந்த கர்மாதான் அவரை பிணைக்கிறது. இப்ப செய்ற இதைவிட நீ பெரிசா செய்ய ஒண்ணுமில்ல…..’’

0

அடுத்தமுறை பிரசாத கிண்ணத்துடன் வெங்கட்ராமன் அந்த செட்டியார் வீட்டுக்குள் நுழைந்தபோது கண்கள் கன்றுக்குட்டியைத் தேடின. செட்டியாரிடம் பொங்கலையும் கோயில் விவகாரங்களையும் ஒப்புவித்த பிறகு மாட்டுக் கொட்டகையில் கண்களை ஓட்டியபடி திரும்பி நடந்த அவனிடம், கேட்டைச் சாத்த வந்த வேலைக்காரன் சொன்னான், ‘‘அத வித்துட்டாரு ஐயரே’’

‘‘யாரிடம்’’

‘‘தெரியல’’

இப்போது வாங்கிய நபரிடம் அப்பா கடன் பட்டிருப்பாரோ என்று தோன்றியது. அவர் கர்மா முடியவில்லை போல. அம்மாவின் வியாதி தனக்கும் தொற்றிக்கொண்டதோ என்று அந்த எண்ணத்தை விலக்கிடப் பார்த்தான். முடியவில்லை. தானும் மெல்ல அந்த வட்டத்துக்குள் நழுவிச் சிக்கிக் கொண்டதாகப் பட்டது. இதையெல்லாம் மீறி அந்த கன்றுக்குட்டியைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கம் பெரிதாகிக்கொண்டிருந்தது. யாரோ அவனிடம் எதையோ திருடிவிட்டது போல இருந்தது.

வீட்டுக்குள் நுழைந்த அவனிடம் முதல் கேள்வியாக ‘‘கன்னுக்குட்டிய பாத்தியா’’ என்றாள் அம்மா.

பிரச்சினை தன்னோடு முடிந்துபோகட்டும் என்று, ‘‘அது திடீர்னு செத்துடுத்தாம்’’ என்றான்.

அம்மா மகிழ்ச்சியில் துள்ளினாள்.

‘‘அவருக்கு மோட்சம்தான்டா’’ என்றாள். கண்ணீர் வழிய வான் நோக்கி வணங்கினாள்.

0

ஈட்டி

குமார் அம்பாயிரம்

பகலிலிருந்து சரிந்து சூரியன் பாதாளத்தில் புதையும் வரை, வேலியற்ற மரத்தடியில் பறிக்கப்படாமல் தானே பழுத்து விழுந்திருந்த சுளைகள் சிலவற்றைப் பசியில் நாங்கள் தின்றிருந்தோம். நாங்கள் தின்ற சுளைகளுக்கான சில்லறைகளை பெற்றுக் கொள்ள யாரும் வரவில்லை அங்கே. எனது பயண உடையின் பலவிதமான ஜேபிகளிலிருந்த இம்மலை படுகையில் பயனற்று விட்ட ரூபாய் தாள்கள், நாணயங்கள் சிலவற்றை மரத்தின் காலடியில் எறிந்தேன்.

மலைகளைப்பற்றி எப்போதும் நான் கூம்பு வடிவத்தில் மட்டுமே சிந்தித்திருக்கிறேன். பல மலை உச்சிகளையும் அப்படித்தான் நானும் என் நண்பனும் அடைந்திருந்தோம். மல்லாந்த பன்றியின் அடிவயிற்றை போல் புடைத்தும் நீண்டும் ஒன்றுக்கொன்று தொட்டுக்கொள்ளாமல் விழுந்துகிடக்கும் பாசி நிறமும் மிருகங்களின் உறைந்த மூத்திரம் போல் மஞ்சள் நிறமும் படிந்த பாறை கூட்டங்களால் ஈர்க்கப்பட்டு இம்மலை தொடரில் பயணிக்க வந்தோம். இம்மலை தொடரின் மேல் பகுதியை யாரேனும் அடைய வேண்டுமென்றால் தாவி தாவித்தான் ஏற வேண்டும், எப்போதும் உச்சியைக் குறிவைத்து மலை ஏற்றங்களைத் தொடங்கும் நான், இங்கே உச்சியையோ சிகரத்தையோ அடையவில்லை. மாறாக அடிவாரத்திலிருந்து தொடங்கி செங்குத்தான பாறைகளையும் முகடுகளையும் ஏறிக் கடந்ததும் அங்கே இன்னொரு பூமியைக் கண்டோம்.

காற்று உதறிச்செல்லும் கம்பளத்தைப் போல் உயர்ந்தும் தாழ்ந்தும் பரந்து விரிந்த பிரதேசம் எங்கள் முன் இருந்தது. அருகில் இருந்த சிறுகுன்றொன்றின் மீதேறி ரொட்டித் துண்டுகளை தின்று தண்ணீரையும் தீர்த்தோம். ஏற்கனவே இருள் துவங்கிவிட்டது. நரிகளுக்கெட்டாத திராட்சைகளைப் போல் நட்சத்திரங்கள் முளைவிட துவங்கின. காற்றும் கதிரியக்கமும் உள் நுழைய முடியா எங்கள் கையடக்க படுக்கையினுள் நுழையும் போது தூரதூரங்களில் பெரிய வட்டங்களாக எரியும் நெருப்பு வளையங்களைக் கண்டோம். அந் நெருப்பு வளையத்தினுள் பதட்டமற்ற மனித உருவங்களையும், குடிசைகளையும் கண்டோம். வளர்ந்த இருளுக்குள் பனிவிழத்தொடங்கியதும் யாரும் வந்தணைக்காமல் ஜுவாலைகள் மறைந்து விட்டன பூமியினுள். கீழே மின்மினிகள் பறக்க துவங்கிய போது நாங்கள் உறங்கி விட்டோம் என நினைக்கிறேன்.

கண் விழித்தவுடன் காலையில் தீ வளையங்கள் தோன்றிய திசையை நோக்கினோம். சாம்பலின் சுவடு கூட கண்களுக்கு அகப்படவில்லை. தடையின்றி வீசும் காற்றில் மலைவெளியில் நாங்கள் நடக்கத்

துவங்கினோம். ஆமைகளின் முதுகைப் போல் முகடுகளும் அகடுகளும் அதன் எல்லை எதுவென அறிய முடியாதபடி முடிவற்று வந்து கொண்டு இருக்கின்றன. ஓ… வென்று அலறினால் எங்கோ போய் சேர்கிறது. ஹேய்….என கூக்குரலிட்டால் எங்களழைப்பு எதிரொலியின்றி மடிகிறது. இரவை ஒரு நாளும் பார்த்திராத சூரியன் உயரங்களின் மீதாக தன் தனிமையை அதிகமுணர்ந்து தன்னைத் தானே மெதுவாக நகர்த்திக் கொள்கிறான். உச்சி பொழுதுகளிலோ அவன் அசைவதே இல்லை சூரியன் அசையாது நிலைக்கும் கணங்களில் நடையை நிறுத்தி நாங்களும் மரங்களினடியில் கனிந்திருந்த நிழல்களில் ஒதுங்கினோம்.

சில அடர்ந்த காடுகளுக்குள் நானும் என் நண்பனும் பயணித்திருக்கிறோம். பெருத்த நெருக்கமான மரங்களும் காட்டுக் கொடிகளால் வளைக்கப்பட்ட ஆகாயத்தின் கீழே, புல்களின் அசைவுகளில் எங்களை இழந்திருக்கிறோம். இங்கே அங்கொன்றும் இங்கொன்றுமாக தொட்டுக்கொள்ள முடியாத இடைவெளியில் நிற்கும் மரங்கள், எழுந்து நடக்க துவங்கி எதையோ கண்டு நின்று விட்ட குழந்தைகளைப்போல் வெட்ட வெளியில் எதிர் கொண்டு நின்றன. மரங்கனின் கீழ் அசைந்திருக்கும் சாமைக்கதிர்களூடே நடக்கிறான் என் நண்பன். அவன் எதற்கும் அஞ்சி உணர்ச்சிகளை உடனே வெளிக்காட்டாதவன். மிகக் கொடூரமாக அவனுக்குப் பசித்தால் பிடித்த பாடலை சீட்டி அடித்தப்படி குறுக்கும் நெடுக்கும் நடப்பான். மற்றபடி பயணம் என்று புறப்பட்டால் சாகும் வரை கூட நடந்து கொண்டே இருப்பான்.

கால்கள் எங்களை வழிநடத்திக்கொண்டிருக்க மாலை நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. ஓர் முகடைச் சுற்றிச் சென்ற ஒற்றையடிப் பாதையில் நடந்தோம். தான் தோன்றிதனமான கற்கள் கொண்டமைக்கப்பட்ட படிகள் பள்ளத்திலிருந்து மேலேறியது. படிகளின் துவக்கத்தில் மலை கிராம மொன்று நாங்கள் மேலேற மேலேற கூரையிலிருந்து அடித்தளம் வரை தோன்ற தொடங்கியது.

வீடுகளின் கூரைகள் மஞ்சம் புற்களால் வேயப்பட்டிருந்தன. மேல்காற்றால் நிச்சயம் இந்தக் கூரைகளை அசைக்கமுடியாது. தோற்றத்தில் நம்மைப் போலவே மனிதர்கள் அங்கே இருந்தனர். அவர்கள் எங்களை அரசனைப் போல் வரவேற்கவுமில்லை, அடிமைகளைப் போல் புறகணிக்கவுமில்லை. வயலுக்குப் போய் திரும்பி வரும் தம்குடிகளைப் போன்றே குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் தலை உயர்த்திப் பார்த்தார்கள் எங்களை.

அந்தி இரவாக மாறும் வேளையில் இளைஞர்கள் உறுமும் விலங்குகளிடமிருந்தும் ஊறும் பூச்சிகளிடமிருந்தும் குடிகாக்க எந்நாளும் நெருப்பு வேலி போட கிளம்பினார்கள். ஓணான் கொடிகளால் முடைந்த கூடையில் சருகுகளையும் காய்ந்த சுள்ளிகளையும் கொண்டு கிராமத்தைச் சுற்றி ஒரு வட்டம் போட்டனர். காய்ந்த மூங்கில் கணுக்களை உரசி வெளியிட்டத் தீயை இலைகளில் புகைய விட்டனர். இரண்டு திசையில் கிளம்பிச் சென்ற தீ ஒன்றையொன்று எதிர் வந்து தழுவிக் கொள்ள உருவாகும் தீ வளையத்தின் வெளியே நேற்றிருந்தோம். இன்றோ அதனுள்ளே இருந்த படி தூரத்தில் மேலும் பல வளையங்கள் உயர்வதைக் காண்கிறோம்.

பசிய சாணமும் மலை மண்ணும் பிசைந்து பூசப்பட்ட திண்ணைகளில் கூடியமர்ந்து கதைகள் கூறிக்கொண்டோம். அவர்கள் சொன்னக் கதையில் ஒரு குதிரை வந்தது. நாங்கள் சொன்ன கதையிலும் ஒரு குதிரை வந்தது. அவர்கள் குதிரைக்கும் எங்கள் குதிரைக்கும் கண்முடி அளவே வேறுபாடு இருந்தது. எங்கள் கதையில் வந்த குதிரையை நாங்கள் குதிரை என்றோம், அவர்கள் கதையில் வந்த குதிரையை குர்தை என்றார்கள்.

இடையிடையே ஓ… என்றும் ஹேய்… என்றும் அழைக்கும் ஓசை கேட்கிறதே என்றோம். அது காலையில் யாரோ அழைத்த ஒலி என்றார்கள்.

நாங்கள் அவர்களோடு கூடி இதர மலை கிராமங்களையும் சுற்றினோம். பன்னூறு மைல்களாக பரந்து கிடக்கும் சமனற்ற பரப்பில் எங்கெங்கே சென்றாலும் நடந்தே சென்றார்கள். உட்கார்ந்தபடியே பயணிக்கும் ஓர் சமூகத்திலிருந்து வந்தவர்கள் என்றாலும் நாங்களும் நடந்தே சுற்றினோம். கிராமங்களின் வீதிகள் ஆநிரைகளின் சாணத்தால் தூய்மையாக மெழுகப்பட்டிருந்தது. கோடுகளும் கானக ரூபங்களூம் கலந்து வீடுகளின் இடுப்புயரத்தில் வரையப்பட்ட ஒரு கோலம் தொடக்கமோ முடிவோ அற்று எல்லா வீடுகளையும்இணைத்து கிராமத்தையே ஒரே வீடாக மாற்றுகிறது. எல்லா வீடுகளிலும் பரண்கள் இருந்தன. கடுங்குளிர் பருவத்தில் பரண் ஏறி உறங்க இரட்டை ஏணி குழிகள் இருக்கின்றன. காட்சி மாடத்திலிருந்த வெண்கல சொம்பும் வெண்கல கிண்ணிகளும் மலை புளியில் தேய்க்கப்பட்டு வெண்கல காலத்தைப் பிரதிப்பளிக்கின்றன.

இரண்டு மேடுகள் சரியுமிடத்தில் தோன்றி பெருகும் ஓடையை மிக அகலப்படுத்தி நெல் பயிரிட்டார்கள். தண்ணீர் வயலாக மாறிவிட்ட ஓடையில் குழம்பி நெற்பயிரின் கணுக்கால்களை நனைத்து சாந்தமுற்று வழிந்து வெளியேறுகின்றன.

குன்றுகளின் சரிவிலும் பாறைகளின் இடுக்கிலும் சாமையும் வரகும் உடல்வளைந்து நின்றன. வரகின் கதிர்களை நெருப்பில் வாட்டி கொறித்தோம். பச்சை வரகின் பால் சுவையும் வாட்டிய சுவையும் பற்களுக்கிடையே பிழியப்பட்டு அந்த வாழ்வின் சுவையாக இருந்தது. விதைப்பில் உடனிருந்தோம். அறுவடையில் பங்கெடுத்தோம். கரிவேப்பிலை குச்சிகளில் பல்துலக்கினோம். தேனும் தினைமாவும் தின்ற நாட்கள் மாயமாக இங்கே குன்றுகளில் காற்று மோதுவதை கேட்டப்படியே கரைகின்றன. இரவோ நட்சத்திரங்களை எண்ணுவதற்குள் விடிந்து விடுகிறது.

என் நண்பன் சொன்னான், ‘இங்கே காலம் என்பதே இல்லை; பருவங்கள் மட்டுமே இருக்கின்றன.

மூதாட்டிகளைத் தாயாரு என்றும் வயோதிக ஆண்களை மூப்பன் எனவும் அழைத்தார்கள். நட்சத்திரங்கள் தங்களுக்குள்ளே எரிந்து ஒளிர்வதை போல, ஒற்றைக் குடியாக அவர்களது குருதி அவர்களுக்குள்ளேயே ஓடிக்கொண்டிருக்கிறது.

மேல்காற்று வீசும் போது இலைகள் உதிர்கின்றன. கீழ்காற்று வீசும் போதோ பூச்சிகள் சில்லென்ற இரவுகளை உதிர்க்கின்றன. இங்கே இறந்து விடுபவர்களின் உடலை நான்காகப் பிளக்கப்பட்ட மூங்கில் தப்பைகளால் சுற்றிலும் வைத்து கட்டி கற்றாழை கயிறு கொண்டு ஓங்கி வளர்ந்த கல்லாத்தி மரங்களில் தொங்க விட்டனர். கடந்து போன குளிர்பருவமும் கோடைக் கடுங்காற்றும் எங்கிருந்து வருகிறதோ எங்கு போய் மறைகிறதோ அங்கே பருவங்கள் போன இடத்திற்கே உடலும் போனது. உடல் மறைந்ததும் கட்டுகள் குலைந்து உதிர்ந்துவிடும் தப்பைகளை எரித்து சில்லென்ற இரவுகளுக்கு அனல் காட்டிய தீயின் முன் என் நண்பனை இப்போதே புதிதாகச் சந்திப்பவனைப் போல் பார்த்தேன். அவன் சிறிது அவர்களாகவே மாறியிருந்தான்.

நான் இன்னமும் குதிரையை குதிரை என்றே எனக்குள் திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டேன். அவனோ குதிரையை குரதை என வாய் குழறினான். ஆரம்ப நாட்களில் மட்டுமே அவள் என்னோடு உறங்கினான். நாட்கள் செல்ல அவன் யாரோடு எங்கே உறங்கினான் என்பதை அறியேன். நானெப்போதும் உறுதியாயிருந்தேன், ஒரு பயணத்தின் இடையில் இருக்கிறேனென்பதை உறுதி கொள்ளக் குதிரையை விடாமல் பற்றிக் கொண்டேன்.

மெலிந்த திடமான கருப்பு உடலோடும் இருண்ட சுருள் கேசத்தோடும் பக்குவமாக வேக வைக்கப்பட்ட செங்கற்களைப் போல் இருந்தவர்களின் புட்டத்து மேலேயும் முதுகு வளையுமிடத்திலும் இரண்டு சிறுகுழிகள் மூடியாகண்களாக இருக்கிறதே அது என்ன என்று தாயாரிடம் கேட்டேன்.

அதுவே எங்கள் மூதாதைகளின் ஆசீர் வாதங்கள் என்றாள், ‘இவ்வுலகினுள் நாங்கள் யோனி வாயில் நசுங்கித்தான் பிறக்கிறோம். கர்ப்பிணியின் உள்ளேயிருந்து எங்கள் மூதாதைகள் தம் கவை கோலால் கர்ப்பிணியின் வாதையைக் குறைக்கும் படியும், யோனி சுருக்கத்தில் சிசுக்கள் சிக்கிக்கொள்ளாமலும் உள்ளேயிருந்து தம் கவை கோல் பதித்து தள்ளும் அடையாளமே அது. அக்குழிகள் இல்லாது பிறக்கும் சிசுக்கள் பிறப்பதற்கு முன்பே இறந்து பிறக்கும், தப்பினால் கழுதை குறத்தி தூக்கிச் செல்லும் என உரைத்தாள்.

விலா எலும்புகளின் பக்கத்திலும் தொப்புளை சுற்றிலும் சூட்டுக் கோலால் சில தீற்றல்களை விரைந்தார்கள் அது அவர்களை அற்ப நோய்கள் அண்டாமல் காத்து இள மரணங்களை விரட்டி வந்தன. தோன்றிய பருவங்கள் விளைச்சலை கொடுத்தே முற்றி மறைகின்றன.

நான் இங்கேயே ஜனித்திருந்தால் கல்லாத்தி மரத்தில் தூக்கி கட்டப்படும் என உடல் மாயமாய் மறையும். ஆனால் நான் மரித்ததும் கோடையின் நீளமான பகலைப் போல எனது எலும்புகள் இங்கே உளுத்துக் கொண்டிருக்கும். அல்லது இம்மலை மீது முதன் முறையாக ஒரு கல்லறை எழக்கூடம். மூடிய விரல்களோடு பிறந்து பரிசுகள் ஏதும் ஏந்திச் செல்லாத திறந்த கையோடு மரித்து இங்கே ஒரு கல்லறையை விட்டுச் செல்ல விரும்ப வில்லை நான். என் நண்பனோ அவன் சந்ததிகளை விட்டுச் செல்லலாம். பயணத்திற்கிடையே ரத்த கலப்பென்பது திரும்ப முடியாதபடி அங்கேயே தங்கி வாழவைத்துவிடும் என்பதை நானறிவேன். பாதியிலேயே கைவிடப்பட்ட பயணங்களின் கதை அதுவாகத் தானிருக்கும். பயணங்களே ஒரு வேளை பால் இணை தேடி தானோ? என் நண்பனைப் பார்த்தால் இங்கிருந்து கிளம்புவான் போல் தோன்றவில்லை.

வெப்பக் காற்றில் பிறப்பெடுக்கும் வைசூரிகளும், முளைவிடும் சீழ்கட்டிகளும் வாடைக்காற்றில் ஊடுருவி வரும் துர்ச்சிந்தை மற்றும் தீயக் கனவுகளின் விளைவென்றார்கள் அவர்கள். மனிதர்களை அண்டி பிழைக்க முடியாத பருவத்தில் துர்சிந்தையும் தீய கனவுகளும் எட்டிமரத்தில் போய் வசிகரமான கனிகளாக வாழ்கின்றன. நாங்கள் இங்கே வந்த நாட்களுக்கு பிறகு ஒருவன் மெதுவாக நொண்டத் தொடங்கி இப்போது படுக்கையாகிவிட்டவனின் உடலில் புகுந்திருக்கும் தீயக் கனவை விரட்டும் சடங்கு உற்றார் சூழ, வளர்பிறையின் மூன்றாம் நாளில் நடக்க இருப்பதாக அறிந்தேன்.

நான் இங்கிருந்து புறப்படும் ஆயத்தங்களில் என்னை தயார் செய்து கொண்டிருந்தேன். என் நண்பனை அழைத்து நாம் எப்போது புறப்படுவோம் ; இதற்குப் பிறகு ஒரு பயணமோ அல்லது இங்கிருந்து திரும்புவதோ என்னால் முடியாது; அவனோ என் பயணம் இங்கே நிறைவடைந்து விட்டது; இதற்கு பிறகு ஒரு பயணமோ அல்லது இங்கிருந்து திரும்புவதோ என்னால் முடியாது; என் இதயம் இந்த பூமியில் சாந்த மடைந்து விட்டது என்றான். நான் கோபப்படவே இல்லை. எங்கே என்னைப் பார்த்து குதிரை என்று சொல் என்றேன். அவன் மேலோட்டமாக குரதை என்றான். நான் மீண்டும் கேட்டேன். அவன் குரதை என்றான் தயக்கமில்லாமல். நீ இங்கே தந்தையாகி மூப்பனாகவும் ஆவாய் என்றேன். அவன் முகத்தில் புன்னகையும் கண்களில் மகிழ்ச்சியின் ஒளியும் நிலைத்திருந்தது.

நாங்கள் இங்கே வந்து எத்தனை மாதங்கள் சென்றதென தெரியவில்லை. பருவங்கள் காலத்தை குழப்பி இருந்தன. வளர்பிறையின் ஐந்தாம் நாள் இங்கிருந்து விடைபெறுவதென நான் முடிவெடுத்தேன்.

அன்று வளர்பிறையின் மூன்றாம் நாள். கிராம முற்றத்தில் பறவைகளின் அடி வயிற்று மென் இறகுகளால் படுக்கை உண்டாக்கி அதன் மீது அகன்ற இலைகளை பரப்பினார்கள். நள்ளிரவு கடந்து சுணங்கும் தீக்கு காய்ந்த மரங்களை இளைஞர்கள் அடுக்கினர். ஒரு சடங்கிற்கான எளிய ஏற்பாடாக அது தோன்றியது. மேற்கில் பிறை சுடர் விட்டதும் அனைவரும் கிராம முற்றத்தே குழுமினர். கிராமத்திற்கு வெளியே செம்படவர்களின் தொப்பியைப் போன்ற தான்ய குதிர்கள் வீடுகளை விட அதிகமாக இருந்தன. குதிரிலிருந்து அள்ளப்பட்ட அரிசியும் சாமையும் பொது விருந்துக்கென உலைகளில் கொதித்து கொண்டிருந்தன. தாயாருகளும் மூப்பர்களும் பிற கிராமங்களிலிருந்தும் வந்திருந்தனர். வந்த களைப்பாற வெல்லப் பானகம் வழங்கப்பட்டது. ஒருவருக்கொருவர் நலன் அறிந்த பின் நோயுற்ற மனிதனை தூக்கி வந்து இறகுப்படுக்கையில் படுக்க வைத்தார்கள் நிர்வாணமாக. தான்யங்களையும், விதைகளையும் ஆபரணமாக அணிந்த பெண்களின் திறந்த மார்பகத்தின் முலைகாம்புகளில் பாலருந்தி வெயிலைத் தனித்துச் செல்லும் கோடையின் வடுக்களமைந்த பெண்கள் வந்து கூட, மூப்பர்களும் தாயாருகளும் அம்மனிதனைச் சூழ்ந்திருக்க அவர்களை வெளியே சூழ்ந்து ஆண்களும் பெண்களும் நடனத்தைவிட மெதுவாக நடையை விட துரிதமாக அடிவயிற்றிலிருந்தும், உடல் அசைவாலும் ஒலியெழுப்பியபடி ஆடி வளம் வந்தனர். மூப்பர்களும் தாயாருகளும் இறகுகளால் நீவி தழை சறுகுகளால் நிர்வாண உடலை ஆராதித்தார்கள். உருட்டப்பட்ட இலைகளை காதுகளுக்குள் செறுகி இதுவரை நான் கேட்டிராத வார்த்தைகளை ஓதினார்கள். மூத்த தாயார் பிதற்றத் தொடங்கி இருக்கும் பிரக்ஞையற்ற உடலருகே நெருங்கி கண்களை மூடிய படி ஒவ்வொரு எலும்பினூடாகவும் சதையின் இடுக்குகளிலும் விரல் நுழைத்து அவனுள் புகுந்திருக்கும் தீய கனவினைத் தேடினாள். கண்களை மூடியபடி இடது தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையிலே அவள் விரல்கள் சிறிது நின்றது. அங்கே எந்த காய வடுவும் நோயின் மூலக்குறியும் தென்படவில்லை. தாயாரு மெதுவாக எழுந்து நின்றாள். மூண்ட தீயின் பிரகாசம் அவள் முகத்தைத் தீவிரமாக்கியது. அவள் அறிவித்தாள். இந்த உடலுக்குள் உடையாத ஈட்டியின் முனை இருக்கிறது. உண்மையில் அவர்களிடம் ஈட்டி இருந்தது; ஆனால் அது போர் புரிந்ததே இல்லை. எவற்றின் மீது தைத்ததும் இல்லை. நீண்ட கம்பின் முனையில் நடு விரலளவு நீளமும இரண்டு விரற்கடை அகலமும் கொண்ட கொல்லனால் கூர் பார்க்கப்பட்ட உலோக முனை நாரால் சேர்த்து கட்டப்பட்டிருந்தது. இங்கே போரோ சச்சரவுகளோ இல்லையாதலால் பயன்படுத்தபடாமல் பரணில் இருந்தது அவரவரிடமே. பயிர் முற்றிய பருவத்தில் சிலர் ஈட்டியை தூக்கி கொண்டு பன்றி விரட்டப் போவார்கள்.

மூப்பன் எழுந்து சப்தமாக ‘‘இவனை யார் குத்தியது? குத்த வில்லையென்றால் யாருடைய ஈட்டி முனை காணாமல் போயுள்ளது? நடுவே வாருங்கள்’’ என்றான். நான் இங்கிருந்த நாட்கள் வரை யாரும் சண்டையிட்டுக்கொள்வதைப் பார்த்ததில்லை. கனவில் யாரையாவது அவமதித்திருந்தாலும் எண்ணங்களின் காட்சிகள் வந்திருந்தாலும் காலையில் கனவில்தான் அவமதித்த மனிதனை அழைத்து வந்து தாயார் முன் கண்ட கனவைக் கூறி மன்னிப்பு கேட்டு துர்கனவிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டார்கள். நான் நன்கு அறிந்த இளைஞன் வட்டத்திற்கு உள்ளே வந்து வணங்கி ‘‘தொலைந்து போனது எனது ஈட்டி முனைதான், அது தொலைந்தது நிஜத்தில் அல்ல, நான் கண்ட கனவில்’’ என அனைவரும் கேட்கும்படி தான் கண்ட கனவினைக் கூறத்தொடங்கினான்.

‘‘இன்னும் பிடுங்காத முற்றிய ஆலிவல்லிக்கிழங்கால் பூமி வெது வெதுப்படைந்திருத்த இரவில், நான் மூக்கன், பொதுக்கன் மூவரும் ஈட்டிகளைத் தூக்கிக்கொண்டு பன்றிகளைத் துரத்திக்கொண்டிருந்தோம். நிலா மேகத்தில் தங்கியும் விடுபட்டும் எங்களைத் தொடர்ந்து வந்தது. நாங்கள் மயில் மேட்டருகே பன்றிகளை நெருங்கினோம். அப்போது மாசி நிலவை மூடியது. அலைபோல் வந்து அலையாய் மறையும் பன்றிகளின் பின்னே நாங்கள் ஈட்டியைக் குத்து வாட்டத்தில் பிடித்து மிகவும் நெருங்கிய படியே ஓடிக்கொண்டிருந்தோம். புதர்வளைவில் பன்றிகள் திரும்பும் போது என் கை விசையோடு முன்னே பாய்ந்தது. அந்நேரம் மேகத்தை உடைத்தது நிலா. பன்றிகள் ஓடி மறைந்து விட்டன. நிலவின் வெட்ட வெளிச்சத்தில் என்னைச் சுற்றி யாருமில்லாத கனவில் ஈட்டி முனை மட்டும் காணாமல் போயிருக்க கம்புடன் தனியே நின்றிருந்தேன். காலையில் பரணில் வைத்து எப்போதோ நான் மறந்து விட்ட ஈட்டியை எடுத்து பார்த்தேன். அதன் உலோக முனையை மட்டும் காணவில்லை. மயில் மேடருகே சென்று தீயவனைப் போல் இரகசியமாக அதை தேடிக் கொண்டிருந்தேன். எனது ஈட்டி முனையில் ஒற்றை கண் துவாரம் இருக்கும்’’ என கூறி அனைவரின் முன்பும் பணிந்தான்.

இன்னும் நெருங்கி நோயாளியின் அருகே சென்று நின்றேன். அவன் பிறந்த போது தீற்றிய தீச் சூடுகளைத் தவிர வேறெந்த தழும்பும் இல்லாத உடலை பசிய இலைச் சாறுகளால் மெழுகி உடல் சிட்சை அளிக்கும் வார்த்தையை தாங்கும்படி பக்குவப்படுத்தினார்கள். நிறுத்தப்பட்டிருந்த நடனமும் ஒலியும் தொடங்கியது. மூதாட்டி ஒருத்தி அவன் தலையை மடியிலேந்தி தொடர்ந்து நன்னீர் புகட்டிய படியே இருந்தாள். அவன் பிதற்றல் தொடர்ந்தது. சுரை குடுவையில் சேமித்த பன்றி நெய் எடுத்து பூசினர். பசிய இலை பூசப்பட்ட உடலில் தொடைக்கும் உயிர் உறுப்புக்கும் இடையில் மூப்பன் கூர்மையான வளைந்த சொற்களால் கீறினான் சதையை. கண்களை மூடிய படியே இருந்த தாயாரு கிழிக்கப்பட்ட சதையினூடே விரல் நுழைத்தாள். மெதுவான நடனம் வேகமெடுத்தது. குருதிப் பெருக்கெடுத்த சதைப் பிளவிலிருந்து நடுவிரல் அளவு நீளமும் இரண்டு விற்கடை அகலமும் கொண்ட ஈட்டி முனையை உருவி எடுத்து தாயாரு யாவர் முன்பும் வாழை இலையில் வைத்தாள். கரும்புள்ளி செம்புள்ளி குத்தி கற்களாலும், சொற்களாலும் முச்சந்தியில் அவமானப்படுத்தப்பட்டப் பெண்ணைப் போல் இலையில் வைக்கப்பட்ட ஈட்டிமுனை இருந்தது. அதன் ஒற்றைக் கண் யாரையும் ஏறிட்டும் பார்க்கவில்லை.

நிர்வாண உடலைப் பணிந்து விட்டு ஈட்டியைத் தொலைத்தவன் அவனை நீராட்டினான். பின் பிளந்த சதையை சாதுவான சொற்களாலும் கல்லரசன் மரத்தில் கொத்தி மண் கலயத்தில் ஏந்தப்பட்ட பாலாலும் மூடினார்கள். வானத்தின் கீழே கலவி முடிந்து மல்லாந்த உடலைப் போல இலைகளைப் பரப்பி அதில் அவனைப் படுக்கை வைத்தனர்.

பொங்கலிட்ட உணவை உண்டு எல்லோரும் உறைவிடம் புகுந்தனர். ஈட்டியைத் தொலைத்தவன் அவனுக்குக் காவலாக அவனருகிலேயே இரவைக் கழித்தான்.

இதற்கடுத்து வந்த நாளொன்றில் அவர்களிடம் விடைபெற்றேன். முகம் தெளிவடைந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் நோயாளியிடம் புன்னகைத்து கையசைத்தேன். பரிசுகளற்ற வெறுங்கையோடு நான் வந்திருந்தாலும் எனக்கு அவர்கள் சுமக்க முடியாதபடி கனிகளையும் விதைகளையும் தந்தத்தில் செதுக்கிய ஆபரணங்களையும் கொடுத்தார்கள்.

சமவெளியில் நான் பார்க்காத மரங்களின் விதைகளையும் வழி பசிக்கு சில கனிகளையும் மட்டும் நான் எடுத்துக்கொண்டேன். அவர்கள் கீழே செல்ல வழி பிரியுமிடம் வரை வந்து நின்றார்கள். என் நண்பன் என் கரங்களோடு அவன் கரங்களை கோர்த்து இங்கேயே இருந்துவிடேன் என்பதைப் போல பார்த்தான். என் முகத்தருகே முகம் வைத்து ‘‘குர்தை என்று ஒரு முறைசொல் நீ இங்கேயே வாழ்ந்துவிடலாம் எங்களோடு’’ என்றான்.

நான் குதிரை என்றேன் தெளிவாக. மீண்டும் குர்தை என்றான். குதிரை என்றேன். இருவரும் சப்தமாக வெடித்துச் சிரித்து விட்டோம். பின் ஒருவரையொருவர் கட்டி அணைத்து ஆரத்தழுவியபடி ஆனந்தமாக பிரிந்தோம்.

விரைவாக கீழ்நோக்கி இறங்கும் சருக்கு வழியில் தனியாக இறங்கி வருகிறேன். எனது நண்பன் பயணத்தின் எல்லையை அடைந்து விட்டான். இல்லையெனில் இப்பயணத்தின் சாட்சியாக என்னோடு அவன் இருந்திருப்பான். இப்போதோ நான் கண்டவைகளின் சாட்சியாக அங்கிருந்து ஒருவரும் அறியாமல் எடுத்து வந்துவிட்ட ஈட்டி முனையை எனது பயணத்தின் ஆதாரமாக சாட்சியாக உங்கள் முன் வைக்கிறேன். அதன் ஒற்றைக் கண் என்னையும் உங்களையும் இதோ பார்க்கிறது.

(வெள்ளிமலை சடையன், துறையூர் சரவணன் இருவருக்கும்)

விமர்சனம்:

நகுலன்: யாத்திரை,

ரோகிகள், நாய்கள்

ஜீ. முருகன்

எங்கேயோ படித்த ஞாபகம் – வாழ்க்கை என்பதே ஒரு முற்றுபெறாத நீண்ட வாக்கியம் – அப்படி ஒரு நாவல் எழுத வேண்டுமென்றுதான் தொடங்கினேன் – வார்த்தைகளைப் பிணைத்து ஒரு வாக்கியமாக்கி, வாக்கியங்களை பிணைத்து ஒரு பத்தியாக்கி, பத்திகளைப் பகுதிகளாக வகுத்து, ஒரு நாவலை பல பகுதிகளை இடைவெட்டாக ஒன்றாகச் சேர்த்து எழுதுவதுதான் வழக்கம். இப்படி இல்லாமல் இடைவெளியில்லாமல் ஒரே அடியாக நான் எழுத வேண்டுவதையெல்லாம் எழுதித் தீர்த்துவிட்டால் என்ன என்று ஒரு உந்தல்; ஆனால் அப்படி எழுதினால் உன் கண்களுக்கு அலுப்புத் தட்டும் என்று ஒரே வாக்கியமாக இல்லாமல் ஒரே பத்தியாக இல்லாமல் பகுதிகளை மாத்திரம் வைத்துக்கொண்டு, சம்பிரதாய உருவத்தில் அதிகாரங்களை உதறிவிட்டு இந்த நாவலை எழுதுகிறேன்.

நகுலன்

மௌனி, பிரமிள், நகுலன், மூவரும் வாழ்க்கை, அனுபவங்கள், மொழி, இவற்றை அதன் தீவிரகதியில் எதிர்கொண்டவர்கள். வாழ்க்கையில் இல்லாதது ஒன்றுமில்லை. அதைப்போல கற்பனை என்ற பெயரில் உள்ளீடு இல்லாத ஒன்றையும் நான் கூடிய அளவில் என் எழுத்தில் புகாதபடி காத்து வந்தேன் என்கிறார் நகுலன்.

மேலோட்டமான பார்வைக்கு கவனமற்றதாகவும், தற்காலிக மனசலனங்களின் வெளிப்பாடுகளாகவும் தோற்றம் தரும் இவருடைய வரிகளுக்கு பின்புலமாக தெளிவான பிரஞ்சாப்பூர்வமான ஒரு மனம் செயல்படுகிறது. அழுக்கு உற்பத்தியாக உற்பத்தியாக அதை கவனித்து நீக்குவதில்தான் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது என்று எழுதுகிறார் நகலன்.

இதே போல நகுலனுடைய நாற்பது ஆண்டுகால படைப்பு செயல் பாட்டில் ஒரு மாறாத் தன்மையும் இருப்பதுபோல தோற்றம் ஏற்படுவதுண்டு. ஒன்றையே திரும்ப திரும்ப எழுதிக்கொண்டிருப்பது போன்ற சலிப்பான ஒரு பிம்பம். ஆனால் அவருடைய எழுத்து நிகழும் தருணங்களில் எல்லாம் இடம்விட்டு இடம் மாறி, தன்னையே மறுத்து எல்லையற்ற சுதந்திரத்தில் சஞ்சரிப்பதை உணரமுடியும். தர்க்கங்கள் மற்றும் தத்துவங்களின் எல்லைகளுக்கப்பால் படைப்பு மனம் நகர்ந்து செல்லும் ஒரு அந்தர வெளி அவருடையது.

சாதாரண உறுதிகளை விட ஒரு எல்லையற்ற சுதந்திரத்தை தான் காற்றாக சுவாசிக்க எழுதும் எவனும் விரும்புகிறான்.

ஒருவனுக்கு தான் பெறக்கூடிய ஆற்றல்களில் எல்லாம் தலைசிறந்தது தன்னைவிட்டு தான் மாறிநிற்கும் நிலை என்று ஒரு நிச்சயம் பிறந்தது.

என்னில் மாறிய என்னால் ஆன வேறொரு நிதர்சனமான உலகம் என் எழுத்துக்களில் உருவாகிறது.

இப்படி நகுலனைப் பற்றி நகுலனைத்தவிர வேறுயாரும் அதிகமாக பேசியிருக்க முடியாது என்றே தோன்றுகிறது.

கலைஞனால் ஒன்றை பார்க்க முடிவதில்லை. ஒன்றில் ஒன்று இருந்திருப்பதை காட்டுகிறான். அடிப்படைகளை கூட அப்பட்டமாக காட்டுகையில் அவன் கலையின் தரம் ஒரு இம்மி குறைகிறது என்று தான் சொல்லவேண்டும். இதனால்தான் ஒருவகையில் டால்ஸ்டாய் டாஸ்டாவஸ்கியை விட சிறந்த கலைஞன் என்று சொல்ல தோன்றுகிறது.

டால்ஸ்டாயை ஏற்றுக்கொள்ளும் நகுலன் அவரைப்போல வாழ்வை அதன் பெரிய அளவிலான பரப்பில், முரண்பட்ட மனித பண்புகளின் மோதல்களாக உருவாக்காமல் ஒரு குறுகிய அளவிலான பரப்பில் சில மனித இயக்கங்களுடனேயே தனது படைப்பு சலனங்கலை நிகழ்த்தி செல்பவராகத் தெரிகிறார்.

வாழ்வைப்பற்றியோ, வரலாற்றில் மனித இயக்கங்கலை கட்டமைக்கும் பெரிய தத்துவங்களை நோக்கியோ, அறவியல் சார்ந்த ஒரு வாழ்வை முன்னிறுத்தி செல்வதில்லை அவர் எழுத்து. வாழ்வின் ஒவ்வொரு கணத்திலும் தத்துவங்கள் உருவாகி உருவாகி செயல் இழந்து அழிந்து போவதை அவர் உணர்கிறார். சமூகம் உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனங்கள் மற்றும் மதிப்பீடுகளில் இருந்து மட்டும் அல்ல தனக்குள் உருவாகி வரும் சட்டககங்களில் இருந்தே தப்பிச் செல்லும் ஒரு மனப்போக்கு இது.

மற்ற உயிரினங்களை ஒப்பிடுகையில் அதிக நோய்க்கூறுகளை தன்னகத்தே கொண்டவன் மனிதன்தான். தனது சிறுவலியைக்கூட அதிகமாக பிரஸ்தாபிப்பவன். பிரபஞ்சம் என்ற பெரிய ரகசியத்திற்குமுன் கழிவிரக்கம் கொண்டவனாக தன்னை காண்கிறான். நவீனன் ஒரு ரோகியாக இருக்கிறான். ரோகிகளாகவும் இருக்கிறான். சிவன், கேசவமாதவன், ஹரிஹர சுப்பிரமணிய அய்யர், அவன் மனைவி எல்லோருமே நோய்கூறு கொண்டவர்கள்தான்.

நவீனன் ஒரு நாயாகவும் இருக்கிறான். (ஏன் நவீனனை ஒரு நாய் என்று அழைக்கக்கூடாது?) நாய்களாகவும் இருக்கிறான். லிஸ்ஸி, ஜிம்மி, வால்டர், அச்சுதன், ஸாம். ஒரு மனிதன் – ஒரு நாய் – ஒரு மனிதன் – ஒரு நாய் – ஒரு நாய் – ஒரு மனிதன். நவீனனுடன் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக வந்திருக்கும் சிறுவன் நோய் குணமான பின்பும் அங்கிருந்து போக விருப்பம் இல்லாதவனாக இருக்கிறான். அங்கே தரப்படும் இட்டிலிக்காக ஏங்கிநிற்கிறான் – ஒரு நாய் – ஒரு மனிதன்.

இன்றைய புனைவிலக்கியத்தில் சிலர் அனுபவங்களை அதன் அதிர்வெல்லையில் நின்று திகைத்து நிற்கையில், இவர் அனுபவத்திற்கும் எழுத்திற்கும் இடைவெளி இருக்க வேண்டும் என்பதை உணர்ந்திருக்கிரார். ஏனெனில் அப்பொழுதுதான் அனுபவத்தை சாட்சிப்பூர்வமாக நம்மால் பார்க்க முடியும்.

இன்னிலையில்தான் காலம் கோலமாக மாறுகிறது.

நகுலனைப்போல தனது எழுத்துக்களில் தானே வந்து சலனப்படுபவர்கள் என்று தமிழில் கோபிகிருஷ்ணனையும், மலையாளத்தில் பஷீரையும் சொல்லலாம். ஆனால் கோபிகிருஷ்ணனோ, பஷீரோ நிகழ்த்திச்செல்வது வேறுவேறான கதைக்களம், வேறுவேறான மனிதர்கள், அனுபவங்கள். நகுலனின் கதைக்களம் என்றால் அவருடைய பார்வை விரியும் தூரம் மட்டுந்தான். பாத்திரங்கள் அவன் அம்மா, சுசீலா, அப்பா, சிவன், கேசவமாதவன், நல்லசிவம்பிள்ளை, டாக்டர் சம்பசிவன், ஹரிஹர சுப்பிரமண்ய ஐயர் போன்றவர்களும் நாய்களும்தான். பிறகு வள்ளுவன், தாயுமானவன், கம்பன் மற்றும் சகஎழுத்தாளர்கள் க.நா.சு வைப்போல.

மற்றவர்களெல்லாம் மனிதர்களை புறத்தே உருவாக்கி நடமாடவிட்டுக்கொண்டிருக்க, இவரோ தனது மனதை உழுதுச்செல்லும் வாத்தைகளில் தோன்றி மறைபவர்களாக அவர்களை வைத்திருக்கிறார். எல்லோருமே இவருடைய ஸ்தூல நிழல்கள் போலத்தான். சுசீலாவோ வெறும் மன நிழல்.

திருவல்லிக்கேணியில் தேரையைத்தேடிக்கொண்டு போன நவீனன், தேரையே எதிர்படும்போது அவன் யார் என்பதை மறந்துவிட்டு எப்போதோ இந்த பகுதியில் வாழ்ந்த சுப்பிரமணிபாரதியாரின் மேல் மயக்கம் கொண்டு ‘‘ஸார், இந்த எதிர் வீட்டில்தான் சுப்பிரமணியபாரதி இருக்கிறாரா? என்று கேக்கிறான். ‘‘நவீனா உனக்கு என்ன வந்துவிட்டது? நீ எந்த உலகத்தில் இருக்கிறாய்?’’ என்று தேரை கேட்கையில்தான் அவன் விழிப்பு கொள்கிஞீன். (நாய்கள்)

தேரை சொல்கிறான்,

‘‘நீங்கள் இருவரும் அனுமானங்களைப் பிரத்யக்ஷ்யமாகக் கண்டு மயங்குகிறீகள். ஆனால் உங்களை நான் ஏன் குறைகூற வேண்டும். ஏனென்றால் நீங்கள் எழுத்தாளர்கள். பார்க்கப்போனால் இங்கு ஒருவருமே இல்லைநீயும் சரி, நானும் சரி, கேசவமாதவனும் சரி. நவீனா, நாம் பேப்பரில் நகர்ந்து செல்லும் நிழல் உருவங்கள் கூட இல்லை.’’

இருப்பவர்கள் இல்லாமல் போவதும், இல்லாதவர்கள் இருப்பவர்களாவதுமான ஒரு மாயபிரக்ஞைவெளி ஒன்று அவரை ஆட்கொண்டுவிடுகிறது.

இந்த மாதிரி சமயங்கள் – பகுதி வகுதியை ஆட்கொள்ளும் சமயங்கள் – அர்த்த கர்ப்பமான கட்டங்கள், அனுபூதி நிறைந்த நிமிஷங்கள் என்றே எனக்குத்தோன்றுகிறது… ‘‘தேரை, இந்த வெயில் மயக்கத்தில் என் நினைவு பிசகிவிட்டது என்றே நினைக்கிறேன். உன்னை நீ என்றுகூட தெரிந்துகொள்ள முடியவில்லை என்றால்…’’ அப்படியானால் மறைந்துபோன சுப்பிரமணியபாரதி வருவதும் இருந்துவரும் தேரை மறைவதும் எதன்பாற்பட்டவை? தோற்றம் – மறைவு என்ற இரண்டும் ஒன்றேதானோ?’

நகுலனாகிய நவீனன் மட்டுமல்லாது சிவன், ஹரிஹர சுப்பிரமணி ஐய்யர் ஏன் அவன் அம்மாகூட அவன் சாயலிலேயே பேசத்தொடங்குகிறார்கள். நாய்கள் நாவலின் இறுதி பகுதியில் இடம்பெறும் ஒரு அத்தியாயம் முழுவதும் நவீனனைப்பற்றியும் அவன் எழுத்தைப்பற்றியும் ஹரிஹர சுப்பிரமணி ஐய்யர் பேசுகிறார். சிவனும், நவீனனும் சைக்கிளை உருட்டிக்கொண்டு செல்கையில் ஒரு நீண்ட உரையாடல் நிகழ்கிறது. சிவன்தான் பேசுகிறான், இடைஇடையே நவீனன். யாத்திரை நாவலில், தனது இன்னொரு மகனின் வீட்டுக்கு சென்று தங்கியிருக்கும் அவன் அவன் அம்மா, வசதியான அந்த மகனுடைய குடும்ப இயக்கம்பற்றியும், அங்கே இவனையே பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு ஸாம் என்ற நாயைப்பற்றியும் மூன்று கடிதங்கள் எழுதுகிறாள்.

விவரஞூகளில் சலிப்புற்று, இதற்குமேல் எதுவுமில்லை என வெட்டி வெட்டி சிதறிச்சரியும் வாக்கியங்களில் உருவாகிச் செல்கிறது ரோகிகள்

கார் வந்தது. முதலில் அப்பா, பிறகு அம்மா. அம்மா முகம் சுண்டியிருந்தது. அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டாள். அருகில் வேலைக்காரி. சுற்றிலும் ஏழைகள் பாழைகள். காலை ஏழு மணி.

நவீனனுக்கு முன்னால் ஒரு காகிதம் வைக்கப்பட்டிருக்கிறது. கருப்பு மையிலைல் நிரப்பப்பட்ட பேனா ஒன்றும். அவன் கேட்கிறான் நான் இப்போது என்ன வரையப்போகிறேன்? எந்த திட்டமும் என்னிடம் இல்லை. ஆனால் இதோ கோடு ஒன்றை வரைகிறேன். வரைகிறான். இதிலிருந்து தொடங்கலாம். இன்னொரு கோடு. அவைகளுக்கு இசைவான மேலும் சில கோடுகள். ஏதோ ஒன்று உருவாகி வருவது புலப்படுகிறது. தனது ஓவியத்திற்க்கு முன்னால் சிறிது நேரம் திகைத்து நிற்கும் அவன் காகிதத்தை சுழற்றி நிறுத்துகிறான். உற்சாகத்துடன் கத்துகிறான். இதோ இங்கே. அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த ஒரு கோட்டை கண்டு இன்னொன்றுடன் இருக்கிறான். (மனதின் மெல்லிய நரம்புகள் எவ்வாறு ஒவ்வொன்றும் ஒவ்வொரு சமயத்தில் கிழிந்து காற்றில் அலையும் சிலந்தி ஒற்றடை மாதிரி அலைந்தது என்பது அவனுக்கு தெரியாதா என்ன) மேலும் பல இழப்புகள்.

நவீனன் – ஒரு மனிதன் – ஒரு நாய் – நகுலன்

நகுலனை ஏன் ஒரு நாயென்று அழைக்கக்கூடாது?

நகுலன் சிருஷ்டிக்கும் வார்த்தைப் பரப்பிற்கு மேல் மஞ்சல் நிற பூனை ஒன்று தாவிச்செல்கிறது. இதையெல்லாம் ஒரு மூலையில் உட்கார்ந்து கவனித்து கொண்டிருந்த நாய் சட்டென்று எழுந்து சைக்கிளை தள்ளிக் கொண்டு உலாவச் செல்கிறது. கூடவே சிவனும். சிவனின் மூன்றாவது கண் பற்றி எரிகிறது.

…தானாகவும், பாத்திரமாகவும், எழுத்தாகவும் கண்டதையும் காணாததையும், பார்த்த மனிதர்களையும் பார்க்காத தெய்வங்களையும், கிடைத்த அனுபவங்களையும் தனியாக வந்து சேர்ந்த ஞானங்களையும் அதையும் இதையும் எதை எழுதுகிறோம் என்று தெரியாமலேயே எதை எதையெல்லாமோ எழுதிக்கொண்டிருக்கிறேன்.

எழுத எழுத எழுத்து அழிகிறது, வாசிக்க வாசிக்க வாசகன் தொலைகிறான்

அடே வாசகாஙு உனக்குதான் எத்தனை எழுத்தாளர்கள்!

கவிதைகள்:

தேவதச்சன் கவிதைகள்

என் சரித்திரம்

பள்ளிவிட்டுத் தாமதமாய் வந்த அன்று அம்மா என்முதுகில்

திங்கு திங்கென்று மிதித்தாள்

தரையோடு முழங்காலிட்டவாறு அத்தனை மிதிகளையும் வாங்கினேன்

முகம் எங்கும் தூசுபடிய

அப்படியே கண்ணீரில் படுத்து விட்டேன்

என் பகற்கனவின் முதல்தளிர் முளைவிட்டது அன்று

அடுத்த விநாடியே பகற்கனவுவாசி

யாகி விட்டேன்

பூமியிலிருந்தும் பூமிக்கு வெளியிலிருந்தும்

முற்றாக வெளியேறி விட்டேன்

என் பகற்கனவின் தீயில் எல்லாம்

தேனால் செய்யப்பட்டிருந்தன

பஸ்ஸில் ஜன்னல் ஓரச் சீட்டுபோலும்

அந்த வானவில், எப்போது

நான் அழைத்தாலும் வந்து விடும்

அந்த உடைந்த வில்லில் அம்பு பொருந்தி

உணவு தேடிக் கொண்டேன். உயிர் காத்துக்

கொண்டேன்.

0

என் பகற்கனவின் மொட்டைக் கிணற்றில்

எப்போதும் ஒரு கரிச்சாங்குருவி

மேலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறது

என் பகற்கனவின் நிலவொளியில் எப்போதும் ஒரு

கரிச்சாங்குருவி தூங்கிக் கொண்டிருக்கிறது

நள்ளிரவோ நண்பகலோ

கோடையோ குளிரோ

கிணற்றில் விழுந்த நிலவு

மூழ்குவதில்லை.

0

எருதுகளின் கண்கள்

மலையின் விலாப்புறம் அது

நாங்கள் சென்று அமர்ந்தோம்

வனங்களைத் திறக்கத் தெரிந்தவன்

அங்கு அழைத்துச் சென்றான்

எதுவும் பேசத் தோன்றவில்லை

பேசினால்

மலை உடைந்து விடும் போல் இருந்தது

நகராத தாவரங்கள்

கூட்டம் கூட்டமாய் நகர்ந்தபடி

எங்கோ போய்க் கொண்டிருந்தன

ஒரே ஒரு

சின்ன நீலமலரிடம்

பேசத் தோன்றியது

என் எல்லா பேச்சுக்கும்

அதன் கண்களில் அன்புக் கேலி

ஒளிர்ந்தது

பூமி சுழலும் திசைக்கு எதிர்திசையில்

நடந்தப்படி ஊரினுள்

நுழைந்தோம்

மலையிலிருந்து திரும்பிய பின்னும்

வண்டிக்கருகில் நிற்கும் எருதுகளின்

கண்களில்,

மலை மறையாமலிருந்தது

0

உறங்குவது போலும் விழிப்பது போலும்

அந்தி உறங்கச் செல்லும்

அந்தியில்

பள்ளிச்சிறார்கள் பறவைகளை எதிரொலித்து

கத்தியபடி ஆட்டோவில்

செல்கிறார்கள் அவர்களைக் கண்டதும்

சாலையோரத்தில்

வெண்ணிறதாடி வளர்ந்து

தலைப்பாகை கட்டிய

லோடுமேன் ஒருவன்

ஹோவென்று கத்துகிறான்

இனி திரும்ப முடியாத

முழுமையின் பாதையில்

நின்றப்படி

அவனது உயர்த்திய கைகள்

அவர்களை நோக்கி நீள்கின்றன

அவன் குரல்பட்டு

அந்தியின் இலைகள் சலசலக்கின்றன

உறங்கச் சென்ற அந்தி

விழிக்கிறது

வெண்ணிற நட்சத்திரங்கள் என

0

ரொட்டி

பாலைவனத்தை வாயில் கவ்வியபடி திரிகின்றன

நாய்கள் எங்கே கீழே வைத்தாலும் அந்த இடம்

பாலை ஆகி விடுவதால்

அன்பற்ற ஊரில் பசித்து அழுகின்றன

சிறிது உணவை அவைகளுக்கு அளிக்கும்போது

அவைகள் வாயில் அடைத்திருப்பதை நான்

கையில் வாங்கிக் கொண்டு நிற்கிறேன்

அவைகள் ரொட்டியை விழுங்கி விடுவதைப்போல்

பாலையை விழுங்கத் தெரிந்தால், நான்

கூடவே நிற்க வேண்டியவதில்லை.

0

அசோக மரம்

திறந்து கிடக்கும் ஃபைலின்மேல், பேனாவை

மூடி வைத்தாள். மேஜையின் இடதுபக்கம் உயர்ந்து நிற்கும்

கோப்புகளின் தூசிகளைப் பார்த்தபடி நினைத்தாள்:

என்னிடம் யாரும் அன்பு செலுத்துவதில்லை

எதிர்பெஞ்சில் அமர்ந்திருந்தார் பெரியவர். அவள்

கையெழுத்திட்டுத் தரப்போகும் சான்றிதழுக்காகக் காத்திருந்தார்

ஜன்னல்வழி தெரியும் மலர்கள் அற்ற அசோகமரத்திலிருந்து

வெவ்வால் ஒன்று கிறிச்சீட்டு வெளியேறுவதைப் பார்த்தபடி

நினைத்துக்கொண்டார்:

என்னிடம் யாரும் அன்பு செலுத்துவதில்லை

ஒவ்வொரு மேஜையிலும் தேநீரை வைத்துவிட்டுச்

செகிறான் பையன். ஒவ்வொரு கண்ணாடி டம்ளரும்

வெவ்வேறு அளவுகளின் காலியாவதை பார்த்தப்படி

நினைத்துக் கொள்கிறான்:

யாரும் அன்பு செலுத்துவதில்லை என்னிடம்

0

எனக்கு முன்போய்ச் சேர்ந்து விடாதே

அக்காவும் தம்பியும்

பேசிக் கொண்டிருந்தனர்

தன் நடுங்கும்

எண்பத்திரண்டு வயதுச் கரங்களால்

அவள் காப்பி

ஆற்றிக் கொண்டிருந்தாள்

சர்க்கரை போடவேண்டாம்

என்று இரண்டாவது இளைய

சகோதரன் நினைவூட்டினான்

இருவரும்

முப்பது வருடத்திற்கு முன்

இறந்து போன மாமாவின்

நகைச்சுவை உரையாடல்கள் பற்றி

பேசிக் கொண்டிருந்தனர்

வெளிறிய கைகளில் காபியைத் தரும்போது

அக்கா சொன்னாள்: எனக்கு முன் நீ

போய்ச் சேர்ந்து விடாதே

அந்த

பழைய வீட்டின்

பழைய அறையில்

காபி

எப்போதும் போல்

காப்பியை விட

சற்று

அதிகமாகத்தான் இருந்தது

0

பொ.செந்திலரசு

அலைவுகள்

கடந்த பேயிரவில்தான்

சமீபித்திருந்தது

குறுக்கும் நெடுக்கும்

சிறகசைத்து நெய்த

கூட்டின் மரணம்

எடுத்துப் பத்திரப் படுத்திய

அறுபட்டக் கூடென்

மேசை மேல்

சலனமற்றுக் கிடக்க

ஓயாமல் மனதிலலைகிறது

கூடறுத்தக் காற்றும்

கூட்டைத் தவறிய

பறவையின் தவிப்பும்

இசை

அல்லது

விழுங்க இயலாத

இந்தக் கசப்பை

விழுங்கு

அல்லது

உயிரோடு சேர்த்துக் குமட்டு

0

உடை

ராஜகீரிடம்

உன் சிரசில் பொருந்தாததற்கு

யார் என்ன செய்ய முடியும்

நண்பா

இந்த வாயில் காப்போன்

உடையில்

நீ என்ன மிடுக்கு தெரியுமா.

பொன். இளவேனில்

சருகென இறங்கும் பறவை

வந்த தூரம் வாலுக்குப் பின்னே

வியாபித்திருக்கிறது

எல்லை சிறு புள்ளியாய்

எதிர்பார்ப்புகளோடு துவங்கிற

பயணம் வெறுமனே நிகழ்கிறது

பறக்கும் வரை அது பறவை

அழியும் வரை அது காடு

நிலைக்கும் வரை அது மலை

இருக்கும் வரை யாம்

பிரம்மராஜன் கவிதைகள்

யுகாதிகனும் நான்கு பெண்டிரும்

வெட்டுக்கிளியை முத்தமிடுபவளைத்

தொட்டணைத்துத் திருப்பிக் கொள்ளுமுன்

உன் சிகரெட்டை அணைத்து விடு

கன்னக் குழியில் புறாவைக் கொஞ்சுபவளிடம்

உன் சல்லாபம் செல்லாது

இன்னொருத்தி காதில் ஆபரணமாய்

பறவை முகம்

உலர்ந்த நத்தைக் கூடு போல

எண்ணற்ற பஞ்சு-லகு சிறகுகளால்

நீ என்றோ வருடவிருக்கிறாய்

பிருஷ்டமும் மார்பகமும்

இடம் மாறிப் போனவள்

வலது செருப்பை மாற்றியணிகிறாள்

அவளிடம் உன் திசையறிவு

பலிக்காது

யுகாதிகனை ஆலிங்கனித்து

தலைக்குப் பின்னால்

கைகளை மாலையாயக் கோர்த்திருப்பவளின்

ஹார்மோன் வாசனையை

உணராது சாப்பாட்டு ராமன்

வயிற்றுத் துருத்தியை ஊதுகிறான்

அவனருகில் தாடியே முகமாய்

அமர்ந்திருப்பவனின் நாக்கு

தீட்டுப் பட்டுத் தொங்குகிறது

பிச்சைக்கேந்தும் கைகளும்

அபய முத்திரைக் கைகளும்

வேறானவை என்றாலும்

கைவிரல்களை நம்பியே

கலைஞன் நிற்கிறான்

நத்தை மனிதனின் நிழல் தேனீ

பால்கனியிலிருந்து பார்ப்போருக்கெல்லாம்

நத்தை மனிதன் தெரிகிறான்

பல்லிளிக்கிறான்

உப்பு மூட்டையென

அவன் தோளில் ஒருத்தி தொற்றிக் கொண்டிருக்கிறாள்

அடுக்குமாடிப் பெண்ணின் பார்வை

அலைந்து திரும்ப

தலையில் நித்தியத் தலைவலியென

பூச்சாடியை அணிந்திருக்கிறான்

ஜாடியின் காகித மலரைச் சுற்றும்

நிழல் தேனீயொன்று

அதன் அடியொற்றி

தென்னம்பாளையில் தேன்தின்று

திறன் பெற்ற கொசுவும்

பின்பற்றுவதை

நம்பாது நோக்கும் பால்கனிப் பெண்

செவிடென்று கொள்

பிச்சைப்பாத்திரம் மினுக்குகிறது

பிளந்த முத்தென

மொஸார்ட் சிறுவனின் பியானோ

பியானோவில் மொஸார்ட் வாசித்தவனை

முன்னங்கால்களில் உதைவிட்ட குதிரைக்கு

லாடம் கட்டப்பட்டிருக்கவில்லை

லயவின்னியாசத்தின் உச்சத்தில்

விறைத்த குறியுடன் பழுப்பு ஆகாசத்தில்

மறைந்தது

லகான் பூட்டத் தெரியாதவன்

பியானோ வாசிக்கிறானா

வலது கன்னம் பூதாகரமாய்

வீங்கியும்

வாசிக்கிறான்

நாரையொன்று

இடது கன்னத்தில்

முத்தமிட்டுச் செல்கிறது

கண்ணைக் கட்டிக் கொண்டு வாசிக்கும்

சிறுவன் மொஸார்ட் அல்லவென்று

பியானோ

அறிந்ததெவ்விதம்

மாதொரு பாகம்

குனிந்து செல் வயோதிகனே

பணிதல் எல்லோர்க்கும் பெருமை

மேலும் வழியோ குறுகல்

பிரம்பு போன்ற தேகம்தான்

விறைக்கும் ஆண்மைதான்

ஆனாலும் பணி

செல்வழி

குகை இருட்டு

உன்னையொரு பெண் அணைப்பாளானால்

உன் இடது மார்பில் முலைவளர்வது

சாபம்தான்

உன் அம்மணம் தாளாது

முகம் பொத்தி ஒருத்தி

பாத பூஜை செய்கிறாள்

கார்த்திகை விளக்கொத்த

மண்பாண்டத்தில் நீரெடுத்து

என்றாலுமென்ன

வானத்தின்

அணியலமாரியிலிருந்து

பழந்துணிகள் சிதற

நீர் வழிகிறது

படி ஊற்றென

உன்னை ஆசீர்வதித்து

பெண் வயலின் கலைஞர்

வயலின் வாசிப்பவர் பெண்ணாயிருந்தால்

ஆடை அணிந்திருப்பது அவசியம்

உடையைப் போல வாத்தியத்தைக் கையாள்வது

வேறு விஷயம்

வெண்பட்டு

பெங்கால் காட்டன்

கம்மீஸ் சூரிதார்

அவரவர் விருப்பம்

தோடிக் கிறக்கத்தின் உச்சியில்

படிகளைச் செதுக்கி

ஜன்னலை வெட்டி

அந்த சரீரத்தை தரிசிப்பது

முற்றிலும் முச்சுவை

கேட்பவர்

யாரென

?

முன்மூளைச் செல்கள்

தீர்மானிக்கும்

ஆயிரம் கால் மண்டபம்

உன் காதலியின் மார்பை வியந்து கொண்டிருக்கிறது

கோயிலின் ஆண்சிலை

அவள் முதுகு மட்டும் தெரிகிறதுனக்கு

பூத்திருக்கும் தும்பை மலர்

பார்த்திருக்கிறது அவள் பூக்களை

மண்டபத்தின் ஆயிரம் கால்களில்

ஒன்றிலும் உரசாமல் ஒரு வௌவால் திரும்புகிறது

முன்சென்று பாராது

நீட்டிப் படுத்திருப்பவர் கடவுள் என்றால்

அமர்ந்திருக்கும்

பெண்

உன் அம்மா மண்டபம்

சபலத் திருஉரு

சிலந்திக் கால்கள் தரைகீறி

விண்ணுயர ஊர்வலம் போகும் யானைகள்

ஒன்றின் மேல் பலிபீடம்

மற்றதின் உடலில் கலங்கரை விளக்கு

இன்னொன்றின் முதுகில் நிற்கிறாள்

இறுகிய மார்புகளைத் தூக்கிக் காட்டியப்படி

சபலத்திரு உருவாய் ஒருத்தி

தடங்கலாய் சிறு பரல்கற்கள் தரைமீதில்லை

பின்தொடரும்

கரிமுக முலையாய்

மற்றவள்

கரிமுக முதுகின் விதான மண்டபத்தில்

முகமே முலையாய்

மற்றவள்

வழிகாட்டி முன்னேறும் குறி விரைத்த வெண்புரவியும்

சபலப்பட்டவனான நீயுமே

அஞ்சி

சிலுவை தூக்குகிறீர்கள்

வான் கவிந்த மேகப் பொதி

கரைந்தொழுக

எல்லாம் நிர்மலமாக

சின்னஞ் சிறு புள்ளியாய்

மீண்டுமவர்கள்

சிலந்திக்கால் யானை மேல்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: