வனம் 4

ஜூலை-ஆகஸ்ட் 2005

ஆசிரியர்கள்: ஜீ.முருகன், ஸ்ரீநேசன்

தலையங்கம்:

டால்ஸ்டாய் – பஷீர் – அசோகமித்திரன்

சுந்தர ராமசாமி – சாருநிவேதிதா – கவிஞர்கள்

அரசியலும் கலையும் மனித குலத்தின் அற உணர்விலிருந்து தோன்றியவை. குறிப்பாக பொதுஉடமை இயக்கமும் இலக்கியமும். அற உணர்வு மட்டுந்தான் பேராற்றல் கொண்டப் பிரபஞ்சத்தின்முன் இசைவான வாழ்நிலையை மனித குலத்திடம் கோரி நிற்கிறது. இசைக் கலைஞன் மற்றும் ஓவியனைவிட இலக்கியப் படைப்பாளி சக மனிதன் மீது அக்கறை உள்ளவனாக இருக்க வேண்டியிருக்கிறது. காரணம் இலக்கியம் மனிதனின் வாழ்வாகவும் கருத்தாக்கமாகவும் இருக்கிறது.

இன்று அறத்தைப் பற்றி பேசுவது அலுப்பூட்டும் விஷயம். பிளாட்டோ காலத்தது. காலாவதியாகிவிட்ட ஒன்று. ஒரு நூற்றாண்டுக்கு முன்பே டால்ஸ்டாயுடன் இரயில் நிலையத்தில் இறந்து போய்விட்டது அது. ‘இலக்கியத்தின் முதன்மையான அடிப்படை நீதியுணர்வுதான், வேறு எதுவுமில்லை என்று பஷீர் சொன்னதை (ஜெயமோகன் – உயிர்மை) ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். டால்ஸ்டாய், பஷீர் போன்றவர்களின் எழுத்துகளை வாசிக்கும்போது நமக்குள் கவிவது இந்த உணர்வுதான்.

அசோகமித்திரன் இப்போது தவிர்க்க முடியாமல் நினைவுக்கு வருகிறார். சமீபத்தில் அவர் சொன்ன கருத்துக்கள் கடும் கண்டனத்திற்குள்ளானதை நாம் அறிவோம். இது முழு உண்மையாக இருக்கும் பட்சத்தில்கூட இதுவரை அசோகமித்திரனின் படைப்புகள் மீது நாம் கொண்டிருந்த மதிப்பீடுகளை ஒருநாளில் நம்மால் தூக்கி எறிந்துவிட முடியுமா? அவற்றை நிராகரிப்பது நாமே நம்மை நிராகரிப்பது போன்றதுதானே?

பிராமணர்கள் இதுவரை மற்ற ஜாதியினரை நடத்திய விதம், அதிகாரத்தை வசப்படுத்த ராமரை முன்னிறுத்தி அவர்கள் விளையாடும் சதுரங்கம், கோழைத்தனத்திற்கு பின்னிருந்து இன்று வெளிப்படும் வன்முறை, வேலைவாய்ப்புகளில் அவர்களுடைய மேலாதிக்கம், கலாச்சாரம் பண்பாடு என்று வலியுறுத்திக்கொண்டே, சுதேசியம் பேசிக்கொண்டே அமெரிக்காவிற்கு போகும் சுயநலத்தன்மை, எல்லாமே மற்ற சமூகத்தினருக்கு அவர்கள் மீது வெறுப்பு தோன்றுவதற்கான காரணிகளாக இருக்கின்றன(சமீபத்தில் சங்கராச்சாரியாரைக் கைது செய்தபோது நீதி நியாயம் என்பதைக்கூட பொருட்படுத்தாமல் அவரைக் காப்பாற்றுவதிலேயே குறியாக இருந்த சமூகம்தான் இது). இவர்கள் மீது தோன்றியுள்ள இந்த வெறுப்பு யூதர்களின்மேல் உலகம் முழுக்க இருந்த வெறுப்பை ஞாபகமூட்டுவதாகவே இருக்கிறது. இதற்காக இட்லரைப் போல இவர்களை யாரும் விஷவாயு கிடங்கில் வைத்து கொல்லப்போவதில்லை என்று நமக்குத் தெரியும்(குறிப்பாக அசோகமித்திரன் போன்றவர்கள் பயப்படத் தேவையில்லை). நரேந்திர மோடி, பால்தாக்கரே, ரா.ம.ஜோஷி, ஜெயலலிதா போன்றவர்களைப் பார்க்கும் போதுதான் நமக்கு இட்லர் ஞாபகத்திற்கு வருகிறார். பிராமண சமூகத்தின் மேல் இங்குதோன்றியிருக்கிற பகையுணர்வு அசோகமித்திரன் போன்றவர்களின் மனதைப் புண்படுத்தியிருக்கும் என்பது ஏற்கக்கூடியதுதான். இதற்காக அவர், ஒன்றும் பேசாமல் தனக்குள் குமைந்துகொண்டிருக்க வேண்டும் என்பது நியாயமில்லாத விஷயம்.

பிராமணர் என்பதற்காக சுந்தர ராமசாமியும் எதிர்ப்பிற்குள்ளானார். சமீபத்தில் வெளிவந்த அவருடைய நாலைந்து கதைகளில் சுமாரான கதை ளபிள்ளை கெடுத்தாள் விளைஹ மட்டுந்தான். அதை வாசிக்கும்போது எந்த விஷமத்தனமும் தென்படவில்லை. இப்படி ஒரு தாக்குதலுக்கு ஆளாகுமென்றும் நினைக்கவில்லை. எப்படியோ இந்த ஆர்ப்பாட்டத்தினால் பயனடைந்தது சு.ரா.தான்.

சாருநிவேதிதா போன்றவர்கள் உடனே பரபரப்புற்று எதிர்வினையாற்றத் தொடங்கிவிடுகிறார்கள். எல்லாவற்றையும் இப்படித் தூக்கி எறிந்துவிட்டு எதை காப்பாற்றி வைக்கப்போகிறோம் நண்பர் சாரு அவர்களே? இவர்கள் பிராமணர்கள் என்பது மட்டுந்தான் காரணமென்றால் நம்முள் கலந்துவிட்டிருக்கிற பிராமணத் தன்மையை எப்படிக் கலைவது? இலக்கியவாதியாக அறியப்பட்டவர்கள் எல்லாம் ஜாதி மத உணர்வுகளை முற்றாகக் கலைந்துவிட்ட உத்தமர்களா என்ன? மௌனியையும், பாரதியையும் சனாதனிகளாக நிறுவமுடியும் எனும்போது, இவர்களையெல்லாம் குற்றவாளியாக்கிப் பார்ப்பது ஒரு அறிவார்த்தமான விளையாட்டாகவே தோன்றுகிறது. சிலநேரங்களில் மேம்போக்கான அரசியல் செயல்பாடாகவும் குறுகிவிடுகிறது. அசோகமித்திரனும், சுந்தர ராமசாமியும்தான் நம் எதிரிகளா? நாம் சந்திக்கும் போது எங்களையும் உங்கள் பார்க் ஹோட்டலுக்கு அழைத்துக்கொண்டு போங்கள் சாரு, ஸ்காட்ச் விஸ்கி பருகிக்கொண்டே இது பற்றி நாம் உரையாடுவோம். நேரமிருந்தால் விளிம்பு நிலை மக்களைப் பற்றியும் நாம் பேசுவோம்.

0

இன்றைய தலைமுறையின் மதிப்பீடுகள் சந்தர்ப்ப சூழ்நிலையால் உருவாக்கம் பெறுவதாகவே தோன்றுகின்றன. இவர்களை இயக்கும் ஆதாரப் பொதுப்பண்பு என்ன என்பதை விளங்கிக்கொள்ள முடிவதில்லை. அலமாரிகளை அலங்கரிக்கும் சுடுமண் கலயங்களைப் போல இருக்கிறது இவர்களின் புத்தகங்கள். இவற்றில் நீரும் இருப்பதில்லை, ஈரமும் இருப்பதில்லை. இவர்கள் வெளிப்படுத்தும் ஆவேசங்களும் கோபங்களும் பதட்டத்தையே ஏற்படுத்துகின்றன. விமர்சனங்களைக்கூட இவர்களால் எதிர்கொள்ள முடிவதில்லை. ‘உங்கள் கவிதைகள் அலுப்பூட்டுகின்றன என்று இவர்களிடம் சொல்லிப்பாருங்கள். அறியாமை, திமிர், தடித்தனம், பொறுக்கித்தனம் என்ற வசைகளைத்தான் நீங்கள் பதிலாகப் பெறுவீர்கள். உண்மையில் இவர்கள் கவனிப்பதில்லை, இவர்களின் முரட்டுக் கால்களுக்குக் கீழாகவே இவர்களின் புரட்சி கீதங்களும், கவிதைகளும் சரிந்து மிதிபடுவதை. இந்தக் கவிதைகளின் மென்மைத் தன்மைக்கு பின்னே ஒளிந்திருக்கும் குரூரத்தையே இவர்கள் சக படைப்பாளிகளின் மேலும் விமர்சகர்களின்மேலும் பிரயோகிக்கிறார்கள். தமக்குள் பீறிடும் வன்மத்தை, கோபத்தைப் படைப்பாக மாற்றவதற்கான தைரியமோ திராணியோ இவர்களிடம் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. மனசாட்சியற்ற இந்த விஞ்ஞான யுகத்தின் குழந்தைகள்தாம் இவர்கள். தன்னைப் பற்றிய அக்கறைகள் மட்டுமே மேலோங்கியவர்கள். தனது எழுத்து, தனது புத்தகங்கள், பத்திரிகை, பத்தி, பணம், புகழ் என்று சீரழிந்துகொண்டிருக்கும் தலைமுறைதான் இது. இந்தக் கூச்சல் குழப்பங்களுக்கிடையே அறம், நீதியுணர்வு எல்லாம் மங்கி மறைந்து கொண்டிருக்கின்றன.

சிறுகதைகள்:

மைக்கேல் சகோதரர்களின்

இரட்டைப் பேனா

எஸ். செந்தில் குமார்

1987 ஆம் ஆண்டு மார்ச் மாதம் புனித வெள்ளி அன்று வெள்ளைக்கார இரட்டை சகோதரர்கள் தேயிலைத் தோட்டங்களில் தங்க வேண்டுமென்பதற்கென தங்களது நாட்டை விட்டுக்கிளம்பி தமிழ் நாட்டிலுள்ள மதுரைக்கு வந்து சேர்ந்தனர். அவர்கள் மதுரையில் தங்கி அங்கிருந்து பொள்ளாச்சி வழியாகவோ அல்லது தேனி வழியாகவோ தேயிலைத் தோட்டங்களுக்குச் சென்றுவிடத் திட்டமிட்டிருந்தனர். அவர்கள் தங்கள் நாட்டிலிருந்து கிளார்க் என்பவர் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ் என்ற புத்தகத்தையும் பரம்பரை பரம்பரையாக அவர்கள் குடும்பம் வைத்திருந்த இரட்டைப் பேனாவையும் உடன் கொண்டு வந்திருந்தனர்.

மதுரையில் காலேஜ் ஹவுஸில் தங்கி இரவு முழுக்கக் குடித்தபடியும் தேயிலைத்தோட்டங்களுக்குச் செல்லும் பிரயாணங்களைப் பற்றி பேசியபடியும் பொழுதைக்கழித்து வந்தார்கள். டபிள்யூ ஜேக் மைக்கேலும் டபிள்யூ. ஜான் மைக்கேலும் தங்களது கைப்பையில் எப்போதும் பேனாவை வைத்துக்கொண்டிருந்தனர். இரட்டைப்பேனாக்களை வைத்துக்கொண்டு மதுவிடுதியில் நெடுநேரம் அமர்ந்திருப்பதை விரும்பாத ஜான் விரைவில் வெளியேறிவிட வேண்டுமென ஜேக்கை அவசரப்படுத்தினான். ‘‘ஏன் அவசரப்பட வேண்டும்? மிதமான சூடும் மெல்லிய காற்றும் ஜனங்களின் வாசனையும் என்னை உற்சாகப்படுத்துகிறது; உனக்கு உற்சாகமே இல்லையா என் சகோதரனே’’ என்றான் ஜேக்.

ஜான் மைக்கேல் பீர் பாட்டிலைக் கையில் ஏந்திப் பருகியவனாக, ‘‘உன்னிடம் பேனா இருக்கிறதா என பார்த்துக்கொள்’’ என்றான் ஜேக் மைக்கேல். அவசரமாகத் தன்னிடம் பேனா இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டு சிரித்தபடி இன்னொரு பீர் பாட்டில் வாங்கிக்கொள்ளலாமா எனக் கேட்டான். ஜான் மைக்கேல் யோசனையுடன் அறைக்குச் சென்று விடலாமென்று கூறினான்.

பிறகு இரட்டைச் சகோதரர்கள் இருவரும் அறைக்குச் செல்ல நடந்தனர். அவர்கள் அறைக்குச்சென்றதும் தங்களிடமிருந்த பேனாக்களை எடுத்து ஒரே உறையில் போட்டுக் கொண்டனர். பிறகு ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ் புத்தகத்தை எடுத்துக் கட்டிலின் மேல் போட்டுக்கொண்டு புரட்டத்தொடங்கினான் ஜேக். புத்தகத்தில் பேனாக்களைப் பற்றியக் குறிப்புகளும் படங்களும் கருப்பு – வெள்ளை மற்றும் வண்ணங்களில் இருந்தன. தங்கத்தில் செய்த பேனா, வெள்ளிப்பேனா, சந்தன மரத்தில் செய்த பேனா என பேனாக்களை வடிவமைத்திருந்தவர்களின் குறிப்புகள் அச்சிடப்பட்டிருந்தன.

இரட்டைப்பேனாக்களைப்பற்றிய கட்டுரைகளை எழுதுவதற்கென அமைதியும் போதிய மனத்தாயரிப்புகளும் இரட்டையர்களுக்குத் தேவைப்பட்டது. இரட்டைப் பேனாக்களைப் பற்றி விசேஷ செய்திக்குறிப்பு ஒன்றை தினசரி செய்தித்தாளில் வெளியிட்டிருந்தார்கள். செய்தியையும் பேனாவின் செயலையும் படித்த பதிப்பாளர் வின்சென்ட் எஃப் வுட் இரட்டையர்களைச் சந்தித்து மேலும் இரட்டைப் பேனாக்களைப்பற்றி புத்தகம் வெளியிட விரும்புவதாகத் தெரிவித்து கட்டுரை எழுதித் தரும்படி கேட்டுக்கொண்டார். கேட்டுக்கொண்டதோடு தான் இதற்கு முன் வெளியிட்ட கிளார்க்கின் ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ் என்ற புத்தகத்தையும் தந்தார்.

இரட்டைப் பேனாக்களைப்பற்றியக் கட்டுரைகள் எழுதுவதற்கென தேயிலைத் தோட்டங்களின் ஊடே உள்ள பண்ணை வீடுகளை ஏற்பாடு செய்து தந்து இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார் வுட். கட்டுரைகள் எழுதுவதற்கென வந்து சேர்ந்த இரட்டைச் சகோதரர்கள் மதுரையில் ஜனங்களின் நெரிசலையும் நாள்தோறும் விதவிதமான பயணிகள் வந்து போகும் இடங்களையும் கண்டு இன்னும் சில காலம் தங்கிச் செல்ல முடிவு கொண்டனர். ஜேக்கிற்கு அவனது தந்தையைப் போலவே புராதனக் கதைகளைக் கேட்கும் ஆர்வமும் படிக்கும் பழக்கமும் சிறுவயதிலிருந்தே இருந்தது. ஜான் இதற்கு நேர் எதிரானவனாக யாருடனும் பழகப்பிரியமில்லாது பிரார்த்தனைகளின் மீதும் பாடல்களின் மீதும் அவனது தாயாரைப் போல நாட்டம் கொண்டிருந்தான்.

மைக்கேல் சகோதரர்கள் இரவில் தாங்கள் தங்கியிருந்த மாடியறையில் ஜன்னல்களைத் திறந்து விட்டபடி வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருந்தனர். பிறகு திடீரென ஜானுக்கு ஒரு யோசனை தோன்றி ரூம் பாயை அழைத்தான். தங்களிடமிருந்த இரட்டைப் பேனாவில் ஒன்றைக் கொடுத்து எழுதச் சொன்னான். எதற்காக இந்த வெள்ளையன் நடுராத்திரியில் பேனாவைத்தந்து எழுதச் சொல்கிறான் எனக் குழம்பிப் போனவனாக தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் எழுதத் தொடங்கினான். எழுத எழுத எழுத்துக்கள் காகிதத்தில் படியாமலேயே போனது. மையில்லாத பேனாவில் எழுதியது போல உணர்ந்தான். அவன் ஜானிடம் இந்தப் பேனாவில் மையில்லையா எனக் கேட்டான். அவன் ஏதும் பதில் சொல்ல விருப்பமில்லாதவனாக அவனைப் போகக்கூடச் சொல்லாது தன் சகோதரனிடம் இரட்டைப் பேனாக்களைப்பற்றி நமக்குத்தெரிந்ததை விட தெரியாததைப்பற்றி தான் முதலில் எழுத வேண்டும் எனச் சொன்னான்.

மைக்கேல் சகோதரர்கள் காலையில் டவுன்ஹால் ரோட்டில் வெள்ளரிப்பிஞ்சுகளைத் தின்றபடி நடந்தனர். கிளார்க் எழுதிய வாசகத்தை அவர்கள் இருவருமே ஒரே நேரத்தில் நினைத்துக் கொண்டனர். எழுதுபவர்கள் நினைக்காத ஒன்றை எப்போதேனும் பேனா எழுதி விட முடியுமா?’ சென்ட்ரல் தியேட்டரைத் தாண்டி நடந்தபடி இருந்தவர்கள் பேனா பழுது பார்த்துத் தரப்படுமென சிறியதாக எழுதி பிளாட்பாரத்தில் கடை வைத்திருக்கும் பெரியவரை அப்போது பார்த்தனர். பேனாவை பழுது பார்த்துத் தரும் பெரியவர் பழையப்பேனாக்களை பரப்பி வைத்தப்படி உட்கார்ந்திருந்தார்.

மைக்கேல் சகோதரர்கள் பெரியவர் பழுது செய்வதையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். பிறகு தங்களிடமிருந்த இரட்டைப் பேனாக்களைத் தந்தார்கள். பெரியவர் பழுது செய்யத்தான் தருகிறார்களென நினைத்துப் பேனாவை சோதித்தபடி இருந்தார். பேனாவில் ஏதேனும்சூட்சுமம் இருக்கிறதா என இரண்டுப் பேனாக்களையும் ஒவ்வொரு இடமாக மாறிமாறிப் பிடித்து எழுதிப் பார்த்தார். பேனா பழுது பார்க்கும் பணியைச் சிறு வயதிலேயே செய்யத் தொடங்கிய பெரியவர் முத்தழகு தனது தாத்தாவின் பேனா பழுது பார்க்கும் கடையிலேயே வளர்ந்தவர். பேனாவும் மனிதனைப் போன்ற உடலைக் கெண்டது. மனிதனின் உடலில் எங்குதொட்டால் உணர்வு கூடுகிறதோ அதே போல் எழுதாத பேனாவில் எங்கேனும் ஓர் இடத்தில் அதன் உணர்ச்சிகள் சூட்சுமம்தர மறைந்திருக்கும். அந்த இடத்தினைப்பிடித்து எழுதினாலே போதும் எழுதத்தொடங்கி விடும் என்று தனது தாத்தா சொன்னதை ஞாபமாக வைத்திருந்தார் முத்தழகு.

முத்தழகு நீண்ட நேரமாக இரண்டுப் பேனாக்களையும் எழுதிப்பார்த்தும் சோதித்துப் பார்த்தும் எழுதாதைக்கண்டு வெறுப்புற்றவராக மைக்கேல் சகோதரர்களை ஏறிட்டுப் பார்த்தார். அவர்கள் வெள்ளரிப்பிஞ்சுகளைத்தின்று முடித்தவர்களாக வெயிலில் நின்றிருந்தனர். முகத்தில் எவ்விதமான அசைவுகளுமற்று எதிர்ப்பார்ப்புகளின் ஆவல் மிகுந்தக்கண்கள் மட்டும் பிரவுன் நிறத்தில் முழித்துக் கெண்டிருந்தன. அவர்கள் நிற்பதற்கு எவ்வித சிரமமும் இல்லாது இன்னமும் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நிற்பதற்கு தயாராகி வருவதுபோல நின்றிருக்கும் இடத்தை மாற்றிக்கொண்டனர்.

முத்தழகு பேனா பழுது செய்ய இயலாத தன் இயலாமையை வெளிக்காட்டிக்கொள்ள தயங்கி இரண்டுப் பேனாக்களையும் அவர்களின் கையில் தந்தபடி பேனாவில் பழுது எதுவுமில்லைத் இன்னமும் அவகாசம் தந்தால் ஏன் எழுதவில்லை என்பதை கண்டுபிடிக்கலாமென பதில் சொன்னார். மைக்கேல் சகோதரர்கள் யோசித்தபடி நின்றனர். பிறகு ஜேக் குனிந்து கீழே பரப்பிவைக்கப்பட்டிருந்தப் பேனாக்களை எடுத்துப்பார்த்தபடி இருந்தான். பத்து ரூபாய் தாள் ஒன்றை எடுத்து முத்தழகிடம் கொடுத்து வைத்துக்கொள்ளும் படி சொன்னதும் சந்தோசமாகப் பெற்றுக் கொண்டார் முத்தழகு.

பேனா பழுது செய்து தரும் பெரியவரைப்பற்றி அவர்கள் குறிப்பெழுதிக்கொள்ள வேண்டுமென நினைத்துக்கொண்டனர். பேனா பழுதில்லை என்பதைப் கண்டுபிடித்தது ஜான் மைக்கேலுக்கு சந்தோஷமாக இருந்தது. அவரிடம் பேசிக்கொண்டிருக்கவே பிரியப்பட்டான் அவன். ஜேக் கரும்புச் சாறுகுடிக்கும் ஆவலில் இருக்கவே அங்கிருந்து இருவரும் நடந்து விட்டனர்.

ஏப்ரல் முதல் வாரத்தில் அவர்கள் தேயிலை தோட்டத்திற்குச் செல்ல முடிவு செய்தனர். எஃப் வுட்டிற்கு தாங்கள் எழுதித்தர வேண்டிய கட்டுரைகளின் முதல் பகுதியை எழுதி முடித்திருந்தனர். மதுரையிலேயே தங்கி எழுதி விடதான் ஜான் மைக்கேலுக்கு விருப்பமாக இருந்தது. இருந்த போதிலும் ஜேக்கின் விருப்பத்திற்கு மாறாக தன்னால் நடந்து கொள்ள இயலாது போனதை சிறு வயதிலிருந்தே உணர்ந்தவனாக இருந்தான். ஜான் பேனா பழுது செய்து தரும் பெரியவரிடம் இரட்டைப் பேனாவின் ரகசியத்தைப்பற்றி சிறிதேனும் சொல்லிவிட வேண்டுமென விரும்பினான். தன் விருப்பத்திற்குத் தடையாக ஜேக் இருக்கமாட்டான் என நம்பியபடி அவனிடம் சொன்னான். முதலில் தயங்கியவன் பிறகு எதற்கோ தன்னைச் சமாதானப்படுத்திக் கொண்டு சம்மதித்தான். இருந்தபோதிலும் பேனாவைப்பற்றி முழுமையாக சொல்லிவிடக்கூடாது என்றும் இரவு நேரத்தில் அதுவும் மது போதையில் தான் பெரியவரிடம் சொல்ல வேண்டுமெனவும் ஜானைக் கட்டுப்படுத்தி வைத்தான்.

பேனா பழுது செய்து தரும் முத்தழகு, தன்னை இரண்டாவது முறையாக சந்திக்க வந்த வெள்ளைக்கார இரட்டையர்களின் மீது சந்தேகம் கொண்டவராக இருந்தார். இருவரும் பெரியவரிடம் தங்களிடமிருந்தப் பேனாவை எடுத்து அவர் முன்பாக எழுதிக்காட்டினார்கள். இவை இரட்டைப் பேனா என்றும் இரட்டைப்பிறவிகள் மட்டுமே எழுத முடியும்; இரட்டைப்பிறவிகளில் தனி நபர் கூட தனியாக எழுத முடியாது; ஒரே நேரத்தில் இரட்டையர்கள் இருவரும் எழுதினால் மட்டுமே எழுதும் என்றான் ஜான் மைக்கேல்.

பெரியவர் ஆச்சரியம் கொண்டவராக, விந்தையான பேனாவாக இருக்கிறது எனக்கூறியபடி அவர்களிடமிருந்து பேனாக்களைப்பெற்று பேனாவின் கீழ் பாகத்தினைச் சோதனையிடத் தொடங்கினார். கீழ் பாகத்தில் எந்த சூட்மமும் செய்யப்படவில்லை. பெரியவர் ஆவல் மிகுந்து தனக்கு அந்தப் பேனவைத் தரமுடியுமா என வெட்கத்துடன் கேட்டார். முடியாது, முடியும் என்று சொல்லாமல் அவர்கள் இருவரும் அங்கிருந்து அகன்றார்கள். பிறகு தினந்தோறும் அவர்கள் அறியாது அவர்கள் பின்னாலேயே நடந்தபடி இருந்தார் முத்தழகு. தங்கள் பின்னால் வருவதைத் தாமதமாகக் கண்டுக் கொண்ட இரட்டையர்கள் பெரியவரின் ஆர்வத்திற்குப் பதில் சொல்லமுடியாது, அவரை ஒரு நாள் முழுக்க தங்களுடன் வைத்திருந்து மதுவைப் பருகத் தந்தனர். தாங்கள் தேயிலை தோட்டங்களில் உள்ள பண்ணை வீட்டில் தங்கி இரட்டைப் பேனாக்களைப்பற்றிய கட்டுரைகள் எழுதப்போகிறோம் உடன் வருகிறீர்களா என அழைத்தனர். இரட்டைப் பேனாவைத் தந்தால் மட்டுமே தான் வருவதாகச் சொன்னார். ஏன் இந்தப் பேனா உங்களுக்கு வேண்டுமென கேட்டதும் பெரியவர் போதையில், பெண்கள் மட்டுமே எழுதக்கூடிய பேனாவை இதை மாதிரியாக வைத்துச் செய்யப் போகிறேன். முடிந்தால் நாம் நினைப்பதை எழுதாமலேயே எழுதும் பேனா செய்யப் போகிறேன் என்றார்.

இதெல்லாம் பெரியவர் போதையேறிய நிலையில் பேசுகிறார், விடிந்தால் சமநிலைக்கு வந்து விடுவார் என அவரை டவுன்ஹால் ரோட்டில் விட்டுவிட்டுத் தங்கள் அறைக்குச் சென்றனர். மறுநாள் பாலக்காட்டிற்கு ரயிலேறிய வெள்ளைக்கார இரட்டையர்கள் பொள்ளாச்சி நிறுத்தத்தில் ஏறிய நாவிதர் ஒருவரின் குடும்பத்திலிருந்த இரட்டைக் குழந்தைகளைக் கண்டு தங்கள் அருகாமையில் அமரச் செய்து கொண்டனர். ரயில் பெட்டி முழுவதும் இரட்டைப் பேனாக்களை எழுத தந்தனர். பேனா எழுதவில்லை. பயணிகளும் நாவிதர் குடும்பமும் வெள்ளைக்காரன் ஏதோ ஒரு அதிசயப் பொருளை வைத்திருக்கிறான் என ஆவலாக வேடிக்கைப் பார்த்தபடி இருந்தனர். வெள்ளைக்காரர்கள் இரட்டை குழந்தைகளின் கைகளில் பேனாக்களைத் தந்து எழுத சொன்னதும் தங்களுக்குத் தெரிந்ததையெல்லாம் அவர்கள் எழுதியதைக் கண்டு பயணிகள் கூச்சலும் கும்மாளமுமாய் மகிழ்ந்தனர். நாவிதர் இரட்டைப் பேனாவின் விந்தையைத் தெரிந்து கொண்டு வெள்ளைக்காரர்களுக்குத் தெரியாமல் பேனாவை எப்படியோ திருடிக்கொண்டு ஊருக்கு வந்து விட்டார்.

1991-ஆம் வருடம் ஆடித் திருவிழாவிற்கு நாவிதர் வீட்டிற்கு வந்த அவரது மனைவி வழி உறவினன் ஒருவன் பேனாவின் விந்தை அறியாது பேனாவின் வசீகரத்தால் கவரப்பட்டு அங்கிருந்துதிருடி தன் பிள்ளைகளுக்கென மதுரைக்குக்கொண்டு வந்தான். மதுரையில் அவன் சென்ட்ரல் தியேட்டர் அருகே தானப்பமுதலியார் தெருவில் குடியிருந்து வந்தான். அவனுக்கும் ஒயின்ஷாப் வீதிகளில் உள்ள தரகர்களுக்கும் நல்ல பழக்கம் இருந்தது. தரகர்களிடம் ஏதோ வேறு விஷயத்தைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது தன்னிடம் உள்ள ஒரே மாதிரியான பேனாவிலிருந்து ஒன்றை எடுத்து, தான் பாலக்காட்டில் ஏலத்தில் இந்தப் பேனாவை எடுத்தாகவும் பணமுடக்கடியால் இப்போது விற்பதாகவும் கூறி பேனாவை விலை பேசினான். தரகர்கள் அனைவருக்குமே அவன் வைத்திருந்த பேனாவைப்பிடித்துப்போய் விட்டது. பேனாவைத் தாங்கள் வைத்திருந்தால் தங்களின் மதிப்பும் மரியாதையும் கூடிவிடுமென அவர்கள் நினைத்தார்கள். முடிவான விலை பேசி கீனாவுக்கு வீடு பேசி முடிக்கும் தரகன் ஒருவன் பேனாவை வாங்கிக் கொண்டான். இரட்டைப்பேனாக்களில் ஒன்று தரகனிடமும் மற்றொன்று நாவிதரின் உறவினன் வீட்டுக்குழந்தையிடமும் என பிரிந்துப்போய்விட்டது.

நாவிதரின் மனைவி வழி உறவினனுக்கு இரட்டைப் பேனாக்களின் விந்தை ஏதும் தெரியாது. பேனாவை நல்ல விலைக்கு விற்றதையே பெருமையாக நினைத்துக் கொண்டிருந்தான். சில தினங்களுக்குப் பிறகு தனது பிள்ளை பேனாவில் எழுதாது இருப்பதைப் பார்த்து என்ன ஏது என்று கேட்டான். எழுதாத பேனாவை வைத்து என்ன செய்வது என யோசித்தவனாக ஒயின்ஷாப் வீதிகளில் உள்ள தனது நண்பர்களைக் காணச் சென்றான். தன்னிடம் பேனாவை வாங்கிய தரகன் பேனாவை வைத்து என்ன செய்கிறான் என அறிய ஆவல் கொண்டிருந்தான். தரகனோ அப்பேனாவை எழுதி கூடப் பார்க்காமல் தனது சகோதரியின் மகனுக்குக்கொடுத்து விட்டதாகச் சொன்னான்.

டபிள்யூ ஜான் மைக்கேலும் டபிள்யூ ஜேக் மைக்கேலும் தங்கள் இரட்டைப்பேனாவை தொலைத்தப்பிறகு மதுரை வழியாக ராமேஸ்வரத்திற்குச்செல்ல முடிவு கொண்டனர். மதுரையில் பேனா பழுது செய்யும் முத்தழகைச் சந்தித்து பேனா தொலைந்துவிட்டதைச் சொல்லி வருத்தமுற்றவர்களாக, இந்தப் புத்தகம் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று சொல்லி தங்களிடமிருந்த ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ் என்ற புத்தகத்தை அவரிடம் தந்து விட்டு இரண்டொரு நாட்களில் ராமேஸ்வரத்திற்குச் செல்வதாகச் சொல்லி காலேஜ் ஹவுஸிற்கு தங்குவதற்கெனச் சென்று விட்டனர். இரட்டைப் பேனா கிடைக்காத மனவருத்தத்திலும் இரட்டைப் பிறவிகளின் கைகளில் மட்டுமே எழுதும் பேனாவைப்பற்றி தனக்கு ஒன்று தெரியாது பேனாது குறித்தும் கவலையுற்று குடிகாரராகி நாள்தோறும் ஒயின்ஷாப் வீதிகளிலேயே இரவுகளில் நடமாடினார். ஒயின்ஷாப் வீதி எந்த நபரைத்தான் தன்னிடம் வசப்படித்திக்கொள்ளாமல் தப்பிக்கவிட்டிருக்கிறது? அவர் இரவுகளில் குடித்துவிட்டு நள்ளிரவு முடிய யாரிடமாவது புலம்பி முடித்தப் பிறகே வீடு சேர்ந்தார். மிகவும் அதிகமாகத் குடித்துவிட்டு தனக்குத்தானே பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்தபோது ரூபி பாருக்கு முன் நின்றிருந்தவர்களிடம் தான் உலகிலேயே இல்லாத வகையில் விந்தையான பேனா ஒன்றைச் செய்யப்போவதாக புலம்பினார். தான் செய்யும் பேனா இரட்டைபிறவிகள் மட்டுமே எழுதமுடியும், வேறு யாராலும் எழுதமுடியாது என்றார். இதைக்கேட்டுக்கொண்டிருந்த நாவிதரின் உறவினன் தன்னிடம் இருந்த பேனாவும் இந்த வகையில் இருந்தாலும் இருக்குமென காலையில் முத்தழகைச் சந்தித்தான்.

பெரியவரிடம் உண்மையை மறைக்காமல் நடந்ததை எல்லாவற்றையும் கூறினான். அவரும் பேனாவை வாங்கிக் கொண்டு மற்றொரு பேனா கிடைத்ததும் தன்னிடம் தந்தால் தன்னிடமுள்ள எழுதாமலேயே எழுதும் பேனாவைத் தருவதாகச் சொன்னார். எழுதாமலேயே எழுதும் பேனாவுக்கு ஆசைப்பட்டவன் எப்படி எழுதாமலேயே எழுதுமெனக் கேட்டான். நாம் பேனாவைக் கையில்வைத்துக்கொண்டு எழுத வேண்டியதை மனதில் நினைத்தால் போதும் என்னிடமுள்ள பேனா எழுதி முடித்துவிடும் என்றார். ஆசையோடு அவரிடமிருந்து விடைப்பெற்றவன் தரகனின் சகோதரியின் மகனைத்தேடிச் சென்றுக் கேட்டு வாங்கி வருவதாகச் சொன்னான்.

விடுதியில் தங்கி கல்லூரியில் படிக்கும் மாணவனான அவன் தன் மாமாவிடம் எழுதாதப் பேனாவை வைத்துக்கொண்டு வேறு நல்ல ஒன்றினை வாங்கித் தரும்படிக் கேட்டுக்கொண்டேயிருந்தான். அப்படி ஒரு நாள் கேட்பதற்காக தன் மாமாவின் வீட்டிற்கு வந்த போது தரகரின் மூத்தப்பெண்ணைக் கண்டு எப்போதுமில்லாது இன்று அதிகளவு காதல் கொண்டவனாகத் தன்னிடமிருந்து பேனாவைச் பரிசாக தந்து தன் காதலைச் சொன்னான். அவளுக்கு அமிர்தம் தியேட்டரில் படம் பார்க்க வேண்டுமென விருப்பமாகயிருந்தது. அதை அவனிடம் தெரிவித்தாள். இருவரும் வீட்டிற்குத்தெரியாமல் தியேட்டரில் படம் பார்த்துத் திரும்புகையில் பேனாவைத் தொலைத்துவிட்டிருந்தனர்.

காணாமல் போன பேனா தியேட்டரில் டிக்கெட் தரும் இடத்திற்கு முன்பாக கீழே கிடந்தது. பெரியார் பேருந்து நிலையத்தில் போலீஸ் கெடுபிடி அதிகமாக இருந்ததால் இரவு காட்சிக்கு வந்த இரண்டு விபச்சாரிகளில் ஒருத்தியின் கால்களில் பட்டுத் தெறித்தது அது. பேனாவை எடுத்து அவள் கையில் வைத்துக்கொண்டாள். எழுதத்தெரியாத தனக்கு இந்தப் பேனா எதற்கு என்று யோசித்தாள்.

தன்னிடம் வந்து பிரியமாக இருந்து செல்லும் யாருக்கேனும் தந்துவிடலாமென்ற எண்ணத்துடன் படம் பார்த்துவிட்டு வெயியேறினாள். நடுஇரவுக்கு மேலாகிவிட்டது என்றும் இனி வேறு எவரும் தங்களைத் தேடி வரமாட்டார்களென இருவரும் பிரிந்து வீடுகளுக்குச்சென்றனர். பேனா வைத்திருந்தவள் இரவு உறங்கி எழுந்து, தன் வீட்டின் அருகாமையிலிருந்த சிறுவன் ஒருவனை அழைத்து பேனாவைத்தந்து ஏதாவது எழுதிக்காட்டச் சொன்னாள். சிறுவன் பல முறை எழுதிப்பார்த்தும் எழுத முடியாது போனதால் திரும்பத்தந்து விட்டுச் சென்றான்.

எழுதாதப்பேனவை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று யோசித்தவளாக காலைமுழுக்க உறக்கம் கலையாது கிழிந்துபோன பழைய போர்வையின்மேல் புரண்டபடி இருந்தாள். பசி மிகுந்ததும் எழுந்து கொண்டவள் தனக்கு எப்போதும் வாடிக்கையாக இட்லி தரும் கடைக்காரனிடம் பார்சல் வாங்கிக்கொண்டு வரலாமென டவுன்ஹால் ரோட்டிற்கு நடந்தாள். இரவு எந்த வாடிக்கையும் வராததும் சாப்பிடாததும் காலை நேர உற்சாகமின்றி சேர்ந்து காலை நேர உற்சாகம் இல்லாமல் டவுன்ஹாலுக்குள் நுழைந்த போது பேனாவினை விற்று விட வேண்டுமென்ற யோசனை அவளுக்குத் தோன்றியது. உடனே பழைய பேனாக்களைப் பரப்பி விற்றுக்கொண்டிருக்கும் கடை எங்கேனும் இருக்கிறதா என இட்லி கடைக்காரனிடம் கேட்டாள். காலேஜ் ஹவுஸ் பக்கம் பார்க்கச் சொன்னவன் அவளுக்கு இட்லியை கட்டிக்கொடுத்து விட்டு இன்று இரவு பணம் வந்து சேர்ந்துவிட வேண்டுமென கட்டாயமான குரலில் சொன்னான்.

அவள் காலேஜ்ஹவுஸ் பக்கம் நடந்தாள். வெயில் ஏறியபடி இருந்தது. ஹேட்டல்களில் தோசைக் கல்லிருந்து தோசையைப்புரட்டிப்போடும் வாசனை, லாட்ஜ்களில் அறைகளை கழுவி விடும் மருந்து வாசனையென மாறி மாறி முகர்ந்தபடி நடந்தாள். பேனா பழுது பார்த்துத் தரும் முத்தழகு பிளாட்பாரத்தில் கடையைப் பரப்பி வைத்து விட்டு டீ குடித்துக்கொண்டிருந்தார். அவள் கடையின் முன் நின்றாள். விதவிதமானப் பேனாக்களைப் பார்த்தபடி தன்னிடமிருந்த பேனாவை எடுத்து அவரிடம் தந்தாள். இரட்டைப் பேனாக்கள் ஒன்று என்பதைக் கண்டதும் அவளிடமிருந்து எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டுமென தனது ஆர்வத்தை வெயியேக்காட்டாது அமைதியாக இருந்தார். அவள் பேனாவை வாங்கிக் கொள்வாயா என கேட்டாள் அந்த பேனாவை அப்போது தான் முதன் முதலாக பார்ப்பதுபோல முகத்தை வைத்துக்கொண்டு இது வெளி நாட்டுப்பேனா போல இருக்கிறது; இதற்குள் ஊற்றும் மை நம் நாட்டில் விற்பது இல்லை. இதையாரும் வாங்க மாட்டார்கள் என தட்டிக்கழிப்பது போல பேசினார்.

ஐந்துரூபாய் தாளைக் கொடுத்து தன்னிடம் இவ்வளவு தான் பணம் உள்ளது, வேண்டுமென்றால் பெற்றுக்கொண்டு தருகிறாயா என கேட்டார். முதலில் அவளுக்கு மனமே இல்லை. சிறிது நாள் பேனாவை வைத்திருக்கலாமென அவளுக்குத் தோன்றியது. பிறகு எழுதப்படிக்கத் தெரியாதத் தனக்கு எதற்குப் பேனா என இன்னும் கொஞ்சம் அதிகமான பணம் கிடைக்குமா என அவரிடம் கேட்டாள்.

தன்னிடம் இப்போதைக்கு வேறுபணம் இல்லை. இன்று இரவுக்குள் வேறு ஏதேனும் பணம் கிடைத்தால் தருகிறேன் என வாய் வார்த்தைக்காகச் சொன்னார். பேனாவை அவரிடம் தந்துவிட்டு பணத்தினைப் பெற்றுக்கொண்டவள் ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ் என்ற புத்தகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். முத்தழகு, தன்னிடமுள்ள புத்தகத்தை பார்க்கிறாள் என தெரிந்தும் புத்தகத்¬த் வேண்டுமென்றால் பார்த்துவிட்டுத் தாயேன் என புத்தகத்தைப் பார்க்கத் தந்தார். மைக்கேல் சகோதரர்கள் காலேஜ் ஹவுஸில்தான் இருப்பார்களா இல்லை ராமேஸ்வரத்திற்குச் சென்றுவிட்டார்களா என யோசனையை£க இருந்தார்.

அவளுக்குப் புத்தகத்திலிருந்த பேனாக்களைப் பார்க்கப்பார்க்க ஆர்வமும் சந்தோசமும் கூடியபடி இருந்தது. முழுமையாகப் பேனாக்களைப் பார்க்க பிரியப்பட்டவளாக திரும்பவும் முதல் பக்கத்திலிருந்து பார்க்கத் தொடங்கினாள். இரண்டாவது முறையாக அந்தப் புத்தகத்தைப் பார்த்தபோது ஒரு ஒளியிலிருந்து இன்னொரு ஒளிபிரிவதுபோல அல்லது மறைந்திருக்கும் பொருள் ஒன்று பளிச்சென்று நகர்ந்து முன் வருவது போல இன்னும் சரியாகச் சொல்வதென்றால் தூணுக்குப் பின்னால் இருந்து ஒருவர் எட்டிப்பாப்பது போல பக்கங்களைப் புரட்டப் பேனாவிலிருந்து இன்னொரு பேனா நகர்ந்து அருகில் நிற்பது போல அவளுக்குத் தெரிந்தது. அவள் அதிர்ந்தவளாக புத்தகங்களின் பக்கங்களைப் புரட்டியபடியே இருந்தாள். ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ் புத்தகத்தின் பக்கங்களில் அச்சிடப்பட்டிருந்த ஒவ்வொரு பேனாவிலிருந்தும் இன்னொரு பேனா விலகி நின்றது. விந்தையான இந்நிகழ்ச்சியில் தன்னை மறந்தவளாகப் பக்கங்களைப் புரட்டியபடியே இருந்தாள். ஏன் அந்த புத்தகத்தை இரண்டாவது முறையாக பார்த்துக்கொண்டிருக்கிறாள் என்று தெரியாத முத்தழகு வியப்புடன் அவளைப் பார்த்தார். விந்தையாலும் பயத்தாலும் அவளது கண்கள் சிவந்திருந்தன.

முத்தழகு இரண்டாவது முறையாக அழைத்தபோதுதான் புத்தகத்திலிருந்து விடுப்பட்டவளாக நிமிர்ந்தாள். அவள் கண்கள் சிவந்திருந்தது போலவே திரேகம் முழுவதும் விந்தையின் பயத்தால் சூடு பரவியிருந்தது. புத்தகத்தைப் புரட்டினால் பேனாக்கள் இரண்டு இரண்டாகத் தெரிகிறது என்பதைச்சொல்லத் தெரியாமல் திணறியவள் ஹிஸ்டரி ஆஃப் பென்ஸை முத்தழகிடம் தந்தாள். புத்தகத்தை வாங்கிக்கொண்டதும் ஏன் பிரமை கொண்டவள் போல கண் சிவந்து நிற்கிறாள் என யோசித்தபடி புத்தகத்தைப் புரட்டினார். அவள் கைகளை நீட்டி பாருங்கள் பாருங்கள் என சன்னமானக் குரலில் சொன்னாள். ஏதோ புத்தகத்திலுள்ள ஒன்றைக்கண்டு அதிசயத்துப் பிரமித்து இருக்கிறாளென முடிவு செய்தவராகப் புத்தகத்தை வெகுவேகமாகப் புரட்டினார். தன் கண்களுக்கு ஏதும் அதிசயம் தட்டுப்படவில்லை என மூடினார். அவள் திரும்பவும் புத்தகத்தைத் திறந்து பார்க்கச் சொன்னாள். இப்போது அவளுக்கு திரேகச்சூடு குறைந்திருந்தது. சிறுநீர் கழிக்க வேண்டுமென நினைத்தாலும் தான் கண்ட விந்தையை இன்னொருவரும் காணப் போகிறார் என்ற ஆவலில் நெருங்கி நின்று பார்த்தாள்.

முத்தழகு அப்புத்தகத்தை இரண்டாவது முறையாகப் பார்க்கப் புரட்டினார். முதலில் பார்த்த போதிருந்தபடியேதான் பேனாக்கள் இருந்தன. ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ் புத்தகத்தின் பக்கங்களில் அச்சிடப்பட்டிருந்த ஒவ்வொரு பேனாவும் அசையாமல் தங்கள் தங்கள் இடங்களிலேயே அச்சிட்டபடியே இருந்தன. என்ன அதிசயத்தை இதில் கண்டாளோ என தனக்குள் பேசியவராக அவளைப் பார்த்தார்.

முத்தழகு தன்னைப்போல பேனாவிலிருந்து இன்னொரு பேனா பிரிவதைப் பார்த்திருக்கிறார் என நம்பியவளாக பேனாவிலிருந்து இன்னொரு பேனா நகர்கின்றதைப் பார்த்தாயா எனக் கேட்டாள். முத்தழகு ஒன்றும் புரியாதவராக என்ன என்று கேட்டார். புத்தகத்தைதான் புரட்டியபோது தனக்குத் தெரிந்ததை அடங்காதப் படபடப்போடு சொல்லி முடித்தாள். நம்பமுடியாதவராக மீண்டும் ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ்ஹஸை புரட்டத்தொடங்கினார். முதல் முறையாகப் தான் பார்க்கவில்லை என்றும் இரண்டாவது முறையாக புரட்டியபோதுதான் பேனாவிலிருந்து பேனா பிரிந்து அதன் அருகிலேயே கிடப்பதுபோல தெரிந்தது என்றும் கூறினார். முத்தழகு இரண்டாவது முறையாகப் புரட்டிய போது எந்த வித்தியாசமும் இன்றி முதலில் பார்த்த போது இருந்தது போலவே பக்கங்கள் இருந்ததால் அவள் மீது கோபமுற்றவர் காலையில் தன் வேலையை இடைஞ்சல் செய்ய வேண்டாமெனக் கண்டித்தார். அவள் தான் இன்னொரு முறை புத்தகத்தைப் பார்க்க வேண்டுமென ஆசையோடு அவரிடம் புத்தகத்தைக் கேட்டாள். புத்தகத்தைப் பார்த்து விட்டு உடனே போய்விடவேண்டுமெனச் சொல்லி புத்தகத்தைத் தந்தார் முத்தழகு.

அவள் முதலில் புத்தகத்தைப் புரட்டிப்பாத்தாள். அச்சிட்டது போலவே இருந்தது. இரண்டாவது முறையாகப் பிரித்து புரட்டிய போதுதான் பேனாவிலிருந்து பேனா விலகி அதனருகிலேயே பேனாவின் நிழலைப் போல நின்றது. இந்த விந்தையை மீண்டும் கண்டவள் கூச்சலிட்டு முத்தழகைப் பார்க்க அழைத்தாள். அவள் பக்கங்களைப் புரட்டப் புரட்ட இரண்டு பேனாக்களாகத் தெரிந்தன.

முத்தழகு பார்த்தபோது ஒன்றும் தெரியவில்லை. அவள் பக்கங்களைப் புரட்டிக்கொண்டே தனக்கு மட்டுமே தெரியும் ஆச்சரியத்தில் கண்கள் சிவக்க உணர்ச்சிகூடி கத்தியபடி இருந்தாள். முத்தழகு அவளுக்கு மட்டுமே இந்தப்புத்தகத்திலுள்ள அச்சிடப்பட்ட பேனாக்கள் இரண்டாவது முறையாக இரண்டிரண்டாகத் தெரியும் போல என அவளை சமாதானப்படுத்தி மைக்கேல் சகோதரர்கள் இருக்கும் காலேஜ் ஹவுஸிற்கு அழைத்துச்சென்றார். வழி நெடுக முத்தழகு வெள்ளையர்கள் ராமேஸ்வரத்திற்குப் போகாமல் மதுரையிலேயே இருக்கவேண்டுமென்று வேண்டிக் கொண்டார்.

காலேஜ் ஹவுஸில் மைக்கேல் சகோதரர்கள் இருந்த அறைக்குச் சென்றபோது அவர்கள் ராமேஸ்வரத்திற்குப் புறப்படத் தயாராகத்தான் இருந்தார்கள். ராமேஸ்வர பாசஞ்சர் ரயிலுக்கான டிக்கெட் கூட எடுத்திருந்த நிலையில் பெண்ணையும் அவள் கையில் ஹஸ்டரி ஆஃப் பென்ஸ் புத்தகத்தையும் பார்த்து ஏதோ விபரீதம் நடந்துள்ளது என்பதை யூகம் செய்து கொண்டனர். அவர்களிடம் முத்தழகு இரட்டைப் பேனாக்களைத் தந்தபோது நிமிட நேரம் மயங்கியவர்களாகயிருந்தனர் இருவரும். நான்கு வருடங்களுக்குப்பிறகு இரட்டை பேனாக்கிடைத்த சந்தோசத்தில் அறையில் கும்மாளமிட்டனர். ஜேக் மைக்கேல் தங்களை விட்டுச் சென்ற அதிர்ஷ்டம் இனி திரும்பி விடும் என்றான்.

பேனா பழுது செய்து தரும் முத்தழகிடம் உடன் வந்த பெண்ணைப்பற்றி விசாரித்தார்கள். அவள்தான் தனக்கு இரட்டைப் பேனாக்களில் ஒன்றைத் தந்தது; அதுமட்டுமல்ல நீங்கள் தந்த பேனா புத்தகத்தை இரண்டாவது தடவையாக புரட்டிப்பார்த்தால் பேனாக்கள் இரண்டிரண்டாகத் தெரியவதாக சொல்கிறாள் என்றார். முத்தழகு சொல்வதை முதலில் விளங்கிக்கொள்ளவில்லை அவர்கள். பிறகு அப்புத்தகத்தில் ஏதேனும் ரகசியம் உள்ளதா என சகோதரர்கள் இருவரும் கலந்தாலோசித்தனர். புத்தகத்தில் எந்த ரகசியமும் இல்லாதபோது பேனாக்கள் இரட்டை இரட்டையாகத் தெரிவதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படியிருக்க இந்தப் பெண்ணிற்கு மட்டும் எப்படித்தெரியும் என யோசித்தபடி இருந்தனர். அப்பெண்ணிடம் புத்தகத்தைத் தந்து புரட்டி பார்க்கப் சொன்னார்கள். அவள் வேகமாக ஒரு முறை புரட்டிவிட்டு மூடி பிறகு இரண்டாவது முறையாக புத்தகத்தை புரட்டினாள். அவள் முன் கண்டது போலவே பேனாவின் நிழல் போல ஒவ்வொரு பேனாவின் அருகிலும் இன்னொரு பேனா முன்னிருந்த பேனாவிலிருந்து விலகி விலகி நின்றது.

அவள் பார்த்தது போலவே அப்புத்தகத்தை மைக்கேல் சகோதரர்கள் இரண்டு முறை புரட்டிப் பார்த்தும் அவர்களுக்கும் ஏதும் அதிசயம் பிடிபடவில்லை. இருந்த போதிலும் வின்செட் எஃப் வுட்டிடம் இது குறித்து பேசிய பிறகே முடிவுகொள்ள வேண்டுமென நினைத்தனர். முத்தழகை அவர்கள் உடனே அனுப்பி விட விரும்பவில்லை. காணாமல் போனவைத் பேனா தங்கள் வசம் கொண்டு தந்ததற்காக மகிழ்வோடு அவருக்கு விருந்து ஒன்றைத்தர முடிவு செய்தனர். அவருடன் வந்தப்பெண்ணிற்கு நூறு ரூபாய் ஒன்றை தந்து போய் வரச்சொன்னார்கள். ஆனால் அவள் ஒரு முறை இரட்டைப் பேனாவால் எழுதிக்காட்டச் சொன்னான். வெள்ளைக்கார இரட்டையர்கள் அந்தப் பேனாவினால் எழுதிக்காட்டினார்கள்.

மிகவும் மகிழந்தவளாக தானும் அப்பேனாவினால் எழுதிப் பார்க்க ஆசையாக இருப்பதாகவும் ஆனால் தனக்கு ஒரு எழுத்து கூட எழுதத் தெரியாது எனவும் அவர்களிடம் சொன்னாள். இரட்டையர்கள் வேறு ஏதும் பேச விருப்பமில்லாதவர்களாக நின்றிருந்தனர். அவள் சென்ற பிறகு முத்தழகை அழைத்துக்கொண்டு மதுவிடுதிக்குச்சென்றனர். அன்று முழுவதும் மூவரும் மது அருந்தியப்படி இருந்தனர். பின்பு ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலில் அவர்கள் ஏற்றிவிட்டு வந்தார் முத்தழகு.

மதுரையிலிருந்து புறப்பட்ட ராமேஸ்வரம் பாசஞ்சர் ரயிலில் ராமநாதபுரம் நிறுத்தத்தில் மைக்கேல் சகோதரர் இருந்த பெட்டியில் தன் பெற்றோர்களுடன் ராமேஸ்வரம் செல்வதற்கென கீதா, சீதா என்ற இரட்டைச் சகோதரிகள் ஏறினார்கள். சகோதரிகள் இருவரின் முன் எவரேனும் அமர்ந்தால் அமர்ந்தவர்களின் மனதில் ஓடும் எண்ணங்களை பிசகில்லாமல் கூறி விடுவார்கள். பிறர் மனதில் ஓடும் எண்ணங்களை அப்படி அப்படியே கூறும் கீதா சீதா சகோதரிகள் பெயர் பிரபல்யமாகி கையில் பணம் இருந்தும் உள்ளூர அவர்களுக்குக் திருமணக் கவலை இருந்தது. இருவருக்கும் லக்னத்திலிருந்து ஏழில் ராகும் எட்டில் சனியும் ஸ்திரமாக அமர்ந்திருந்தார்கள். எனவே ராமேஸ்வரம் சென்று அக்னி தீர்த்தத்தில் முங்கி எழுந்து தேவி பட்டினத்தில் நவகிரகங்களுக்கு தோஷபரிகார பூஜை செய்து திரும்ப கிளம்பியிருந்தனர் பெற்றோர்களுடன்.

அவர்கள் இருவரும் மைக்கேல் சகோதரர்கள் முன்னால் அமர்ந்திருந்தனர். பாலக்காடு ரயிலில் நடந்த சம்பவத்தை இன்னும் மறந்திடவில்லை வெள்ளையர்கள் இருவரும். இருப்பினும் ஜேக்கிற்கு இரட்டை சகோதரிகளைக் கண்டதும் பேனாவை தந்து எழுதி பார்த்திட வேண்டுமென்ற ஆசை இருந்தது. பேனா களவாடப்பட்டு திரும்ப வந்ததும் தங்களிடம் இருந்த அதிர்ஷ்டம் தொலைந்து திரும்ப வந்தது போல அவர்கள் நினைத்தனர். எனவே பேனாவை அவர்களிடம் காட்டக்கூடாது எனவும் நினைத்தான் ஜேக்.

மைக்கேல் சசோதரர்கள் முன் அமர்ந்த கீதாவும் சீதாவும் முதலில் அவர்களைப் பற்றி ஏதும் கவனம் கொள்ளாதுதான் இருந்தனர். ரயில் நகர நகர ஜேக்கின் மனதில் ஓடும் எண்ணங்களை அறிந்தவர்களான அவர்கள் என்ன மாதிரி பொருளை தங்களிடம் காட்டக்கூடாது என நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள ஜேக்கின் மனதினை அவர்கள் தொடர்ந்தபடி இருந்தனர்.

ஜேக் பிறகு அவர்களை மறந்து விட்டு இரட்டைப் பேனாவினைப்பற்றியும் தாங்கள் எழுதப்போகும் கட்டுரைகளைப்பற்றியும் யோசித்தவனாக அமர்ந்திருந்தான். இன்னது என்று தெரிந்து கொண்ட கீதாவும் சீதாவும் வெள்ளைக்கார இரட்டையர்களிடம் எங்களிடம் பேனாவை தந்தால் தொலைந்துவிடுமென நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்.

மைக்கேல் சகோதரர்கள் அதிர்ச்சியுற்றவர்களாக தங்களிடம் இரட்டைப்பேனா இருப்பது அதை தாங்கள் யோசிப்ப எப்படி இந்தப்பெண்களுக்குத் தெரிந்தது என யோசித்தபடி அவர்களையே பார்த்து அமர்ந்திருந்தனர். பிறகு கீதா என்ற பெயர் உடையவள் வெள்ளையர்களிடம் எங்கள் முன்னிருப்பவர்களின் எண்ண ஓட்டங்களை அவர்கள் சொல்லாமலே நாங்கள் தெரிந்து கொண்டு வருகிறோம். நீங்கள் சற்று முன் நினைத்ததை நாங்கள் சொன்னோமே அது சரிதானா எனக் கேட்டாள்.

முதலில் யோசித்தவர்கள் பதட்டமும் வேகமும் கூடிய நிலையில் எப்படி எங்கள் மனதில் ஓடும் எண்ணங்களைத் தெரிந்து கொண்டீர்கள் எனக் கேட்டனர். இரு பெண்களும் சொல்லத் தயங்கினார்கள். பிறகு வெள்ளையர்கள் இரட்டைப் பேனாவினை எடுத்துக்கொடுத்து பெண்களின் தாயிடமும் தந்தையிடமும் எழுதத்தந்தனர். பேனா எழுதவில்லை. சீதாவும் கீதாவும் வாங்கி எழுதியதும் எழுதியது. வெள்ளையர்கள் இது இரட்டைப்பிறவிகள் போல இரட்டைப் பேனா. இரட்டையர்கள் மட்டுமே எழுதமுடியும் எனக் கூறினார்கள். அதிசயமான பேனாவைக் கண்டு மகிழந்தவர்களான அப்பெண்கள் தொடர்ந்து எழுதியபடி இருந்தார்கள்.

‘‘நீங்கள் நான் கேட்டதற்கு பதிலே சொல்லவில்லையே’’ என ஜேக் அப்பெண்களைப் பார்த்துக்கேட்டான்.

கீதாவும் சீதாவும் மனதில் ஓடும் எண்ணங்களைத் தெரிந்து கொள்ளும் முறையை அவர்களிடம் சொல்ல முடிவு செய்தவர்களாக அப்போது இருந்தார்கள். கீதா ‘‘உங்களிடம் ஒரு வாசனையும் கண்களில் பரிதவிப்பும் இருந்தது. அதை வைத்துச் சொன்னோம்’’ என கூறினாள்.

‘‘உண்மையிலேயே உடலிலிருந்து வெளியாகும் வாசனையையும் கண்களையும் மட்டுமே கொண்டு ஒருவரின் எண்ணங்களைச்சொல்லி விட முடியமா’’ என திரும்பவும் சந்தேகத்துடன் கேட்டான் ஜேக்.

‘‘உங்கள் மீது சந்தேகத்தின் துவர்ப்பான வாசனை ஓடுகிறது. கண்களோ கேள்வி கேட்கலாமா வேண்டாமா என தவித்தபடி நிலையில்லாமல் இருக்கிறது சரிதானே’’ என்றாள். ‘‘சரி தான் இருந்த போதிலும் வாசனையும் கண்களும் மட்டுமே போதுமானதா உண்மையிலே’’ எனக் கேட்டாள் ஜேக்.

‘‘இந்த இரட்டைப்பேனாக்களை ஏன் இரட்டையர்கள் மட்டும் எழுத முடிக்கிறது, அது போலதான் ஆச்சரியமும் விந்தையும் ஏதோ ஒன்றின் அடிப்படையிலேயே இருக்கிறது. எங்கள் வீட்டில் ஒரு புத்தகம் இருந்தது. ஒரு முறை புரட்டிப் படித்துவிட்டால் ஒன்றும் இல்லை. இரண்டாவது முறையாகப் புரட்டினால் அப்புத்தகத்திலுள்ள உருவங்கள் பேசத் துவங்கிவிடும். எழுதப்படிக்க தெரிந்தவர்கள் எத்தனை முறை புரட்டினாலும் ஒன்றும் தெரியாது. எழுத படிக்கத் தெரியாதவர்கள் புரட்டினால் தான் இந்த அதிசயம் நடக்கும்’’

‘‘உண்மையா இது.’’

‘‘உண்மை தான் அப்புத்தகம் எங்கள் தாத்தாவின் தாத்தா காலத்தினுடையது. சுதந்திரம் அடையும் போது உங்களைப்போல வெள்ளையர் ஒருவர் அன்பளிப்பாக தந்துச்சென்றது. எங்கள் தாத்தா பத்திரமாக வைத்திருந்தார். எவ்வளவோ பாதுகாப்பாக வைத்திருந்தும் தொலைந்து விட்டது.’’

‘‘பேனா பழுது செய்யும் வயோதிகருடன் வந்தப்பெண் நம்மிடமிருந்த கிளார்க்கின் புத்தகத்தைப் பற்றியும் இப்படித்தானே கூறினாள். ஒரு வேளை உண்மையாக இருக்குமோ இவர்கள் சொல்வது?’’ என்று ஜேக் தனது சகோதரனிடம் கேட்டான்.

ஜான் மைக்கேல் விந்தையான சம்பவங்களால் தன் சமன் நிலை இழந்தவனாக காணப்பட்டான். இருந்தபோதிலும் ‘‘அப்பெண்ணிடம் நாம் இன்னமும் சிறிது நேரம் பேசியிருக்க வேண்டும் ஜேக் நாம், கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டோம் அப்புத்தக விசயத்தில்’’ என்றான்.

கீதாவிடம் ‘‘நீங்கள் தொலைத்தப் புத்தகத்தைப்பற்றி ஏதேனும் கூறமுடியுமா, குறிப்பாக அதிலுள்ள உருவங்கள் என்னவென்று’’.

‘‘மிருகங்களும் பறவைகளும் பூக்களும்தான் அப்புத்தகத்தில் இருந்தன. நாங்கள் மிக இளம் வயதில் பார்த்தது’’ என்றாள் கீதா.

பிறகு அவர்கள் நால்வரும் மிகவும் அமைதியாக இருந்தனர். பாம்பன் பாலத்தை ரயில் கடந்தபோது பச்சைநிற கடலின் நீரினைப்பார்த்தனர். கீதாவும் சீதாவும் வெள்ளையர்களின் மனதின் ஓட்டத்தைப் பின் தொடர்ந்தபடி இருந்தனர். கீதா அவர்களிடம் நீங்கள் திரும்பவும் மதுரைக்குச்சென்று அப்பெண்ணைப் பார்க்கப் போகிறீர்களா’’ என்று கேட்டாள்.

‘‘ஆமாம்’’ என்று சொன்ன ஜேக், அப்பெண்ணிற்கு எழுத கற்றுக் கொடுத்து புத்தகத்தைப் பரிசோதிக்கப்போவதாகச் சொன்னான். அவனுக்குப் புத்தகத்தைப்பற்றிய விந்தையைத் தெரிந்துகொள்ளும் ஆர்வம் வெறியாக மாறத்தொடங்கிவிட்டது. ரயில் ராமேஸ்வரம் ஸ்டேஷனில் நின்றபோது அந்த இரட்டைப் பேனாவை அப்பெண்களிடமிருந்து திரும்ப வாங்கிக்கொள்ளக்கூட மறந்தவர்களாக கிளார்க் எழுதிய ஹிஸ்டரி ஆஃப் பென்ஸ் புத்தகத்தின் நினைவாகவே மதுரைக்குத்திரும்ப டிக்கெட் எடுக்கச்சென்றனர்.

0

நதி

ஜே.கே. பிரதாப்

ஆடுகளைக் காட்டிற்குள் ஓட்டிவிட்டு நதியின் குளிர்ந்த நீரில் செருப்புக் கால்களை முக்கி அலசினான். குனிந்து கைகளால் நீரை அள்ளி முகத்தில் தெளித்தான். பாறைகளில் தாவியபடி ஆற்றின் மத்தியில் தான் வழக்கமாய் அமரும் இடத்தில் சென்று அமர்ந்தான்.

கரையில் மேயும் ஆடுகளில் வெள்ளச்சி, தாவுகால் போட்டு கொளஞ்சன் மர இலைகளை வாயில் பிடித்திழுத்து மெல்லுவது தெரிந்தது. வெள்ளச்சி காட்டுக்குள்ள நுழையும் போதும், திரும்பும் பொழுதும் முதலாவதாக இருக்கும். மத்தது எல்லாம் பின்னாடி அணிவகுத்தபடி தான் போகணும். ஏதாவது துடுக்குத்தனமா முன்னாடி அதைக் கடந்து போச்சின்னா உடனே நின்று சுத்து முத்து பார்க்கும். அப்போ அது பார்க்கிற பார்வையே வேற தினுஷா இருக்கும். மத்த ஆடுங்க கடந்து போன ஆட்டுக்கிட்ட எப்படி சொல்லும்னு தெரியாது. அந்த ஆடும் தான் இனிமே அப்படி பண்ணமாட்டேன்னு முழிச்சிட்டு நின்னுடும். பிறகு வெள்ளச்சி காலை எடுத்து வைக்கும் போது கம்பீரமாய் இருக்கும்.

எப்படி இவற்றையெல்லாம் தன் மனதில் புரிந்து கொள்ள முடிகிறதோ என்று வியப்பாக இருந்தது அவனுக்கு. இதோ இந்த நதியுடன் உரையாடத் தொடங்கியதும் இப்படித்தான். முதல் முறையாக நதியின் பேச்சு தன்னுள் விழுவதை உணர்ந்த கணம் நினைவிற்கு வந்தது. ஆரம்பத்தில் அவனால் அதை விளங்கிக்கொள்ள முடியவில்லை. பீதியூட்டும்படிகூட இருந்தது. அவனுக்குப் பேய்தான் பிடித்து விட்டதாக வீட்டில் எண்ணத்தொடங்கிவிட்டார்கள். இனிமேல் ஆத்துப் பக்கம் போகாதே என்ற எச்சரிக்கைக்குப் பயந்து இரண்டு மூன்று நாள் நதியின் அருகில் செல்லாமலே ஆடுகளைக் காடுகளில் மேய விட்டு வீட்டிற்கு வந்தான். ஆனாலும் நதியின் முனகல் அவனது காதில் ஒலித்தபடி இருந்தது. மனம் கேட்காமல் திரும்பவும் ஆற்றுக்குள் போய் பாறையின் மேல் உட்கார்ந்து கொண்டான்.

அன்று நதி ஏனோ சோகமாய் ஓடிக் கொண்டிருப்பதாய் உணர்ந்தான். அந்தத் துக்கத்தை அவனால் விளக்கி கொள்ள முடியாமல் ஏன் இப்படி அழுமூஞ்சியா போயிட்டு இருக்கோன்னு தெரியலியே என யோசனையாய் அமர்ந்திருந்தான். மதியம் தான் கொண்டு வந்த சாப்பாட்டை முடித்து விட்டும் அதற்கானக் காரணத்தை அவனால் யூகிக்க முடியாமல் உட்கார்ந்திருந்தான். காட்டில் மேய்ந்து திரும்பிய ஆடுகளின் சத்தம் அவனை வந்தடைந்தது. வீட்டுக்குப் புறப்பட ஆயத்தமான பொழுது, விறகு சுமந்து கொண்டு சென்றவர்கள் அவனிடம்,

‘‘ஏண்டா நம்ம அணையிலிருந்து எவனோ குதிச்சு தற்கொலை பண்ணிக்கிட்டானாமே, ஏதாவது தெரியுமா?’’ என விசாரித்தபடி அவனைக் கடந்துச் சென்றார்கள். அவன் திரும்பி ஆற்றின் முகத்துவாரத்தைப் பார்த்தான். ஆற்றின் குறுக்கே கட்டியிருந்த அணையின் உச்சியிலுள்ள இரும்பு கிராதிகள் கருமை நிறத்தில் தெரிந்தன.

பிறகொருநாள் நடந்த நதியின் தாண்டவத்தையும் அவன் பார்த்திருக்கிறான். அன்று கரையிலிருந்து பார்த்தப் பொழுது நதி சந்தோஷ குரலில் அவனைக் கூப்பிடுவதாய் தெரிந்தது.

‘‘இன்னைக்கி நீ ஏதோ சந்தோஷமா இருக்கேன்னு தெரியுது, எதுக்குன்னு தான் சொல்லேன்’’. அதன் மகிழ்ச்சியை உணர்ந்த மனநிலையில் பாறைகளுக்கிடையில் தாவி தாவி ஓடியபடி இருந்தான். சுற்றியிருந்த செடி, கொடி, மரங்களெல்லாம் பிரகாசமாய் இருப்பதாய் தோன்றியது.

உச்சி வெயில் வேளையில் தூரத்தில் மேள சத்தத்தைக் கேட்டான். அந்தச் சத்தம் அதிகரித்துக் கொண்டே வந்தது. ‘‘அட இன்னைக்கி ஆடிப் பதினெட்டு…இது ஏன் எனக்கு முன்னமே தெரியாமல் போய் விட்டது?’’ என்று வியந்தான்.

இப்படி ஆற்றுடன் சம்பந்தமுள்ள திருவிழாக்களும் பண்டிகை நாட்களுமாக மகிழ்ச்சியான தினங்களை நதி அவனுக்கு வழங்கிக் கொண்டே இருந்தது என்றாலும் துயரங்களையும் பிரதிபலிக்கத்தான் செய்தது.

அன்று காலையில் எழுந்ததிலிருந்தே தான் ஏன் சோகமான மனநிலையிலே இருக்கிறோம் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்குப் பைத்தியம் பிடிச்சிடுச்சோன்னு சந்தேகமாய் ஆட்டை ஓட்டிட்டு வந்தான். ஆடுங்க எந்த அமளியும் பண்ணாம ஒழுங்கா அவன் சொல்லுக்குக் கட்டுப்பட்டு நடந்து வந்தன. அவனுக்கு குழப்பமாகவே இருந்தது. அன்று நதிகூட இதே போன்ற ஒரு மனநிலையில்தான் அவனை எதிர் கொண்டது. தாள முடியாத வேதனையில் தள்ளாட்டமாய் அது போய்க் கொண்டிருந்தது.

‘‘உனக்கும் என்னமோ சோகம் போல… என்ன விஷயம்’’ என்றான். நதியின் அமைதி உடைந்து பெருங்குரலெடுத்து ஓலமிடுவதைச் சற்று நேரத்திற்கெல்லாம் கேட்டான்.

தன் மனதின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ‘‘ஐயோ… என்ன ஆச்சு உனக்கு… எதுக்கு இப்படி ஒப்பாரி வைக்கிறே… நில்லு… நில்லு’’ என பலமாய்க் கத்தத் தொடங்கினான். தான் இதுவரை இம்மாதிரியான பாதிப்புக்கு உள்ளானதில்லை என்பது மட்டும் புரிந்தது.

நதி தன் குரலை ஒழுங்கமைத்துச் சொல்ல முடியாத நிலையில் சென்று கொண்டிருப்பதாய் உணர்ந்தான். அதைத் தீர்த்து வைக்க முடியுமா? என ஆவலாய் இருந்தான். அதன் சோகத்தில் கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு நின்றது.

சாப்பாட்டை மீன்களுக்குக் கொட்டி விட்டு நாகமர நிழலில் துண்டை முகத்தில் மூடியபடி படுத்திருந்தான். எல்லாமே கனவோ என்று கூட பயமாக இருந்தது.

‘‘யாருடா அங்க’’ என அதட்டலான குரலைக் கேட்டவன் எழுந்து சுற்றுமுற்றும் பார்த்தான். அங்கிருந்த மூவரில் ஒருவர் மட்டுமே காக்கி உடையை அணிந்து பலமாய் மூச்சு வாங்கியபடி இருந்தார்.

‘‘என்ன சார் வேணும்’’ என அருகில் சென்றான். அவர் கேட்டார், ‘‘நேத்து யாராவது புதுசா இந்தப் பக்கமா போனதைப் பார்த்தியா?’’

அவன் சிறிது நேரம் யோசித்தபடி இருந்தான். வழக்கமாய் விறகு வெட்டுபவர்கள் வந்து சென்றார்கள் என்பது மட்டுமே தெரியும். இது வேறு வில்லங்கமான விஷயமாக இருக்கும் என நினைத்து ‘‘நான் யாரையும் பார்க்கல சார்’’ என்றான்.

அவர்கள் சென்று மறைந்த சிறிது நேரத்தில் விறகு வெட்டுபவர்களில் ஒருவன் அவனிடம் வந்து சொன்னான்,

‘‘நேத்து ராத்திரி எவனோ விஷமருந்தை அந்த நாகமரத்து மடுவு தண்ணியில கலந்திட்டிருக்கான்… மீனுங்க எல்லாமே மயக்கத்துல மிதக்க ஆரம்பிச்சிருச்சு…அது பத்தாதுன்னு தண்ணி போற எல்லா இடத்திலேயும் மீனுங்க வெளிய வந்திடுச்சுங்க’’

‘‘அதுக்கு இவங்க ஏன் வந்து போறாங்க’’

‘‘பின்ன இந்த ஆத்துத் தண்ணியதானே பக்கத்துல இருக்குற எல்லா ஊர் ஜனங்களும் குடிக்கிறாங்க… அதான் கேஸாயிடுச்சு ஆள தேடறாங்க’’ என்றான்.

அவன் கரை ஏறி மறையும்வரை காத்திருந்து திரும்பியவன் நிற்க முடியாமல் தள்ளாட்டமாய் நதியில் கைகளை நனைத்தவாறு அமர்ந்தான். அந்த நிகழ்வை மனதில் நினைக்கும்பொழுது ஏதோ ஒன்றினால் கூனி குறுகிப் போனான். மனிதர்களை நினைக்கையில் அவமானமாய் இருந்தது.

அவ்வுணர்விலிருந்து விடுபட நேற்று நடந்த நிகழ்விற்கு மனதை மாற்றினான். வழக்கமாய் அவன் வந்தமர்ந்த சில நிமிடங்களுக்கெல்லாம் பேசத் தொடங்கி விடும் நதி ஏதும் சொல்லாமல் கூச்சப்பட்டபடி போவதாய் உணர்ந்தான். அதன் இருப்பு புதியதாய் புரிந்து கொள்ள முடியாததாய் இருந்தது. வெட்கப்பட்டு செல்லும் புது மணப்பெண் போல் கடந்து சென்றுக் கொண்டிருந்தது.

மதியம் சாப்பிட்டு பொறுத்திருந்து பார்த்தும் விடை தெரியாமல் ஆற்றின் கரையோரமாய் நடக்கத் தொடங்கினான். ஆடுகள் எங்கிருக்கும் என்பதை மனதில் தீர்மானித்தபடி சென்றுக் கொண்டிருந்தவன் ஆற்றில் வித்தியாசமான சத்தம் வருவதைக் கேட்டான்.

ஏதாவது மீன் துள்ளி குதித்திருக்கும் என நடையைத் தொடர்ந்தான். ஆனால் அந்த சத்தம் ஓர் இசைவாய் எழுவதை உணர்ந்தான். சற்று உன்னிப்பானவன் பெண்ணின் பெருமூச்சு உயர்ந்தபடி இருப்பதைக் கேட்டான்.மெல்ல ஒளிந்து முட்செடிகளை ஒதுக்கியவாறு சென்றவன் அங்கே இருவர் தண்ணீரில் சல்லாபத்தில் இருப்பதைப் பார்த்தான்.

தனது நகைப்பில் லயித்தவண்ணம் படுத்திருந்தான். நேரம் கடந்து விட்டதை உணர்ந்து சாப்பிட்டவன் அப்படியே தூங்கிப்போனான். முன்பு பாம்புகள் பின்னிக் கொண்டதை பார்த்தது அவனது கனவில் வந்தபடி இருந்தது. மலை முகடுகளில் சூரியன் மறைந்த பின்பும் புரண்டபடி இருந்தான்.

விழிப்பு வந்து எழுந்து சுற்று முற்றும் பார்த்தவன் ‘‘போச்சே… ஆடுங்க என்னாச்சோ’’ என அவசரமாய் வீட்டை நோக்கி ஓடினான். அவன் சென்றடைவதற்குள் தெரு விளக்குகள் பிரகாசித்தபடி இருப்பதைக் கண்டான்.

மறுநாள் சற்று தாமதமாகவே வந்தான். நதியிடம் பேசுவதற்கு ஒன்றுமில்லை என்பது போல் ஆடுகளுடனே பொழுதைக் கழித்தான். ஆடுகளுக்குப் பிடித்தமான ஃமுஷ்ட்ட கொளுஞ்சன் தழைகளை வெட்டி அவற்றிற்கு மிகுந்த பாசமுடன் பரப்பினான். தான் கொண்டு வந்த உணவைக் கொட்டி விட்டு காலியான பாத்திரத்தை மட்டுமே சுமந்தபடி இருந்தான்.

அவனது மனது மரத்துப் போய் விட்டதாய்த் தோன்றியது. விறகு வெட்டுபவர்களை சந்திக்கையில் நிதானமாய் அவர்களை விசாரித்தபடி இருந்தான். அவர்களுக்கு வியப்பாக இருந்தது.

‘‘ஏன்டா… அங்க போயி உட்காருவியே… போலயா?’’ எனக் கேட்டார்கள்.

‘‘ம்… போவதான் போறேன்’’ என பதிலளித்துவிட்டு அவர்களைக் கடந்து சென்றான். சூரியன் மறைவதற்குச் சற்று நேரம் இருக்கையில் ஆடுகளை ஒருமுறை கூர்ந்து கவனித்து விட்டு நதியை நோக்கி நடந்தான்.

நதியின் நடுவே வீற்றிருந்த தனது இடத்தில் அமர்ந்தவன் கண்களைத் துடைத்துக் கொண்டான். அதனுடன் பேச முடியாத துக்கத்தில் தவித்தான். தன்னைப் பலமாய் கட்டுப்படுத்திக் கொண்டு சொல்ல ஆரம்பித்தான். சுற்றியிருந்த பகுதி சிறிதும் இரைச்சலில்லாமல் வெறிச்சோடிக் கிடப்பதாய்க் காட்சியளித்தது.

‘‘நேத்து இங்கேயே பேசிட்டு போவறத்துக்கு லேட்டாயிடுச்சா… கொறா ஆட்டுக் குட்டி ஒன்னா குள்ள நரி தூக்கிட்டுப் போயிடுச்சு… அப்பன் மிளாறு குச்சியில விளாசி எடுத்துட்டான் பாரு’’ என தனது சட்டையைக் கழற்றி உடம்பைக் காண்பித்தான்.

‘‘அவன் அடிச்சது கூட வலிக்கல… நீ ஆடு மேய்க்க கூட லாயக்கில்லடான்னு அடிச்சது தான் தாங்க முடியல.. ஒழுங்கா இருந்திருந்தா அந்த கொறா குட்டியை விட்டிருப்பேனா’’ எனச் சொல்லி விட்டு அமைதியில் அமர்ந்திருந்தான். மனதில் பயத்தின் சுவடுகள் ஏதுமில்லாமல் தெரிந்தான்.

‘‘நான் சாகப் போறேன்… கடைசியா உன்னைப் பார்த்திட்டு சாவணும்னு தோனுது… அதான் வந்தேன்’’ என கரைக்குச் சென்றான்.

கரையில் வளர்ந்திருந்த ஒட்டன் தழையைப் பறித்து தனது துண்டில் சுற்றி அருகிலிருந்த பாறையில் அமர்ந்து கையடக்கமான கல்லெடுத்து அரைக்கத் தொடங்கினான். அதிலிருந்து ஒழகிய சாற்றைப் பாத்திரத்தில் பிடித்தான்.

அதை எடுத்துக் கொண்டு நதியின் அருகே வந்து அண்ணாந்து வாயருகே கொண்டு சென்றவன் தண்ணீரில் ஏதோ ஒன்று மினுமினுப்பாய் தெரிவதைக் கண்டு அருகில் சென்று பார்த்தான். நாணற் கீத்தொன்றில் சுற்றியபடி செயின் ஒன்று மஞ்சள் நிறத்தில் மின்னிக்கொண்டிருந்தது.

0

ஸ்ட்ராபெர்ரி

பழனிவேள்

தொட்டுணரத் தூண்டும் திரட்சியோடு நின்ற அந்தக் கொழுத்தக் குதிரையின் மீது அவன் அமர்ந்திருந்தான். அது அவனது நெடுநாள் கனவு. குதிரையின் மீது அமர்ந்தவாறு பாய்ச்சலாகச் சென்று குதிரைச் சக்தி என்று சொல்வதனை இன்னதென்று அர்த்தம் கண்டறியும் ஆவல். குதிரைச் சக்தியை முதன் முதலாக உணர்ந்து சொன்னவனைப் போன்று பவ்யமாக அதே சமயம் ஒரு பந்தய ஜாக்கிக்குரிய லாவகத்தோடு காலை குதிரையின் முதுகோடு அழுந்த வைத்து அமர்ந்திருந்தான். ஆனால் குதிரையோ அவனது பொறுமையின் எல்லையைக் கடந்து நின்று கொண்டிருந்தது. இது அவனுக்குப் புதினமாக இருந்தது. இப்படிக் கூட ஓடாக்குதிரை இருக்குமாவெனக் சலிப்பு மிகுந்து கீழிறங்கினான். கீழே ஒருவன் குதிரையின் குறியை அழுத்தமாக இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தான். ‘‘டேய் யார்ரா நீ’’ என்று திடுக்கிட்டு எழுந்த போது, ஆடை விலகி துருத்தியிருந்த அவனது மையத்தை உதடுகளால் வருடிக் கொண்டிருந்தார் ஒருவர். சட்டென அந்த நபரைப் பிடித்துத் தள்ளி எழுந்தான்.

அவர் டாக்டர் ஹரி. இளம், இருதய அறுவை சிகிச்சை நிபுணர். அவர் அவனை நேருக்கு நேராகப் பார்த்தார். அவர் முகத்தில் குற்ற உணர்ச்சியோ, கலக்கமோ, பயமோ இன்றி ஒரு புன்னகை தவழ மலர்ச்சியாக இருந்தது. மேலும் அவனிடம், ஒரு ரோஜா மலரைப் போல் மதுரமாக இருக்கிறது என்று கூறி அகன்றார். அவரது உயர் ரக ஷூவின் சத்தம் லேசான மணல் சரசரக்கும் ஓசையை மட்டும் எழுப்பி அடங்கியது.

துணுக்குற்ற அவனது மனம் இந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டிருக்கவில்லை. தனக்கு நேர்ந்ததின் முழுமை அவனுக்குள் மெல்லத் துலக்கமடைந்தது. இப்படியெல்லாம் நடந்து கொள்ளும் ஒர் ஆணைப்பற்றி அவன் கேள்விப்பட்டது கூட இல்லை. பள்ளியில், கல்லூரியில் நெருக்கமாக அமரும் ஆண்களைக் கூட அவனுக்குப் பிடிக்காது. அவன் பார்த்திருந்த ஒன்றிரண்டு கெட்டப்படங்களும் பெண்ணுறவைக் கோருபவையே.

விசை கொண்டு எழுந்திருந்த அவனது மையம், கால்சராய்க்கு வெளியே இப்போது தலைதொங்கி கிடந்தது. ஒரு கணம் அதனை அறுத்தெறிந்து விட வேண்டும்போல தோன்றியது. மையத்தில் உணர்ந்த அதிர்வு ஒரு வித நடுக்கமாக உடலெங்கும் பரவியிருந்தது. ஒரு விதத்தில் தனது மையம் அழிந்து விட்டதாகக்கூட கருதினான்.

அவனது டெலிபோன் ஆபரேட்டர் அறை கண்ணாடித் தடுப்புச் சுவரால் ஆனாது. எதிரே முழுநீள வராண்டா காலியாக இருந்தது. இருக்கையில் வழக்கமாக அமர்ந்து உறங்கும் நோயாளிகளின் உறவினர்கள் கூட யாருமில்லை. வராண்டாவின் ஒரு மூளையில் இருந்த தன்வந்திரி நாராயண மூர்த்தியின் பெரிய புகைப்படத்தில் மாட்டப்பட்டிருந்த காய்ந்துபோன ரோஜா மாலை அகற்றாமல் விட்டிருந்ததால் பிணச் சாயலைக் கொண்டிந்தது. நள்ளிரவைத் துடித்துக்காட்டும் கடிகாரப் பெண்டுலம், அளவுக்கதிகமான செயற்கைக் குளிர், பகலென எரியும் கூரை விளக்குகள் எல்லாமே அமானுஷ்யத்தின் சான்றுகளாக இருந்தன.

தன் வேதனையை யாரிடமாவது சொல்ல வேண்டும் போல் இருந்தது அவனுக்கு. பண நிமித்தமாக கூடியுள்ள கூட்டம்தான் இந்த இதய மருத்துவமனையின் பணியாளர்களாக இருப்பவர்கள். இங்கே நட்பு கூட ஒரு வித பகட்டு மட்டுமே. பணக்கார நடுத்தர நோயாளர்களின் உறவினர்களை அலட்சியம் செய்யும் பகட்டு. இங்கே போய் யாரிடம் பகிர்வது?

கேட்பவர் ஆறுதலாயிருந்தால் சரி, பரிகாசம் செய்துவிட்டால் விஷயம் துரிதமாகப் பரவும். தெரியாவதர்களுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பியாவது தெரிவிப்பார்கள். உணவகத்தில், ஓய்வரையில் இதுபற்றி நீண்ட விவாதம் நடக்கும். சந்தேகத்தை நம்மிடமே கேட்டு உறுதிசெய்வார்கள்.

இப்படித்தான் தலைமை மருத்துவரின் காரோட்டியான லாரன்ஸ் செய்யும் அழிச்சாட்டியங்கள். அவன் நக்கலிலிருந்து தப்பித்தச் செவிலிகளே கிடையாது. அவனிடம் மற்றவர்கள் பயந்ததற்குக் காரணம், தலைமை மருத்துவரிடம் போட்டுக் கொடுத்துவிடுவானோ என்பதுதான். இதற்கு முன் உதாரணங்கள் பல இருந்தன. லாரன்ஸுக்கு இருந்த விரைவாதம் யாருக்கும் தெரியாமலிருந்தவரைதான் இதெல்லாம். விஷயம் மெல்ல கசிய, ஒரு செவிலி லாரன்ஸ் வெடிகுண்டு மறைத்து வைத்திருப்பதாக வதந்தி பரப்பியதால், துரிதமாக அது தலைமை மருத்தவர்வரை சென்றது லாரன்ஸ் பரிசோதனை செய்யப்படும் அளவுக்கு அது பரபரப்பை ஏற்படுத்தியது. சாதா லாரன்ஸ் வெடிகுண்டு லாரன்ஸ் ஆனான். தலைமை மருத்துவர் ‘‘என்னோட கார் ஏன் மைலேஜ் தரமாட்டேங்குதுன்னு இப்பதான் தெரியுது’’ என்று சொல்லியதுதான் அவனைப்பற்றிய கிண்டலின் உச்சம். அதன் பிறகு லாரன்ஸ் யார் முகத்தையும் ஏறெடுத்துக் கூட பார்ப்பதில்லை.

காலை நேர பிரகாசம் கண்ணாடி ஜன்னல் வழியே ஆனந்தமாக ஊடுருவி வந்து கொண்டிருந்தது. இரவு நடந்ததற்கும் அவனுக்கும் சம்பந்தமில்லாதது போன்றே ஒரு மனத்தோற்றம் ஏற்பட்டிருந்தது.

மாற்றுப் பணியாளான அவளிடம் இரவுக் குறிப்பேட்டை தந்து மேல் விபரம் கூறும் முன்னமே தொலைபேசியில் யாருடனோ உருக ஆரம்பித்துவிட்டிருந்தாள் அவள். சரி, நீ கிளம்புயா என்று அவனுக்குக் கையசைத்து விடை தந்தாள். ஆனால் அவனுக்கு இன்னும் வேலை இருந்தது; காலைக் கடன் முடிப்பது, வெளியேறும் நேரத்தை கணிணியில் பதிவு செய்வது. முடித்து லிப்ட்டுக்குச்செல்ல அவன் புறப்பட்டபோது, அவள் இன்னும் பேசிக்கொண்டே அவனைச் சைகையால் அழைத்தாள்.

அவனிடம் ஒரு பை நிறைய இருந்த ஆப்பிள் பழங்களைக் கொடுத்தாள். டாக்டர் ஹரி அவனிடம் கொடுக்கச் சொல்லி கொடுத்தாராம். மேற்கொண்டு அவள் தொலைபேசியில் உருகினாள். அவன் திகைத்து நின்று கொண்டிருக்கும் போதே டாக்டர் ஹரி மற்றும் மூத்த மருத்துவர்கள் ஏழெட்டுப்பேர் சேர்ந்து லிப்ட்டுக்கு வந்தனர். இப்போதே ஆப்பிள்களை திருப்பி கொடுத்துவிட்டு சத்தம் போட்டுவிடலாமா என்று தோன்றியது அவனுக்கு. அமைதியாக எல்லோருமே லிப்ட்டிற்குள் நுழைந்து கொண்டனர். நெருக்கடியாக நிற்கும் நிலை. டாக்டர் ஹரி மிக அருகில் நின்று அவனைப் பார்த்து இயல்பாகக் சிரித்தார். ஏதோ பேசும் பாவனையில் அவன் தோளின்மேல் விழுந்த அவருடைய கை மெல்லக் கீழிறங்கி புட்டத்தைத் தடவி அகன்றது.

வெளியே சாலை விரைந்து கொண்டிருந்தது. எவ்வளவு தூரம் தான் கோமாளியாக்கப்படுகிறோம் என்று நினைக்கையில் அவனுடைய கையிலிருந்த பழங்கள் கனத்தன. நெஞ்சு வெடித்து விடும்போல துடித்தது. மனதிற்குள் வசைகளாகப் பெருக்கெடுத்தன. பொட்டத் தாயோளி என்று திரும்பத் திரும்ப திட்டித் தீர்த்தான். அப்போது ஒருகார் அவனை ஒட்டி மெதுவாக ஊர்ந்து வந்தது. அதிலிருந்து அருணாசாய்ராம் பாடிய நத்தனார்க்கீர்த்தனை நெஞ்சை சாந்தப்படுத்துவது போல இருக்கவே குனிந்து காருக்குள் பார்த்தான். உள்ளே டாக்டர் ஹரி. கார் நின்றது.

தன் கையிலிருந்த பையை காரின் பானெட் மீது ஓங்கி அடித்தான். ஆப்பிள்கள் நசுங்கி சிதறி ஓடின. தனது வருத்தத்தைக் காட்டிக் கொள்ளாதவராக அவர் இறங்கி வந்து பெரிய துண்டால் காரின் முன்பகுதியைத் துடைத்தார். அவன் கோபத்தில் நின்றிருந்தான். அவர் அவனை மிகுந்த கனிவோடு ஊடுருவிப் பார்த்தார்.

கார்போய் விட்டது. அவனை அடித்திருக்க வேண்டும். எது தடுக்கிறது? அவன் பதவியா, அவன் மேலுள்ள இரக்கமா, வேலை போய்விடுமோ என்ற அச்சமா? இன்னதென்று புரியாமல் குழப்பமாய் நின்றிருந்தான். சாலையில் போவோர் யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. இவ்வளவு பெரிய ஜனத்திரளிடையே அவன் தனியானாக உணர்ந்தான்.

அன்றைய இரவுப்பணிக்கு மருத்துவமனை வந்தபோது உடலெங்கும் நடுக்கமும் உள் ஜுரமும் முழுதாக ஏறி இருந்தது. நின்றிருந்த ஒரு கார்க்கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக்கொண்டான். துர்தனத்தின் சாயல் ஏதேனும் தென்படுகிறதா, கண்ணில் இருக்கும் பசி வேறு ஏதேனும்? இந்த முகம், முதலில் இது முகம்தானா? அகாலத்தனிமையும் இயலாமையும் பொதிந்த இது?

மதிய ஷிப்டில் இருந்த ஆங்கிலோ இந்தியப்பெண் கலகலப்பானவள். அளவுக்கதிகமான இரக்க குணம் கொண்டவள். யார் சோகமுற்றிருந்தாலும் ஓடிச் சென்று விசாரிக்கக் கூடியவள். அவள் அவனது முகவாட்டத்துக்கானக் காரணத்தைத் துருவித் துருவிக் கேட்டாள். அவனால் பதில் சொல்ல இயலவில்லை. துயரம் தொண்டையை அடைத்துக் கண்கள் கலங்கின. அவள் பதறிப் போனாள்.

‘‘ஏய் நீ வேண்டுமானால் லீவ் எடுத்துக்கோ. நான் எனது ஹஸ்பண்டுக்கு போன் பண்ணிச் சொல்லிட்டு டூட்டியைக் கண்ட்டினியூ செய்யறேன்’’ என்றாள்.

அவன் வேண்டாமென மறுத்து அவளைப் புறப்படச் சொன்னான். மேலும் தன் பிரச்சனையைப் பற்றி நாளைக்குச் சொல்வதாகச் சொன்னான். புறப்படும்போது அவள் தன் பையிலிருந்து கோக் டின்னையும், பாதி கேக்கையும் அவனது இரவு உணவுக்காகக் கொடுத்துவிட்டு மேசைக்கு அடியிலிருந்த ஒரு பார்சலைத் தந்து டாக்டர் ஹரி கொடுத்தாகக் கூறி புறப்பட்டாள்.

அந்தப் பார்சலை வெறித்தப்படி அமர்ந்திருந்தான். பிரிக்கக் கூடத் தோன்றவில்லை. தனக்குள் இயலாமையும் ஆத்திரமும் ஒரு சேர பரவுவதை உணர்ந்தான். தொலைபேசி அழைத்தது.

‘‘குட் ஈவினிங், ஓடிசி ஹாஸ்பிடல்ஸ்’’

‘‘……..’’

‘‘ஹலோ

‘‘……..’’

ஹலோ

க்யூஸ்மி நீங்கள் யார்?’’

எதிர்முனையில் தொடர்ந்த மௌனம். வைத்துவிடலாமா என்று தோன்றியது. ஆனால் இது சொந்த போனல்ல விரும்பியது செய்ய. இதுவேலை. காத்திருக்கவேண்டும். ரிசிவரை தோள்பட்டையில் வைத்து சாய்த்துச்கொண்டான். மேலும் சிறிது நேரம் கழித்து ரகசியம் போன்ற சன்னமான குரல் பேசியது,

‘‘சாப்டியா’’

யாரென்பது புரிந்தது.

‘‘பார்சலப் பார்த்தியா? காலையில செய்த மாதிரி செய்துடாதே. உங்கிட்ட சில விஷயங்கள பேசணும்’’ சற்று இடைவெளி விட்டுச் சொன்னார், ‘‘ஏன் இப்படி? உன்னைப் பார்க்கும்போதுதான் ஏதோ ஒரு உணர்வு தோன்றுது. மத்தவங்க இதை எப்படி எடுத்துக்குவாங்கன்னு தெரியல. இது வெறும் செக்ஸ்தானா, புரியல. நீ தூங்கும் போது பல முறை உன்னை முத்தமிட்டிருக்கிறேன். உன்னை அணைச்சிக்ணும்ன்னு தோனும். எங்கே மறுத்துடுவியோன்னு பயமாக இருக்கும். நேற்றுதான் துணிஞ்சி உன்கிட்ட வந்தேன்…’’

இவனும் ரிசிவரை சும்மாவே வைத்திருந்தான். பேசுவதற்கு எதுவும் தோன்றவில்லை. பதட்டம் உடல் முழுவதும் பரவிக்கொண்டிருந்தது. போனை காதிலியே வைத்திருந்தான். எதிர்முனை சீரான மூச்சில் தொடர்ந்தது, ‘‘இன்னிக்கி என்னை ஏத்துப்பேன்னு நம்பறேன்…’’

அவன் மேற்கொண்டு கேட்காமல் ரிசிவரை வைத்துவிட்டான்.

அந்த பார்சலைப் பிரித்துப்பார்த்தான். உள்ளே ரத்தச் சிவப்பான ஸ்ட்ராபெர்ரிப் பழங்கள். அவை அவனைப் பயமுறுத்தின. வலிந்து பிடுங்கிய இதயங்களாய் தெரிந்தன. தனக்கு வைக்கப்படும் பழச் சூன்யம் எனக் கருதினான். அவற்றை மொத்தமாகக் குப்பைக் கூடையில் சொருகினான்.

இதய சிகிச்சை மருத்துவரின் இதயம், இதய வடிவப் பழங்கள், சில்லிட்டு மந்தமாக்கும் செயற்கை குளிர், காலியான இருக்கைகள், கண்ணாடி ஜன்னலில் தேங்கிய தேய்பிறை கால நள்ளிரவு பெண்டுலம்… இந்த அமானுஷ்யத்திலிருந்து தப்பித்துக்கொள்ள வேண்டும் போல் இருந்தது.

நேரம் கடந்து கொண்டிருந்தது. அவன் காத்திருந்தான். பதட்டம் கூடிக்கொண்டே போனது. இன்றும் நேற்று போல் நடந்தால்… பேசி ஆகப்போவது ஒன்றுமில்லை ஒரே அடியில் அவனைக் கொன்று விட வேண்டும் என்ற ஆத்திரம். உடலெங்கும் ஒரு வித வெறுப்புப் பரவியது.

இன்னும் அவர் வரவில்லை. யோசிக்க யோசிக்க அவனுக்கு உடல் சோர்வு கூடியது. முன்பின் சாயும் குஷன் நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டான். கண்களில் தூக்கம் அலையோடியது. ஆனால் தூங்குவதை நினைத்தால் பயமாக இருந்தது. இந்த இரவு, இதை எப்படியாவது போக்கிவிட்டால் போதும். நாளை காலை விடிவுதான். அனைத்துக்கும்.

யோசனையும் அரை தூக்கமுமாக விழித்திருந்தான்.

மணல் சரசரப்பது போன்ற அந்த ஷூ சத்தம் மெலிதாகக் கேட்டது. பகலென கூசும் விளக்குகள் அணைக்கப்பட்டுப் பொன்னிற விளக்குகள் மங்கிய வெளிச்சத்தை வீசிக்கொண்டிருந்தன.

டாக்டர் அவனது முன்னந்தலை நெற்றியை வருடிவிட்டார். அவன் திகைத்து எழுந்தான். அவர் அவனது மார்மீது சாய்ந்து கொண்டார். அவரை விலக்கி நகர்த்தினான். அவரது கண்களில் தேங்கித் தெரிந்த கண்ணீர் அவனைத் திகைக்க வைத்தது. எதுவும் செய்ய இயலாதவனாக உட்கார்ந்திருந்தான். அவர்மேல் முன்பிருந்த கோபம் இப்போது அவனிடம் காணாமல் போயிருந்தது. அவர் அவனை இறுகக் கட்டியணைத்தார். மெல்ல அவனது ஆடைகளைக் களைந்து நிர்வாணியாக்கினார்.

கூடையில் துருத்திக்கொண்டிருந்த பொட்டலத்தைப் பிரித்து ஸ்ட்ராபெர்ரிப் பழத்தில் ஒன்றை எடுத்து அவனுக்கு ஊட்டிவிட்டார்.

இருவர் மூச்சும் பாம்பின் சீற்றம் போல் அதிர்ந்தது. விடைத்த மையத்தைக் கையில் பற்றிய டாக்டர் முத்தத்திலிருந்து விடுபட்டு மையத்தில் உதடுபற்றி ஒரு குழந்தையைப் போல உறிஞ்சிக் கொண்டிருந்தார். சிறு குழந்தை ரோஜாவை பறிப்பது போன்று இருந்தது அது.

அவனது இழுத்துக் கட்டிய நரம்புகள் அவன் வசமின்றி பிரிந்து சென்றன. சிதறும் நிறங்கள், குதிரையின் விழிப்புநிலை, பாய்ச்சல், பலம், சக்தியின் ரூபம்… எல்லாவற்றையும் பரிபூர்ணமாய் அவனால் உணர முடிந்தது. அடிநாக்கில் ஸ்ட்ராபெர்ரியின் சிறுகசப்பும் இனிப்பும் அப்படியே இருந்தன.

விமர்சனம்:

நாகதிசை – ராணிதிலக்

(கவிதைகள்)

ஐந்திணையில் அலைவுறும் நவீன கலைமனம்

தே. நேசன்

தொண்ணூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய ராணிதிலக்கின் முதல் கவிதைத் தொகுப்பு நாகதிசை. தேர்ந்த மொழியும், நுட்பமான பார்வையும், புதுமையான புனைவம்சமும் கொண்ட இத்தொகுப்பு, நவீன தமிழ்க் கவிஞர்களுள் ஒருவராக ராணிதிலக்கை முன்னிறுத் துகிறது. முதல் தொகுப்புக்குரிய பலவீனம் என ஒரு கவிதையையும் நிராகரிக்க இயலாதவாறு மொத்தக் கவிதைகளும் முதிர்ந்த நிலையில் உள்ளன. நவீன கவிதை வாசகனுக்கு உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கவல்ல ஈர்ப்பான கவிதைகளை இத்தொகுப்பு கொண்டி ருக்கிறது. அன்றாடங்களை அன்றாட மொழியில் பதிவு செய்யும் இன்றைய பலரின் கவிதைகளிலிருந்து மிகவும் மாறுபட்ட மொழியில் மாறுப்பட்டப் புனைவு நிலையில் மாறுபட்ட அனுபவப் பின்னணியில் இத்தொகுப்பு வித்தியாசப் படுகிறது.

நவீன தமிழ்க்கவிதை சங்க செவ்விலக்கிய மரபிலிருந்து வெகுவாக விலகி வந்துவிட்டதாய் நாம் நம்புகிறோம். சங்க மரபின் திணைக் கோட்பாடுகளைக் கடந்து இன்றையக் கவிதையின் பாடுபொருள் முற்றாக வேறுபட்டு விட்டதான எண்ணம் நவீன வாசகனுக்கு இருக்கக் கூடும். ஆனால் நாகதிசையின் கவிதைகள் சங்க இலக்கியத்தின் முதல், கரு, உரிப் பொருட்களை கலைத்துப் போட்ட இயற்கையை பெரிதும் மையமாகக் கொண்ட அதிசயத்தக்க மீள்புனைவுக் கவிதைகளாக உருமாற்றம் கொண்டு விளங்குகின்றன.

நவீன மனிதனின் வாழ்வியல் குறிப்பிட்ட நிலப்பரப்புக்குள் அடங்கிவிடக் கூடியதல்ல. இயற்கையிலிருந்து மிக விலகி வந்துவிட்ட அவன் பருவ காலங்களின் வழியாகவே நிலப்பரப்பின் தன்மைகளை உணரக்கூடும். மட்டுமின்றி ஊடகங்களும், தகவல் தொடர்பும், போக்குவரத்து பயணங்களின் வழியாகவும் பலவித நிலப்பரப்புகளை கடந்து கொண்டிருக்கிறான். இயற்கை வெளியைப் பருண்மையாக இழந்து நிற்கும் இச்சூழலில் கலை மனம் தாம் விரும்பும் புதுமையாகப் புனைந்தோ மரபுத் தன்மைகளை மறு உருவாக்கம் செய்தோ படைப்புக்களைத் தரக் கூடும்.

அகத்திணை, புறத்திணை என்ற சங்க இலக்கிய இருபெரும் பிரிவில் காதலை (காமத்தை) மையப்படுத்தும் அகத்தை மட்டுமே தேர்ந்து கூறப்பட்டனவாகப் பல கவிதைகள் இடம்பெற்றுள்ளன. தொகுப்பின் தொடக்கமே கைக்கிளைக் கவிதைகள் என்ற தலைப்பின் கீழ் ஆறு கவிதைகளைக் கொண்டுள்ளது.

இக்கவிதைகளில் மட்டுமின்றி பிறகவிதைகளின் விவரணையிலும் நிலப்பரப்பையும், பருவங்களையும், உயிரினங்களையும் பதிவு செய்துள்ளதைக் காண்கிறோம்.

காகம்,மீன், வெட்டுக்கிளி, நத்தை, நண்டு, மின்மினி, சில்வண்டு, தும்பி, கொக்கு, எலி, எறும்பு, விட்டில், பூனை, நரி, யானை, பாம்பு, கருடன், ஆந்தை, பருந்து, ஓணான், பட்டாம்பூச்சி, குயில், நாரை, தேன்சிட்டு, குருவி, கிளி, கரும்பூச்சி, மான், கடற்காக்கை, பல்லி, மரங்கொத்தி, புறா, மீன்கொத்தி, கடற்குதிரை, கடற்கன்னி, சிப்பி, என உயிரினங்கள் இந்த நவீன ஐந்திணையின் கருப்பொருள்களாக இடம்பெற்றுள்ளன. இவை திணை வாரியாக பாகுபாடு கொள்ளாமல் பல கவிதைகளிலும் விரவி வந்துள்ளன. பனி, மழை, கோடை, இரவு, மாலை என பெரும்பொழுதும் சிறுபொழுதும் கூட இக்கவிதைகளின் நிலக்காட்சிப் பின் புலத்தை பலப்படுத்துமாறு அமைந் துள்ளன.

ஆறு, ஏரி, அருவி, கடல், கிணறு போன்ற நீர்நிலை தொடர்பான சொற்களால் இத்தொகுப்பில் ஓர் ஈரத்தன்மை உருவாகியிருப்பினும் அதற்கு எதிரிடையாக சூரியன், வெயில், கதிர், நெருப்பு, தீ போன்றவை தொகுப்பு முழுவதிலும் ஓர் அனல் தகிப்பையும் வறண்ட நிலப்பரப்பையும் காட்சி யாக்குகிறது. அக்னி நட்சத்திரக் கவிதைகளில் இப்பண்பு உச்சமாக உள்ளது. மலை, வனம், வயல், கடல், மணல், நண்பகல், மாலை, இரவு, மழை, பனி, கோடை, தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என அலைந்து திரிந்த அலைதல் பல கவிதைகளிலும் பதிவாகியுள்ளன. அலைதல் தன்வினையாக மட்டுமின்றி சேதன அசேதனங்களின் அலைவாகவும் நிகழ்கின்றன. எலி அவன் மனம் போலவே அலைகிறது. அலைகிறது ஒரு ஒற்றை நட்சத்திரம், நிலவில் அலைந்து கொண்டிருக்கும் வெயில், பகல் இரவு கட்டங்கள் வழக்கம் போல் அலைகின்றன என்றவாறு.

மேற்கண்ட இத்தன்மைகள் பழந்தமிழ்க் கவிதைத்தன்மையிலிருந்து உரைநடைத் தன்மை கொண்டவையாக மாற்றம்பெற்று தொகுப்பின் பிற்பகுதியில் உரைநடைக் கவிதைகளாக எழுதப் பெற்றக் கவிதைகள் வரை தொடர்ந் துள்ளதைக் காண்கிறோம். பலவிதமான வடிவ, நடை சோதனைகளில் ஈடுப்பட்டிருப்பினும் கவிதைகளின் பொருண்மையில் தொடர்ச்சியான ஒரு நுண்பார்வை கடைப்பிடிக்கப் பட்டிருப்பதைக் குறிப்பிட வேண்டும்.

அடுத்து தற்கால கவிதைகளில் உருவாகி வந்திருக்கும் மிகு புனைவுக் கூறுகள் இத்தொகுப்பில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தும் வண்ணம் கையாளப் பட்டுள்ளன. இவ்வகையானப்புனைவு மொழி வாசகனை அலாதியான வேறொரு புனைவுலகத்துக்கு இட்டுச்சென்று அழைத்து வருகின்றன.

இவ்வகையான காட்சிகளின் வழியாக நாம் கவித்துவ உணர்வு மண்டலங்களைப் புதுப்பித்துக் கொள்வதோடு நவீன கவிதைகளின் பரப்புக்குள் நுழைந்து விட்டதையும் அறிந்து கொள்கிறோம்.

‘‘உடலின் ஒரு பகுதி எரிந்து, இதயத்திலிருந்து பல நரம்புகளுக்கு சாம்பல் பாய்கிறது(ப.17), கடற்கரையில் ஒருவனிலிருந்து விடுபடும் விரல்கள் முலைகளை, யோனிகளைத் தொட்டுத் தடவி திரும்பி அவன் கைகளில் சேராமல் அந்தரத்தில் மிதக்கின்றன (ப.32), ஒரு கண்ணாடியில் முலைகள் வளர்ந்து கொண்டே துடிக்கின்றன (ப. 34), எப்போதும் மூடியிருந்து சிறுமியால் திறக்கப்படும் அறை இன்னொரு அறையுடன் ஒரு முத்தத்தைப் போல கலக்கிறது (ப.37), கனவிலும் யாராலும் கண்டடையாத படிமம் தன் நிழலில் சாய்கிறது (ப.41), ஒருவனின் தேகம் சில இரவுகளில் விந்தால் ஆனதுபோல் குழைகிறது (ப.42), யாகைகள் பறக்கின்றன (ப.44), முதல் வரியில் இருந்தபடியே ஒரு மான் இரண்டாம் வரியில் நீர் அருந்திக் கொண்டிருக்கிறது (ப.49), குழந்தையின் சிரிப்பு அலைகளுடன் விளையாடுகிறது (ப.51), அஸ்தஞிமன வெய்யிலில் தன்னை உருக்கிக் கொண்டு வாழும் துக்க மனோஞி பாவக்காரனின் விரல்களிலிருந்து நதிகள் பறக்கின்றன. (ப.52), தெருவைப் பறிக்காமல், மதிலைப்பறிக்காமல் வேலிப்படலைப் பறிக்காமல், செடியைப் பறிக்காமல, ஒரு மொக்கைப் பறித்து வெவ்வேறு விதமான உடலில் கடக்கிறாள் சிறுமி (ப.56), வெயிலைப் பருகத் தொடங்கியவர்கள் அதன் கசப்பைச் சப்புக் கொட்டுகின்றனர் (ப.59), தம்ளர் இங்கே கவிழ ஒரு மணி நேர தூரத்தில் ஒரு தாள் நனைந்து கொண்டிருக்கிறது (ப.71)’’

இவை போன்ற தொடர்களில்தான் இத்தொகுப்பு உச்சப்பட்சத் தகுதியை அடைகிறது. முழுமையான கவிதை அனுபவத்தைத் தர தவறுகிற சில கவிதைகளும் மேற்கண்டது போன்ற புனைவான காட்சிகளின் மூலமாக நிறைவெய்திவிடுகின்றன.

ஒரு கவிதையிலுள்ள வாத்தைகளைக் கலைத்துப்போட்டு மீண்டும் பல விதமாக அடுக்கப்பட்ட பரிசோதனையாக ராகதிசை என்ற தலைப்பின் கீழுள்ள கவிதைகள் அமைந்துள்ளன. இக்கவிதைகள் ஒரு விதத்தில் வார்த்தை வியை£ட்டே கவிதை என முன்மொழியக் கூடுமாயினும் தேர்ந்த வார்த்தைகளுடன் அறிவார்த்தமான கவிபுனைவுச் செயல்பாட்டில் தோன்றும் உணர்ச்சியே கவிதையைத் தீர்மானிக்கிறது என்பதை நிறுவுகின்றன. அறிவுபூர்வமான மொழிச் செயல்பாடே கவிதை என நிகழ்த்திக் காட்டியுள்ளன. நேரடி அனுபவமாக இல்லாமல் எழுத்தில் உருவான புனைவனுபவமாகத் திகழும் இத்தொகுப்பின் பல கவிதைகளைக் கலைத்து அடுக்கினால் மேலும் பல கவிதைகளைத் தரக்கூடும் என உறுதியளிக்கின்றன.

முக்கியமாக இத்தொகுப்பில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவை உரைநடைக் கவிதைகள். இம்முயற்சியில் சதுரங்கம்’, ‘கண்ணாடியில் மறைபவன்’, ‘இரு படிமங்கள் ஆகியன சாதனைகள். பிரமிள், நகுலன் போன்ற மூத்தக் கவிஞர்கள் செய்து பார்த்த பரிசோதனை ராணிதிலக்கிடம் முழுமை பெற்றிருக்கிறது எனலாம். இனி உரைநடைக் கவிதைகள் தமிழின் ஒரு வகைமையாகவே வளருமளவுக்கு நம்பிக்கையூட்டுகின்றன. தொகுப்புக்குப் பின்பும் அவரெழுதியுள்ள இவ்வகைக் கவிதைகள் உற்சாகத்தைத் தருகின்றன.

ராணிதிலக்கின் கவிதைகள் ஒரே குரலையோ, வடிவையோ சாயலையோ கொள்ளாது பல்வித பரிசோதனைகளை மொழியிலும் பொருண்மையிலும், வடிவிலும் செய்து பார்த்துள்ளன. பல இடங்களில் வார்த்தைகள், வாக்கியங்கள் உடைபடுகின்றன. வார்ப்புத்தன்மையை முற்றிலும் நிராகரித்தும், புதுமையாக நிகழ வேண்டும் என்ற வேகமும் துணிவும் கொண்டுள்ள இத்தொகுப்பு 2000க்குப் பின்பான முக்கிய சில தொகுப்புகளில் ஒன்றாக அமைகிறது எனத் திண்ணமாகக் கூறலாம்.

0

காக்டெய்ல் – சுதேசமித்திரன்

(நாவல்)

தன்னை அழித்துக் கொள்ள நினைப்பதின் கதை

குலசேகரன்

நாவலின் தலைப்பு கலவையான பல விஷயங்களைப் பற்றி எழுப்பட்டது என்பதற்காக இருக்கலாம். பல்வேறு எண்ணவோட்டங்கள்ஞிவடிவங்களைக் கொண்டதற்காகவும் இருக்கலாம். ஆனால் காக்டெயிலுக்கும் துல்லியமான விகிதங்களைக் கொண்ட இலக்கணம் உண்டென்பதால், இதுவும் ஒரு வித சட்டகத்திற்குள்ளாகவே நிரப்பட்டிருக்கிறது. ஒரு தனிமனிதனை முன்னிறுத்தி அவனைச் சுற்றியே பின்னப்பட்டிருக்கிறது. அவனை மிக அணுக்கமாக வைப்பதனால் அவன் எழுதுபவனே என்றும் தோன்ற வைக்கிறது. அதற்கான தடயமும் ஓரளவு பிற்பாடு ஏற்படுத்தப்படுகிறது. ஆனால் அதுவே என்று சொல்ல முடியாத அளவுக்கு அதுவும் சிதைக்கப்படுகிறது. பாசு என்பவன் அவனை எழுதியவனுமே இதில் ஒரு பாத்திரமாகப் பின்னால் வருகிறான். முழுப் பரப்பிலும் வருவதில்லை. இருப்பினும் அவ்வாறு எழுதிக் கொண்டிருப்பவனின் கூறான மனோ நிலை ஞி பிளந்த ஆளுமையே முன்னால் நிறுத்தப்படுகிறது என்று எண்ணத் தகுந்தவாறும் உள்ளது. இதையும் நாம் திட்டவட்டமாகக் கூறவியலாது. ஊடுபாவாக இது அமைக்கப் படுவதில்லை. திட்டமிடாத அமைப்பின் குறையாகவோ, வரையறுக்கக் கூடாதென்பதற்காகவோ இவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கலாம். இறுதியில் பிரதியின் ஆசிரியன் இறந்து விடுகிறான். பிரதியிலேயே வரும் தன் கதாநாயகனாலேயே கொல்லப்பட்டு விடுகிறான். இனி, நீங்கள் பிரதியை எப்படி வேண்டுமானாலும் வாசித்துக் கொள்ளும் வசதியை நீங்கள் எடுத்துக்கொள்ளலாம். அதுவும், நாவலில் வைத்திருக்கும் ஒரு கருவியால், எழுதப்பட்டவனே எழுதிய வனை அழித்து விடுகிறான். அந்த அழகிய கத்தி, கொல்லத் தூண்டுகிறது கத்தியெனும் வடிவத்தால். கொலை புரிய வேறு காரணங்களில்லை. ஆக, ஆசிரியன் தற்கொலை செய்து கொள்ளவே ஒரு பிரதியை உருவாக்குகிறான்.

இந்நாவல் பெரும்பாலும் உங்களை நோக்கி உரையாடலாகச் சொல்லப் படுகிறது. அதனால், தனக்குள் பேசிக் கொள்ளும் அக வாசிப்பு முறையை ஒழித்துவிடுகிறது. தனக்கான முழு சுதந்திரத்தையும் எடுத்துக் கொண்டு விரிகிறது. பல்வேறு சாத்தியப்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நவீன பிரதியாகக் காட்டிக் கொள்கிறது. ஒரு நேர்க்கோட்டு முறையில் செல்ல வேண்டியதில்லை. எல்லாக் கால இட மாறுதலுக்கும் எளிதாகப் போய் விடலாம். கூடவே இருந்து கொண்டிருப்பவன் அந்தர்தி யானமாகி விடலாம். நாவலின் அமைப்புக்கு நீங்கள் வசமாகி விடுகிறீர்கள். அதையுமே பிரதியின் கட்டுக்கோப்பு உடைத்துப் போட்டு விடும். விசாரணை முறையிலேயே வந்து கொண்டிருப்பது, திடீரென அப்ஜெக்டிவ் டைப் கேள்வி பதில் பகுதியாகும். ஓர் அத்தியாயமே உங்களிடமிருந்து ஒளித்து வைக்கப்படும். அது தேவையென்றால், நாவலில் வருபவனிடம் தொடர்பு கொண்டு தனிப்பட்டமுறையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று நம்பகமானதாகவும் ஆக்கப்படுகிறது. எங்கே விட்டோம் என நேரடியாகவும் கேட்டபடி ஒரு தோரணையை மேற்கொண்டு நாவல் உங்கள் கண்முன் உருவாக்கப்படுகிறது (ஐந்து நட்சத்திர ஓட்டலில் நேரடிச் சமையல் போல்). தாழ்வானது என்று விலக்கப்பட்ட ஒரு பொருளை எடுத்துக்கொண்டு நுட்பமாகப் பேசுவது கலகத்தின்பாற்பட்ட குரலாகவும் ஒலிக்கிறது.(இதில் ஓட்டல் – ஹோட்டெல், பீர்-பியர் என்றும் தொனிக்கும்)

நாவலின் பரப்பு முழுக்க குடிப்பதைப் பற்றியத் தகவல்கள் பூரணமாக முன் வைக்கப்படுகின்றன. சரியான (தீப்பெட்டி) அளவுகள், சந்தையில் உலவும் மிகச் சிறந்ததான வெவ்வேறு பெயர் கொண்ட மது வகைகள், அவற்றின் தேர்ந்த துணை பானங்கள், தோதான பக்க உணவு வகைகள், அவை சிறப்பாகக் கிடைக்குமிடங்கள், அவற்றை வழங்கு வோரின் விவரங்கள் என மிக விரிவாக விளக்கப்படுகின்றன ஒரு கையேட்டைப் போல். எல்லாம் உயரிய வகைகள், சாமான்யர் களால் சிந்திக்கப்பட மாட்டாதவை. கள், பட்டை பற்றியும் ஒரு சொட்டு மட்டுமே நாக்கில் படுகிறது. உயர் நிலைக் குடியர்களைப் பற்றிய ஒரு நாடகமாக, குடிப் பொருட்களின் குறிப்புகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. குடிக்குப்பின்னான உணர்வு நிலை, பிரக்ஞை இழப்பு, அசௌகரியம் ஆகியவைத் திரையிட்டு மறைக்கப் படுகின்றன. குடித்தப்பின் நிகழ்ந்த விபத்தும் சாலையின் பொறியியல் குறைபாடே. ஓர் அனாதைக் கிழவிக்கு ஆதரவான செயல்கள் இயல்பானவை, குடித்ததால் உண்டான விளைவுகள் அன்று. குடித்தவனின் அளவும் மதிப்புமான கணிதங்கள் தவறுதில்லை. அதற்காக மீறிய ஒரு சிறுவனே தண்டிக்கப்பட்டும் விடுகிறான். மிதமிஞ்சியக் குடியும் நிலை தடுமாறாது ஒரு நாகரீக மட்டத்திலேயே சஞ்சரிக்கிறது. குடித்தல் என்பது புறவுலகில் எவ்வித மாற்றங்களையும் உண்டு பண்ணுவதில்லை. ஆனால், அதற்கு நேர்மாறாக எதேச்சையாகப் பிடித்த கஞ்சா நாவலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. அதுவே அவனிடம் ஒரு விலகலை நிகழ்த்துகிறது. தன்னிலிருந்துப் பிரிந்து ஆசிரியைனைக் கொன்று தீர்க்கிறது.

0

ஜே.பி.சாணக்கியாவின் நதியின் புன்னகை யை முன்வைத்து சிறுகதைப் படைப்பாக்கம் -சில பிரச்சினைகள்

ஜீ. முருகன் ( G Murugan )

தேர்ந்த படைப்பாளியிடம் வெளிப்படும் வாழ்வியல் அனுபவங்களைவிட ஒரு சராசரி மனிதனின் அனுபவம் இன்னும் தீவிரமானதாகவும் வாழ்வின் விழுமியங் களைப் புரட்டிப்போடக்கூடியதாக இருக்கலாம். ஆனால் படைப்பாளியின் விசேஷம், விஷயத் தேர்விலும் சொல்லும் தொழில் நுட்பத்திலும்தான் இருக்கிறது. சாதாரண அனுபவத்திலிருந்து அதற்கு மேலான ஒன்றை உருவாக்கிவிடுபவனாக அவன் இருக்கிறான். படைப்பின் ஒட்டுமொத்த அமைப்பை வடிவ மைப்பதில் தனித்தன்மை காட்டுவ தாலேயே கவனம் பெறுகிறான். யாரும் சொல்லாத புதிய நீதிகளைக் கண்டு சொல்பவனோ, சாகசம் செய்பவனோ, மாயாஜாலம் செய்து காட்டுபவனோ, இரட்சகனோ இல்லை அவன். உணர்ச்சி பிசகாமல், தாளலயத்துடன், கேட்பவனின் கவனம் சிதறாமல் கதை சொல்லத் தெரிந்தவன் அவன். மேல்கட்டுமானமாக கதையை சொல்லும்போதே அடிநாதமாக வேறு கதைகளையும், ஒரு இசையையும் உணர்த்திச் செல்பவனாகவும் இருக்கிறான். உள்ளடுக்குகளை கவனமாக வடிவமைப்பதில்தான் இது சாத்திய மாகிறது.

சாணக்கியாவின் கதை ரயில் நிலையத்தில் தொடக்கம் பெறுகிறது. இருபெண்களின் வருகைக்காக ஒருவன் காத்திருக்கிறான். ரயில் வண்டி, பயணிகள், பயணம் பற்றியதான கதைசொல்லியின் விஸ்தாரா மான தத்துவ விவரணைகளால் அலுப்படைந்து, கதையின் அடுத்த பகுதிக்கு தாவி, அகலங்கரையில் மூன்று பேரும் நீராடும் காட்சியால் உற்சாக மடைந்து, முன்பின்னாகப் படிக்க நேர்ந்தது.

இந்த அதிகப்படியான விவரணைகளில் சாணக்கியா நுட்பமான அவதானிப்பு கொண்டவராகவும், வாழ்வின் காட்சிகளை தத்துவ நிலைக்கு நகர்த்துபவராகவும் இருக்கிறார். மேலும் மூவரின் உறவுநிலைகளையும் சர்க்கஸ் வளையம், முக்கோணம் போன்ற வடிவவியல் கணிதத்தில் பொருத்தி ஒரு துல்லியத் தன்மையை உணர்த்த விரும்புகிறார். அகலங்கரையில் நீருக்குள் நிகழும் நாடகம்தான் கதையில் திரும்பத் திரும்ப வேறு விதத்தில் விவரணம் கொள்கிறது. கதையின் பெரும்பகுதியை இது போன்ற விவரிப்புகளே ஆக்கிரமித்துக் கதையின் ஆன்மாவை மேலாதிக்கம் செய்து குலைக்கும் அளவுக்கு போய்விடுகிறது.

கதையை ஒரு மயக்க நிலைக்கு கொண்டுபோவதற்காக இவர் பயன்படுத்தும் வாக்கியங்கள் சிலபொழுது இணைப்புகளைவிட்டு பிரிந்து துண்டுபட்டு நிற்கின்றன. சில இடங்களில் வாக்கியங்களே பிழையாகி விடுகின்றன. யாருக்காக இந்த விவரணை? படைப்பாளி தன்னைதெளிவுபடுத்திக் கொள்வதற் காகவா அல்லது வாசகனைத் தெளிவுபடுத்தவா? இந்த தெளிவு படுத்தல்களில் கதைசொல்பவர் வாசகனையும் இழுத்துக்கொண்டுபோய் தண்ணீரில் முக்கிமுக்கி மூச்சு திணறச் செய்துவிடுகிறார்.

கதை நிகழ்காலத்தில் தொடங்குகிறது. பால்யகால நினைவுகளுக்கு நகர்கிறது. நிகழ்காலத்திற்குத் திரும்புகிறது. மீண்டும் கடந்த காலம். கடந்த காலமா நிகழ்காலமா என்று யூகிக்க இயலாத குழப்ப (கால)த்திற்குப் பிறகு கதை பால்ய காலத்தில் போய் முடிகிறது. அகலங்கரையில் மூவருடைய உடல்களும் கண்டெடுக்கப்படுகின்றன. இது பருண்மையான நிகழ்வாக சித்தரிக்கப் படுகிறது. பால்யகாலத்தில் இறந்தவர்கள் எப்படி நிகழ்காலத்தில் வந்து நடமாடுகிறார்கள், சல்லாபிக்கிறார்கள்? நிகழ்காலம் என்பது பருண்மை யானதென்றால் காலத்திற்குப் பின்னோக்கிப் போய் ஏன் சாவு நிகழவேண்டும்? அகலங்கரையில் கையில் தாமரைப் பூக்களுடன் இறந்து கிடக்கும் உடல்கள் வாலிப பருவத்திற்குரியதாக இருந்திருக்குமானால் ஒரு வேளை நாம் சமாதானம் கொள்ளலாம்(மாந்திரீக எதார்த்த வாதம்?). ஏதோ ஒரு ஆர்வத்தில் இப்படி ஓர் உத்தியை அவர் செய்து பார்த்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

ஒட்டுமொத்த காலக்குழப்பம் என்பதுபோக ஒரு நிகழ்காலத்திற் குள்ளாகவே சில குழுப்பங்களை அவர் செய்து பார்த்திருக்கிறார். மூத்தவளும் அவனும் கோயிலுக்குச் செல்வதும் அவர்களுக்கிடையிலான உரையாடல் திடீரென்று வீட்டுக்கும் சூதாட்டப் படுக்கைக்கும் தாவி கோயிலுக்குத் திரும்புகிறது. ஒருவேளை கையெழுத்துப் பிரதியின் பக்கங்கள் மாறிவிட்டனவோ.

கதையின் பிரதான விஷயங்களாக மூத்தவளுக்கும் அவனுக்கும் நிகழும் உடலுறவுப் பகுதிகளைச் சொல்லலாம். முழுமையான உடலுறவு என்பது தள்ளிப்போய்க்கொண்டே இருக்கிறது. மூன்று முறை இளையவளாலும் ஒரு முறை எருமை மாடுகளாலும் தடைபடுகிறது. கதையின் போக்கில் இவை ஏதேச்சைப் போன்று நிகழ்ந்தாலும் படைப்பாளி (சினிமாவில் நிகழ்வது போல) கதையை நீட்டிக்கவும் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் இதை செய்திருக்கிறாரோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.

சிறுகதையை ஒரு கேன்வாசில் ஓவியத்தை உருவாக்குவதுபோல உருவாக்க வேண்டியிருக்கிறது. ஒட்டுமொத்த படிமம் ஒன்றை உணர்த்துவதாக அது உருவம் பெறுகிறது. வாசித்து முடிக்கையில் வாசகன் இந்த படிமத்தையே தனக்குரியதாக எடுத்துக்கொள்கிறான். சட்டகம் உடைந்து கேன்வாஸ் வளைந்து நெளிந்து தொங்கிக்கொண்டிருப்பது போன்ற படிமத்தையே இந்தக் கதை நமக்குத் தருகிறது. அகலங்கரையில் நடனமிடும் மூன்று உடல்களின் அழகிய ஓவியம் இப்படி நிற்கிறதே என்று வருத்தமாக இருக்கிறது.

சிக்கலும் அடர்த்தியும் கொண்ட சூழலை லகுவாக கடந்து போவதில்தான் உரைநடையாளனின் சாமர்த்தியம் இருக்கிறது. ஆனால் சாணக்கியா தனது சாமர்த்தியத்தை அதிகபடியான விவரணைகளிலும் தத்தவ நோக்கிலுமே காட்டுகிறார். வரிவரியாக பின்னிச் செல்லும் பத்திகளில் மனித உருவங்கள் தென்படுகிறதா என்ற ஏக்கம் சிலபொழுது அலுப்பாக மாறுகிறது.

இந்தக் கதையில் இடம்பெறும் மூவருக்கும் பெயரிடப்பவில்லை என்பது நல்ல உத்திமுறைதான். பெயர்கள் அனுபவ வெளிகளை குறுக்கிவிடும் என்பதை உணர்ந்தே செய்திருக்கிறார். கவிதைக்கு ஈடான சில வரிகள் நம்மை வியப்பிலாழ்த்தத் தவறுவதில்லை என்றாலும் உரைநடையாளன் கவிஞனாக மாறும்போது உணர்ச்சிவசப்படக் கூடியவனாக மாறிவிடுகிறான். இந்தக் கதையில் சில சமயங்களில் கதைசொல்லி தன்னிலை தன்மைக்கு நகர்ந்து விடுகிறான்.

சாணக்கியாவின் பெரும்பாலான கதைகள் பாலியலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. பாலியல் ஒரு பிரச்சினையாக இருக்கும் பட்சத்தில் அதை விவாதிப்பதில் எந்த ஆபத்தும் நிகழ்வதில்லை. ரொமான்டிக் தளத்தில் நின்று அதை விவரிக்கும்போது அதன் நோக்கம் கீழிறங்கி போர்னோவின் எல்லையைத் தொட்டுவிடும் அபாயம் இருக்கிறது. சாணக்கியாவின் மேல் கவிழ்ந்துள்ள இந்த அடையாளம் சிறப்பானதல்ல.

மேலும் இதிலுள்ள கதைக்கூறுகளை கச்சிதமான முறையில் எடிட் செய்திருந்தால் அற்புதமான ஒரு படைப்பை அவரால் உருவாக்கியிருக்க முடியும். விலகிய மன நிலையிலிருந்து இதை அவர் செய்திருக்கவேண்டும்.

ஒரு முறை ஏ.பி.சந்தானராஜ் ஓர் ஓவியத்தை எங்களுக்கு வரைந்து காட்டினார். ஒரு வெள்ளைத் தாளுடனும் ஒரு பேனாவுடனும் எங்களுக்கு முன் அமர்ந்து, ஒரு கோட்டில் தொடங்கி – முன்திட்டம் எதுவுமில்லாமல் – அதற்கு இசைவானக் கோடுகளை இணைத்து ஒரு குழந்தையின் குதூகலத்துடனும் பரவசத்துடனும் ஒரு இளவரசியின் ஓவியத்தை வரைந்து முடித்தபோது இதுவரை உருவற்றிருந்த ஒன்று உருவம் பெற்றது. சிருஷ்டிக்கும் போது தனது அனுபவ வெளிகளிலிருந்தே அந்தக் கோடுகளையும் வடிவங்களையும் அவர் கண்டெடுக்கிறார். ஆதாரமான கோடுகளை வரைந்து முடித்த பின் அதை அலங்கரிக்கும்போது படைப்பின் சமநிலையை கட்டமைக்கும் நுட்பம் பற்றி அவர் எங்களுக்குத் தெளிவுபடுத்தினார்.

கதையின் முதல்வரைவிலேயே படைப்பு முழுமை கண்டுவிடும் என்றால் அவன் பிறவிக்கலைஞனாகவோ கடவுளின் வரம் பெற்றவனாகவோதான் இருக்க முடியும். சாதாரண மனிதப் பிறவியாக இருக்கும் படைப்பாளிகள் இதற்காக உழைக்க வேண்டியிருக்கிறது. திரும்பத் திரும்ப வாசித்துத் திருத்தம் செய்ய வேண்டியிருக்கிறது. ஒரு வார்த்தையை ஒரு வரியை ஏன் சிலபொழுது கதையின் ஒட்டுமொத்தத்தையே வேறு வடிவத்திற்கு மாற்ற வேண்டியிருக்கிறது. சிலருடைய கதைகளை வாசிக்கும்போது அவை முதல் வரைவையே தாண்டாதனவாக இருக்கின்றன. கதை ஒரு உருவத்திற்கு வந்த உடன் அது பத்திரிகையில் பிரசுரமாகி அவன் கையில் இருப்பது போன்று கனவு காணத்தொடங்கிவிடுவதால்தான் இந்த ஆபத்து நேர்கிறது. எல்லோருக்கும் இந்த ஆர்வம் தோன்றுவது தவிர்க்க முடியாத ஒன்றுதான். அதையும் தாண்டி கதையைச் சந்தேகத்தோடு கண்டு, திரும்பவும் வடிவமைப்பதில் கவனம் செலுத்துபவ னால்தான் நெருடலற்ற படைப்புகளைத் தர முடியும்.

பிறரை வாசிக்கச் செய்து அவர்களுடைய அபிப்பிராயங்களுக்குப் பின் திருத்தம் செய்வதில் கூச்சப்படுவதற்கோ வெட்கப்படுவதற்கோ ஒன்றுமில்லை. பத்திரிகையில் பிரசுரம் கண்ட பிறகுகூட அதை மாற்றியமைக்க நேரினும் திருப்தி காணாதவன்தான் படைப்பாளி. நிறைவு பெற்ற ஒரு படைப்பு திரண்டு நிற்கும் நீர்த்துளி போன்றது. எப்போது வேண்டுமானாலும் அது உடைந்து தானேயான இன்னொரு வடிவமாக மாறக் காத்திருப்பது போன்ற லகுத்தன்மையைப் பெற்று விடுகிறது.

இரண்டு அல்லது மூன்று வருடங்கள் கூட காத்திருந்து நிறைவு செய்யலாம். கால இடைவெளி படைப்பில் உள்ள குறைகளைச் சட்டென்று உணரச் செய்துவிடும். திருப்தி தராமல் போனால் கைவிட்டுவிடலாம். கைவிடுவது ஒரு சோகமான விஷயம்தான் என்றாலும் அதற்கு நாம் செலுத்திய உழைப்பு வேறொரு அனுபவமாக நமக்குள் சேகரமாகியிருக்கும். வெவ்வேறு நிலையில் அதைச் சொல்லிப்பார்த்ததில் கதையின் பல்வேறு சாத்தியங்களுக்குள் சென்று திரும்பியிருப்போம்.

படைப்பை வடிவமைப்பது என்பது நம்மையே வடிவமைத்துக் கொள்வது போல. நமக்குள்ளாகவே ஒரு மேலான அனுபவ நிலையை அடைவது. படைப்பு முடிவடைந்துவிட்டால் கால்களுக்கு நிலம் தட்டுப்படத்தொடங்குகிறது. ஏக்கம் மிஞ்சுகிறது. அடுத்த கதை எப்போது நமக்குள் நிகழுப்போகிறதோ என்ற ஏக்கம். அந்தப் பிரதேசத்திலிருந்து (Zone) வெளியே வந்துவிடுகிறோம்.

ஆந்ரேய் தார்க்கோவஸ்கியின் ஸ்டாக்கர் படத்தைப் பார்த்தபோது இந்தப் பிரதேசம் என்ன என்று உணர்ந்துகொள்ள நேர்ந்தது. படைப்புக்கும் படைப் பாளிக்குமான உறவில் அது நிர்மாணம் கொள்கிறது. படைப்பாளி (ஸ்டாக்கர்) வாசகனை பிரதேசத்திற்குள் அழைத்துக் கொண்டு போகிறான். அங்கே இந்த கரடுமுரடான வாழ்க்கை வேறுவிதமாக வடிவம் கொண்டிருக்கிறது. கனவின் தர்க்கத்தால் பிணைக்கப் பட்டிருக்கிறது. அது சமரசத்திற்கு இடமில்லாதது. படைப்பாளிக்கும் வாசகனுக்குமான உள்ளார்ந்த ஒரு ஆசையை நிறைவேற்றி வைக்கக்கூடியது.

கவிதைகள்:

பாலமுருகன்

கவிதையின் தருணம்

மௌனமாகச்

சிறுமழை பெய்யும்

மாலை

சிற்றிரைச்சலுக்கு அடியில்

மண்டியிருக்கும் அமைதி

நேரம்

பழம் போலச்

சீராகக் கனிகிறது

மனம் கலைந்து மங்கி

முழுமையில் கரைகிறது

பேரண்டத்தின்

சிறு துளையென விரிந்திருக்கும்

என் கண்கள் முன்

ஒரு காகிதம் பறந்தாலோ

பூச்சி ஒன்று அசைந்தாலோ

கூடப் போதும்

0

சேக்கிழார்

குழந்தைகள்

நானொரு குழந்தைகளின் நண்பன்

எவ்வளவுதான் அடித்தாலும்

குழந்தைகள் என்னிடமே வருகின்றன

குழந்தைகளின் அம்மாக்கள் எச்சரிப்பார்கள்

சில குழந்தைகளின் அம்மாக்கள்

சிடுமூஞ்சிகள்

குழந்தைகளை அடித்துவிட்டால்

நாமும் அழவேண்டும்

மண்ணில் புரளவேண்டும்

உடனே குழந்தைகள் சிரித்து விடுவார்கள்

கல்லா மண்ணா ரைட்டா தப்பா

கண்ணாமூச்சியோ கள்ளன் போலிஸோ

சகல குழந்தைகளின் விளையாட்டுக்கும்

நடுவர் நான்தான்

குழந்தைகளின் விளையாட்டிற்கு

நடுவராக இருப்பது சுலபமல்ல

குறைவயசில் இறந்த குழந்தைகள்

இருவர் எனக்குச் சிநேகிதர்களாக இருந்தார்கள்

மூன்றாவது பிறந்த குழந்தைக்குப்

பிச்சைமுத்து எனப்பெயரிட்டனர் பெற்றோர்

தூக்கக் கூடாதென சொல்லிவிட்டார்கள் என்னை

மரணத்திற்குச் சில மணிநேரம் முன்பு

என்னுடன்தான் இருந்ததாம்

இரண்டு குழந்தைகளும்

குழந்தைகள் என்னை மையமாக

நிற்க வைத்து

இரு கைகளையும் நீட்டி

ராட்டினம் சுற்றக்கேட்பார்கள்

அலுத்துச் சுற்றிக் கீழிறக்கி விடும் போது

ஒவ்வொரு குழந்தையும்

ஒரு பூமியாகச் சுற்ற ஆரம்பிப்பார்கள்.

ஒரு நாள் பேருந்தில் பயணம் செய்கையில்

என்மடியில் குழந்தையை

இருத்தினாள் ஒருத்தி

பால்கவுச்சியால் குமட்டல் வந்தது

ரகசியமாகக் கிள்ளி விட்டேன்

குழந்தையும் அழுதது

தாய் வாங்கிக் கொண்டாள்

குழந்தை என்னையே உற்றுப்பார்த்துக்கொண்டிருந்தது

பயணம் முடியும் வரை.

0

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: