வனம் 1

ஜனவரி-பிப்ரவரி 2005

ஆசிரியர்கள்: ஜீ.முருகன், ஸ்ரீநேசன்

மனுஷ்யபுத்திரனுடன் உரையாடல்

சந்திப்பு: ஜீ.முருகன், முரளி

முரு :வழக்கமான ஒரு கேள்வியுடன் தொடங்கலாம். நீங்கள் கவிதை எழுத வந்ததன் பின்னனி பற்றி…

ம.பு :ஒரு புழுபருவம்னு ஒண்ணு இருக்கு. எல்லாம் உருவாகி வருகிற பருவம். அப்ப நாம பிடிச்சிக்க ஏதாவது ஒண்ணு தேவையிருக்கு. இத நம்மோட தேர்வுனு கூடச் சொல்ல முடியாது. உள்ளுக்குள்ள பொருந்திப்போறத நாம பிடிச்சிக்கிறோம்.

முரு :நீங்கள் கவிதை எழுத ஆரம்பிச்சு, ஏதோ ஒரு கட்டத்தில அதற்கான அங்கீகாரத்தை அடைந்த காலத்தைப் பற்றி…

ம.பு :நான் ஒரு முக்கியமில்லாத ஆளோன்னு நினைச்சிக்குவேன். என்னால வேலைகள் செய்ய முடியாது. ஏதாவது வேலை செஞ்சி பாராட்டுப் பெற முடியாது. யாரையாவது மகிழ வச்சி காட்டணும், என்னோட இருத்தலை தக்க வைச்சுக்கணும் என்ற ஆசை இருந்திச்சு. மொழி எனக்கு கிடைச்ச உடனே கிளர்ச்சி அடைஞ்சிட்டேன். சின்ன வயசிலேயே எழுத்தாளர்கள் மேல மோகம் வந்திடுச்சி. அப்பவே கவிதைகள் எழுத ஆரம்பிச்சிட்டேன். குமுதம், ஆனந்தவிகடன் மாதிரி பத்திரிக்கைகளில் வர மு. மேத்தா மாதிரியான கவிதைகள் மேல அவ்வளவு ஈர்ப்பு வந்திருச்சி. கவிதைகளை படிக்கும் போது அந்த எழுச்சியோட கலக்கிறது, படிமங்களோட நகர்வது, சில வரிகளைப் படிக்கும்போது இடம் பெயர்வதை உணர்வேன். இப்படி ஏன் நாம எழுதக் கூடாதுன்னு தோணுச்சி. ரொம்ப சின்ன வயசிலேயே என்னுடைய கவிதை தொகுப்பு வெளிவந்திடுச்சி, அதுதான் எனக்குப் பெரிய திறப்பு, அது எனக்கு நான் ஒரு எழுத்தாளன் என்ற நம்பிக்கையை ஆழமாக விதைச்சது. அதற்குக் கிடைத்த எதிர் வினைகளும் அதன் மூலம் நான் அடைந்த நட்புகள் என்னை நானே உறுதிப்படுத்திக்கொள்ள காரணமாயிருந்தன.

முரு :உங்களோட என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தொகுப்புக்கும் இப்ப வந்திருக்கிற நீராலானது தொகுப்புக்கும் இடையே பெரிய மாற்றம் தெரியுது. இந்தக் கவிதைகள் ரொம்ப எளிமையா, மெல்லிய உணர்வுகளை கொண்டதாயிருக்கு. இதை வளர்ச்சின்னு எடுத்துக்கலாம

ம.பு :ஒரு கட்டத்தில் இருந்து இன்னொரு கட்டத்திற்கு போறதுன்னு இலக்கிய விமர்சனத்தில சொல்றாங்க. அதை நான் மறுக்கிறேன். அப்படி ஒரு படிநிலை வளர்ச்சிங்கறது இலக்கியத்தில இல்லை. அதற்கு பதிலா இப்படிச் சொல்லலாம். ஒரே ஆள் வேற வேற ஆளா மாறிக்கிட்டேயிருக்கான். இதில இவன் பலமானவன், இவன் பலவீனமானவன்னு சொல்ல முடியாதில்லையா. ஏதோ ஒரு உருமாற்றம் தொடர்ந்து நடந்துக்கிட்டேயிருக்கு எனக்குள்ள. ஒரு பெண்ணை நேற்று தொட்ட மாதிரி இன்னைக்கு இல்லை. ஸ்பரிசமே வேற மாதிரி இருக்கு. இது மாதிரிதான் உலகத்தில இருக்கிற எல்லாவுருவங்களுமிருக்கு.

என்னைப் பத்தி ஒரு பெரிய குற்றச்சாட்டு என்னன்னா, ரொம்ப வன்முறையான ஒரு மொழியை கையாளுகிறேன்னு. கலாப்ரியா, சுகுமாரனுக்கு அப்புறம் அந்த மொழியை பயன்படுத்தறேன்னு.

முரு :உங்களுடைய என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள் தொகுப்பில அப்படிப்பட்ட கவிதைகள் இருந்தது.

ம.பு :உண்மைதான். கவிதைங்கறது வெறும் மனம் சார்ந்தது, இந்தப் பூமியில நடக்கிற அன்றாட வாழ்க்கைய தாண்டிய ஒன்னுன்னு நான் நினைக்கல. என்னோட உடல்தான் என்னோட கவிதையின் மூலம். இந்த உடம்பு இல்லாம மனசு கிடையாது. உடல் அனுபவிக்கிற எல்லா வாதைகளும் இயலாமையையும் என் மனசு அனுபவிக்கிறது. இரண்டையும் நான் பிரிச்சிப் பார்க்கல. நான் நிராகரிக்கப்படறவனா இருக்கிறேனோ என்ற சந்தேகம் எப்பவும் எனக்குள்ள இருந்துக்கிட்டே இருக்கு. வாழ்க்கையோட குரூரம் என்னை ஏமாற்றுது. தனி மனிதன் என்ற அளவுல அது ஒரு இல்லியூஷன் ஆகக்கூட இருக்கலாம். எப்ப ஒருவன் துன்புறுத்தப்படுபவனா, நிராகரிக்கப்படுபவனா இருக்கிறானோ அப்ப இது வெளிப்படுது. இது ஒட்டுமொத்த வாழ்க்கையோட குறியீடுதான். வாதைங்கிறதே ஒரு குறியீடுதான். வெவ்வேறு தளங்கல இந்த வாதையை உடலாலும், மனதாலும் அனுபவிச்சிக்கிட்டேயிருக்கோம். எனக்குத் தோனுச்சி, என் உடம்புல ஒரு பிரச்சினையிருக்கு நான் அந்த வாதையை அனுபவிக்கிறேன். தனக்கு விருப்பமில்லாத வேலையை செய்துகிட்டு இருப்பவனும் இதைவிட அதிகமான வாதையை அனுபவிக்கிறான். நீங்க அந்த வேலையை வெறுக்கிறிங்க. ஆனால் காலை முதல் மாலை வரை அதை செய்பவரா இருக்கீங்க. அப்ப உங்க உடம்பு சிதைக்கப்படுது, சின்னாபின்னாமாக்கப்படுது. அப்ப நானும் அவனும் ஒன்னுதான்ற இடத்துக்கு வந்து சேருகிறேன். இதுதான் எனக்குள்ள குரூரம் சம்மந்தமான படிமத்தை உருவாக்குது. குரூரத்தை குரூரத்தால் எதிர்க்க முயற்சி பண்ணுது. எப்பவும் மனமும் உடலும் புற உலகத்தால சிதைக்கப்படுது. இதற்கு எதிர்வினை தரனும்னு நினைச்சேன். இதுதான் என்னோட படிமங்களுக்கு காரணமா இருக்குது. அந்தத் தொகுப்போட முன்னுரையிலே இதை எழுதியிருக்கேன். ஒரு கண்ணாடி அறைக்குள் இருந்து பேசற மாதிரி. நான் பேசறேன்னு தெரியும். நான் என்ன பேசறன்னே தெரிவதில்லை. இதுதான் என்னோட பிரச்சினை. எனக்கு என்ன நடக்குதுன்னு என்னால சொல்ல முடியல. அப்போ வாசகன்னு ஒரு ஆளை நான் கற்பனை பண்ணிக்கிறேன். அவனுக்கு என்னோட எல்லா விஷயங்களும் புரியும்னு நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கை பேச்சி மேல எனக்கு பெரிய ஆவலை உண்டுபண்ணுது. கவிதையைத் தவிர மத்த இடத்தில் நான் ஊமையாதான் இருக்கேன். பேசவேயில்லை. மத்தவங்களுக்கான வாக்கியங்களைத்தான் நான் பேசிக்கிட்டிருந்தேன். அவங்களுக்கான வாக்கியத்தை. அப்படியிருந்தாதானே சமூகத்தில நான் வாழமுடியும். என்னோட வாக்கியத்தை நான் பேசத் தொடங்கின உடனே என்னை நீங்கள் வித்தியாசமா பார்க்க ஆரம்பிக்கிறிங்க. உங்களோட அன்றாட வாழ்க்கையில இந்த வாக்கியங்களுக்கு எங்குமே இடம் கிடையாது. ஒருவன் அழுவதற்கு இங்கு இடமில்லை. ஒருவன் கதறி அழ நினைச்சான்னா அவனோட வீட்டிலே, அலுவலகத்திலோ, பேருந்திலோ இடமில்லை. ஆனால் ஒருவன் அழுவதற்கான தேவைகள் எவ்வளவு இருக்கு? கவி¬தை எழுதற நம்மோட பழக்கம் முக்கியமாயிருக்கு. அது வரைக்கும் நாம படிச்சிறுக்கிற கவிதைகள் நமக்கான வடிவத்தை உருவாக்கக் காரணமாயிருக்கு. கலாப்ரியா, சுகுமாரன் என்னைப் பாதிச்சிருந்தாலும் அவங்க அதிகமா படிமங்களை சார்ந்தவங்களா இருக்காங்க. இப்ப சுகுமாரனோட கவிதைகள் ஏமாற்றமாயிருக்கு. படிமங்களை உருவாக்குறது ஒரு பயிற்சின்னுநான் நினைக்கிறேன்.

முரு :அவங்களோட கவனம் எல்லாம் படிமங்களை உருவாக்குவதற்கான தந்திரங்கல்ல இருக்குன்னு நினைக்கிறிங்க…

ம.பு :ஆமாம். இதுல என்ன பிரச்சினைன்னா அந்தப் படிமங்கள் ரொம்ப முட்டாள்தனமா இருக்கு.

முரு :இந்தத் தன்முனைப்பும், புத்திசாலித்தனங்களும் கவிதையோட உணர்வு நிலைகளை குலைக்குதில்லையா?

ம.பு :உணர்வுகளை மட்டுமில்லை, வாழ்க்கையோட உறவுகளே அவர்களுக்கு இல்லாம ஆயிடிச்சி. இந்த சரித்திரத்தோட அவங்களுக்கு என்ன உறவு இருக்கு? அவங்களோட குடும்பத்தோட, மனைவியோட என்ன உறவுன்னே அவங்களுக்குத் தெரியலை. ரொம்ப அப்பட்டமா சொல்லனும்னா, உனக்கு என்ன நடக்குது, எதை சொல்றதுக்காக உன் மொழியை பயன்படுத்துற? இவங்ககிட்ட இருந்து ஒரு வரியும் கிடைக்கமாட்டேங்கிது. இவங்க பயன்படுத்துற படிமங்கள் படிமங்களே இல்லை, மொழியோட திருகல். வாழ்க்கையை பார்க்க முடியாத குருட்டுத்தனத்திலிருந்து வருகிற இயலாமை. கவிதை அவ்வளவு சுலபமானதில்லை. மொழியோட மேலான ஒரு வடிவம் அது. அதுல ஏமாத்து வேலை பண்ண முடியாது. பண்ணினால் காட்டிக் கொடுத்துவிடும்.

முரு :உங்கள் ஆரம்ப கால கவிதைகளை இப்போது எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள்?

ம.பு :நான் வானம்பாடி கவிஞர்களோட தாக்கத்தில இருந்து மீண்டு வர முயற்சி பண்ணியிருக்கேன். என்னோட ஆரம்ப கால கவிதைகள் அப்படி இருந்தன. சோவியத் யூனியனோட வீழ்ச்சி பெரும் இடியாயிருந்தது. யாரோ என்னைப் பொய் சொல்லி ஏமாற்றிவிட்டுப் போன மாதிரி இருந்தன. எவ்வளவு கதைகளை இவங்க உருவாக்கினாங்கஙு இந்த சப்தம் பொய்யோன்னு தோண ஆரம்பிச்சது. அது உள்ளாக இருப்பதை வெளிப்படுத்தல, அது ஒசைகள் மூலம் வாழுதுன்னு தெரிஞ்சது. அனுபவத்தை அதனோட கருவறையிலேயே சந்திக்கனும்னு ஆசை. கவிதையில இவ்வளவு சுமை எதுக்குன்னு தோணுச்சி. ஒரு மொழியோட பாரத்தை கவிதை என்ற பெயரில் அழுத்துறேன். இது வாசகர்களுக்கு செய்யக் கூடிய அநீதின்னு நினைக்கிறேன். பெரும்பாலான கவிஞர்கள் இதைத்தான் பண்றாங்க. ஒரு பக்கத்தில் இது அறிவார்த்தமான பயிற்சியாயிருக்கு. குழப்பமே இருப்பதில்லை இவர்களுக்கு. நிறைய முதல் தொகுப்பு கொண்டுவரவங்களோட கவிதைகள் துல்லியமா இருக்கு. ஏன்னா அது அவங்களோட உண்மையான படைப்பா இருப்பதில்லை. நிகழ்வுகளை நிகழ்கிற தருணங்களிலேயே சந்திக்கிற மொழியை கையாளனும்னு ஆசை. அதுக்கு வழிகாட்டிய நகுலனத்தான் நான் சொல்வேன். நகுலனோட கவிதைகள்தான் அந்த வெளிச்சத்தை தருது. நகுலனும், பிரமிளும் தமிழ் கவிதையோட இரண்டு துருவங்கள். சந்திக்கமுடியாத ஆதாரமான துருவங்கள்.

முரு :ஆத்மாநாமோட ளஇரண்டு ரோஜாப் பதியன்கள்ஹ கவிதையில் வெளிப்படுற காதல் தமிழ்க்கவிதைகளில் ரொம்ப அரிதான நிகழ்வா தோணுதில்லையா?

ம.பு :அந்த காதல் மட்டுமில்லை அந்த உரையாடலே மிக அபூர்வமானதுதான். இன்னொருத்தருக்குக் கேட்காத ரகசியம் பொதிந்தது. அந்த உரையாடலைப் பிடிக்கிறதே பெரிய விஷயமாயிருக்கு.

முரு :உங்களோட நீராலானது தொகுப்பில தோட்டத்தில இருந்து ஒரு மரம் படியேறி வருவதைப்பற்றிய கவிதையை வாசித்தபோது எனக்கு ஆத்மாநாமோட அந்தக் கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது.

ம.பு :அந்தக் கவிதையை நிறைய முறை நான் வாசிச்சிருக்கேன். நான் ஊற்றும் நீரைவிட நான்தான் முக்கியம் அதற்கு”, “உன்னைதான் நினைத்துக்கொண்டிருந்தேன் என்று பொய் சொல்ல மனம் இல்லாமல்… இதை வாசிச்சப்ப வியப்பாயிருந்தது. என் வாழ்க்கையில ரொம்ப முக்கியமான ஒரு கவிதை அது. கவிதையில் நாம் ஏன் அந்த உரையாடலை உருவாக்க முடியாது? பெரும்பாலான கவிதைகளில் உரையாடல் இல்லை. நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள்? எதைப் பேசுகிறீர்கள்? எதை தொடர்பு கொள்கிறீர்கள்? எது உங்கள் உடலில் வந்து கரைகிறது? இதையெல்லாம் சொல்லாமல் எப்படி இருக்க முடியும்?

கவிதையை நாம் ஏதோ ஒரு தப்பான இடத்தில் சந்தித்திருக்கிறோம். பிரமிளால் நான் பெரிய தாக்கத்திற்கு ஆளாகியிருக்கிறேன். இப்பக்கூட பிரமிளோட ஆற்றல் வாய்ந்த படிமங்கள் எனக்குள் ஓடிக்கொண்டுதான் இருக்கு. நகுலனை ஒரு நாள் படிக்கிறேன். இருப்பதற்கென்றுதான் வருகிறோம். இல்லாமல் போகிறோம். முதல்ல ஏதோ தத்துவம் மாதிரி தெரியுது. பிறகுதான் அந்த சப்தம் நமக்கு தத்துவத்தை எதையும் சொல்வதில்லை என்று புரிகிறது. அது ஒரு தீண்டல். நம் பிரக்ஞையில் பாயும் விதம். மத்தியான நேரத்தில சமாதிக்கு மேல் பறக்கிற வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றி எழுதியிருப்பார். இன்னைக்கு தமிழ் கவிதை சந்திச்சிட்டிருக்கிற இந்த நெருக்கடியில இருந்து நகுலன் உருவாக்கியிருக்கிற மொழி வழியாத்தான் எங்கோ வெளியேறிப் போக முடியும்னு தோனுது.

முரு :நகுலன்கிட்ட ரோமாண்டிக் தன்மை இல்லை. ஆனால் உங்ககிட்ட இருக்கு. அதே மாதிரி ஒரு திருப்தி தரக்கூடிய பூர்ணத்துவம் கொண்ட தன்மையும்…

ம.பு :ஆமாம். ரோமாண்டிக் இருக்கு. மேலும் நகுலன்கிட்ட அவர்கிட்ட ஒரு சிதைவு இருக்கு. அது என்னை பாதிக்குது. ஆனால் எங்கிட்ட நீங்கள் பூர்ணத்தன்மை இருக்கிறதா சொல்றப்ப அதை என்னோட பொருத்திப் பார்க்கிறேன். நான் அதற்கு நேர் மாற்றித்தான் யோசிக்கிறேன். நகுலன்கிட்ட இருக்கிற உரையாடக்கூடிய விஷயம் அதல எளிமையா தோனக்கூடிய ஒரு வினோதத்தை நோக்கி போகக்கூடிய ஒரு தருணம் தொடர்ந்துகிட்டே இருக்கு. அதை கையில பிடிக்கிற மாதிரிதான் நினைக்கிறிங்க. ஆனால் அது உங்க கையை விட்டு தாண்டிபோய்ட்டே இருக்கு. இது வசீகரமானது. பேச்சோட தொனியை அவர் கவிதையில சுவாதீனமா பயன்படுத்துகிறார், அது அமைக்கிற விதம், அதை வெளிப்படுத்தற விதம் ஈர்க்கும்படியா இருக்கிறது. சாவு வீட்டிற்கு போனேன், செத்த வீடாய் தெரியவில்லை இங்கே வாழ்க்கைன்னு நம்பக்கூடிய ஒன்ன பிடிக்கும்படி தோணுது. நமக்கு ஒரு திறவை உண்டு பண்ணுது. அதே சமயம் நகுலன் கவிதைக்கான சிறு தரிசனமோ எத்தனிப்போ இல்லாத ஏராளமான வீண் வரிகளையும் எழுதியிருக்கிறார்.

பிரமிள் எழுதற படிமக்கவிதைகள் தமிழில் அதிகம் பயன்படுத்தியாச்சி. அதை நாம தவறா பயன்படுத்திட்டோமோன்னு தோணுது. நகுலனை அவ்வளவு சுலபா பிடிக்க முடியல. ஒரு பலம் இல்லைன்னா இந்தப் போலித்தனம் எல்லாம் வெளிப்பட்டுவிடும். நகுலன் இங்கே ஒரு இயக்கமா மாறவேயில்லை. பிரிமிள் மாறுகிறார். பிரமிள் ஒரு பெரும் சக்தி. நவீன தமிழ்க் கவிதைக்கு உயிரையும் முகத்தையும் அளித்தவர். ஆனால் அவருடைய ஆரம்ப கால கவிதைகளும் நெடுங்கவிதைகளும் ஏமாற்றமாக இருக்கிறது. அவை படிமங்களாகவே உருவாக்கப்பட்ட படிமங்கள். ஒரு செய்முறை.

முரு :பூமித்தோலில் அழுக்குத் தேமல், பரிதி புணர்ந்து படரும் விந்து, இதெல்லாம் அந்த மாதிரியான கவிதைகள்தானே?

ம.பு :வைரமுத்து, அப்துல்ரகுமான் தளத்தில உள்ள கவிதைகள் இதெல்லாம். கவிதையோட உலகம் எவ்வளவோ தாண்டி வந்தாச்சு. ஆனால் இன்னும் இதை எடுத்துக்காட்டி பேசிக்கிட்டிருக்காங்க.

கருகாத தவிப்புகள் கூடி

நாவின் திரி பிளந்து

அணையாது எரியும் ஒருபெயர்

நீ

என்று சொல்றப்போ நமக்குள்ள பெரிய அதிர்வு வருகிறது. இது தான் படிமம்.

துடித்து

அன்று விழுந்த பகலை

மீண்டும்

மிதித்து நடப்பவளே

இது மாதிரியான அற்புதமான படிமங்களையும் உருவாக்குபவர் பிரமிள். அவரை தொடர்ந்து எழுது வந்தவர்கள் அதற்கு நிகரான அனுபவம் எதையும் தரவில்லை.

முரு :இந்த இடத்தில பிரம்மராஜனோட கவிதைகள் பற்றி பேசலாமே…

ம.பு :நேர்மையா ஒரு பதிலை சொல்லனும்னா ஒரு காலகட்டத்தில அவரோட கவிதைகளை படிக்கனும்னு முயற்சி பண்ணியிருக்கேன். அவரோட உலகத்தை என்னால பகிர்ந்துக்க முடியல. நான் பாசாங்கு பண்ண விரும்பல. நான் மதிக்கக்கூடிய சில பேர் அவரோட கவிதைகள் ரொம்ப முக்கியம்னு சொல்லியிருக்காங்க. ஏதோ ஒரு காரணத்தால அந்த கவிதைகளை என்னால தொட முடியல. ஒரு காலகட்டத்துக்கப்புறம் அந்தக் கவிதைகளை ஆழ்ந்து படிக்கல நான். ஆனால் கடல் பற்றிய கவிதைகள் எனக்கு நெருக்கத்தில வந்த மாதிரி ஒரு உணர்வு இருந்தது. நான் சந்திச்ச ஒரே தருணம் அதுதான்.

முரு :எதார்த்தத்தோட அனுபவ நிலையை கவிதையில எழுதும்போது எதார்த்தத்தில இல்லாத அனுபவத்தை புதியதாகக் கண்டுபிடிக்கிறோம் இல்லையா?

ம.பு :சரிதான். இது ரொம்ப சுவாரஸ்யமான விஷயம். என் எழுத்தை வைத்து இப்படி புரிஞ்சிக்கிறேன்ஙீ ஒரு அனுபவத்தை எழுதுறது, இது எதார்த்த உலகத்தோட அனுபவமா இல்லாம மொழி கொடுக்கக்கூடிய விநோதமா, படிமம் கொடுக்கக்கூடிய விநோதமாயிருக்கு. ஆரம்பக் கட்டத்தில்தான் ஒரு ஆள் அனுபவத்தை எழுதுறான். என் கவிதையிலே நான் என் அனுபவத்தை எழுதுறேன்னு சொன்னால் நான் வருத்தப்படுவேன். என்னுடைய நோக்கம் இது இல்லை. அனுபவ உலகத்திற்கு சாத்தியப்படாத ஒரு அனுபவம் இருக்கு. அனுபவத்தை மொழி வழியாக உருவாக்குறேன். எழுத்துல நாம அடையவேண்டியதும் அதுதான். இதுக்குமேலே ஒரு நோக்கமும் இல்லை. எது சாத்தியப்படவில்லையே, எதை அடையமுடியவில்லையோ அதைத்தான் நாம எழுத்துல உருவாக்குறோம். இந்த ஆச்சரியத்தையும், குதூகலத்தையும் மொழி நமக்குச் சாத்தியப்படுத்துது. ஒரு கட்டத்தில எதார்த்த உலகத்தை நாம மறுக்கிறோம். எதார்த்த உலகம் ஒரு சலிப்பான விஷயம். எழுத்து சார்ந்த உலகம் விநோதமாகவும், நம்பமுடியாத, எதிர்பாராதது நடக்க கூடிய இடமாய் இருக்கு. ஆனால் எதார்தத்தோட சாயலை கொண்டிருக்கும். அதுல இருந்து உருமாற்றப்பட்ட ஒன்னா இருக்கு. இந்த இரண்டாவது எழுத்திலதான் சுவாரஸ்யமிருக்கு, ஒரு சவால் இருக்கு.

முரு :படைப்பாளியாய் இருந்து கவனிக்கையில் படைப்பு நமக்கு முன்னே பயணிக்கிறதா நீங்கள் நினைக்கிறீர்களா?

ம.பு :நான் என்னோட எழுத்துக்கு ரொம்ப பின்னாடிதான் இருக்கேன். இது எனக்கு ரொம்ப அவமானமா இருக்கு. அவன் ஏதோ ஒரு தருணத்தில மின்னல் மாதிரி குறுக்கிட்டுப் போய்கிட்டே இருக்கான். அவனைப் பிடிக்கவே முடியலை. அவனோட தரிசனங்கள் அன்றாட வாழ்க்கையில சாத்தியமாப்படல. நான் ரொம்ப நோய்மையும், துயரமும், வீழ்ச்சியும் கொண்டவனாத்தான் இருக்கேன். எழுதுறப்போ ஏதோ ஒரு வெளிச்சத்தை கொண்டு வந்துவிடுகிறேன். நான் எதுவாக இருக்கிறேனோ, அதையெல்லாம் தாண்டி ஒரு சிறுத்தை மாதிரி அதைக் கடந்து போய்விடுகிறேன். அன்றாட வாழ்க்கையில ரொம்ப சீரழிஞ்சவனா இருக்கேன். சீரழிவோட அவமானத்தை தாங்க முடியல. எழுதும்போதும் நான் ரொம்ப மேலானவனா இருக்கேன்.

முரு :அதை நோக்கி நம்மோட சுயத்தை நகர்த்தனுமின்னு ஒரு ஆசை இருக்கில்லையா?

ம.பு :இருக்கு. ஆனால் அப்ப நான் கவிஞனா இருக்க முடியாது, ஞானியாயிடுவேன். அதுதான் அதனோட நிலை. கவிதையோட உயரத்துக்கு போறது எப்பவும் ஒருத்தனுக்கு சாத்தியமில்லை. ஞானிகளால் மட்டும்தான் அதை நோக்கிப் போகமுடியும்.

முரு :கவிதைங்கிறது ஒரு ஆன்மீக செயல்பாடா எனக்குத் தோனுது. அறிவு இரண்டுக்குமான உறவை குலைக்கிறதா நான் நினைக்கிறேன்.

ம.பு :எல்லாவற்றையும் போலவே கலையிலும் ஒரு பௌதீக நிலையும் ஆன்மீக நிலையும் இருக்கவே செய்கிறது. கலையின் உன்னதமான தருணம் என்பது பௌதீக நிலையை இழக்கற ஒரு அனுபவமே. அப்படி இழப்பதற்கு நம்முடைய செறுக்கும் அறிவும் அது உருவாக்கும் அவநம்பிக்கையும் பெரும் தடையாகவே இருக்கிறது. ஆனால் இந்த அறிவு இல்லாமல் ஜீவித்திருக்க முடியாது. அறிவைக் கடந்துசெல்லும் அறிவைப்பற்றி நம்முடைய முன்னோடிகள் நிறைய பேசியிருக்கிறார்கள்.

முரளி : நம்முடைய நவீன கவிதைக்கு ஒரு கலாச்சார அடையாளம் இருக்கிறதா?

ம.பு : எனக்கு இதைப்பற்றி சந்தேகங்கள் இருக்கு. பழமலய், சுயம்புலிங்கம், ரசூல் போன்றவர்களும் தலித் கவிஞர்களும் பிரத்தேயேக அடையாளங்களுடன் எழுதுகிறார்கள். என்னைப் பொருத்தவரை நிலமே இல்லாத பாதையில் பயணிப்பவனாகத்தான் உணர்கிறேன். நான் ஒரு கவிதை மொழியை உற்பத்தி செய்கிறேன். அதைவச்சி நான் எந்த நிலத்தைச் சார்ந்தவன்னு நீங்க கண்டுபிடிக்க முடியுமா? இந்த பொதுவான மொழி எங்கிருந்து உருவாகிறது?

முரு :இதில உங்களை எந்த மாதிரி ஆளாய் அடையாளம் காண்கிறீர்கள்?

ம.பு :சுருக்கமா சொல்லனும்னா ஒரு நகர் சார்ந்த மத்திய தர வர்க்க மதிப்பீடுகள் மேலேதான் என் மொழி கட்டப்படுதோ என்கிற சந்தேகம் எனக்குள்ள இருக்கு. இதனோட இயலாமைகளும், துக்கங்களும், வருத்தங்களும் என்கிட்டே இருக்கு.

முரு :பிரபஞ்சத்தில் இருக்கிற மற்ற உயிர்கள், பறவைகள், விலங்குகள் இருத்தலோட உங்களுடைய இருத்தலை எப்படித் தொடர்புபடுத்தி பார்க்கிறீங்க?

ம.பு :பிரபஞ்சத்தோட தூய்மையான ஒரு ஆன்மாவா ஒருத்தன் இருக்க முடியாது. ஆனால் இந்தப் பேரியற்கையை உணரும் தருணம்தான் படைப்புகளில் நிகழுதுன்னு நினைக்கிறேன். அந்த தருணத்திற்காகத்தான் எழுதுறோம். அதைநோக்கி எப்பவும் பயணம் செய்துகிட்டிருக்கிறோம்.

முரு :படைப்பு செயல்பாட்டின் போது அறிவை மீறி செயல்படுவதா உணருகிறீர்களா?

ம.பு :இது சாத்தியமா தெரியலை. ஆனால் இதற்கு இடைநிலையிலிருப்பதா நினைக்கிறேன். அறிவுன்ன ஒன்னு எப்பவும் இயங்கிகிட்டேயிருக்கு. அது எல்லாவற்றிற்கும் தீர்வை வழங்கிகிட்டேயிருக்கு. இதுதான் படைப்பையே உருவாக்குதோன்னு தோணுது. கலையை ஒரு அறிவார்த்தமான செயல்பாடுதான்னு நினைக்கிறேன். அறிவோட செயலில்லாமல் ஒரு கதையோ, கவிதையோ எப்படி எழுத முடியும்? ஒரு கத்தியை, சக்கரத்தை எப்படி மனிதன் கண்டுபிடித்தானோ அப்படித்தான் கவிதையையும் அவன் கண்டுபிடிக்கிறான். கவிதை எழுதும்போது நான் ஒருதிட்டவட்டமான படைப்பாளியாய்தான் இருக்கிறேன். அதை ஒழுங்கு செய்றேன். ஆனால் படைப்பிற்கான ஆதாரமான உந்துதல் திட்டம் சார்ந்ததல்ல, அந்த வெளிச்சம் எனக்கு முன்னேயும் பின்னேயும் கடந்து சென்று கொண்டேயிருக்கிறது. ஒரு விதத்தில் அது அதுவரையிலான அறிவையும் தர்க்கத்தையும் கலைக்கவே செய்கிறது.

முரளி : இப்ப புதுசா எழுதுவர்களின் கவிதை மொழி எப்படி இருக்கு?

ம.பு. : கண்டராதித்தன், சங்கரராமசுப்பிரமணியம், மாலதி மைத்ரேயி இவர்களை வாசிக்கும்பொழுது இதுவரைக்கும் கவிதை என்று அவர்கள் மேல் சுமத்தப்பட்டதிலிருந்து மீள முயற்சி செய்கிறார்கள்.

முரளி : கவிதை மௌன வாசிப்பிற்குரியதா சொல்லுதற்குரியதா?

மனு : அதற்கு பொதுவான இலக்கணங்கள் ஏதுமில்லை. மௌனத்தின் அழகையும் சப்தத்தின் வசீகரத்தையும் அந்தத்தருணம்தான் தீர்மானிக்கிறது. சூழலாலும் கேட்பவர்களாலும் தீர்மானிக்கப்படுகிறது. இவை தரும் சௌகர்யங்களுக்கு ஏற்ப எந்த கவிதையையும் வாய்விட்டு வாசிக்கலாம். தனித்திருந்தும் படிக்கலாம். எனக்கு அந்தரங்கமானவர்களிடம் என் கவிதைகளை வாசித்துகாட்டிய தருணங்களில் அக்கவிதைகளை எழுதிய தருணங்களைப்போலவே ஆழமானதாக உணர்ந்திருக்கிறேன். துரதிஷ்டவசமாக வாசிப்பு என்பது ஒரு கௌரவமான கலையாக வளர்க்கப்படவில்லை. மேடைகளில் வாசிக்கப்படும் கவிதைகளில் சொற்க்களின் ஊளைதான் மிஞ்சிகிறது. இந்த ஊளைச்சத்தம் ஒரு நுண்ணுணர்வுள்ள கவியை அச்சுறுத்தி விடுகிறது. அவன் பிறருக்கு வாசித்தல் என்ற வடிவத்தையே மறுக்கிறான். இது சரியல்ல. நம்முடைய கவிதைகள் சொல்லப்படவேண்டும். அவ்வாறு சொல்லுவதன் மூலம் கவிதையின் மொழி மேலும் அசைவையும், உரையாடலின் சாதகத்தையும் அடையும் என்று நம்புகிறேன்.

முரளி : இன்றைய பெண் கவிதை மொழி பற்றி?

மனு : நவீன கவிதையில் ஆண் கவிஞர்களின் நினைவு பரப்பிற்கும், பெண் கவிஞர்களின் நினைவு பரபிற்குமிடையே அடிப்படையான வித்தியாசங்கள் இருக்கின்றன. பெண்களின் இடம் மறுக்கப்படுகிற ஒன்றாகவும் அவர்களுடைய உடல் தீவிர கலாச்சார கண்காணிப்புக்கு உட்பட்டதாகவும் இருக்கிறது. பெரும்பாலான பெண் கவிகள் இதை வெவ்வேறு ரூபங்களில் எழுதிவந்திருகிறார்கள். இங்கு ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. பெண் அவர்களுக்கென ஒரு தனித்ததுவமான கவிதை மொழியை உருவாக்க வேண்டுமென்று. இலக்கிய வாசகனாக இந்தக்கருத்தை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. எல்லா படைப்பாளிகளுமே அவர்கள் புழங்குகிற இலக்கிய மொழியிலிருந்துதான் தமக்கான மொழிச்சட்டகத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள். பிறகு தம்முடைய மனம் அனுபவம் முதலியவற்றின் தனித்துவமான வெளிச்சத்தால் அம்மொழியை புதுப்பிக்கிறார்கள். பெண் உடலின் பிரத்யேக அம்சங்களை எழுதுவதுதான் பெண் மொழி என யாராவது வலியுறுத்தினால் அதைவிட அபத்தம் ஒன்று இல்லை. ஒரு பெண் இரண்டு தடங்களில் பயணிக்கிறாள். ஒன்று இயற்கை சார்ந்த வெளி. இன்னொன்று கலாச்சார வெளி. அவள் இந்தப பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் பற்றி எழுதவேண்டியவளாக இருக்கிறாள். பல பெண் கவிஞர்களிடம் வீடும் குடும்பமும்தான் அவர்களது படைப்பிற்கான களமாக இருக்கிறது. அது அவர்களுக்கு நிர்பந்திக்கப்பட்ட களன். அவர்களுடைய இருத்தல் அதைக் கடக்கும் போது அவர்கள் மேலும் சொல்வார்கள்.

முரளி : தமிழில் நம்பிக்¬க்குரிய பெண் கவிஞர்களாக யாரைக் குறிப்பிடுவீர்கள்?

மனு : குட்டி ரேவதி, சல்மா, கனிமொழி, தேன்மொழி, வெண்ணிலா, மாலதி மைத்திரேயி போன்றவர்கள் தனித்த அடையாளங்களுடன் உருவாகிவருகிறார்கள் என்று தோன்றுகிறது.

முரளி : புலம்பெயந்தோர் இலக்கியம்பற்றி உங்கள் அபிப்பிராயம்?

மனு : ஈழத்திலிருந்து அகதிகளாக வரும் தமிழர்களுக்கு நாம் ஒழுங்காக சோறும் இருக்க இடமும் கொடுக்காவிட்டாலும் இதுபோன்ற இலக்கிய அங்கிகாரங்கள் வழங்கி நம்முடைய இனப்பற்றையும் மனிதாபிமானத்தையும் வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. ஐரோப்பிய நாடுகளில் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் இலக்கியவாதிகளைச் சுரண்டுவதற்காக இங்குள்ள நவீன இலக்கியவாதிகள் செய்யும் தந்திரங்கள் வெளிப்படையானவை. ஈழத்து மற்றும் புலம் பெயர்ந்தோர் இலக்கியத்தைப் பொறுத்தவரை செறிவும் தீவிரமும் கூடிய படைப்புகள் இனிமேல்தான் வரவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு வரலாறு மிகவும் குரூரமான அனுபவங்களை அளித்திருக்கிறது. வன்முறையும் இடப்பெயர்வும் அவர்களது முடிவில்லாதத் துயரங்களாகிவிட்டன. இந்த அனுபவம் எந்த அளவுக்கு உக்கிரமான கலை வடிவம் பெற்றிருக்கிறது என்ற கேள்வியை நாம் நேர்மையாக எதிர்கொள்ளவேண்டும். தமிழகத்துக் கவிஞர்களிடம் இல்லாத அனுபவங்கள் ஈழத்துக்கவிஞர்களிடம் இருக்கிறது என்பதனாலேயே ஈழத்துக் கவிதைகள் மேன்மையானவை என்று சொல்லிவிடமுடியுமா? தமிழகத்துக் கவிதைகளைவவிட ஈழத்துக் கவிதைகள் நவீனத்துவ உணர்வு குன்றியவை. மரபின் சுமையினால் அழுத்தப்படுபவை. தமிழகத்தின் குறிப்பிடத்தக்க சிறுகதைகள், நாவல்கள் அளவிற்கு கலைநேர்த்திக் கொண்ட படைப்புகள் ஈழ மற்றும் புலம் பெயர்ந்த படைப்பாளிகளிடமிருந்து வந்திருக்கிறதா என்ற கேள்வியை நாம் எழுப்பிக் கொள்ள வேண்டும். ஈழம் மகத்தான பேரிலக்கியங்களை உருவாக்கக் கூடிய விளை நிலமாக இருக்கலாம். அதற்காக நாம் காத்திருக்கவேண்டும்.

முரளி : மார்க்சிய இலக்கியம் உங்களை எந்த விதத்தில் பாதித்தது? யாருடைய எழுத்து?

ம.பு: நான் எந்த உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்ற விழிப்பையும் தரிசனத்தையும் மார்க்சியமே எனக்கு அளித்தது. என்னுடைய பதினெட்டாவது வயதில் எங்கல்ஸின் குடும்பம், தனிச்சொத்து, அரசு, ஆகியவற்றினதுத் தோற்றமும் வளர்ச்சியும் படித்து அது எனக்குள் சரித்திரத்தின் பாதைகளை திறந்து விட்டது. தொடர்ந்து மாஸ்கோ வெளியீடுகளாக வந்த மார்க்சிய லெனினிய நூல்களும் தமிழகத்தில் இருந்து வந்த புதிய கலாசாரம், மனஓசை போன்ற இதழ்களும் இந்த உலகை மாற்றியமைப்பது சம்பந்தமான எனது எண்ணங்களைத் தீவிரப்படுத்தின. அப்போது எனது இலக்கிய பார்வைகளும் அதைச் சார்ந்தே அமைந்திருந்தன. டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு படித்தபோது நன்மை தீமை குறித்த ஆழமான அறவியல் கேள்விகளை முதன்முதலாக வாழ்க்கையில் சந்தித்தேன். கார்க்கி எனது ஆதர்சமாக இருந்தார். தாய் நாவல் ஒரு தேவையை ஒட்டிய படைப்பு என்பதற்கு மேல் அது ஆழமான அனுபவம் எதனையும் கொடுக்கவில்லை. ஆனால், மூவர், அர்த்தமோனவ்கள், எனது பல்கலைக் கழகங்கள், அமெரிக்காவிலே போன்ற படைப்புகள்தான் கார்க்கியின் ஆளுமையை பிரமாண்டமாக விரித்துக் காட்டியது. துர்கனேவின் படைப்புகள் உருவாக்கிய கனவுகள் மிகவும் முக்கியமானவையே. சிங்கிஸ் ஐத்மாத்தவ் தன்னுடைய நாவல்களில் உருவாக்கிய நிலபரப்பு என் கனவு வெளியாக இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக தாஸ்தாவஸ்கி மனித சாரத்தின் மீது நிகழ்த்திய குறுக்கீடுகள்தான் ருசிய இலக்கியத்தின் மாபெரும் கொடை. என்னுடைய இலக்கியம் சார்ந்த நுண்ணுணர்வை நான் ருசிய இலக்கியத்திலிருந்துதான் பெற்றுகொண்டேன்.

முரளி : சோசலிசத்தின் வீழ்ச்சி உங்களை எவ்வாறு பாதித்தது?

மனு : மார்க்சியத்தின் தோல்வியும் சோசலிச நாடுகளின் வீழ்ச்சியும் என்னுடைய தனிப்பட்ட வீழ்ச்சியாக ஒரு காலகட்டத்தில் இருந்தது. லெனின் சிலை வீழ்த்தப்பட்டிருந்த காட்சியை முதன் முதலாக புகைப்படத்தில் பார்த்தபோது மனமுடைந்து போனேன். ஆனால், அந்த அரசுகள் வீழ்ச்சியடைந்தது வரலாற்று ரீதியான நியாயம்தான் என்று தோன்றுகிறது. அவர்கள் மனிதனை ஒரு தொழிற்சாலையில் உருக்கிவிடமுடியும் என்று நம்பினார்கள். மனிதக் கொலை அல்லது சித்ரவதைக்கு எதிரான அறவியல் பார்வையை மார்க்சியம் வளர்க்கெடுக்கத் தவறிவிட்டது. தனிமனித சுதந்திரம் எந்த நெருக்கடியிலும் மதிப்பு வாய்ந்தது என்பதையும் ஒருமுறை அதை விட்டுக் கொடுத்தால் திரும்பப்பெறுவது அவ்வளவு சுலபமில்லை என்பதையும் புரட்சியாளர்கள் புரிந்து கொள்ளவில்லை. விளைவு படுகொலைகள். பாஸிஸ்டுகள் எதைச் செய்தார்களோ அதையே கம்யூனிஸ்டுகளும் செய்தார்கள். முடிவு வழிமுறைகளை நியாயப்படுத்ததாது என்பதையும் தவறான வழிமுறைகள் தவறான முடிவுகளுக்கே இட்டுச் செல்லும் என்பதையும்தான் சரித்திரம் நமக்குத் திரும்பத் திரும்பச்சொல்கிறது.

முரளி : தமிழ்நாட்டைப்பொறுத்தவரை பெரியார் பங்கு முக்கியமானதில்லையா? உங்களுடைய கருத்தென்ன?

மனு : பெரியாரை என்னுடைய பதினைந்தாவது வயதில் படித்தேன். அவர் என்னை நாத்திகனாக்கினார். கலாசார ரீதியாக ஒரு மனிதனுக்கு இந்த சமூகத்தில் நேர்ந்து கொண்டிருக்கிற அழிவு என்ன என்பதை நான் பெரியாரிடமிருந்தான் கற்றுக்கொண்டேன். பல விதங்களிலும் பெரியாரின் குரல் தமிழ்சமூகத்தில் பகுத்தறிவு சார்ந்த முதல் திறப்பாக இருந்தது. வேறு எந்த இயக்கமும் இத்தகைய ஒரு திறப்பிற்கான உந்துதலைக் கொடுக்கவில்லை. பெண் அடிமை, சாதி, மூடநம்பிக்கைகள் மூடுண்ட மனம் போன்ற தீமைகளுக்கெதிராக சமரசமற்றுப்போராடினார். தமிழக வரலாற்றில் அவருக்கு நிகரான ஒரு போராளியை நான் சுட்டிக்காட்ட இயலாது. ஆனால் பெரியாரின் சீர்திருத்த இயக்கம் ஒரு மறுமலர்ச்சியாக மாறுவதற்கு பதில் பண்பாட்டுச் சீரழிவாக மாறியதுதான் நம்முடைய காலத்தின் பெரும் அவலம். பெரியாரைப்பொருத்தவரை அவருடைய சிந்தனையிலும் இயக்கத்திலும் இருந்த இரண்டு பெரும் குறைபாடுகள் அவர் தனிமனித வாழ்க்கையில் ஆன்மீகத்திற்கான இடத்தையும் கலைக்கான இடத்தையும் முற்றாக மறுத்தார் என்பதே. இந்த இரண்டு இடங்களும் வறட்டுப்பகுத்தறிவினால் இட்டு நிரப்பமுடியாத இடங்களாகும். சமூகம் பெரியாரின் பகுத்தறிவை தோற்கடித்துவிட்டது. இந்தத்தோல்வி ஒரு விதத்தில் தமிழனின் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு பின்னடைவேயாகும்.

முரளி : திராவிட இயக்கத்தின் பங்களிப்பை நாம் முற்றாக மறுக்க முடியுமா?

மனு : நீங்கள் சொல்வது சரிதான். ஒவ்வொரு இயக்கமும் சமூக கலாச்சார பரப்பில் சில புதிய எல்லைகளை உருவாக்கவே செய்கிறது. பின்னர் அது தான் வீழ்ச்சியைச் சந்திக்கிறது. ஆனால் அது உருவாக்கிய விளைவுகள் சமூகத்தில் நீடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியமான கேள்வி. பெரியாரின் இயக்கம் நம்முடைய சமூக கலாச்சாரபொதுவாழ்வில் எத்தகைய பாதிப்புகளைக் கொண்டிருக்கிறது என்பதை நாம் யோசிக்க வேண்டும். இன்று கலாச்சார தளத்திலோ அரசியல் தளத்திலோ அறிவு சார்ந்த செயல்பாடுகளுக்கான இடம் சுருங்கிவிட்டது. வெகுசன அரசியலும் வெகுசன ஊடகங்களும் மக்களை பெருமளவுக்கு பைத்திய நிலைக்கு இட்டுச் சென்றுவிட்டன. அடித்தட்டு மக்கள் கானல் நீர்போன்ற நம்பிக்கைகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மத்திய தரவர்க்கமோ இயலாமையின் மொத்த உருவமாக இருக்கிறது. ஒரு வலுவான சிந்தனை சார்ந்த இயக்கமும் இன்று நமக்கில்லை. பெரியாருக்குப் பின் நமக்கு இருப்பது பெரும் வெற்றிடம்.

முரளி : பத்திரிகை துறைக்கு எப்படி வந்தீர்கள்?

மனு : சின்ன வயசிலிருந்தே பத்திரிக்கை நடத்துவது என்பது பெரிய கனவா இருந்தது. அப்போதே என் சின்ன வயசுலேயே வெவ்வேறு நண்பர்களுடன் சேர்ந்து பத்திரிகைகள் ஆரம்பிக்க முயற்சி பண்ணியிருக்கேன். திருச்சியிலிருந்து வெளிவந்த சோலைக்குயில்கள் சுட்டும் விழிச்சுடர் ஆகிய பத்திரிக்கைகளோடு நெருக்கமான உறவு இருந்தது. கோவை ஞானி நடத்திய நிகழ் பத்திரிக்கை என் எழுத்துகளுக்கு நல்ல கவனத்ததை அளித்தது. 1993 இறுதியில் கண்ணனும் நானும் லஷ்மி மணிவண்ணனும் சேர்ந்து காலச்சுவடு இதழை மீண்டும் தொடங்கினோம். சில இதழ்களுக்கப்பின் மணிவண்ணன் விலகிக் கொண்டார். காலச் சுவடு இதழ் பதிப்பகம் வழியாக சில ஆக்கப்பூர்வமான கரியங்களை செய்த நிறைவு இருக்கிறது.

முரளி : படைப்பாளியாக இருப்பதற்கும் இதழாசிரியராக இருப்பதற்கும் அடிப்படையில் என்ன வேறுபாட்டை உணர்கிறீர்கள்?

வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. படைப்பாளி பத்திரிகையாளனாக வேலை செய்யும்போது அவனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் ஆசாபாசங்களும் இந்தவேலையோடு கலந்துவிடுகின்றன. அதிலும் ஒரு படைப்பாளி வெகுசன ஊடங்களில் வேலை செய்ய நேர்ந்தால் இந்தச் சிக்கல் இன்னும் அதிகரித்து விடுகிறது. என்னைப் பொறுத்தவரை இலக்கியம் சார்ந்த இதழில் பணியாற்றியதை படைப்பியக்கத்தில் ஒரு பலமாகவே உணர்ந்து வந்திருக்கிறேன்.

(மார்ச் 2001-ல் பதிவு செய்யப்பட்ட நேர்காணல்)

சிறுகதை

ஜீ.முருகன் ( G Murugan )

விருந்தோம்பல்

ஆரோக்கியதாஸ்தான் முதன்முதலாக என்னை அந்த அலுவலகத்திற்கு அழைத்துக்கொண்டுபோனான். படிப்பை முடித்துவிட்டு ஊரில் இருந்த காலமது. அப்பாவுடன் விவசாயத்தில் ஈடுபாடுகாட்டாமல் ஊர்ச் சுற்றிக்கொண்டிருந்தபோதுதான் நூல்நிலையத்தில் அவனை சந்தித்தேன். நூலகருக்கான டிப்ளமோவை முடித்துவிட்டு நகர நூல்நிலையத்தில் அவன் தற்காலிகப் பணியில் இருந்தான். மேல்நிலை வகுப்பில் நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்தவர்கள். அதன் பிறகு ஒவ்வொருமுறை நூல்நிலையம் போகும்போதும் அவனை சந்தித்துப் பேசுவது வழக்கமாக இருந்தது. புத்தகங்கள் பெறுவதற்காக என்ற நிமித்தம் போய் அவனை சந்திப்பதற்காகவே அங்கு செல்லத் தொடங்கினேன்.

என்னிடம் இருந்த இலக்கிய ஈடுபாடுதான் அவனுடைய கட்சி அலுவலகத்திற்கு என்னை அழைத்துக்கொண்டுபோகக் காரணமாக இருந்திருக்கவேண்டும். அவன் அந்த கட்சியில் தீவிர உறுப்பினனாக இயங்கி வந்தான். அவனுடைய பேச்சு, விருப்பங்கள், கனவுகள் எல்லாமே வேறுவிதமாக இருந்தன. சராசரியான என்னைப்போன்ற இளைஞர்களிடமிருந்து அவன் தனித்துத் தெரிந்தான். படிக்கும் காலத்தில் சினிமாப் பாடல்களை நன்றாகப் பாடுவான் என்பதுதான் அவனிடம் நான் கண்டிருந்தத் தனித்தன்மை. அரசியல், சினிமா, பத்திரிகைகள், வியாபாரப் போக்குகள் குறித்து அவனுடைய காட்டமான விமர்சனங்கள் என்னை திணறச்செய்தன. இதுவரை என்னை கட்டமைத்திருந்த ஆதார சக்திகள் எல்லாம் நொருங்கி விழத் தொடங்கியிருந்தன. அந்த சூழ்நிலையில் ஆரோக்கியதாஸ் அறிமுகப்படுத்திய இரண்டு விஷயங்கள் இன்றும் என்னை வசீகரித்துக்கொண்டிருக்கின்றன; ஒன்று அந்த கட்சி அலுவலகம் மற்றொன்று தோழர் கோபி.

கட்சி அலுவலகம் ஒரு வீட்டின் மாடியில் இயங்கிவந்தது. சுதையும், ஒட்டுக்கற்களாலும், மரத்தாலும் பின்னப்பட்ட ஒரு பழைய வீடு அது. அந்தப்பகுதியில் உள்ளவர்கள் அதை பேய்பங்களா என்றே குறிப்பிடுவது வழக்கம். ஒரு கட்சிக்கொடியும், துருபிடித்த விளம்பரப்பலகையும்தான் அங்கு ஒரு அலுவலகம் இயங்கி வந்ததை உறுதிப்படுத்தின. வீட்டின் ஒட்டுமொத்த தோற்றம் சுபிட்சமான ஒரு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கொடுக்குமா என்பது சந்தேகம்தான்.

மேல்மாடியில் மொத்தம் நான்கு அறைகள். அதில் இரண்டை கட்சி அலுவலகமாக உபயோகித்துவந்தார்கள். இரண்டு அறைகளும் ஒரு கதவால் இணைக்கப்பட்டிருந்தன. மரத்தாலான ஒரு ஜோடி மேஜை நாற்காலி, பத்து பதினைந்து ஸ்டீல் சேர்கள், ஒரு ஸ்டீல் பீரோ, பீரோவைப்போல வடிவமைக்கப்பட்ட மர அலமாரி, கோரமான ஒரு இசையை எழுப்பும் மின்விசிறி, பென்டுலம் பொருத்தப்பட்ட ஒரு சுவர்கடிகாரம்(பென்டுலம் அசையும் போது அது வினோத ஜந்துபோல ஆச்சர்யப்படுத்தும்) இவைதான் அந்த அலுவலகத்தின் சித்திரம். இந்த சித்திரத்தை எந்த விதத்திலும் சிதைத்துவிடாமல் அந்த எளிய தோற்றத்திற்கு வலுவூட்டிச் சென்றார்கள் அங்கு வந்து போகும் தோழர்கள். நவநாகரீகத்திற்கு சற்றும் இடம்தராத ஒரு தன்மை அங்கே கடைபிடிக்கப்பட்டுவந்தது.

பகலில் அலுவலகம் போலவும் இரவில் சத்திரம் போலவும் அது இயங்கிவந்தது. சில நேரங்களில் மனித சந்தடியற்று பாறைகளுக்கிடையிலான நிசப்தத்தில் அது மூழ்கிப்போயிருக்கும். கதவுகள் பிடுங்கப்பட்டிருந்த ஜன்னல்களின் வழியே வரும் குளிர்ந்த காற்றால் சிலபொழுது தழுவப்படுவீர்கள். இந்த நிசப்தத்தால் வசீகரிக்கப்பட்டவனாக பகல்பொழுதுகளில் அங்கே நான் செல்வதுண்டு. புத்தகங்கள் படிக்கவும், சிந்தனையின்றி உறையவும் அது என்னை அழைத்தது.

இரவில் ஆரோக்கியதாஸ் அங்குதான் உறங்கினான். சில இரவுகள் நானும் அங்கே தங்கியிருக்கிறேன். வழக்கமாக இரண்டு தோழர்கள் அங்குவந்து உறங்கிச் செல்வார்கள். பின்னிரவு நேரத்தில் மூத்திரம் பெய்வதற்கு செல்வதென்றால் மற்றவர்களை மிதித்து துவைத்துக்கொண்டுதான் செல்லவேண்டியிருக்கும். அவ்வளவு பேர் அங்கே படுத்திருப்பார்கள். அவர்களெல்லாம் யார், எப்போது வந்து படுத்தார்கள், கட்சிக்கும் அவர்களுக்கும் என்ன சம்பந்தம் என்பது யாருக்கும் தெரியாது. அது ஒரு புகலிடம். டீக்கடைகளில் வேலை செய்யும் பையன்கள், நண்பர்களுடன் சினிமாவுக்கு போய்விட்டு வீட்டுக்குப் போக பயந்த போக்கிரி இளைஞர்கள், ஏதோ வேலையாக நகரத்திற்கு வந்து கடைசி பேருந்தைத் தவறவிட்ட விவசாயத் தோழர்கள், தோழர்களின் வருந்தினர்கள், நண்பர்கள், என விதவிதமான பேர்வழிகள் வந்து தங்கிச் சென்றார்கள். அங்கு வருபவர்களைத் திரட்டினாலே பெரிய புரட்சி ஒன்றை நடத்திக்காட்டிவிடலாம் என்று எண்ணத்தோன்றும். குடிப்பதற்கு தண்ணீர், உண்ண உணவு, கழிப்பறை வசதிகளை அதனால் வழங்க முடியவில்லை என்றாலும் அதன் விருந்தோம்மல் மெச்சக்கூடியதாகவே இருந்தது.

அந்தப் புராதன வீட்டின் தரைத்தளத்தில் வீட்டு உரிமையாளன் குடியிருந்தான். பங்காளிகள் இருவருக்கு சொந்தமான வீடு அது. அலுவலகம் இருந்த இரண்டு அறைகளும் கீழே குடியிருந்தவனின் தம்பிக்கு பங்காக வந்தது. அவன் இதை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு எங்கோ குடியிருந்தான். மேல் மாடிக்கு நேரடியான மின்இணைப்பு இல்லை. கீழே உள்ள வீட்டிலிருந்துதான் மின்சாரம் மாடிக்கு வந்துகொண்டிருந்தது. அதற்குத் தனியாக சப்மீட்டர் வைத்து கட்டணம் செலுத்திவந்தார்கள்.

கீழே குடியிருந்தவன் பகல் நேரத்தில்கூட குடித்திருப்பான். அவனுக்கு திடகாத்திரமான உடல்வாகு. அவனுடைய மனைவி அவனைவிட திடகாத்திரமானவள். இந்த திடகாத்திரனுக்கும் திடகாத்திரிக்கும் இரவில் பெரும்போர் மூண்டு கட்டிடமே அதிரத்தொடங்கும். பகலில் தோழர்களை சந்தித்துவிட்டால் சிரிப்பான். நான் அப்படித்தான் கண்டுகொள்ளாதீர்கள் என்பது போல இருக்கும். குடித்துவிட்டால் அவனுக்கு எல்லோரும் சமம்தான். தோழர்களாக இருந்தாலும் மனைவியாக இருந்தாலும் எதிரிகள்தான். சிலபொழுது தோழர்களுக்கிடையே கடும்வாக்குவாதம் ஏற்பட்டு உரத்த குரல் எழும்போது ளஎன்னடா ராத்திரியிலகூட கோஷம் போட்றிங்க, படுத்து தூங்க மாட்டீங்கஹ என்று குரல் கேட்கும். இது எச்சரிக்கை. மேலும் விவாதம் தொடர்ந்தால் சட்டென்று இருள்கவியும். மின்விசிறி நின்று போகும்.

அவனுக்கு மூன்று பெண்பிள்ளைகள். நடுப்பெண்ணுக்கு அவளுடைய அம்மாவின் உடல்வாகு. மற்ற இருவரும் அழகிகள் ரகம். கடைசிபெண் கல்லூரிக்கு போய்வந்துகொண்டிருந்தாள். என்ன படிக்கிறாள் என்பது பற்றி எந்த தோழருக்கும் தெரியாது. இந்த வசீகரங்கள் அலுவலகத்தில் பொருட்படுத்தப்படாததாகவே இருந்தன. இது வேறு உலகம். அது வேறு உலகம். அந்த அலுவலகம் ஒரு மடம். தோழர்கள்தான் சாமியார்கள். தோழர்களெல்லாம் இரண்டு ஜட்டி போட்டுக்கொண்டிருப்பார்களோ என்று என்னத் தோன்றும். மதுவும், மாதுவும் தடைசெய்யப்பட்டிருந்தன. அவர்களுடைய அக்கரையெல்லாம் சமூகம், பிரச்சனைகள், போராட்டம்.

இவைபோக அந்த புராதன கட்டிடத்தில் இன்னொரு உலகம் இருந்தது. அந்த உலகம் அலுவலக அறைக்கு எதிர்ப்பக்கத்தில் மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் சுழன்றுகொண்டிருந்தது. கீழ்வீட்டுக்காரனின் தம்பி மகனால் நிர்மாணிக்கப்பட்ட உலகமது. பகல் பொழுதுகளில் சீட்டாட்டக் கூச்சல், முன்னிரவில் மதுக்குப்பிகளின் சப்தங்கள், பின்னிரவில் பெண்களின் சிணுங்கல்கள். சினிமா கதாநாயகர்களைப் பார்த்துத்தான் இளைஞர்கள் கெட்டுக்கொண்டிருந்தார்கள் என்றால் இவன் வில்லன்களைப்பார்த்து கெட்டிருந்தான். தோழர்கள் புரட்சியை எங்கிருந்து தொடங்குவது என்ற குழப்பத்தில் இருந்தார்கள். அலுவலகம் இருந்த இடம் அவனுக்குச் சொந்தமென்பதால் கையைப்பிசையவேண்டிய நிலை. இந்த நகரத்தில் இதைவிட சகாயமான வாடகைக்கு வேறு எங்கே இடம் கிடைக்கும்?

அந்த வீட்டின் கூரை இற்று விழந்துகொண்டிருந்தது. நடக்கும்போதும், உட்கார்ந்திருக்கும்போதும், உறங்கும்போதும் சமூகநிகழ்வுகளிடம் மட்டுமல்ல இந்த வீட்டிலும் அவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியிருந்தது. ஜன்னல்கள், கதவுகள், அலமாரிகள், மர ரீப்பர்கள், மின் விளக்குகள் என அந்த வீட்டிலிருந்து ஒவ்வொன்றாகக் காணாமல் போய்க்கொண்டிருந்தன. ஒரு நாள் அலுவலக பூட்டு காணாமல் போனபோதுதான் தோழர்கள் அதிர்ந்து போனார்கள். கீழ்வீட்டுக்காரனின் மனைவியிடம் முறையிட்டு பூட்டை திரும்பப் பெற்றார்கள்.

இந்த வீட்டை விட வசீகரத்திற்கும் விருந்தோம்பலுக்கும் பேர்போனவர் மாவட்ட இலக்கிய மன்றச் செயலாளர் தோழர் கோபிதான். கட்சியில் தவிர்க்கமுடியாத ஒரு நபராக அவர் இருந்தார். கட்சியின் மற்ற உறுப்பினர்களைவிட அவர்தான் பரவலாக அறியப்பட்டிருந்தார். அவர் நடத்தும் இலக்கிய கூட்டங்கள் தமிழ்நாடு முழுவதும் பிரசித்தம். அதை ளநற்செய்தி கூட்டம்ஹ என்று கிண்டல் செய்வான் ஆரோக்கியதாஸ். முதன்முதலாக நான் அவரை சந்தித்த அன்று பிரபல எழுத்தாளர் கைலாசநாதனை சென்னையில் சந்தித்துப் பேசியதுபற்றி அலுவலகத்தில் உற்சாகமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். அந்தப் பேச்சிலிருந்தே தோழர் கோபிக்கும் அவருக்கும் இருந்த பாசப்பிணைப்பை நான் உணர்ந்துகொண்டேன். வியப்பாக இருந்தது, நானும் அவருடைய எழுத்துக்களை வாசித்திருக்கிறேன் என்றாலும் இப்படி ஒரு வாய்ப்பு எனக்குக் கிடைத்ததே இல்லை. அடுத்த ளதிண்ணைஹ நிகழ்வுக்கு அவர் பேச வருவதாக ஒப்புக்கொண்டிருக்கிறாராம். அவசியம் அவரை சந்தித்து ஓரிரு வார்த்தையாவது பேசிவிடவேண்டும் என்ற ஆவல் எழுந்தது.

ளளகீழபோயி பிரமாதமான ஒரு டீ சாப்பிட்டு வரலாம்ஹஹ என்று தோழர் கோபி என்னையும் ஆரோக்கியதாசையும் அழைத்துக்கொண்டுபோனார். டீக்கடை அலுவலகத்திலிருந்து தொலைவில் இருந்தது. நாங்கள் கடந்து சென்ற நான்கைந்து டீக்கடைகளும் மோசமான டீயை சப்ளை செய்து ஜனங்களிடமிருந்து காசு பறித்துக்கொண்டிருக்கின்றன என்பதை தோழர் கோபி இதன் மூலம் எங்களுக்கு உணர்த்தினார்.

தோழர் தாஸ், ரெண்டு சிகரெட் வாங்கியார்றிங்களா என்றார் தோழர் கோபி.

பக்கத்துக்கடைக்குப்போய் ஆரோக்கியதாஸ் சிகரெட் வாங்கிவந்து கொடுத்தான்.

சிகரெட்டை புகைத்துக்கொண்டே மாஸ்டர், பிரமாதமா மூணு டீ போடுங்க பார்க்கலாம் என்றார். டீ வருவதற்குள் புகையின் பின்னணியில் ஒரு குட்டி பிரசங்கம்.

தோழர் தாஸ், நமக்கு நல்ல டீ வேணும், நல்ல சிகரெட் வேணும், டிப்டாப்பா துணி போட்டுக்கணும், ஆனா குடிக்க தண்ணிகூட இல்லாம எவ்வளவுபேர் கஷ்டப்பட்டுக்கிட்டு கிடக்கிறாங்க. நேத்து ஒரு தோழர் சொன்னார், ரெண்டு நாளாச்சாம் அவருடைய வீட்டுல சமைச்சி. முதலாளி சம்பள பாக்கி தர்லையாம்… சோகத்தை உணர்த்தும் ஒரு மௌனத்திற்குப்பிறகு சொன்னார், “அழணும்போல இருந்தது

டீ பிரமாதமாகத் தெரியவில்லை. ஆனால் அன்று மதியம் தோழர் கோபி ரஹ்மான் ஹோட்டலில் வாங்கிக்கொடுத்த கோழிபிரியாணி பிரமாதம்.

ஆபாச சினிமாக்களுக்கெதிராகவும், ஆபாச இலக்கியத்திற்கெதிராகவும் நடந்த போராட்டங்களில் தோழர் கோபிக்கு பெரும்பங்குண்டு. இந்த நச்சு கலாச்சாரத்திற்கெதிராக தோழர்களைத்திரட்டி அவர் செய்த தொண்டை நாடே அறியும். இதற்காக தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் இரவு முழுவதும் மாடுகளுடன் அலைந்து ஆபாச போஸ்டர்களை கிழித்தார்கள். கோழைகளைப்போல தியேட்டருக்கு வெளியே நிற்காமல் வீரர்களாக தியேட்டருக்கு உள்ளேயே சென்று ஆபாச காட்சிகள் வரும்போது எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினார்கள். கோஷம் குழப்பமாகி ஆதரவுக்கூச்சல் என்று தியேட்டர் உரிமையாளர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதோ என்னவோ தங்களின் சேவையை இன்னும் உற்சாகத்துடன் செய்துகொண்டிருந்தார்கள். பிரபல ஆங்கிலோ இந்திய எழுத்தாளர் அமிதாவ் கோஷ் எழுதிய நிழல் கோடுகள் சாகித்திய அக்காடமி பரிசு பெற்று திலகவதி அவர்களால் தமிழில் மொழிபெயர்க்ப்பட்டு வந்தபோது தோழர் கோபி மற்ற தோழர்களுடன் சேர்ந்து கண்டனத் தீர்மானம் நிறைவேற்றினார். அதில் இடம்பெறும் ஆபாச பக்கங்கள் எரிக்கப்பட்டன. இதே காரணத்திற்காக பிரபல மலையாள எழுத்தாளர் பால் சக்கரியா கண்டனத்திற்குள்ளானார். அவர் சென்னை வந்தபோது தோழர்கள் கறுப்புக்கொடிக் காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள். இந்த ஒரு சேவைக்காகவாவது தோழர் கோபியை பாராட்டியே ஆகவேண்டும். தமிழ் கலாச்சாரத்தின்மேல் அதன் புனிதத்தின்மேல் அவருக்குள்ள அக்கரையை குறைத்து மதிப்பிடக்கூடாது.

அவருடைய விருந்தோம்பல் பிரசித்தி பெற்றது. யார் அடைக்கலம்தேடி வந்தாலும் உதவிசெய்வதில் அவருக்கிணை அவர்தான். அவர்களுக்கு எப்படிப்பட்ட உதவி வேண்டுமோ அதை செய்துகொடுப்பார். இந்த விஷயத்தில் சினிமாகம்பெனிக்காரர்களிடம் அவர்காட்டிய கறார்த்தன்மைக்காக மற்ற தோழர்கள் இன்னும் அவரை மெச்சிக்கொண்டிருக்கிறார்கள். சினிமாக்காரர்களின்மேல் அவருக்கு பற்று இருந்தாலும் அவர்கள் எடுக்கும் சினிமாக்களை அவர் வெறுத்தார். ஒரு முறை இந்த நகரத்திற்கு வந்து முகாமிட்டிருந்த சினிமா கம்பெனி ஒன்று துணை நடிகர்கள் பற்றாக்குறையை எப்படி தீர்ப்பது என்று தெரியாமல் கோபியை அணுகி, தோழர்களை அனுப்பி உதவுமாறு கேட்டபோது கோபம் கொப்பளிக்க மக்களுக்கு ஊழியம் செய்யவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும்தான் நாங்கள் கட்சி நடத்துகிறோமே தவிர உங்களுடன் சேர்ந்து ஆபாச ஆட்டம் போட அல்ல என்று சொல்லி விரட்டி அடித்தாராம். இந்த விஷயத்தை மறந்துவிட்டுத்தான் அவரைப்பற்றி ஆரோக்கிதாஸ் விமர்சனம் செய்கிறான். அவரின் பிரபல்யத்தின்மேல் அவனுக்கு பொறாமையோ என்றுகூட நினைக்கத்தோன்றியது. இது போன்ற பொதுக்காரியங்களில் ஈடுபடுபவர்கள்மேல் அவதூறுகள் பரப்பப்படுவது சகஜம்தான் என்றாலும் ஆரோக்கியதாஸ் ஏன் இதைச்செய்யவேண்டும்? ஒரு முறை சொன்னான் தோழர் கோபி கட்சியில் இருப்பதே தோழர் என்ற போர்வைக்காகத்தான் என்று. உண்மையான எத்தனையோ தோழர்களின் தியாகங்களால் உருவாக்கப்பட்ட கட்சியில் இருந்துகொண்டே பணக்காரர்களுக்கும், மோசமான அரசியல் கட்சிக்காரர்களுக்கும் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் சேவகம் செய்துகொண்டிருப்பவர் என்று குற்றம் சாட்டினான் அவன்.

தோழர் கோபி பெரிய பந்தல் அமைக்கும் கம்பெனி ஒன்றை நடத்திவந்தார். எந்த கட்சி கூட்டம் நடந்தாலும் இவருடைய கம்பெனி மேடையில்தான் அவர்கள் நின்றாகவேண்டும் இவர் கம்பெனி மைக்கில்தான் பேசியாகவேண்டும். அப்படி ஒரு இணக்கமான உறவு அவருக்கும் அந்த கட்சி தலைவர்களுக்கும். இப்படிப்பட்ட நபர்களைவிட சராசரி முதலாளிகளே மேலானவர்கள் என்றான் ஆரோக்கியதாஸ். அவர்களாவது வேலை செய்பவர்களுக்கு ஒழுங்காக கூலிகொடுத்து வேலை வாங்குவார்கள். இவர் டீ வாங்கிக்கொடுக்கக்கூட காசு இல்லை என்பார். ஒருநாள் ஆவேசத்துடன் சொன்னான், “இதுபோன்ற ஆட்களின் நிழலில் ஒரு கலைஞன்கூட உயிர்த்தெழமாட்டான். ஒரு புல்பூண்டுகூட முளைக்காது.

பந்தல் தொழில் டல்லடிக்கும் காலங்களில்தான் இலக்கியவிழாக்கள். கூத்து, பாட்டு, நவீன நாடகம், பிரபல எழுத்தாளர்கள், சினிமாக்காரர்களின் உரைகள், ஊர் முழுக்க நவீன ஓவியங்கள் வரையப்பட்ட பேனர்கள், போஸ்டர்கள், கண்ணைக்கவரும் அழைப்பிதழ்கள், கல்யாண விருந்து என ஏற்பாடுகள் அமர்க்களப்படும். இலக்கியத்தை பாலூட்டி அல்ல கறியும் சோறும் ஊட்டி வளர்த்துவந்தார் தோழர். விழாவுக்கான பொது வசூலை தோழர்கள் செய்வார்கள். உண்டியல் ஏந்தி கடைகடையாக ஏறி இறங்குவார்கள். தனிவசூலை தோழர் கோபி கவனித்துக்கொள்வார். பெருந்தலைகளிடம் பேசி ஒரு கணிசமான தொகையை நன்கொடையாக பெற்றுக்கொள்வார். ஒவ்வொரு விழா முடிவிலும் தவறாமல் இடம்பெறும் பற்றாக்குறையை தோழர் அவருடைய சுயசம்பாத்தியத்திலிருந்து ஈடுகட்டி கட்சியின் மானத்தைக் காப்பாற்றுவார். இதுதான் அவருடைய பலம். பிரபலங்களை கொண்டுவருவதும் அவ்வளவு லேசுபட்ட காரியமல்ல, அதிலும் சினிமாக்காரர்களை. தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவது போன்றதுதான் அவர்களின் வருகையும். ஜனங்களை கண்டவுடன் உருகத்தொடங்கிவிடுவார்கள். வயிற்றுப் பாட்டிற்காகத்தான் மோசமான படங்களை எடுக்க வேண்டியிருக்கிறதென்றும் வாய்ப்பு கிடைத்தால் நல்லப்படங்களை எடுத்துவிடுவோம் என்றும் உறுதி மொழி பகர்வார்கள். இப்படி சினிமாக்காரர்களையும் முற்போக்கு சக்திகளாக மாற்றும் தந்திரம் தோழர் கோபியைத்தவிர வேறு யாருக்கு வரும்? ஆரோக்கியதாஸ் ஏன் புரிந்துகொள்ளமாட்டேன் என்கிறான்?

ஒருமுறை தோழர் கோபி எழுத்தாளர் கைலாசநாதனைப்பார்க்க ஆரோக்கியதாசையும் உடன் கூட்டிக்கொண்டு போயிருக்கிறார். அவர் ஒரு விடுதியில் தங்கவைக்கப்பட்டிருந்தார். மறுநாள் நடக்கவிருக்கும் ஒரு பள்ளி விழாவுக்கான விருந்தினராக அவர் கலந்துகொள்ளப்போகிறார். இது தோழர் கோபியின் ஏற்பாடு. தான் சார்ந்திருக்கும் கட்சிக்கென்று இல்லாமல் மற்ற நிறுவனங்கள் நடத்தும் விழாக்களுக்கும் பிரபலங்களை ஏற்பாடு செய்து கொடுக்கும் சேவையை செய்துவந்தார் கோபி. இரவு ஒன்பது மணியிருக்கும். பயணக்களைப்புப்போக குளித்துவிட்டு கைபனியனுடன் படுக்கையில் சாய்ந்தபடி ஒரு ஆங்கில தினசரியை பார்துக்கொண்டிருக்கிறார் கைலாசநாதன். தோழர் கோபி உள்ளே நுழைந்தவுடன் எழுந்து தழுவிக்கொள்கிறார் கோபியை. கேப்ரியேல் கார்சியா மார்க்வெஸ்சும் பிடல் காஸ்ட்ரோவும் சந்தித்துக்கொண்டதுபோல இருந்தது அந்தக்காட்சி என்றான் ஆரோக்கியதாஸ். அவருடைய கடைசி பயணத்தின் சிறப்புகளையும் அவருக்கு இந்த நகரத்தில் உருவாகியிருக்கும் ரசிகர் கூட்டங்களையும் பற்றி சிலாகித்து சொல்கிறார் தோழர். அப்படியா?’ என்று மீசையை முறுக்கிவிட்டுக்கொள்கிறார் எழுத்தாளர்.

நேரமாயிடுச்சே சார் சாப்பிடலாமா?”

, பேஷாக

போனமுறை வந்தபோது நெப்போலியன் சாப்பிட்டீங்க…

நெப்போலியனே போதும், பேசுவதற்கு தோதாக போதையும் பிரமாதமாக இருக்கும்

அரை பாட்டில் நெப்போலியன், அரை லிட்டர் லிம்கா, இரண்டு லிட்டர் மினரல் வாட்டர், சிப்ஸ் பாக்கட்…

அய்யாவுக்கு பிடிக்குமென்று ஆட்டுவிரையை வறுத்து கொண்டுவந்திருக்கிறேன்

, பிரமாதம்

தன்னுடன் கொண்டுவந்த பேக்கிலிருந்து பாலிதின் கவரில் சுற்றப்பட்ட ஒரு பொட்டலத்தை எடுத்து ட்ரேயின்மேல் வைக்கிறார் தோழர்.

நீங்க ட்ரிங்ஸ் எடுத்துக்கலையா?”

எனக்கு ட்ரிங்ஸ்சுல இன்ட்ரஸ்ட் இல்ல சார், கம்பெனிக்கு பீர் வேணா குடிக்கிறேன்

ஒரு கிங் பிஷர்

தோழருக்கு?”

அவர் சாப்பிட மாட்டார்

சாப்பிடுவதற்கு சப்பாத்தி, இட்லி

மெனுவையும் பணத்தையும் ஆரோக்கியதாசிடம் கொடுக்கிறார் தோழர். அவனை அழைத்துக்கொண்டு போனதன் நோக்கத்தை அவன் நிறைவேற்றியாகவேண்டும். அரைமணி நேரத்தில் எல்லாம் அங்கே தயாராக இருந்தன. ட்ரேயின் மேலிருந்த இரண்டு கண்ணாடி டம்ளர்களை வாஷ்பேஷனில் கழுவிக்கொண்டுவந்து வைத்தான் ஆரோக்கியதாஸ். தோழர் கோபி பரிமாறினார். பிராந்தியையும், பீரையும் டம்ளர்களில் கச்சிதமாக ஊற்றி அவனை ஆச்சரியப்படவைத்தார்.

ஆரோக்கியதாஸ் சிப்சை எடுத்து கொறித்துக்கொண்டிருந்தான். முதல் ரவுண்ட் முடியும் போதுதான் சிகரெட் இல்லாமல் போனது ஞாபகம் வந்தது கோபிக்கு.

தாஸ் சிகரெட் வாங்கலையா?”

நீங்க சொல்லலியே

சாரி, எவ்வளவு மீதி இருக்கு?”

முப்பது ரூபாய்

ஒரு பாக்கட் வாங்கிக்குங்க போதும்

விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து இறங்கி கீழே உள்ள கடையில் வாங்கிவந்து கொடுத்தான். தோழர் கோபி பவ்வியமாக அமர்ந்து பியரை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து குடித்துக்கொண்டிருந்தார். ஒரு கையில் சிகரெட்.

சார், தோழர் பிரமாதமாகப் பாடுவார். அவரை ஒரு பாட்டுப்பாடச் சொல்லி கேட்போமா?”

, பேஷாக

தோழர் தாஸ், கவிஞர் பரிணாமனோட ஒரு பாட்டு இருக்கே கண்ணம்மாவப்பத்தி

புன்னகையோ எந்தன் கண்ணம்மா…

அதான், பிரமாதமான பாட்டு

ஆரோக்கியதாஸ் பாடுகிறான். பின்னனியில் பிராந்தியும், பீரும், சிகரெட்டும் காலியாகிக்கொண்டிருக்கின்றன.

பிரமாதம், பிரமாதம்

;பாட்டு பிரமாதம், ஆட்டுப்புடுக்கு பிரமாதம்

சிகரெட்டை இழுத்து புகைவிட்டவாறே எழுத்தாளர் கைலாசநாதன் சொன்னார், “கஞ்சா போதைக்கு இணை எதுவுமில்லே, கலைஞனா இருக்கிறவன் ஒருமுறையாவது அதனோட எக்ஸ்ட்ரீமுக்கு போய்வரணும். கிரியேட்டிவிட்டின்னு இவனுங்க சொல்றாங்களே அங்கதான் அது ஊத்தெடுக்குது. அது ஒரு மாய உலகம். கஞ்சா அடிச்சிட்டு பக்பண்ணா எவ்வளவு நேரமானாலும் செய்யலாம். சிவன் பத்து வருஷம் விடாம செஞ்சான்னு புராணம் சொல்லுது. நிச்சயமா அவன் கஞ்சா அடிச்சிட்டுத்தான் செய்திருக்கணும்…

தோழர் கோபி விழுந்து விழுந்து சிரித்தார். ஆரோக்கியதாஸ் பிரபல எழுத்தாளரின் பேச்சை திகைப்பும் ஆச்சர்யமுமாகக் கேட்டுக்கொண்டிருந்தான். அவர் தொடர்ந்து குடித்தபடி தமிழ் கலாச்சார எல்லைகளைக் கடந்து, ஆப்ரிக்காவைத்தாண்டி, அமெரிக்காவைத் தாண்டி பேசிக்கொண்டிருந்தார். ஹோமோ எழுத்தாளர்கள், லெஸ்பியன் எழுத்தாளர்கள், பெண் எழுத்தாளர்களின் காதல் விவகாரங்கள், பெண்களுக்காக அவர்மேற்கொண்ட வீரதீர சாகசங்கள் என சிகரெட்டுக்களுடன் சிருங்கார வார்த்தைகளாகப் புகைந்துகொண்டிருக்கின்றன.

ஆரோக்கியதாசுக்கு ஏற்பட்டிருந்த வெறுப்புணர்வை மட்டுப்படுத்திக்கொண்டு அவரிடம் கேட்டிருக்கிறான், “இது போன்ற பாலியல் விஷயங்களை நீங்கள் ஏன் எழுத்தில் முன் வைப்பதில்லை?”

உதைக்க வருவானுங்க. ஏன் நீங்களேகூட இது மாதிரி கூப்பிட்டு உபச்சாரம் பண்ணுவிங்களா என்ன?”

எழுத்து வேற வாழ்க்கை வேறையா?”

அப்படித்தான் இருக்கணும். இலைமறைவு காய்மறைவா சொல்லிட்டுப் போகணும். அப்பத்தான் பத்திரிகைக்காரன் போடுவான். ஆராய்ச்சி பண்ணிங்கன்னா இந்த ஆளு வெற ரகம் என்று முத்திரை குத்தி தூர அனுப்பிடுவான். அதுக்குத்தான் நடிகைங்களோட படம் இருக்குதே

எல்லாம் முடியும் போது நடுஇரவு கடந்து விட்டிருந்தது. இனிமேல் அலுவலகத்திற்கோ வீட்டுக்கோ தன்னால் போகமுடியாது என்பதால் இங்கேயே படுத்துக்கொள்வதாக சொல்லியிருக்கிறான் ஆரோக்கியதாஸ். ஒன்றும் பிரச்சனை இல்லை என்று எழுத்தாளரும் ஒப்புதல் தெரிவிக்க தயக்கத்துடன் வெளியே புறப்பட்டு போனாராம் தோழர். கீழே ஒரு போர்வையை விரித்து படுத்துக்கொண்டான். படுத்தவுடன் அவனுக்கு தூங்குவது வழக்கம். இன்று அசதிவேறு. உடனே தூங்கிப்போனான். கனவிலா நிஜத்திலா என்று தெரியவில்லை பார்வதிதேவியின் கதறல் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது என்றான் ஆரோக்கியதாஸ்.

இரை

ஜே.கே.பிரதாப்

தாத்தா தோளிலிருக்கும் துண்டை உதறி தலையில் கட்டியபடி ளஆச்சி, போகலாம்ஹ எனச் சொல்லும்வரை நின்றேதான் ஆகவேண்டும். பாட்டி வந்து தாத்தாவிடம் மந்திரம் போல் ஏதோ ஒன்றைச் சொல்ல, தாத்தா அண்ணாந்து ஒழக்கோல் நட்சத்திரங்களைப் பார்க்கிறார். வரக்கண்ணன், துரை அண்ணன், மோகன் மற்றும் பக்கத்துவீட்டுப் பையன்கள் என தாத்தாவின் பின்னால் அணிவகுத்தோம். தாத்தாவுக்கு முன்னால் மாயன் நடந்தது. எங்களுக்கு முன்னமே அது தயாராகி விட்டிருந்தது. எங்களைவிட அதனிடம்தான் பரபரப்பு அதிகமாகத் தெரிந்தது. தாத்தாவையே சுற்றி சுற்றி வந்தது. தாத்தாவும் சரி, போவோம் என அதன் தலையைத் தடவி கொடுத்து பாட்டியைப்பார்த்து நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தார். தாத்தா, வரக்கண்ணன், துரை அண்ணன் இவர்கள் மூவரும் பேட்டரியில் இயங்கும் டார்ச் லைட்டை நெற்றியில் கட்டியிருந்தார்கள்.

சாயந்திரம் யாராவது பார்த்தாங்களா?” என மெதுவாய்க் கேட்டார் தாத்தா.

புளியமர ஓடையில மேய்ஞ்சிகிட்டு இருந்திச்சிங்களாம்என்றான் மோகன்.

அப்ப நாம நாகமரத்துக்குப் பக்கமா போவோம்

ஒரு மைல் தூரம் காட்டிற்குள் வந்துவிட்டிருந்தோம். மாயன் ஏதோ ஒன்றை யூகித்து அத்திசையில் கவனித்தபடி நிற்க, தாத்தா எங்களை சைகை காட்டி நிறுத்தினார். வரக்கண்ணன் துப்பாக்கியை தூக்கி மார்பில் பொருத்துவது சற்று மங்கலாகத் தெரிந்தது. டார்ச் லைட்டைப் போடாமல் தாத்தாவின் சமிக்ஞைக்காக காத்திருந்தார். தாத்தா மாயனைப் பார்த்து உஸ் என குரல் கொடுக்க அது புதருக்குள் ஓடத் தொடங்கியது. அங்கிருந்து பலமான சருகுகளின் சத்தமும் உறுமலும் கேட்க, தாத்தா வேண்டாம்டா என்றார். எங்களுக்கு அது என்னவென்று புரிந்துவிட்டது. காட்டுப்பன்றிகள். இப்போது எங்களுடைய குறி அதுவல்ல.

மாயனை தாத்தா திரும்பவும் அழைத்துக்கொண்டார். துரை அண்ணன் எங்களைப்பார்த்து வலையை அங்கேயே செடிகளில் கட்டச் சொன்னார். எங்களுடன் கொண்டுவந்திருந்த முயல் வலையை மோகனும் நானும் பிரித்து இரண்டு செடிகளில் இழுத்து கட்டிவிட்டு வந்தோம். இன்னும் சற்று தொலைவில் துரையண்ணன் இன்னொரு வலையைக் கட்டினார்.

நேரம் நடுநிசியைக் கடந்திருக்கும். வானில் தேய்பிறையின் வெளிச்சம் பரவி காடு துயில்கலைவதுபோல இருந்தது. தாத்தாவுடன் சென்ற மாயன் இங்கும் அங்கும் அலைந்தபடி இருந்ததே ஒழிய சாதகமான எந்த சமிக்ஞையையும் தரவில்லை. சில இடங்களில் மான்கள் கடந்துபோனதற்கான தடங்கள் தென்பட்டாலும் அதை வைத்து எதையும் நிச்சயம் கொள்ளமுடியவில்லை. தாத்தா எதையும் பொருட்படுத்தாமல் மேலே நடந்தபடி இருந்தார். வரக்கண்ணனும் துரை அண்ணனும் தங்களை எப்போதும் தயார்நிலையில் வைத்திருந்ததாகத் தோன்றியது. எனக்கு தூக்க கலக்கமென்றாலும் பிடிவாதத்துடன் அவர்களைப் பின்தொடர்ந்து போனேன். வேட்டைக்கு வந்தால் முடிந்தவரை எந்த சப்தங்களையும் எழுப்பக்கூடாது என்பது எழுதப்படாத சட்டம். எனக்குத்தான் இதைப் பின்பற்றுவதற்கு சிரமமாக இருந்தது.

மனுவுப்பாறை, மயிலாடும் பாறை, வண்ணாத்தி மடுவு என அலைந்ததுதான் மிச்சம். மான்கள் எதுவும் தென்படுவதாகத் தெரியவில்லை. தாத்தா வரக்கண்ணனிடம் சொன்னார்: எல்லாம் சத்தம் கேட்டு ரொம்ப தூரம் போயிருந்தாலும் போயிருக்கும்டா. மாயன் தாத்தாவிற்கு அருகில் வந்து பரபரப்புடன் அவரது கால்களைச் சுற்றிவந்து நக்கியது. அருகில் மான்கள் இருப்பதற்கான சமிக்ஞை அது. அது இனிமேல் வேட்டை முடியும்வரை குரைக்காது என்பது எங்களுக்குத் தெரியும். இந்த ஒழுக்கத்தை எங்கே இருந்து கற்றுக்கொண்டு வந்ததோ தெரியவில்லை.

துரை அண்ணன் தன் துப்பாக்கியை தாத்தாவிடம் தர தாத்தா வாங்கவில்லை. தாத்தாவின் உத்தரவு கிடைத்ததும் தங்கள் டார்ச் லைட்டுகளை பிரகாசமாக ஒளிரவிட்டார்கள் இருவரும். இப்போது மான்களின் கூட்டம் தெளிவாகத் தெரிந்தது. இருவரும் ஒளியை இலக்கை நோக்கி கவனமாகக் குவித்தார்கள். நாங்கள் இருளான பகுதியில் ஒளிந்தவாறு அவற்றை நெருங்கிச் சென்றோம். மான்கள் எல்லாம் வெளிச்சத்தைப்பார்த்து திகைத்து நின்றன. நட்சத்திரங்களைப்போல அவற்றின் கண்கள் பிரகாசமாக மின்னின. இந்த சமயத்தில்தான் சுடுபவர்கள் மெல்ல முன்னேறி சுடும் வரம்பிற்குள் மான்கள் வந்தவுடன் துப்பாக்கியை இயக்குவார்கள். இதில் வரக்கண்ணன்தான் தேர்ந்தவர். சந்தர்ப்பம் கிடைத்தவுடன சற்றும் தாமதிக்காமல் துப்பாக்கியின் விசையை அழுத்துவார். அவரது இலக்கு பெரும்பாலும் மானின் கழுத்துக்கும் மார்புக்கும் இடையிலான பகுதியாக இருக்கும். தாத்தா எப்போதாவதுதான் துப்பாக்கியை எடுப்பார். அதுவும் மான்கள் புதர்களுக்குள் தங்களது இலக்கை நிச்சயித்துக்கொள்ளாத நிலையில் இருக்கும்போதுதான்.

வரக்கண்ணனும் துரை அண்ணனும் அடுத்தடுத்து தங்களது துப்பாக்கியை முழக்கினார்கள். துரை அண்ணன் சுட்டது இலக்கு தவறிவிட்டதாகத்தான் முதலில் தோன்றியது. ஆனால் சுடப்பட்ட மானிலிருந்து சிந்தியிருந்த ரத்தத்துளிகள் அதற்கு ஏற்பட்டிருந்த காயத்தை எங்களுக்கு உறுதிப்படுத்தின. வரக்கண்ணன் சுட்ட மானைத் துரத்திக்கொண்டு மாயன் ஓடியது. துரை அண்ணன் சுட்ட மானை நானும் கோபியும் துரத்தினோம். சுடப்பட்ட இடத்திலேயே சில பொழுது மான்கள் விழுந்துவிடுவதும் உண்டு. இப்படி ஓட வைத்துவிட்டால்தான் பிரச்சனை. அடிப்பட்ட இடத்திலிருந்து ரத்தம் ஒழுகிக்கொண்டிருந்தாலும் முடிந்த மட்டும் ஓடி தப்பிக்கப் பார்க்கும். எங்களிடம் தாத்தாவிடமிருந்து வாங்கிய டார்ச் லைட் இருந்தது.

உண்ணிமுள் புதர், பூலாச்செடி எதுவுமே எங்களுக்குப் பொருட்டாக இல்லை. ஆனால் இந்த சீண்ட முட்களிடமிருந்துதான் தப்பித்து ஓடுவது பெரும்பாடாக இருந்தது. எங்கள் உடலின் பல பகுதிகளில் அது ரத்தக்காவு வாங்கியிருந்தது. ஓடை ஒன்றை கடந்தபோதுதான் குழப்பத்துடன் நின்றுவிட்டோம். பின் தொடர்வதற்கான தடயங்கள் எதுவும் தென்படவில்லை. பக்கத்திலிருந்த ஒரு புதரிலிருந்து சரசரவென சத்தம் கேட்க மோகன் அதை நோக்கி டார்ச்சை திருப்பினான். பாம்பு ஒன்று வேகமாய் கடந்து செல்வதைப்பார்த்தோம். அதுவெல்லாம் எங்களுக்கு இப்போது ஒரு பொருட்டே இல்லை. மோகன் நிலபரப்பை கவனமாக ஆராயத்தொடங்கினான். ரத்தத்துளிகளோ குளம்படிகளோ தென்படுகிறதா என்று பார்த்தான். எங்களைச்சுற்றி அடர்த்தியான இருள் மூடியிருந்தது. ஒரு வேளை எங்கள் கையிலிருந்த டார்ச் லைட்டின் வெளிச்சத்தால்கூட இருக்கலாம். மோகன் பாதையை யூகித்து நடந்தான். நான் அவனைப் பின்தொடர்ந்தேன். பிரமாண்டமான ஒரு காட்டுவா மரம் எதிர்பட்டு என்னை பீதிகொள்ளச் செய்ய நான் மோகனின் தோள்களைப் பற்றியபடியே அந்த இடத்தைக் கடந்தேன்.

சிந்தியிருந்த ரத்தத்துளிகள்தான் எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்தன. எவ்வளவு தூரம் நடந்துவந்திருந்தோம் என்பதை எங்களால் யூகிக்க முடியவில்லை. இன்னும் அந்த மான் தனது பயணத்தை முடித்துக்கொள்வதாகவும் தெரியவில்லை. இவ்வளவு நேரமாகியும் இவ்வளவு ரத்தத்ததை இழந்த பின்னும் அது உயிருடன் இருக்காது என்பது மட்டும் எங்களுக்கு நிச்சயமாகத் தெரிந்தது.

இன்னும் கொஞ்சம் தூரம்தான் பிடிச்சிடலாம் என்றான் மோகன்.

பாறைகளும் உண்ணிச் செடிகளும் அடர்ந்துகிடந்த ஒரு பகுதிக்கு நாங்கள் வந்திருந்தோம். தாத்தா, மாயன், மற்றவர்கள் என்ன ஆனார்கள் என்று எங்களால் யூகிக்க முடியவில்லை. ஒருவேளை அந்த மானை கைப்பற்றிவிட்டு எங்களின் பதிலுக்காக காத்துக்கொண்டிருக்கலாம். உண்ணிமுள் புதருக்கு நடுவே வழிபோல ஒன்று தென்பட்டாலும் குனிந்தபடிதான் செல்லவேண்டியிருந்தது. புதரைக்கடந்து செடிகொடிகளின் அடர்த்தியற்ற ஒரு நிலப்பரப்புக்கு வந்து சேர்ந்தோம். எங்கள் உடல் வேர்த்து கசகசத்துக்கொண்டிருந்தது. டார்ச் லைட்டின் வெளிச்சம் குறைந்து எங்களை பயமுறுத்திக்கொண்டே இருந்தது. எப்போது வேண்டுமானாலும் பாட்டரி தீர்ந்து கண்ணை மூடிவிடுமோ என்று அஞ்சியபடி இருந்தோம். எங்களை உற்சாகப்படுத்திக்கொண்டிருந்த ஒரே விஷயம் விடிந்ததும் தீபாவளி என்பதுதான். எதற்காக இப்படி வந்து மாட்டிக்கொண்டோமென்றுகூட தோன்றியது.

மோகன் திடீரென்று என் தோளைப் பிடித்திழுத்து இங்க பக்கத்துலதாண்டா எங்கோ இருக்கு என்றான். அந்த இடத்தில் ரத்தம் அதிகமாக சிந்தி பரவியிருந்தது. ஒருவேளை மான் இங்கே வந்து நின்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருக்கலாம்.

விடியலின் வெளிச்சம் கிழக்கே படிவதைக்கண்டோம். அருகிலிருந்த அடர்ந்த புதரைக்காட்டி ஜாடை செய்தான். அவன் சொன்ன பிறகுதான் நான் கூர்ந்து கவனித்தேன். அங்கிருந்து ஏதோ ஒரு வினோதமான சத்தம் வருவது கேட்டது. மெல்ல அருகில் சென்று டார்ச் ஒளியை அங்கே அலையவிட்டு கவனித்தவன் திடுக்கிட்டவன் போல டார்ச்சை சட்டென்று அணைத்துவிட்டு பின்வாங்கினான்.

என்ன என்று குசுகுசுத்தேன்.

போய் நீயே பார் என்று டார்ச்சை என்னிடம் நீட்டினான்.

அருகேபோய் டார்ச்சை அடித்துப்பார்த்தேன். மலைப்பாம்பு ஒன்று மானை தன் பிடியில் வைத்து நொறுக்கிக்கொண்டிருந்தது.

வாடா அது நம்ம ஒண்ணும் பண்ணாது என்று மோகனை அழைத்தேன். அவனும் வந்து பக்கத்தில் நின்றுகொண்டான். மானின் எலும்புகள் நொறுங்கும் ஒலி தெளிவாகக்கேட்டது. மானின் கண்கள் பிதுங்கி வெளிவந்து விழுந்துவிடும்போல இருந்தன. வாயில் நுரைதள்ளியிருந்தது. மோகனின் கையை அழுத்தி,

பாம்பை துரத்திவிடலாமா?” என்று கேட்டேன்.

அதெல்லாம் வேணாம், என்ன செய்துன்னு பார்க்கலாம்என்றான் அவன்.

பாம்பு மானை விடுவித்துவிட்டு நகர்ந்தது. பிறகு மானின் தலைப்பக்கமாக வாய் வைத்து விழுங்கத்தொடங்கியது. பாம்பின் வாய் இந்த அளவுக்கு திறக்குமா என்ற பிரமிப்பில் அதை பார்த்துக்கொண்டிருந்தேன்.

தாத்தாவை கூப்பிடலாம் என்றான் மோகன்.

பக்கத்திலிருந்த பாறை ஒன்றின் மேல் ஏறி விசில் அடித்தேன். எந்த பதிலும் இல்லை. இன்னொரு முறை அடித்தபோது அருகிலிருந்து பதில் விசில் வந்தது. மான் கிடைத்திருந்தால்கூட இப்படி ஒரு மகிழ்ச்சி ஏற்பட்டிருக்குமா எனத் தெரியவில்லை. மாயன்தான் முதலில் எங்களை வந்தடைந்தது. புதருக்கு பக்கத்தில் போய் நின்று பலமாகக் குரைக்க ஆரம்பித்தது. பாம்பின் சீற்றத்தைக்கண்டு எங்களை நோக்கி ஓடிவந்தது. தாத்தாவும் மற்றவர்களும் வந்து சேர்ந்தார்கள். விடியலின் மங்கலான ஒளியில் இப்போது டார்ச்சின் உதவியின்றியே அந்தக் காட்சியைப் பார்க்க முடிந்தது. அவர்கள் தேடிப்போன மான் ஆற்றில் விழுந்து அடித்துச் சென்றுவிட்டதாம்.

வரக்கண்ணன் சற்று ஆத்திரத்துடன் கொடுவாளால் பாம்பை வெட்டும் யோசனையை முன் வைத்தபோது தாத்தா வேண்டாமென்று மறுத்துவிட்டார்.

இதுமாதிரி ஒரு காட்சியை ரொம்ப வருஷம் கழிச்சி இப்பத்தான்டா பார்க்கிறேன். முன்ன ஒரு தடவ நம்ம ஆட்டை இப்படித்தான் ஒரு மலைபாம்பு விழுங்கிச்சி என்றார்.

தாத்தா வந்ததும் எனக்குள் ஏற்பட்டிருந்த பீதியெல்லாம் காணாமல் போயிருந்தது. விட்டால் பாம்பையேகூட தொட்டுவிட்டு வந்திருப்பேன்.

பாம்பு மானை முற்றிலும் விழுங்கும் நிலையில் இருந்தது. இனி அது ஏதாவது ஒரு மரத்தில் சென்று சுருட்டி மானை கூழாக்கிவிடும். இன்னொரு இரை கிடைக்கும் வரை மறைவான பாறைக்கடியில் நிம்மதியாகப் படுத்து நாட்களை கடத்தும்.

மான்களை பறிகொடுத்த சோகத்தில் நாங்கள் இருக்க, தாத்தாவோ,

மலைப்பாம்பு நம்மது எதையாவது சாப்பிட்டா அதிர்ஷ்டம்டா, ஏண்டா கவலைபட்றிங்க, தீபாவளி அதுவுமா நமக்கு அதிர்ஷ்டம் வரப்போகுது பாருங்கடா எனச் சொல்லிச் சிரித்தார்.

முயலுக்கு வைத்த கண்ணியில்தான் எங்கள் அதிர்ஷ்டம் இருந்தது. அன்று காலையில் இட்டிலிக்கு கறிக்குழம்பை பாட்டி என் தட்டில் ஊற்ற வந்தாள்,

எனக்கு கறி வேணாம் சட்டினி ஊத்து என்றேன்.

இதென்னடா கூத்தா இருக்கு. இப்ப மட்டும் வேணாமா இல்ல எப்பவுமேவா?” என்றாள் வியப்பாக.

எப்பவும்தான் என்றேன்.

இங்க பாருங்க இவனை எனப் பாட்டி தாத்தாவிடம் சொல்ல,

விட்டுடு அவனை, அவன் இஷ்டம் என்று சொல்லியபடி தனது சாப்பாட்டில் ஆர்வம் காட்டத்தொடங்கிவிட்டார்.

கவிதைகள்:

பழனிவேள்

ஊன் மலர்

காட்டின் காலெடுத்துச் செல்லும் போதே

சொல்லரித்த உடலைப் பிறந்த மேனியாக்கும்

குறும்புதர்கள்

மிக அபூர்வமாக வெறிக்கின்றன நீர்ப்பாசி மிதக்கிறதா

வளருகிறதா ஆம் இந்த உணர்ச்சி; மிக்க புகைப்படக்கலைஞன்

தாளமுடியாத நிருவாணத்தை உதற சரளைக்கற்களின் மீது தாவி

ஓடுகிறான் கல்லூரிப் பேராசிரியன் எதைக்கற்றுக்

கொடுக்க கடிகாரத்தை கழற்றி வீசுகிறான் அந்த தடியன் ஓயாது

வாயாடிக்கிறான்

மூவரும்ஆ வேசத்தில் சிராய்ப்புகள் காயங்கள்

துரத்தி விளையாடுகிறார்களா அந்தகாரச் சிரிப்பு தடவி

பாறைகளைப் பிசைந்து பேருருக்களாய் மாற்றி எல்லாமே

ஒரு கட்டுக்குள் வராத இயல்பு போலத்தான் இருக்கிறது

அவர்கள் ஏறிச் சென்ற வெற்றிடம்

ஆனால்

காலம் தொலைக்கும் ஒருவனும்

காட்சிகளை தொலைக்கும் ஒருவனும்

சொற்களைத் தொலைக்கும் ஒருவனும்

மற்றவர் மர்ம உறுப்பைத்

தொட்டு வருடும்போது ஏகாந்தம் என்னவோ செய்யத்

தூண்டுகிறது வெளிப்படையான தன்மையோடு

நல்ல வெளிச்சத்தில்

முதன்முதலாக ஆண்

முதன்முதலாக ஆணை அறிந்து கொள்வது

விரைக்காத குறியின் மீது கரணை காட்டுவது மட்டுமே

மட்டுமே மிச்சமிருக்கிறது எவ்வெவற்றின் கண்கள் இலைகள்

அவர்கள் வெவ்வேறு இடங்களில்

ஓடையிடை விழுந்து கிடக்க போதை கலைய

அவர்கள் மீது ஒரே வகை பட்டாம்பூச்சி

ஒரே விதமாக அமர்ந்து எழும்புகின்றன

மூடாத ஊன் மலர்.

0

பிரம்மராஜன் (Brammarajan )

முத்தமும் எச்சமும் மிச்சம்

எனக்காகும் எச்சிலில் பிறர்க்கான முத்தம்

உள்ளத்துக்கான வித்துகளில் உவர்களின்

எண்ணெய்த் திரவியம்

என் மழைக்கான உக்கிரம் உன் வெய்யிலின் தியானம்

இந்தக் குதிரையின் தாகசாந்தியில்

அம்மனிதரின் அபானம்

பிறர்க்கான நஞ்சிலிருக்கும் கட்டுச் சோற்று மூட்டை எனது

அவரின் ஊர்திகளில் என் பிராணன் மறிக்கும் கடுவெளி

மறப்போர்க்கான நினைவுகளில் ஞாபகச் சிடுக்குகள்

உலர்ந்த என் படுக்கையில் நத்தையூரிப் போகிறது

அவளின் காலைப் போதுகளில் என் சந்தியாகாலக் கிருதிகள்

ஈருடம்பும் ஒன்று போல விழிக்காது கொற்றவா

தாமதித்து உறங்கி நிதானித்து இறக்கும்

என்றாலும்

என் கதிர்களை மறைக்கும்

காலம் அவர்களின் தாளடியிலிருக்காது

என் தேனீக்களின் யாகசாலையில் அவன் உலைக்கலம்

உடலத்துக்கான என்னுடையில்

மறவரின் சடலத்துப் போர்வைகள் கிழிபடலாகும்

வாளின் முனைக் கருணையில் மின்னும் சாரைச் சேதில்

இந்த நெல் சூல்கொள்ள

பூக்கிறது என் மூங்கில் வனம்

Advertisements

1 Comment

  1. g.sreedhar said,

    vanam thodarnthu varum enru nambugiren

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: