வனம் 2

மார்ச்-ஏப்ரல் 2005

ஆசிரியர்கள்: ஜீ.முருகன், ஸ்ரீநேசன்

தலையங்கம்:

தமிழ் கவிதை சூழல் அதிலும் சிறுபத்திரிகை சூழல் மிக தாராளமாக இருக்கிறது. அதிகமான எண்ணிக்கையில் கவிதைகள் உற்பத்தி நடைபெற்று வருகின்றன. விபத்துபோல சில நல்ல கவிதைகள் கிடைக்கவும் செய்கின்றன. உரைநடையில் இது போன்ற பலவீனங்கள் உடனே தெரிந்துபோய்விடும் என்பதுதான் இன்றைய உரைநடை அரிதாகிக்கொண்டு வருவதன் ரகசியம்.

ஒரு கலைப்படைப்பை உருவாக்குவதற்குரிய பயிற்சியும், ஆழ்ந்த வாசிப்பும், வாழ்க்கை பற்றிய அனுகுமுறையும், தார்மீக உணர்வும், சமூக பொறுப்பும், தத்துவ நோக்கும் இன்றைய தலைமுறையினரிடம் வறண்டு போய்விட்டதுதான் இதற்குக் காரணம். ஒரு படைப்பு, சூழலுடன் ஆற்றவேண்டிய குறைந்த பட்ச உராய்வைக்கூட இவைகளில் காண முடிவதில்லை.

குறைந்த உழைப்பை செலுத்தி அதிக லாபத்தை ஈட்டும் வெகுஜன மனப்பான்மைதான் படைப்பாளிகளிடமும் தென்படுகிறது. இயற்கையிலிருந்து துண்டாடப்பட்ட தனது ஆன்மாவின் துடிப்பைக்கூட உணரமுடிவதில்லை இவர்களால். கலைடாஸ்கோப் நான்கைந்து வண்ண துகள்களை அடுக்கி மாயாஜாலம் செய்வது போலத்தான் இவர்கள் மொழியை அடுக்கி வித்தை செய்கிறார்கள். உரிய கவனம்பெறாமல் போகும்போது குறையை தன்னிடம் காணாமல் வெளியே தேடுவதுதான் இவர்களிடம் காணும் விசேஷம்.

இந்த சூழலை கருதியே தமிழில் மிக முக்கிய கவிஞராக இருக்கும் பிரம்மராஜனுடன் ஒரு உரையாடலை நிகழ்த்தியிருக்கிறோம். அவரைப்பற்றிய மௌனங்களை வெளிக்கொணரவும், அவருடைய கவிதைகளை புரிந்துகொள்வதற்கான அடிப்படைகளை உணர்த்தவும், இன்றை தமிழ் கவிதை சூழல் தனது போதாமையை இனம் காணவும் இந்த நேர்காணல் உதவ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.

வனத்தின் மிக முக்கிய நோக்கங்களில் ஒன்று சிறுகதை நாவல் பற்றிய விரிவான ஒரு உரையாடலை துவங்குவது. கதைத்தேர்வு, தொழில்நுட்பம், படைப்பு உருவாகும் போது எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மாற்றி எழுதிப்பார்த்த அனுபவங்கள், மற்ற எழுத்தாளர்களின் பாதிப்புகள் பற்றியெல்லாம் உரைநடைக்காரர்கள் திறந்த பேச்சுக்களை தொடங்குவது புதிதாக எழுதவருபவர்களுக்கு பயன்படும் என்று நம்புகிறோம். இப்போது உருவாகியுள்ள தேக்கமும் உடையும்.

ஒரு சிறுகதை உருவான முறையைப்பற்றியக் கட்டுரைகளையும், ஆக்கபூர்வமான உரையாடல்களை வெளியிட வனம் விரும்புகிறது. நீங்கள் உரைநடைக்காரராக இருந்தால் தயக்கமின்றி பங்குகொள்ளுங்கள். எழுதுங்கள்.

கவிஞர் பிரம்மராஜனுடன் (Brammarajan) உரையாடல்

உரையாடியவர்கள்: ஜீ.முருகன், பழனிவேள், ராணிதிலக்

பழனிவேள்: நீங்கள் எழுதத் தொடங்கிய காலத்தில் உங்களுக்கு பின்புலமாலக இருந்த எழுத்துக்கள்…

பிரம்மராஜன்: கவிஞர்கள் என்றால் தருமுசிவராமு, சுந்தர ராமசாமி, நாரணோ ஜெயராம், தி.சு.வேணுகோபால் இவர்களைச் சொல்லலாம். குறுந்தொகையை முழுசாகப் படிச்சிருந்தேன். நற்றிணை பாதி படிச்சிருக்கேன். ஆரம்பத்தில் படிமம் சார்ந்த கவிதைகளைத்தான் எழுதினேன். அப்படி எழுதும்போது மொழி தளர்வா இருந்துவிடக்கூடாது, சொல் தேர்வு கச்சிதமாக இருக்கவேண்டும் என்ற சிக்கனத்துடன் எழுதுவேன். யாருடைய கவிதை போலவும் என்னுடைய கவிதை இருந்துவிடக்கூடாது என்ற பிரக்ஞைதான் மொழி இப்படி அமைவதற்குக் காரணம்.

ப.வே: பிரமிளோட மொழிக்கும் உங்களுடைய மொழக்கம் என்ன வித்தியாசம்?

பிர: பிரமிளோட மொழிக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமில்லை. ஏன்னா அவர் மொழியில எந்தப் பரிசோதனையும் செய்த மாதிரி தெரியல. பல அர்த்த தளங்கள்ல இரண்டு வார்த்தைகளோட அருகாமையில ஏற்படக்கூடிய உருகல்-என்னுடைய கவிதையில பார்க்கலாம். 83-வரைக்கும் என்னோட கவிதை எளிமையாத்தான் இருந்தது. ஞாபகச்சிற்பத்திலதான் மொழி ரீதியான சோதனைகளைச் செய்ய ஆரம்பிச்சேன். இது வலிந்து செய்யப்பட்டது கிடையாது. நெருக்கடின்னு சொல்லலாம். ஒரு வார்த்தைக் கொடுக்க வேண்டிய அர்த்தத்தை கொடுக்காத பட்சத்துல வேறொரு வார்த்தைய பக்கத்துல வச்சி இரண்டையும் உருக்கி அதனால் உருவாகக்கூடிய புதிய அர்த்த தளத்தை ஏற்படுத்தறது. இது மாதிரி கவிதைகள் ஞாபகச்சிற்பத்தில இருக்கு. அதனோட உச்சம் புராதன இதயம். இவ்வளவு சோதனைகளை ஒருத்தர் தொடர்ந்து எழுதிக்கிட்டிருக்க முடியாது. கொஞ்சம் தளர்வா எழுதவேண்டியிருந்தது. பிறகு கலந்துதான் எழுதியிருக்கேன். முழுசா பரிசோதனைகளை விட்டுட்டேன்னும் சொல்ல முடியாது. மஹாவாக்கியத்தில் மொழிபற்றிய கூடுதல் பிரக்ஞையோடுதான் எழுதியிருக்கேன். 85க்கு பிறகு நான் வாசித்த சித்தர் பாடல்கள் பின்கட்ட கவிதைகளுக்கு உதவியா இருந்திருக்கு.

ப.வே: சிலப்பதிகாரம்?

பிர: சிலப்பதிகாரத்தைப் படிச்சிருக்கேன் என்று சொல்வது நேர்மையான கூற்றாக இருக்காது. மனசுல பட்ற இடங்களைப் படிச்சிட்டு போயிருக்கேன். ஆனா குறுந்தொகைய எந்த கவிதைய கேட்டாலும் ஞாபகப்படுத்திச் சொல்ல முடியும். இப்பவும் நற்றிணையையும் குறந்தொகையையும் படிச்சிக்கிட்டுதான் இருக்கேன்.

ப.வே: நற்றிணையில இருக்கிற பலதளத்தன்மைதான் காரணமா?

பிர: ஆமாம், இன்னிக்கு சிம்பாலிஸத்துல சொல்லியிருக்கிற விஷயங்களை அதில் சொல்லியிருக்காங்க. இரண்டு குறியீடுகளைச் சொல்லி மூனாவதா இருக்கிற குறியீட்டை நம்மையே விளங்கிக்கொள்ளச் செய்றதுதான் அதனோட விசேஷம். இரண்டாவதா அதனோட நிலவெளி.

ராணிதிலக்: ஆரம்ப காலக்கவிதைகள்ல உணர்ச்சி பிரதானமா இருக்கு, பிற்காலக் கவிதைகள்ல அறிவோட ஆதிக்கம் அதிகமா இருக்கு. இந்த மாற்றத்திற்கும் உங்களுடைய மொழி இறுக்கம் அடைஞ்சதுக்கும் தொடர்பிருக்கா?

பிர: மனசு-அறிவுன்னு பிரிக்க முடியும்ன்னு தோணல. நான் சிந்திக்கறப்ப உணர்வும் அறிவும் ஒரே நேரத்திலதான் செயல்படுது. ஒரு விஷயத்தைப் பற்றி உணர்வு ரீதியா அணுகும்போதே என்னோட காரண அறிவும் சேர்ந்துதான் இயங்குது. இசையைக் கேட்கும்போதும் இதுதான் நிகழுது.

ரா.தி: நம்மோட அனுபவத்திற்கு மொழி கிடையாது. ஏன்னா இது காண் வழியா நடக்குது. ஆனா எழுதும்போதுதான் மொழியோட தேவை இருக்கு. அப்ப அனுபவத்தோட உணர்வை எந்த அளவுக்கு மொழியில் மாற்றம் செய்ய முடியுது?

பிர: காட்சி வழியா சிந்திக்கிறது ஒரு முறை. பெரும்பாலும் இதை மொழிப்படுத்துவதில்லை. ஒரு கனவை சரியா சொல்ல முடியலேன்னு சொல்றோம். வெறும் காட்சிய அடிக்கிகிட்டுப் போக முடியாது. அதற்கு இணைப்பு கண்ணி தேவை. இந்த கண்ணிகள் மொழியிலதான் இருக்கு. இங்கதான் அறிவு தேவைப்படுது. அரூபமா சிந்திக்கிற ஒரு முறை இருக்கு. இது மொழியில நிகழற ஒன்னு. அப்படி உருவாகிற கவிதைகள் சிந்தனையோட அடிப்படையே இல்லாம இருக்கும். சில வார்த்தைகள் சேர்ந்து வாக்கியமா ஒலிச்சிகிட்டே இருக்கும். இதுக்கு காட்சி ரூபமே கிடையாது.

ரா.தி: மரத்தை கவிஞன் கவிதையில ளதருஹன்னு எழுதறான். ஏன் மரம்ன்னே எழுதலாமே.

பிர: நம் தினசரி மொழிக்கும் கவிதையில பயன்பட்ற குறியீட்டு மொழிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் இருக்கு. ஒரு கண்ணாடி மாதிரி கவிதை மொழி செயல்படாது. அப்படி செயல்பட்டதுன்னா அங்கேயே கவிதையோட தோல்வி ஆரம்பிக்குது. கலையோட தோல்வியும் ஆரம்பிக்குது. கவிதையில மொழி என்பது ஒளிவிலகல் மாதிரி செயல்படுது. இதப்புரிஞ்சிக்கிட்டா கவிதையையும் புரிஞ்சிக்கலாம். கவிஞனையும் புரிஞ்சிக்கலாம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிஞ்சிக்காமப் போனதுதான் கவிதையோட புரிதல் பற்றிய பிரச்சினைக்கு காரணம். இவர்களால் உரைநடையையும் கவிதையையும் பிரிச்சி பார்க்க முடியல. யதார்த்தத்தில பார்க்கிற மரம் வேற கவிதையில இருக்கிற மரம் வேற.

ஜீ. முருகன்: உங்கள் கவிதை உருவாகி வரும் விதம்பற்றி உங்களால் சொல்ல முடியுமா?

பிர: சுதந்திரமா இருக்கிற ஒரு நபர நோக்கி ஒரு கவிதை எழுதறேன். அந்தக் கவிதை ஒருமையில விளிக்கப்பட்டிருக்கு. வா இரு போ. இப்படித்தான் அந்த கவிதை எனக்கு வந்தது. இதை எப்படி கொண்டு போகறதுங்கறதான் விஷயம். இது ஒரு பெண்ணை நோக்கிய விளிப்பா, ஒரு ஆணை நோக்கிய விளிப்பான்னு விளங்கல எனக்கு. ஆனால் என்கிட்ட இருக்கும்போது நீ எப்படி இருக்கலாம்ங்கிறதுதான் இது. ளவா இரு போஹ இதை எழுதும்போது இருக்கிற நெகிழ்வு இருக்கு பாருங்க இதுதான் அந்த கவிதையோட இசை. இசை ரூபத்திலதான் அந்த கவிதைய பார்க்கிறேன். இந்த வாக்கியத் தொடர கடைசி வரியில மாத்தி அமைச்சிட்டேன், “இரு வா போ என்று. இதுக்கு தூண்டுதலா பட்டினத்தாரோட ஒரு பாடல் இருந்திருக்கு. அங்கிருந்துதான் இது உருமாறி வந்திருக்கணும். இதை எப்படி கவிதையில கொண்டுபோயிருக்கேன்னா, ஒரு தென்னை நெற்று வந்து ஈரமான பூமியில விழறதா அதைக் காட்சி படுத்தியிருக்கேன். தென்னை நெற்று எவ்வளவு பிடிமானத்தோட அந்த மரத்துல இருக்கும்? எப்ப வேணும்ன்னாலும் அது விழுந்துடும். அப்படித்தான் நீ என்னோட உறவு வச்சிக்கணும் என்று சொல்லப்பட்டிருக்கு. பட்டும் படாம இருக்கிற உறவ அந்த கவிதைசொல்லி சொல்றார். இதை அறிவார்த்தமா செய்யும்போது ளவா இரு போஹ என்பது வேறுவிதமா செய்யப்படுது. இதை அறிவார்த்தமான கவிதைன்னும் சொல்லலாம். ஆனால் ஏகப்பட்ட உணர்ச்சிகள் உள்ள கவிதை.

முரு: ஒரு கவிதைய எழுதத் தொடங்கும்போதே அந்தக் கவிதையைப்பற்றிய ஒட்டுமொத்தமான வரைவும் உங்களிடம் இருக்கா?

பிர: முன்பு சொன்னது போல ஒரு வரி மட்டுமே உருவாகியிருக்கும். அந்த ஒரு வரி முழு கவிதையா ஆகக்கூடிய வாய்ப்பும் இருக்கு. முழு கவிதையா இருந்தும் எழுத முடியாம போற வாய்ப்பும் இருக்கு. அந்த முழு கவிதையும் நம்ம மனசுக்குள்ள ஒருவிதமா இருந்து காகிதத்தில் முடியும்போது வேறு விதமா இருக்கும். காரணம் காகித்தில் எழுதும்போதே ஒரு வார்த்தை திசை திருப்பி கூட்டிக்கிட்டு போயிடும். அந்த அனுபவத்தையேகூட மாற்றி அமைச்சிடும். பொதுவா கவிதை திட்டமிட்ட மாதிரி முடியறதில்லை. அத எழுதும்போதே மனசுல நடக்கிற ரசவாதத்தாலக்கூட அது மாறிடக்கூடும்.

முரு: புராதன இதயம் தொகுப்பில் கடைசியா மூன்று நீள்கவிதைகள் எழுதியிருக்கீங்க அதன் கட்டமைப்புபற்றி சொல்ல முடியுமா?

பிர: சுமாரா நூறு வரிகளைக் கொண்ட கவிதைகள் அவை. இது மாதிரியான கவிதைகள் எழுதறதுக்கு அதிகமா சக்தி இருந்தாத்தான் சாத்தியம். இரண்டு மூனு கட்டமா அது உருவாகுது. பிற்பாடுதான் அதற்கான இணைப்புகளை உருவாக்கிக்கிறேன். இந்த மாதிரியான நீள்கவிதைகள் உருவாகிறதுக்கான மனநிலை ரொம்ப வினோதமானது. அது சிக்கலான மனநிலையும்கூட. மொழிரீதியான கவிதைதான் அது. உணர்ச்சிகள் ரொம்ப குறைவா இருக்கும். அதனாலேயே அதை அறிவார்த்தமான கவிதைன்னும் சொல்ல முடியாது. அதுல உள் சரடுகள் இருக்கு. நமக்குள்ள இருக்கிற எதிரொளிகளுக்கு பதில் சொல்வதா வேண்டாமான்னு அந்தக் கேள்விகளைக் கேட்டுகிட்டே போறோம். பல சிறிய கவிதைகளை இணைச்சிகூட நீள்கவிதைகளை உருவாக்கலாம். இல்லேன்னா பல மனநிலைகளை இணைச்சிகூட ஒரு மனநிலையா செய்யலாம். இது ஒரு சவாலான காரியம்தான். அதை எவ்வளவு தூரம் திருப்தியா செய்திருக்கேன்னு இன்னும் சந்தேகமாத்தான் இருக்கு. இப்போது படிச்சி பார்க்கும்போது அத இன்னும் திருத்தி எழுதணும்ன்னு தோனுது.

முரு: காவியங்களுக்கு தொடர்ச்சியான ஒரு கதை இருக்கும். இந்த நீள்கவிதைகளுக்கான தொடர்ச்சியா எதை எடுத்துச் செல்றீங்க?

பிர: நீள்கவிதைக்கு அடிச்சரடா இன்னைக்கி கதை இருக்க முடியாது. காரணம் கதை சொல்லல் என்பது நவீன காவியத்திற்கு பயன்படாது. Nicos kashantzakiz என்ற கிரேக்க எழுத்தாளர் ஹோமரோட ஒடிசி காவியத்தை அங்கிருந்து தொடங்கி 5000 வரிகள் எழுதியிருக்காரு. அவர் அதை கதையா கொண்டு போறதா சொல்ல முடியாது. நவீன ஒடிசியைத்தான் அவர் எழுதறார். கதையம்சம் கவிதைக்குத் தேவையில்லாத ஒன்று. ஆனா தமிழில் நிறையபேர் இந்த குளறுபடிகளை செய்றாங்க.

ப.வே: அந்த நீள்கவிதைகளுக்கு இடையில சில உரைநடைத் தன்மையிலான மேற்கோள் வரிகள் வருது…

பிர: கவிதையில உரைநடை குறுக்கிடலாம். நான் எழுதிச்செல்லும் மொழி இதைவிட அடர்த்தியானது என்ற ஒப்புநோக்கலாகவும் சொல்லலாம். இந்த ஒப்புநோக்கலேகூட கவிதைக்குள்ள இருக்கிற எதிரொளிகளாகத்தான் இருக்கு. ஓவியத்துல Pastische என்ற ஒரு வகை இருக்கு. வெட்டி ஒட்றது, கிரையான்ல வரையறது, வாட்டர் கலர்ல்ல வரையறது. அந்த மாதிரியான வேலையாத்தான் இந்த மேற்கோள்கள். அதில் சிலதை நானே எழுதினது. ஒருசில வெளியிலிருந்து எடுத்துக்கிட்டது. இது வாசகனை ஒன்ற விடாம அந்நியப்படுத்துறதாகவும் இருக்கு. கவிதைய விரைவு படுத்தவும் இதை பயன்படுத்தலாம்; தாமதப்படுத்தவும் பயன்படுத்தலாம். இன்னும் சொல்லப்போனால் ஓய்வெடுப்பதற்கான பிரதேசமாகவும் அது இருக்கு.

ரா.தி: உங்க கவிதைக்கான அடிக்குறிப்புகள் நிறைய வருது. அடிக்குறிப்புகள் இருப்பதால விட்டுட்டும் படிக்க முடியல. அப்படி படிச்சிட்டு திரும்பறதும் வாசிப்புக்கு இடையூறாக இருக்கு.

பிர: அது தவறுன்னு இன்னைக்கி உணர்றேன். அப்ப அவை உபயோகமா இருக்கும்ன்னு தோனுச்சி. அவை திசை திருப்பங்களாத்தான் அமையுது. குறிப்புகள் கவிதைக்கு உபயோகப்பட்றது கிடையாது. குறிப்புகள் இல்லாமலேயே கவிதையை ரசிக்க முடியும். எலியட்டின் ளபாழ்நிலம்ஹ அடிக்குறிப்புகள் இல்லாமலேயே புரியுது. பின்னாடி வந்த பதிப்புகளில் அவைகளை நீக்கிட்டுத்தான் அவர் வெளியிட்டார். குறிப்புகள் இருந்தா கொஞ்சம் கூடுதலா புரிஞ்சிக்கலாம் அவ்வளவுதான். பாமர வாசகனுக்கு வேணா பயன்படாலம். நல்ல வாசகனுக்கு அது அவசியமில்லை.

ப.வே: நீங்க பாமர வாசகனுக்கா எழுதறீங்க?

பிர: கண்டிப்பா நான் பாமர வாசகனுக்கு எழுதல. தரமான வாசகர்களுக்கும், கவிஞர்களுக்கும்தான் எழுதறேன்.

ப.வே: புராதன இதயம் தொகுப்புல வெளி உலகத்தின் மீதான கோபம் அதிகமா புலப்படுது. இந்தத் தன்மை முந்தைய தொகுப்புகள்ல இல்ல. அந்த காலகட்டத்தில உங்களுக்கிருந்த மனநிலையா இது?

பிர: ஆமாம். எனக்கு நிறைய விமர்சனங்கள் இருந்தது. சமூகத்தின்மேல, நண்பர்கள் மேல, சக கவிஞர்கள், விமர்சகர்களின் கோட்பாடுகள் மேல எல்லாம். அதற்கான எதிர்வினையாத்தான் அந்தக் கவிதைகளைக் கொண்டுவரவேண்டியிருந்தது. அடிப்படையிலேயே நான் ஒரு எதிர்வினை செய்யக்கூடிய ஆள் என்கிறதாலதான் அதை செய்திருக்கேன்.

ப.வே: அது எந்த காலகட்டம்?

பிர: 85-லிருந்து 92-வரைக்குமான காலகட்டம். அப்பதான் கலைக்கோட்பாடுகள் அதிகம் விவாதிக்கப்பட்டது. மார்க்சியம், ஸ்ட்ரக்சுரலிசம் எல்லாம் தீவிரமாப் பேசப்பட்டது. அதே நேரத்தில கவிதைகள் பற்றிய குளறுபடிகளும் இருந்தன. அப்பதான் நான் எதிர்வினை செய்யவேண்டியவனா இருந்திருக்கேன். தனிப்பட்ட யாரையும் சாடாம பொதுவா இருக்கிற போக்குகளுக்கு, வாழ்வியல் நிலைகளுக்கு எதிர்வினையாற்றியிருக்கேன். கிண்டல் தொனியும் அதில கலந்திருக்கும்.

ப.வே: புதிய கில்லட்டின்கள் கவிதைய அதற்கு உதாரணம் சொல்லலாமா?

பிர: ஆமாம். விமர்சகர்கள் மீதான கிண்டல்தான் அது. ஏன் செய்தேன்னா விமர்சனங்கள் என்பது சரியா புரிந்து செய்யப்படலே. விடுமுறை விமர்சகன் னு சொல்றது அதனாலதான். ஓய்வு நேரத்திலதான் அவுங்க இலக்கியம் செய்ஞ்சாங்க. அந்தக் கவிதைகூட தானே வடிவமைச்சிக்கிட்ட கவிதைதான். சம்பிரதாயமான ஒரு ஒழுங்கமைவு அந்தக் கவிதையில இருக்காது. உரையாடல் மாதிரிதான் இருக்கும். பலகுரல்கள் இருக்கு. பல கேள்விகள் பல பதில்கள் அதில பதிவாகியிருக்கு. இணைப்பு சரடு பல இடங்களில் கழட்டிவிடப்பட்டதால ஒருங்கிணைச்சிப் படிக்கிறதில கொஞ்சம் தடுமாற்றம் இருக்கும். பல குரல்கள் அதில பதிவாகியிருக்கு. இத பாலிபோனின்னு சொல்வாங்க. இந்தத் தன்மைய நீள்கவிதைகள்லேயும் நீங்க பார்க்கலாம். புதிய கில்லட்டின்கள் கவிதையில பல இயக்கங்களின் குரல் இருக்கு. அதற்கு எதிரான குரல்களும் இருக்கு. தமிழ் தேசியம்பற்றிகூட இருக்கு. பாரதிகிட்ட இருந்த ஒரு பரந்து பட்ட தன்மை பெரும்பாலும் இல்லேங்கிறதுதான் உண்மை. அந்த காஸ்மோபாலிட்டன் தன்மை தமிழ்ல இல்லே. மண் சார்ந்து இயங்கிற தன்மைதான் அதிகமா இருக்கு. ரஷ்யப் புரட்சியையும், பராசக்தியையும் இணைச்சிப் பார்க்கிறார் பாரதி. அவருக்கு பின்வந்தவங்ககிட்ட அந்த பர்ஸ்னாலிட்டிய நாம பார்க்க முடியறதில்லை. இசையும் கவிதையும் அவரிடம் இணைந்திருந்தது. அவருடன் ஒப்பிடணும்ன்னா ஆக்டோவியா பாஸைத்தான் சொல்லணும். இங்க ஒரு குறுகிய மனப்பான்மை இருக்கு. இது இயலாமையினால வர்றது. தாழ்வு மனப்பான்மையும் ஒரு காரணம். உலக அளவுல நடக்கிறத பார்த்துட்டு தளர்ந்து போயி எழுதறாங்க நிறையபேர். வெளியில இருக்கிறத விலக்கிட்டு எழுதணும்ன்னு நினைக்கிறாங்க. இப்படி இன்னிக்கி சுயமா இருந்திட முடியுமா? தீவிரமா உலகமயமாதல் நடந்துகொண்டிருக்கிற இந்த கால கட்டத்தில எப்படி முடியும்? ஒரு பூச்சி மருந்தை கடையில போயி வாங்கணும்ன்னா ஒரு மல்டிநேஷ்னல் கம்பனியோட பேறச் சொல்லித்தான் வாங்கவேண்டியிருக்கு. ஏன்னா உரங்களையும் பூச்சி மருந்துகளையும் அவன்தான் தயாரிக்கிறான். நீங்க எப்படி மண்சார்ந்து இயங்க முடியும்? வெறும் தமிழன்னு சொல்லிக்கிறதில என்ன அர்த்தம் இருக்கு? பிடிவாதம் தேவையில்லேன்னு நினைக்கிறேன். கட்டுக்கோப்பா இருக்கிற மொழி என்னைக்கும் தாக்குப் பிடிக்க முடியாது. தேவையான வார்த்தைகளை மற்ற மொழியிலேர்ந்து எடுத்துக்கிறதில எந்த தப்பும் இல்லேன்னுதான் நினைக்கிறேன். சமஸ்கிருத கலப்பால தமிழுக்கு எந்த ஊறும் நேர்ந்திடாது. இதனால நான் சமஸ்கிருதத்த ஆதிரிக்கிறேன்னு அர்த்தமில்லை. சமஸ்கிருதம் தமிழிலிருந்து 2000 வார்த்தைகளுக்கு மேல எடுத்துக்கிட்டிருக்குன்னு சங்க இலக்கியதுல ஆதாரமிருக்கு. மொழியில உயர்வு தாழ்வு இல்லை. மொழிய பாதுகாக்கணும்ன்னா எழுதறது மூலமாத்தான் பாதுகாக்கமுடியும்.

ப.வே: உங்க கவிதையில ஒரு மேட்டுக்குடிக்கே உரிய பிரபுத்தன்மையும் தெரியுதே.

பிர: நேர்மையான ஒரு பதிவுதான் என் கவிதையில இருக்கு. பிரபுத்துவ மனப்பான்மை இருக்குன்னா அதுமாதிரியான ஒரு வாழ்க்கைய நான் வாழ்ந்திருக்கேன். நிலம் சார்ந்த ஒரு கிராம வாழ்க்கை எனக்கிருந்தது. நான் எழுதற சின்னச்சின்ன விஷயங்கள், காட்சிப் படிமங்கள் எல்லாம் ஒரு விவசாயியோடப் பார்வையில இருந்துதான் கிடைக்குது. அப்படி எளிய வாழ்க்கை வாழ்ந்த ஒரு ஆள் பல தளங்களில் இயங்குகிறான். இந்தச் சிக்கலான தன்மை மேட்டுக்குடி மனப்பான்மையா வர்ற வாய்ப்புகள் இருக்கு. அத ஒதுக்கிட்டு எழுதறது நேர்மையான விஷயமா இருக்காது. நான் கேட்கிற இசை, படிக்கிற இலக்கியம் எல்லாம் என்னை வேற ஒன்னா மாத்தியிருக்கு. முந்தையை எளிமையான ஒரு வாழ்க்கைக்கு என்னால போக முடியாது. ஏன்னா அப்படி ஒரு சிக்கலான வாழ்க்கைய நான் தேர்ந்தெடுத்துட்டேன்.

முரு: சாஸ்திரிய சங்கீதங்கள், நவீன ஓவியங்கள் மாதிரி வெகுஜனம் எளிதில் தொடமுடியாத ஒரு இடத்தில் உங்கக் கவிதைகளையும் முன்வைக்கறிங்கன்னு தோனுது.

பிர: நான் முன்னமே சொன்ன மாதிரி என்னோடது ஒரு கலவையான வாழ்க்கை. இதை ஒப்புக்கொள்ளும்போதே அதை சாதகமா ஆக்கிக்கொள்ள வேண்டியிருக்கு. எனக்குத் தெரிஞ்ச உலகத்தைதான் பேசவேண்டியிருக்கு. இதுதான் நேர்மையாகவும் இயல்பாகவும் இருக்கும். எனக்கு அறிமுகமான ஒரு ஓவியத்தைப் பற்றியோ இசையைப்பற்றியோ அதனால எனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப்பற்றிதான் நான் எழுத முடியும். இது எல்லோருக்கும் புரியும்ன்னு நான் நினைக்கிறதில்லை. ரெனே மேக்ரத் பற்றி கடல்பற்றிய கவிதைகள்ல வருது. கடல்பற்றிய கவிதைகளைப் புரிஞ்சதுன்னு சொல்றவங்களுக்கு ரெனே மேக்ரத்தைப் புரிஞ்சிதான்னு தெரியல. ஏன்னா அவரோட ஒரு ஓவியத்தில கடற்கரை, கடல் அலைகள், அந்தரத்தில ஒரு பாறை கடலை நோக்கி விழுந்துகிட்டிருக்கு, அந்த உருண்ட பாறை மேல ஒரு கோட்டை இருக்கு. ஓவியம்தான் கவிதையில வருது. இந்த ஓவியத்தை பார்க்காதவங்க கவிதையை எப்படி புரிஞ்சிக்கிறாங்கன்னு தெரியல. கவிதை உருவாகிறதுக்கு அந்த ஓவியம்தான் காரணம். வெகுஜனத்தை மறுதலிக்கிற போக்கு என்கிட்ட கிடையாது. அதற்கான அவசியமும் இல்லை. இரண்டாவது, கவிதை என்பது மென்னுலகம் சார்ந்த ஒரு கலை. இந்தக் கலையை நோக்கி வர்றவங்க அவசியமான சில முன்தயாரிப்புகளை செய்தாகணும். என் கவிதைக்குள்ள வரமுடியாம செய்யணும்ங்கிற நோக்கம் எனக்குக் கிடையாது. என் கவிதைய இப்படித்தான் சொல்லணும் என்கிற ஒரு திட்டம் வச்சிருக்கேன். அங்கதான் நான் இயல்பா இருக்க முடியுது.

முரு: ஒரு கவிதையை வாசிக்கிறதுக்கு பயிற்சி அவசியம் தேவையா?

பிர: ஒரு சாப்பாட்டை ரசிச்சி சாப்பிட்றதுக்குக்கூட பயிற்சி தேவை என்பது என் அபிப்பிராயம். Thamos Pynchon என்கிற அமெரிக்க நாவலாசிரியட்; என்ன சொல்றார்ன்னா நல்ல உணவை கண்டுபிடிக்கத் தெரியணும், ஒரு நல்ல மதுவை, வெகுமக்களுக்கான இசையை இனம்காணத் தெரியணும் இது கூட இல்லாதவன் நல்ல மனுஷனா இருக்க முடியாதுன்னு சொல்றார். இங்க சாஸ்திரிய சங்கீதமோ, ஜாஸ் இசையோ வர்ல. ரொம்ப எளிமையான விஷயங்கள்.

முரு: பயிற்சியே இல்லாம ஒரு நல்ல கவிதையை எழுதிட முடியுமா? இங்க சிலபேர் தான் எழுதற முதல் கவிதையே சிறப்பா பேசப்படணும்ன்னு நினைக்கிறாங்க.

பிர: எல்லோரும் பாராட்டக்கூடிய நல்ல கவிதையை ஒருவர் பயிற்சி இல்லாம எழுதவே முடியாது. நல்லக் கவிதைகளை எழுதுவதற்கு நல்ல கவிதைகளைப் படிக்க வேண்டும். பெரிய கலைஞர்கள்கூட இதைத்தான் சொல்றாங்க. உலகத்துல இருக்கிற பெரிய மாஸ்டர்களோட கவிதைகளைப் படிக்கணும்ன்னு சொல்றாங்க. அப்படிப்பட்ட கவிதைகளை வாசிச்சி அனுபவிக்காம எப்படி அது போன்ற கவிதைகளை எழுதமுடியும்? பயிற்சி இல்லாம இது சாத்தியமே இல்லை.

முரு: தன்னோட கவிதைகளையே அவங்க புறக்கணிப்பு செய்யணும்ன்னு சொல்றிங்களா?

பிர: ஆமாம். எழுதறது எல்லாத்தையும் பிரசுரத்திற்கு கொண்டுவரக்கூடாது. தானே ஒரு வாசகனா இருந்து வாசிச்சிப் பார்க்கணும். அப்படி படிச்சாத்தான் அதனோட தரம் என்னன்னு தெரியும்.

முரு: பெரிய மாஸ்டரான எஸ்ரா பவுண்ட், யேட்ஸ்கிட்ட கவிதைய கத்துக்கணும்ன்னு போறார். அப்படி ஒரு பயிற்சிக்கு இங்க இடமிருக்கா?

பிரு: யேட்ஸ் பெரிய ஆளுமை. உலகத்திலேயே கவிதையைப் பற்றி யாருக்கும் தெரியாது. அந்த கிழவனுக்குத்தான் தெரியும். அதனாலதான் அவருகிட்டே போறேன்னு சொன்னாரு பவுண்ட். பவுண்ட் பலதளத்தில இயங்கக்கூடியவரு. ஐரீஸ் நாட்டார் கலைகள், புராணங்கள், நவீன இலக்கியம் என்று இயங்கக்கூடியவர். உலக இலக்கியத்திலும் அவருக்கு பரிச்சியம் உண்டு. அவருக்கு கபீரையும் தெரியும் தாகூரையும் தெரியும். இப்படி காஸ்மோபாலிட்டன் தன்மையுள்ள எஸ்ராபவுண்ட்ட திருப்தி பண்ணக்கூடியவர் யேட்ஸ். அப்படிப்பட்ட ஒருத்தர் கவிதைய கத்துத்தரலன்னாக்கூட இந்த வாழ்க்கைய ரசிக்க கத்துத்தரக்கூடியவர். அதனாலதான் அவர் தினசரி போயி அவரை சந்திச்சிருக்கார். பவுண்ட் அப்படி சாதாரணமா ஒருத்தரை சொல்லமாட்டார்.

ப.வே: உங்க கவிதைகளை வாசிக்கும்போது சைவத்தின் சாய்வு தெரியுதே…

பிர: ஊட்டியில இருந்தப்ப ஆழ்வார் பாடல்களை தொடர்ந்து படிச்சிருக்கேன். அதில இருக்கக்கூடிய எளிமை, அதே நேரத்தில் அடர்த்தி மனநெகிழ்வு இதெல்லாம் என்ன பாதிச்சிருக்கு. நம்மாழ்வாரைத்தான் பிரதானமா படிச்சேன். புராதன இதயத்தில் ஒரு வரியைக்கூட பயன்படுத்தியிருக்கிறேன். வால்மீகி ராமாயணம் படிச்சிருக்கேன். திருவிளையாடல் புராணத்தைப் படிச்சிருக்கேன்னாலும் அதை ஒரு தத்துவ மரபா நான் கொண்டுவரல. மனுஷனாத்தான் சிவன பாத்திருக்கேன். திருவிளையாடல் புராணத்தில வர்ற பல விஷயங்களை நான் கவிதையில பயன்படுத்தியிருக்கேன் அவ்வளவுதான்.

ப.வே: மஹாவாக்கியம் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்த தொகுதி. அதில மனித நிராகரிப்புத் தன்மை தெரியுதே…

பிர: ஒரு குறிப்பிட கால கட்டத்தில நான் இலக்கியத்தோட எந்தத் தொடர்பும் இல்லாம இருந்திருக்கேன். அந்த காலகட்டத்தில மனித நிராகரிப்பு தோன்றியிருக்கலாம். மனித வெறுப்பு வராம இருக்கணும்ன்னு எந்த கட்டாயமும் இல்லை. மனித நேயமும் அப்படித்தான். அந்த காலக்கட்டதில நிறைய மரங்களை நட்டிருக்கேன். இதுபோன்ற ஒரு எதிர்வினைதான் மஹாவாக்கியத்தில பதிவாகியிருக்கு. வேலியைப்பற்றி ஒரு கவிதையை அதில எழுதியிருக்கேன். பிரஸ்ட்கூட லின்டிங் த வால் என்று வேலியைப்பற்றி ஒரு கவிதை எழுதியிருக்கார். வாழ்க்கைய திட்டவட்டமான வரையரைக்குள் கொண்டுவர்ற எல்லைப்படுத்துதல் என்ற இந்த விஷயம் ஒரு மனநிலையில் ஏற்படுது. பாதுகாப்புணர்வுக்கும் இந்த வேலிக்கும் சம்பந்தமிருக்கு. மஹாவாக்கியம் முழுக்கவே இயற்கையுடனான பிணைப்பு பற்றிய தன்மையை பார்க்கலாம். ஊட்டியில இருந்து கீழே வந்தபோது தட்பவெட்பம் சுத்தமா மாறியிருந்தது. அந்தச் செழுமை இங்க இல்லை. ஆனால் இந்த உலர்ந்த வாழ்க்கைதான் நமக்கு நிரந்தரம் என்கிற பக்குவம் எனக்கு இருந்தது. மஹாவாக்கியத்தில பலவிதமான கவிதைகள் இருக்கு. பரிசோதனைக் கவிதைகள், நெகிழ்வான கவிதைகள், உணர்ச்சிரீதியான கவிதைகள்.

ப.வே: மற்ற தொகுப்புகளைவிட இந்த தொகுப்புல வாசகனுடனான உரையாடல் லகுவாக இருக்கே?

பிர: ஆமாம், மஹாவாக்கியம் இந்தத் தேக்க நிலையயை உடைச்சிருக்குன்னுதான் தோணுது. புராதன இதயம் தொகுப்பை நிறையபேர் படிக்க முடியலைன்னு சொன்னாங்க. இப்படியாகறது கவிஞனுக்கேகூட வருத்தமளிக்கக்கூடிய விஷயம்தான். அதனால கவிதை சொல்லலை இன்னும் சரளமாக்கக்கூடிய மனநிலைக்காக காத்திருந்தேன். கடல்பற்றிய கவிதைகள் அதுதான். இது எளிமைப்படுத்தல் அல்ல. இலகுவாக்கல். வரிகள் தளர்வா இருக்கே தவிர கவிதை தளர்வா எழுதப்படல.

முரு: உங்களுடைய ஆரம்ப கால கவிதைகளிலிருந்து தொடர்ந்து கொண்டுவர்ற அம்சம்ன்னு எதாவது இருக்கா?

பிர: எனக்கு மிக நெருக்கமா இருக்கிற இசை. என் கவிதையின் கட்டமைப்பிலேயே அது இருக்கு. இரண்டாவதா ஓவியங்கள். நான் படிச்ச விஷயங்களுக்கான சில கேள்விகளும் அதில இருக்கு. அவையெல்லாம் வெறும் படிப்பறிவு சம்பந்தப்பட்ட விஷயங்கள் என்று குறுக்க முடியாது. சில மறைமுகக்குறிப்புகளையும் பயன்படுத்கறேன். இது புரியணுங்கிற அவசியம் இல்லை.

முரு: கவிதையோட ஆன்மீகம் என்ன?

பிர: கடவுள் இல்லாத ஒரு ஆன்மீகமாத்தான் பார்க்கிறேன். கவிதை எல்லாமே ஒரு உன்னத மனநிலையை நோக்கி செலுத்தக்கூடியதா இருக்கு. கவிதை படிக்கிற மனநிலை சாதாரண மனநிலை இல்லை. உரைநடைய எப்ப வேணா படிக்கலாம். கவிதையை அப்படி படிக்க முடியாது.

முரு: ஒரு இசையை கேட்கிற நிகழ்வோட ஒப்பிடலாமா?

பிர: ஆமாம். ஒரு இசையை கேட்பது மாதிரிதான் இதுவும். ஆனா ஒரு இசை அளவுக்கு கவிதை செயல்பட முடியுமாங்கிற சந்தேகமும் இருக்கு.

ப.வே: நீங்க பிறந்தது வளர்ந்தது எல்லாம் முல்லை, குறிஞ்சி நில வாழ்க்கை. உங்க கவிதை பிரதானமா வெளிப்படுத்தறது நெய்தல் நிலம், குறிப்பா கடல்…

பிர: இதைவிட விசேஷம் என்னன்னா நான் ஊட்டியில இருந்த காலகட்டத்திலதான் இந்த கடல்பற்றிய கவிதைகளை எழுதினேன். பார்க்கிறதுக்கு இது முரண்பாடாத்தெரியும். கடலோட அனுபவத்தை மிக அருகாமையில இருந்து பார்க்கிறதுக்கான சில வாய்ப்புகள் எனக்கு கிடைச்சது. ஒரு டூரிஸ்ட் மாதிரி பார்க்காம அங்கேயே இரண்டு மூன்று நாள் இருந்து வாழ்ந்து பார்த்திருக்கேன். ராமேஸ்வரத்துக்குப் பக்கத்துல மண்டபம்ங்கிற எடத்துல நடந்த ஒரு கேம்ப்ல கலந்துகிட்டேன். ஒரு வாரம் அங்க இருந்தேன். புட் அன்டு அக்கிரிகல்சர் அசோஸியேசன் என்ற குழுவோட சேர்ந்து கடல் பாசிகளை புரமோட் பண்ற ஒரு புராஜக்ட்ல கலந்துகிட்டேன். அப்பதான் கடலை அருகே இருந்து கவனிச்சது. உயர் அலைகள், தாழ்வலைகள் இதையெல்லாம் பார்த்தேன். அவங்க பயன்படுத்தற மோட்டார் படகை வச்சிகிட்டு அருகிலிருந்த தீவுகளுக்கெல்லாம் போயிருக்கேன். இது 80-90கள்ல. 80-85யில சத்யன் மங்களூர்ல இருந்தார். அங்க இருக்கிற பிரைவேட் பீச்சுகளுக்கெல்லாம் போற வாய்ப்பு கிடைச்சது. என்னோட கவிதை ஒன்னுல தென்னங்கீற்று தூண்டிலா இருக்கிற படிமம் ஒன்னு வருது, அது ஒரு பிரைவேட் பீச்சுதான். மங்களூர்ல இருந்து கோவாவுக்கு கார்ல போனோம். வாய்ப்புகள் இருக்கிற இடத்திலெல்லாம் தங்கிப் போனோம். இரண்டு மூனுநாள் இப்படி பயணம் செஞ்சிருக்கோம். இதுதவிர சின்னச்சின்ன கடற்கரைகளுக்கெல்லாம் போயிருக்கேன். கிழக்கு கடற்கரையில ஒரு பீச்ச கண்டு பிடிச்சிகிட்டேன். மனப்பாடுன்னு ஒரு இடம். மூனுமுறை அங்கப் போயிருக்கிறேன். கோயிலுக்கு ஒரு பக்தன் போறமாதிரி போவேன். அது ஆன்மீக மனநிலையைக் கொடுத்திருக்கு. அங்க இருக்கிற கலங்கரை விளக்கத்திலிருந்து சூரிய அஸ்தமனத்தை பார்க்கிறது அலாதியான அனுபவம். அந்த அனுபவத்தை இன்னும் நான் பதிவுசெய்யல. குளிரான ஒரு மலை உச்சியில வாழ்ந்துகிட்டு தொலைவா இருக்கிற கடல் மட்டத்திற்கு போறது வேறுபட்ட மனநிலைதான்.

நாங்க பார்த்த சில கடற்கரைகள்ல மனுஷங்களே இல்லை. வெறும் சவுக்குக் காடுகளும் தோணிகளும்தான் இருக்கும். குடியிருப்புகளே இருக்காது. இது அமானுஷயமான ஒரு அனுபவம். எப்படி ஒரு இசையையும் ஓவியத்தையும் கவிதைக்குள்ள இணைச்சி எழுதறேனோ அதுமாதிரிதான் முல்லை நிலத்தையும் நெய்தலையும் இணைச்சி எழுதிப்பார்க்கிறேன். இதை நான் பிரக்ஞையோட செய்றது இல்லை. என்னுடைய இயல்பாகவே அது இருக்கு. பனம்பழத்தைப்பற்றி எழுதியிருக்கேன். பனம்பழத்தை தேடித் தனியாப் போறோம். நாம் போறதுக்கு முன்னமே அந்த ஓசை கேட்டிருக்கும். சில சமயம் நாம திரும்பி வந்த பிறகு கேட்கும். இதெல்லாம் என்னுடைய அனுபவங்கள்தான். இது மேலைய நாடுகள்ல இருந்து பெற்றது இல்லை. பொங்கல் முடிஞ்ச காலங்கள்ல பண்ணப்பூ பூத்திருக்கும். வயல் வெளியில எங்க பார்த்தாலும் வெள்ளையா இருக்கும். மின்மினிப்புழுன்னு ஒரு கவிதையில எழுதியிருக்கேன். ஒரு நண்பர் ஏன் தவறா எழுதியிருக்கீங்கன்னு கேட்டார். அது புழுவா இருக்கிற காலத்திலேயும் பார்த்திருக்கேன். அப்பவும் அது ஒளி விசிக்கிட்டுதான் இருக்கும். ஒரு விவசாயியோட கோணத்திலிருந்துதான் கரும்பு பூக்கிறதைப் பார்க்கிறேன். செண்டு மாதிரி அழகா இருக்கும். ஆனா அதுக்குப்பின்னாடி துயரம் ஒன்னு இருக்கு. அதை கவிதையில கான்சர் வந்த முலையுடைய பெண்ணை அணைக்கிறதையும் பூத்த கரும்பையும் இணைச்சி பார்க்கணும். நான் எழுதற பெரும்பாலான படிமங்கள் தினசரி வாழ்க்கையில எனக்குக் கிடைத்தவைதான். யானைச்சாணத்துல முளைக்கிற காளான் என்கிற காட்சி முதுமலைக்காட்ல பார்த்தது. குறும்பரோட ஒரு பண்டிகையப்ப முதல் நாள் பார்க்கிறப்ப அந்த சாணியில காளான் இல்லை. மறுநாள் திரும்பி வர்றப்ப காளான் பூத்திருந்தது.

ரா.தி: உன் பிஞ்சு கைபற்றி அவ்வளவு அழகாயில்லாத இந்தக் கரையிலும் கடல்கற்போம் ன்னு எழுதியிருக்கீங்க. இந்த கடல்கற்பதுங்கற விஷயத்தை எப்படி பிரயோகம் செய்றீங்க?

பிர: இந்த கற்றல் என்பது வள்ளுவர்கிட்ட இருந்து எடுத்துகிட்டது. கசடற கற்றல். நாம கடலை சரியா புரிஞ்சிகிட்டமான்னு ஒரு கேள்வி இருக்கு. நான் சரியா புரிஞ்சிக்காம இருக்கிறதாலதான் மகளோட சேர்ந்து கத்துக்கணும்ன்னு நினைக்கிறேன்.

முரு: மகாபலிபுரம் மாதிரியான ஒரு இடத்தை டூரிஸ்ட்டோட பார்வையில அப்படியே பதிவு பண்றது ஒன்னு இருக்கு. படைப்புல பதிவு பண்றது ஒன்னு இருக்கு. இதை நீங்க எப்படி செய்வீங்க?

பிர: பார்க்கிற அனுபவம் கவிஞனுக்குள்ள ஏற்படுத்தற ரசவாதம் ஒன்னு இருக்கு. அந்த ரசவாதம், அனுபவமும் மொழியும் இணையறதால வர்றது. வெறுமனே புகைப்பட காட்சிபோல அது பதியபட்றதில்லை. டாக்குமன்டேஷன் பண்றதில்லை. அப்படி செய்யறது தினசரி பயன்பாட்டு மொழியிலதான் வந்து சேரும். ஆனால் அது கவிஞனுக்குள்ள மொழிமாற்றம் அடையுது. இந்த ரசவாதத்தைதான் அவன் கவிதைகளில் செய்றான். இது வேறு ஒரு அனுபவம். பார்த்ததுக்கும் பதிவு செய்ததற்கும் இடையில பலவித மாற்றங்கள் நடந்திருக்கு.

முரு: டி.எஸ்.எலியட் பாரம்பரியமும் தனித்துவமும் கட்டுரையில புதிய படைப்பு ஒன்று வரும்போது அதற்கு முன்னிருந்த முழுமை சிறிதாவுது மாற்றம் அடையவேண்டும் என்று சொல்றார். உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பிர: போலச்செய்தலோ, தன்னுடைய படைப்பையே மறுஉருவாக்கம் செய்றதோ இந்த பாரம்பர்யத்துக்கு வந்து சேராது. பெரிய மரபுன்னு ஒன்னு இருக்கு. சாதனையாளர்கள் மட்டுந்தான் இந்த மரபை நிர்மாணம் செய்றாங்க. சிறந்த படைப்பு இதற்கு முன்ன எழுதின விஷயத்தையும் அதற்கு பின்னாடி எழுதப்போறதையும் மாற்றி அமைக்கணும். அந்த சக்தி அதுக்கு இருக்கணும். சாதனையாளர்கள்தான் இதைச் செய்றாங்க.

முரு: உங்களோட பாரம்பரியம்ன்னு எதைச் சொல்வீங்க? அதாவது உலக அளவுல இருக்கிற கவிதை இயக்கத்தில எதனோட தொடர்ச்சியா உங்களை பார்க்கறிங்க?

பிர: தமிழ்க் கவிதை மரபோட தொடர்ச்சியாத்தான் என்னைப் பார்க்கிறேன். உலக அளவுல வைக்கிற அளவுக்கு சாதிச்சதா நான் நினைக்கல. அப்படின்னா என் கவிதை வேறமாதிரி இருந்திருக்கும்.

முரு: உலக கவிதையோட தரத்துக்கு இருக்கணும்ன்னா அந்த கவிதை எந்தமாதிரி இருக்கணும்?

பிர: பரந்துபட்ட பார்வை கொண்டதா இருக்கணும். அதனோட அனுபவ வீச்சு கண்டிப்பா என்கிட்ட இல்லை. பெரிய கவிஞர்கள்ன்னு மதிக்கிறவங்க எல்லாம் குறிப்பா ஐரோப்பியர்கள், அமெரிக்கர்கள் எல்லாம் நிலையா ஒரு இடத்தில வாழ்ந்தவங்க இல்லை. ஒரு வேலையை தொடர்ந்து செய்துகிட்டிருந்தவங்க இல்லை. அவங்களோட வாழ்க்கை மாறுதலடைஞ்சிகிட்டே இருந்திருக்கு. அந்த வாழ்க்கைய வாழ்றவங்களாலதான் அதுமாதிரியான கவிதைகளை எழுத முடியும். நான் ஒரே மாதிரி சமச்சீரான வாழ்க்கை வாழ்றவன். எனக்கு கிடைச்ச எல்லைக்குட்பட்ட அனுபவங்களில் இருந்துதான் கவிதை எழுத முடியும். நான் தமிழ்மரபோட சம்பந்தப்பட்டவன் என்ற எண்ணம்தான் என்கிட்ட இருக்கு. இன்னும் தொல்காப்பியத்துல படிக்க பாக்கி இருக்குங்கிற நிலைதான் என் நிலை. எறும்புக்கு மூனு அறிவுன்னு சொல்றார் தொல்காப்பியர். ஆச்சரியமா இருக்கு. அதே மாதிரி சில குரங்குகளுக்கும் கிளிகளுக்கும் ஆறு அறிவு இருக்கலாம்ன்னு சொல்றார். அன்றைக்கு உயிரியல் அறிவு இந்த அளவுக்கு வளர்ச்சியடையல. என்னை பற்றி மத்தவங்களுக்கு வேணா வேற எண்ணம் இருக்கலாம். மேலைய இலக்கியங்கள்ல இருந்து அந்த காஸ்மோபாலிட்டன் தன்மையைத்தான் நான் எடுத்துக்கிறேன். என் கவிதையில இருக்கிற மேட்டிமைத் தன்மைதான் மிரட்சியைக் உண்டுபண்ணக்கூடிய வாய்ப்புகள் இருக்கு. இந்த எண்ணம் மேலோட்டமானதுன்னுதான் நினைக்கிறேன்.

ரா.தி: மேலைய எழுத்தாளர்களோட ஒப்பிடணும்ன்னா உங்க கவிதைகள் யாருடன் நெருக்கமா இருக்கு?

பிர: நெரூடாவையும், ஆக்டோவியா பாஸையும் சொல்லலாம். காரணம் இந்த நாடுகள் இரண்டுமே பூமத்திய ரேகை நாடுகள். நமக்கு இங்க இருக்கிற தட்பவெப்பம், வேர்வை, கஷ்டம் எல்லாம் அங்கேயும் இருக்கு. இங்க கிடைக்கிற வெட்டிவேர் அங்கேயும் இருக்கு. அதிமதுர வேர் பற்றிகூட அவங்க எழுதறாங்க. அதே நேரத்தில அந்நியப்பட்டும் போயிட்றாங்க. அவங்களோட சர்ரியல் தன்மை. வெறுமனே லத்தின் அமெரிக்காவை பிரதிபலிக்கணும்ன்னு அவங்க எழுதினது கிடையாது. சர்வதேசத்தன்மை இருக்கும். அவங்க எழுத்து காஸ்மோபாலிட்டன் தன்மையா மாறுவதற்கு காரணம் பயணம் செய்திருக்காங்க. பல இயக்கங்கள பார்த்திருக்காங்க.

ரா.தி: வடிவம், கவிதை சொல்லல் என்பதில் உங்களுக்கு யாரை நெருக்கமா சொல்வீங்க?

பிர: போலந்து நாட்டுக் கவிதைகள் நெருக்கமா இருக்கு. காரணம் அந்த உரையாடல் தன்மை. வார்த்தைகளோட வரிகளோட இறுக்கம் ஒரே மாதிரியா இருக்கு.

முரு: ஆத்மாநாமும் நீங்களும் ஒரே காலகட்டத்தில கவிதை எழுத வந்திருக்கீங்க. நண்பர்களா இருந்திருக்கீங்க. எப்படி வேறு மாதிரியான கட்டமைப்பைத் தேர்ந்தெடுத்தீங்க?

பிர: இது பர்ஸனாலிட்டி சம்பந்தபட்ட விஷயம். அவருடைய ஆளுமை எளிமையானது. என்னோடது சிக்கலானது. அவர் எழுதின அரசியல் மனிதநேயக் கவிதைகளை என்னோட மொழியில் எழுதியிருந்தா இந்த அளவுக்கு வெற்றியடைஞ்சியிருக்காது. அதனால பிரக்ஞையோட ஊடுறுவக்கூடிய ஒரு மொழியில அவர் எழுதினார்.

முரு: பர்ஸ்னாலிட்டிதான் கவிதையோட கட்டமைப்புக்கு ஆதாரமா இருக்கா?

பிர: நிச்சயமா. கலைஞனோட மனம் எந்த அளவுக்குப் பண்பட்டிருக்கோ அந்த அளவுக்கு படைப்பும் நேர்த்தியாகவும் உன்னதமாகவும் இருக்கும். ஆளுமை ஒரு தளத்தில இருந்தா படைப்பும் ஒரு தளத்தில இயங்கும். அந்த ஆளுமை பல தளங்களில் இயங்கறதா இருந்தா படைப்பும் பல தளங்களைக் கொண்டதா இருக்கும்.

ப.வே: ஆத்மாநாம், பிரமிள், நகுலன், நீங்கள் யாருமே பின்னால ஒரு இயக்கமா மாற முடியலையே ஏன்?

பிர: வெறுமனே வழிபாட்டாளர்களால இது சாத்தியமில்லை. உண்மையா கவிதையை கிரகிச்சி சுவீகரித்தல் என்பது தமிழ்ல நடக்கிறதில்லை.

ப.வே: ஆனால் ஞானகூத்தன், பசுவய்யா இவுங்களை பின்பற்றுபவர்கள் நிறையபேர் இருக்காங்க இல்லையா?

பிர: அவங்களை இயக்கம்ன்னு சொல்ல முடியாது, வகைன்னு (டைப்புன்னு) சொல்ல முடியும். இயக்கமா மாறணும்ன்னா சமூக கட்டாயத்தாலதான் நடக்கணும். அந்தக் கட்டாயம் நமக்கு ஏற்பட்டதில்லை. யுத்த நெருக்கடி காலங்கள்ல இது ஏற்படும். இங்க சுதந்திரப்போராட்ட காலத்திலகூட அதை இயக்கமா மாத்தினதா தெரியலை. நெருக்கடிகளை உணராம கவிதையை செறிவாக்க முடியாது. அந்த வாழ்க்கைச் சூழல் இங்க இல்லை.

ப.வே: மாணவர்களுக்கு நவீன கவிதையைப் பரிச்சயப்படுத்தறதில கல்வித்துறையோட பங்கு குளறுபடிகள் நிறைஞ்சதா இருக்கே. ஒரு கல்வியாளரா உங்களுடைய அபிப்பிராயம்?

பிர: நம்முடைய கல்வித்துறை படைப்பிலக்கியத்திற்கு எதிரானதுதான். நான் சந்திக்கிற பல் கல்வியாளர்கள் தினசரிகளைக்கூட படிக்கிறதில்லை. அவங்களுக்கு எப்படி இதைப்பற்றியெல்லாம் அக்கறை இருக்கும்? மூடின மனம் கொண்டவங்களாத்தான் இருக்காங்க. அவங்களால படைப்பு மனதை ஊக்குவிக்க முடியாது. அது எந்த துறையை சார்ந்தவங்களா இருந்தாலும் அப்படித்தான் இருக்கு. படைப்பு மனம் கொண்டவங்களை அவங்க ஆபத்தானவங்களாத்தான் பார்க்கிறாங்க. இவங்க எந்த மாதிரி பாடத்திட்டத்தை உருவாக்குவாங்க? படைப்புசக்தி உள்ளவங்களைப் பாடதிட்டத்திலேயே சேர்க்க மாட்டாங்க. காரணம் அதிகமா உழைக்க வேண்டியிருக்கும். ஒவ்வொரு வருஷமும் தமிழ் இலக்கிய வரலாறுன்னு ஒரு புத்தகத்தைப் பார்க்கிறேன். அதல நவீன இலக்கிப் பகுதியைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரிஞ்சிடும் அவங்களுக்கு ஒன்னுமே தெரியலைன்னு.

முரு: தமிழ்ல வானம்பாடிகள் இயக்கத்தைத் தவிர வேறு ஏதாவது இயக்கம் செயல்பட்டிருக்கா?

பிர: இல்லை. வானம்பாடிகள் மட்டுந்தான் இயக்கமா செயல்பட்டிருக்கு. அதற்கேகூட காரணம் எளிமைப்படுத்தப்பட்ட தன்மை. யார் வேண்டுமானாலும் அதுபோன்ற கவிதைகளை எழுதமுடியும்கிறதுதான் பலரும் அதில இணையறதுக்குக்காரணம்.

முரு: உங்கள் கவிதை எதிர்ப்பார்த்த மாதிரி கவனிக்கப்படலைங்கறதுக்காக எப்போதாவது வருத்தப்பட்டதுண்டா?

பிர: இல்லை. காரணம் நான் பின்னால அது சரியா வாசிக்கப்படும்ன்னு நம்பறேன். என் கவிதையில கையாண்டிருக்கிற விஷயங்கள் எல்லாம் பரிச்சயமான ஒரு வாசகச் சூழல் அதை வாசிக்கும் என்ற நம்பிக்கை இருக்கு. ஏன்னா இந்த தேக்க நிலை எளிமைபடுத்துதல் ரொம்ப நாளைக்கு நீடிக்காது. இது மாதிரி ஒரு நிலை எல்லா நாட்டு கலாச்சாரத்திலேயும் நடந்திருக்கு. ஒரு சுழற்சி நிலையில இதுமாறும்.

முரு: இடையில பத்து வருஷம் இலக்கிய செயல்பாடுகளுக்குள்ள வராம ஒதிங்கி இருந்ததற்கு என்ன காரணம்?

பிர: இந்த மௌனம் விரக்தியால ஏற்பட்டதில்லை. அது ஒரு மனநிலை. அதில எதையும் படிக்காமா இருக்கலாம், எழுதாம இருக்கலாம். இரண்டும் வேறுவேறு மனநிலைகள்.

முரு: சில எழுத்தாளர்கள் சில காலங்கள்ல எழுதாமலேயே இருந்திருக்காங்க, தூண்டுதல் இல்லாம. அதுபோல இதைச் சொல்லலாமா?

பிர: இத ஓய்வுன்னு சொல்லலாம். அதற்குப்பிறகு இன்னும் செறிவா எழுதிப்பார்க்கணும் என்கிற தயாரிப்பு காலம்ன்னுகூட சொல்லலாம். எழுத முடியாதுன்னு இல்லை.

ப.வே: நனவிலி மனதிலிருந்து கவிதை எப்படித் துவங்குது?

பிர: எனக்குள்ள ஒரு நீண்ட உரையாடல் நடந்துகிட்டிருக்கு. பெரும் அதிர்வுகளைக்கொண்ட உரையாடல் அது. அங்கிருந்துதான் ஒரு தீர்மானத்தோட என் கவிதையை தொடங்குறேன். நனவிலியை பின்பற்றிப்போறவங்களுக்கு இது எளிதா இருக்கும். அவங்களாலதான் அதை எளிதாகவும் புரிந்துகொள்ள முடியும். மேலோட்டமான வாசகர்களுக்கு சிரமமாக இருக்கும்.

ப.வே: பாரதி இந்தத் தீவிரத்தை அடையறதுக்குத்தான் கஞ்சா மாதிரியான விஷயத்தைப் பயன்படுத்தினாரா?

பிர: இதை எக்ஸ்ட்ரனல் எய்ட்ஸ்ன்னு சொல்லுவாங்க. பாரதி கஞ்சா பயன்படுத்தினார். S.T.Coleridge அபின் பயன்படுத்தினார். வயிற்று வலிக்காக ஆரம்பிச்சி பிறகு அதில ஒரு கவர்ச்சி ஏற்பட்டதால தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பிச்சார். அந்தப் பிரக்ஞை நிலையிலேயே கவிதை எழுதியிருக்கிறார். அற்புதமான கவிதை அது. முன்னூறு வரிகள் திட்டமிட்றார். ஆனா யாரோ வந்து கதவைத் தட்ற சத்தத்தைக் கேட்டு பிரக்ஞை திரும்பிடுது. நூறு வரிகள்தான் எழுத முடிஞ்சது. இதற்காக கடைசிவரைக்கும் வருத்தப்பட்டுக்கிட்டிருந்தார். இது மாதிரியான புறத்தூண்டுதல் இல்லாமலேயே இந்த போதை நிலையை அடைய முடியும். நான் கவிதை எழுதும்போது இதைத்தான் பின்பற்றிப்போறேன்.

முரு: டி.எஸ்.எலியட் படைப்பாளியை ஆளுமையா பார்க்காம, நுட்பமா வடிவமைக்கப்பட்ட ஊடகம்ன்னு சொல்றார். உங்க நிலைப்பாடு என்ன?

பிர: நிறைய படைப்பாளிகள் தன்னை ஒரு ஊடகமாத்தான் பார்த்திருக்காங்க. ஆந்த்ரே பிரேடன் கூட சொல்லியிருக்கிறார், அது என்வழியா நிகழ்துன்னு. ஆளுமை குறுக்கிடாம படைப்பை நிகழ்த்துவதற்கான வழியை உருவாக்கி தரணும். வான்கா கூட தன்னை அப்படித்தான் பார்க்கிறார்.

ரா.தி: நான்ங்கிற உணர்வு படைப்புக்கு அவசியமா?

பிர: கவிதையில இருக்கிற நான் கவிஞனோட நானா இருக்கக்கூடாது. கவிதை சொல்லியோட நானாத்தான் இருக்கணும். வேறு யாரோ ஒருவனுடைய நானை கவிஞன் தன்னுடைய நானா ஆக்கிக்கிறான்.

ப.வே: தனிச் சொற்களை அடுக்கிக்கிட்டு போகும்போது இணைப்புச் சொற்களைத் தவிர்த்திட்றிங்க. திட்டமிட்டு செய்றீங்களா, நனவிலி மனத்தோட வேகத்துக்கு ஈடுகொடுக்கவா?

பிர: திட்டமிட்டுச் செய்றதில்லை. தானாகத்தான் நிகழுது. இணைப்புச் சொற்கள் இல்லாம எழுதறதாலக் கூடுதலான ஒரு வேகம் கிடைக்குது. எல்லா நேரத்திலேயும் இது சாத்தியமில்லை. அது அபூர்வமான மனநிலையில கிடைக்கிற விஷயம். இரண்டு மூன்று கவிதையில எத்தனமில்லாமலேயே இதை செய்துபார்த்திருக்கேன். கவிதையோட வேகத்திலேயே அதை பிடிச்சி எழுதிகிட்டு போயிருக்கேன். இணைப்புச் சொற்கள் இல்லாத பட்சத்தில தனிச் சொற்கள் பிரத்யோகமா செயல்படத்தொடங்குது. இறுதிச்சொல் அடுத்த வாக்கியத்தோட தொடரை எடுத்துக்குது. இணைப்புச் சொற்கள் இருக்கிற வாக்கியத்தைவிட இது சுதந்திரமா இயங்குது.

ப.வே: தொல்காப்பியம் எப்படி உங்களுக்குப் பயனுள்ள விஷயமா இருந்திருக்கு?

பிர: ஒரு வருஷமாத்தான் படிக்கிறேன். வேறொரு பார்வை அதில இருக்கு. நான் எழுதறதுக்கு உத்வேகத்தைக் கொடுக்குது. வார்த்தை ஒழுங்கை, வடிவ ஒழுங்கை மாற்றி வேறுவிதமா எழுதிப் பார்க்கிறதுக்கான வாய்ப்பை உணர்றோம். கவிஞனுக்கான அடிப்படை அங்க இருக்கு. நவீன கவிஞனை இணைக்கிறதுக்கான சரடுகள் இருக்கு. இன்னைக்கி போஸ்ட் ஸ்ரக்சுரலிஸ்ட்கள் சொல்ற விஷயத்தை அவர் சொல்லியிருக்கிறார். அதை அரைகுறையாப் படிச்ச பண்டிதர்களால இணைச்சி சொல்ல முடியல. காரணம் பண்டிதர்களுக்குப் போஸ்ட் ஸ்ரக்சுரலிஸம் தெரியாது. இருபதாம் நூற்றாண்டு இந்திய விமர்சனத்தோட தொல்காப்பியத்தை இணைச்சிப் பார்க்க முடியும். இன்னும் கொஞ்சம் நாள்ல நானே அதை செய்வேன்.

ரா.தி: உள்ளுறை, இறைச்சி என்பது போன்ற விஷயங்களை இன்றைக்கான அர்த்த தளத்துக்கு மாத்திக்க முடியுமா?

பிர: ஒரு குறியீடு இன்னொரு குறியீட்டுக்கு இட்டுச்சென்று இல்லாத இன்னொரு குறியீட்டை உள்ளுணர்த்துவதாக அதை எடுத்துக்கலாம். அதை சிம்பல் என்றுகூட சொல்லலாம். ஜான் ஆக்கர் என்கிறவர் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். அவர் சொல்றார் சமஸ்கிருதக் கோட்பாடுகளுக்குப் பொருத்தமான கவிதைகள் தமிழ்ல இருக்குன்னு. அவுங்க முன்வைக்கிற உசட்பட்சமான கோருதல் சமஸ்கிருதக் கவிதையிலேயே கிடையாதாம்.

ரா.தி: தமிழ் மரபுக்கவிதையில இருக்கிற பண் என்ற விஷயத்துக்கும் இந்துஸ்தானி கர்நாடக சாகித்தியங்களுக்கும் உறவு உண்டா? உங்களோட இசை ஈடுபாடு கவிதைக்கு எப்படி உபயோகமா இருக்கு?

பிர: இந்துஸ்தானிக்கு வரலாறு மிகக்குறைவு. கர்நாடக சங்கீதத்துக்கு முந்தியே தமிழிசை இருந்திருக்கு. கர்நாடக இசையோட முற்பட்ட வடிவம்தான் தமிழிசை. பண் எல்லாமே ராகங்கள்தான். இந்த ராகங்களுக்கு வேற பேர் இருந்திருக்கு. அதைக் கட்டமைப்பு ரீதியா வகைப்படுத்தினதுதான் கர்நாடக சங்கீதம். மேற்கத்திய நாடுகளோட இசையை ஒப்பிட்டாக்கூட தமிழிசைதான் முன்னாடி போயிருக்கு. தமிழிசையோட ஒப்பிடணும்ன்னா கிரேக்கம், லத்தின் மாதிரியான நாடுகளின் இசையை எடுத்துச் சொல்ல முடியுமே தவிர ஐரோப்பிய நாடுகள்லகூட சொல்ல முடியாது.

முரு: இதற்கான ஆதாரங்கள் இருக்கா?

பிர: இருக்கு. டாக்டர் ராமநாதன் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். சிலப்பதிகாரத்தில தமிழிசைன்னு. இன்னைக்கி இருக்கிற கர்நாடக இசைக்கு அடிப்படையே தமிழிசைதான்னு நிறுவியிருக்கிறார். இசையோட தியரிகளை நான் படிக்கிறதுக்குக் காரணம் எனக்குள்ள இருக்கிற சில குழப்பங்களைத் தெளிவுபடுத்திக்கிறதுக்குதான். நான் இசை கேட்கிற அனுபவத்தைத்தான் கவிதைக்குள்ள கொண்டுவர்றேன். இசையைக் கேட்பதற்கு தியரி அவசியமில்லை. இந்த உலகத்தைக் காட்சி ரூபமா அறியறதைவிட ஒலி ரூபமாகத்தான் அதிகம் பரிச்சயம் பண்ணிக்கிறேன். அதனாலதான் படிமங்களைப் பயன்படுத்தறதெல்லாம் முதல் தொகுப்பிலேயே நின்னுபோச்சி. காரணம் நாதரூபமாத்தான் இந்த உலகத்தை பார்க்கிறேன். நாதரூபமா வழிபட்ற ஒரு முறை இருக்கு. நாத உபாசம்ன்னு சொல்றாங்க அந்த மாதிரியாத்தான் நான் எடுத்துக்கிறேன்.

ரா.தி: உங்க கவிதையில ராகங்களோட பெயர்களை அதிகமா பயன்படுத்தறிங்க…

பிர: அந்த ராகங்கள்லகூட சிக்கலான ராகங்களைத்தான் நான் தேர்ந்தெடுக்கிறேன். மேலோட்டமான கல்யாணி ராகத்தை விரும்பறதில்லை. தோடி, காம்போதி போன்ற சவாலான ராகங்களைத்தான் நான் விரும்புகிறேன். பாட்றவங்களுக்கே அது சவாலாத்தான் இருக்கும். பயிற்சி இல்லாதவங்க காம்போதிய எடுத்துக்கமாட்டாங்க. ராவணன் சிவன திருப்தியடையச் செய்து வரம் வாங்கக்கூடிய அளவுக்கு அந்த ராகம் இருந்திருக்கு. இண்டோலத்தை இரண்டு மூன்று கவிதைகள்ல பயன்படுத்தியிருக்கேன்.

ப.வே: ஒரு விமர்சகரா இந்த காலகட்டத்துக் கவிதைகளை எப்படி உணர்றீங்க?

பிர: கவிதை அதிகமா உருவாகிற காலகட்டம் இது. கவிதையின் தரம் ரொம்ப குறைஞ்சிருக்கு. 90களுக்குப் பிறகு தளர்வா ஆகியிருக்கு.

ரா.தி: இன்னைக்குக் கவிதை உரைநடையின் சாயலைக் கொண்டிருக்கே இதை எப்படி பார்க்கறிங்க?

பிர: பாரதி காலத்திலேயே இது தொடங்கிடுச்சி. வெகுஜனங்களுக்கு எளிமையா போய்ச் சேர்றதுக்காக இது தொடங்கப்பட்டது. ஆனால் இன்னைக்கி எழுதறவங்களுக்கு மாற்று வார்த்தை தெரியல, மரத்தை தருன்னு சொல்ற மாதிரி. அதனாலதான் இப்படி எழுதறாங்க.

ரா.தி: சிலர் உருவகம், உவமை, படிமம்ன்னு ஒரு குழப்பமான மொழியைப் பயன்படுத்தி எழுதறாங்க. இதுக்குன்னு ஒரு திருகலான மொழியை வச்சிருங்காங்க…

பிர: ஒருத்தரோட பாணியை அவர்தான் கண்டுபிடிக்கணும். வலிந்து உருவாக்கக்கூடாது. அப்படிச் செய்திருந்தா அதற்கடுத்தடுத்த தொகுதியில கண்டு பிடிச்சிடலாம். கவிதையில வார்த்தைகள் எப்படி இருக்கணும்ன்னா கவிஞன் போட்ட ஒரு வார்த்தைய வேறுமாதிரி மாற்றிப் போடமுடியாத மாதிரி அமைச்சிருக்கணும். அந்த வார்த்தையை எடுத்துட்டா வரிகள் உடைஞ்சி கொட்டிட்றமாதிரி அமைச்சிருக்கனும். அவன்தான் வெற்றி பெற்ற ஒரு கவிஞன்னு சொல்வேன். இப்படிப்பட்ட கவிதைகள் குறைவாத்தான் எழுதப்படுது.

முரு: இன்னைக்கி எழுதறவங்க எதுமாதிரியான கச்சாப்பொருளைப் பயன்படுத்தறாங்க?

பிர: கச்சாப்பொருள் குறைவாத்தான் இருக்கு. அவங்களோட அனுபவ அடுக்குகளைப் பொருத்துதான் இது அமையும். குறைச்சலான அனுபவங்களைச் சொல்றதுக்கு குறைந்த வார்த்தைகளே போதுமானதாக இருக்கு. அதனாலதான் உரைநடைத் தன்மைக்கு மாறுது. அனுபவங்கள் சிக்கல்படும்போது அது சிக்கலான வார்த்தை அமைப்பை நோக்கிப் போகுது. அடர்த்தி அதிகமாகுது.

ப.வே: மனிதன், இயற்கைன்னு பிரிச்சிகிட்டா கவிஞன் யாரோட குரலா நின்று பேசறான்?

பிர: பிளவுபட்ட ஆளுமைன்னு சொல்வாங்க. ஒன்றுக்கு மேற்பட்ட சுயமா உடைஞ்சி போறது. இதில் எந்த ஒன்றின் குரலாகவும் இருக்கலாம். ரொம்ப தெளிவா இருந்தோம்ன்னா கவிதையோட பரிமாணமே குறைஞ்சி போயிடும். முதலில் குரலை பதிவு செய்துட்ட பிறகு அதை அடையாளம் காணலாம். ஒரு வெட்டுக்கிளியோட குரலாக்கூட பேசலாம். ஆனா இன்னதுதான் பதிவு செய்றோம் என்ற பிரக்ஞை இல்லாமலேயே செய்யணும்.

முரு: உங்கள் பெரும்பாலான கவிதை முடியற இடத்தில திறந்ததா இருக்கு. இதை பிரக்ஞையோடுதான் செய்றிங்களா?

பிர: பிரக்ஞையோட செய்றதில்லை. ஆரம்பத்தில நிறுத்தல் குறி போட்டுகிட்டிருந்தேன். இப்ப அதைக்கூட போட்றதில்லை. வாழ்க்கையைப் போல கவிதையும் எங்கும் முடியாமத்தான் இருக்கு. இப்படி முடிக்கப்படாத சிம்பனிகள்கூட இருக்கு. ஒரு ஓவியம் எங்கே முடிவடையுது? ஒரு இடத்தில ஓவியம் வரையறதை நிறுத்தற மாதிரிதான் இதுவும். எங்கே தொடங்கப்பட்டதுன்னும் தெரியாது.

ப.வே: எழுத்தோட தீவிரமான மொழியில இருந்துட்டு வெளியில வரும்போது எப்படி உணர்வீங்க?

பிர: நம்முடைய சக்தியெல்லாம் உறிஞ்சப்பட்ட பின்பான ஒரு உணர்வுதான் அது. அதுல சந்தோஷமும் இருக்கு. அடுத்த படைப்பை எழுதறதுக்கு இன்னும் எவ்வளவு காலமாகுமோ என்கிற ஏக்கமும் இருக்கு.

ப.வே: இன்னைக்கி விமர்சனம்ங்கிறது தனிப்பட்ட தாக்குதலா இருக்கு. படைப்பாளியோட சொந்த விஷயங்களையெல்லாம் தொடர்புப்படுத்தியதா இருக்கு. படைப்பு வேற படைப்பாளி வேறையா?

பிர: நிச்சயமா. டி.எஸ்.எலியட் இதை ரொம்ப உறுதியாகவே சொல்றார். விமர்சனத்தை படைப்பாளியோட பர்ஸ்னாலிட்டி மேல வைக்கக்கூடாது. படைப்புமேலதான் வைக்கணும்ன்னு. மேற்கே இது கடைபிடிக்கப்படுது. இங்க இருக்கிறவங்கதான் இதுமாதிரி வேலையை செய்றாங்க.

ரா.தி: இந்த வரலாற்றுப் போக்குல இருந்து தன்னைத் துண்டிச்சிக்கிட்டு தனக்கான வரலாறு, தனக்கான அழகியல்ன்னு ஒன்றை ஒரு கலைஞன் ஏன் உருவாக்கக்கூடாது?

பிர: நமக்கு முன் வச்சிருக்கிற வரலாறு அரசியலால் கட்டமைக்கப்பட்டது. மறைக்கவேண்டியதை மறைச்சி சொல்ல வேண்டியதை சொன்ன வரலாறு. தீவிரமான ஒரு படைப்பாளி இதை மறுக்கணும். முக்கியமா கவிதை நிறுவப்பட்ட வரலாறை மறுக்குது.

முரு: வரலாறே தெரியாம நிராகரிக்கிறதுக்கும், தெரிஞ்சி நிராகரிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு இல்லையா? இங்கே வரலாறு பற்றிய அக்கறையே இல்லாத ஒரு போக்கு இருக்கு.

பிர: வரலாறே தெரியாம எப்படி அதை நிராகரிக்க முடியும்? வரலாறு பற்றிய அக்கரைவேணும். முதல்ல அதைத் தெரிஞ்சிகிட்டு அலசி அதனோட குறைபாடுகளை நிராகரிக்கணும். உள்ள புகுந்து அதனோட குளறுபடிகளை பார்க்கணும். Thamos Pynchon என்ற நாவலாசிரியர் இரண்டாவது உலகப்போரில் நடந்தவைகளையே மறுதளிச்சி Gravity rainbow -ன்னு ஒரு நாவல் எழுதியிருக்கிறார். வரலாற்றையே மறுதளிக்கிற நாவல் அது.

ப.வே: இந்தியக் கவிதைன்னு ஒன்னு இருக்கா?

பிர: இல்லை. ஒவ்வொரு மொழிக்கும் அதற்கான நிலவெளின்னு ஒன்னு தனியா இருக்கு. நம்மால பிராந்திய ரீதியான கவிஞனாத்தான் இருக்க முடியுமே தவிர எல்லாத்தையும் அரவணைச்சிக்கிற ஒரு இந்தியக் கவிதையை எழுதறது கஷ்டம்.

முரு: பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா மாதிரியான பலம்வாய்ந்த ஊடகங்களை எப்படி பார்ககிறிங்க?

பிர: இந்த ஊடகங்கள்ல இருந்து நூறு அடி தள்ளி இருக்கணும்ன்னு நினைக்கிறேன். எல்லா எளிமைப்படுத்தல்களும் அங்கதான் நிகழுது.

முரு: சிறுபத்திரிகை எழுத்தாளர்கள் பெரிய பத்திரிகையிலும் எழுதற அளவுக்கு முன்னேறி இருக்காங்க. இதை சாதகமான அம்சமாப் பார்க்கறிங்களா?

பிர: கவனிப்ப பெர்றதுக்காகத்தான் போறாங்க. அவுங்களோட எழுத்து மலினப்பட்டும் தளர்வாவும் மாறிடும். இரண்டு மூனு வருஷத்தில அவங்ககிட்ட படைப்பு எதுவும் பாக்கி இருக்காது.

முரு: படைப்பாளி அறவியலாளனா இருக்கணுமா?

பிர: ரொம்ப அடிப்படையான கேள்வி. பிளாட்டோ காலத்திலேயே கேட்கப்பட்டிருக்கு. ஏன்னா அழகுன்னு சொன்னாலே அது தார்மீகமா இருந்தாத்தான் அழகுன்னு ஒரு கொள்கையை முன்வச்சாரு. ஒவ்வொரு படைப்பாளியும் தார்மீக பண்புகள் கொண்டவனாத்தான் இருக்க முடியும். அவனுக்குத் தெரியாமலேயே அறவியலாளனா கட்டமைக்கப்பட்றான். ஒரு சமூக அம்சம் அவனுக்குள்ள இயங்குது. அதைத் தவிர்த்துட்டு அவனால போயிட முடியாது. இடதுசாரி எல்லையை தொடாமலேயே அறவியலாளனா இருக்கலாம்.

முரு: பெரிய கலைஞர்கள் என்று சொல்லப்பட்றவங்க ஒன்று மார்க்சியத்தை ஆதரிக்கிறவங்களா இருக்காங்க, இல்லேன்னா அதன்மேல் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறவங்களா இருந்திருக்காங்க. உங்களுடைய நிலைப்பாடு என்ன?

பிர: தத்துவார்த்தப் பின்புலம் ஒரு கலைஞனுக்கு அவசியம்ன்னு நினைக்கிறேன். எங்களோட ஆரம்ப காலத்திலே மார்க்சியத்தைப் படிச்சோம். விவாதிச்சோம். உள்ளூர் மார்க்சியர்களோட கருத்துகளைக் கவனமாக் கேட்டோம். எப்படி கவிதைக் கோட்பாடுகளை படிச்சோமோ அதே அளவுக்கு தத்துவார்த்த விஷயங்களையும் படிச்சோம். இதற்காக அதிக காலத்தை செலவிட்டிருக்கிறோம். அது எழுதறதுக்கு ஒரு தார்மீக உணர்வைக் கொடுக்குது. இந்த காலத்தில அது இல்லை. இல்லேங்கிறது முக்கியமான ஒரு குறைதான்.

முரு: இன்னைக்கி உலக அளவுல பிரச்சனையா இருக்கிற மதவாதம், அமெரிக்காவோட கட்டுக்கடங்காத தன்மை பற்றிய உங்களுடைய பார்வை என்ன?

பிர: பொறுப்புள்ள ஒரு குடிமகனா இதையெல்லாம் அக்கறையா நான் கவனிச்சிக்கிட்டுதான் இருக்கேன். ஆனால் என் படைப்புப் பிரதேசத்தைப் பாதுகாப்பா வச்சிக்கிறேன். இந்த மாதிரியான பாதிப்புள சில நேரத்துக்கு நல்ல கவிதையும்கூட வரலாம். பெரும்பாலும் மோசமான கவிதைதான் வரும். தாராளமயமாதலால் இன்னைக்கி விவசாயிகளுக்கு எற்பட்டிருக்கிற நெருக்கடிகள் எனக்குத் தெரியும். ஜி.எம் கிராப் (ஜெனிட்டிகலி மாடிபைட் கிராப்) பற்றியெல்லாம் பத்து வருஷமா படிச்சிகிட்டு வர்றேன். இஸ்ரேல் நாட்ல பருத்தி செடியில இருந்து வரும்போதே கலரா வர்ற மாதிரி கண்டுபிடிச்சிருக்காங்க. சாயம் ஏற்ற வேண்டிய அவசியமில்லை. அதனால ஏற்பட்ற விபரீத மாற்றங்களைப் பற்றியும் படிக்கிறேன். இதுமாதிரி பயிர்களால மற்ற பயிர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை படிக்கிறேன். மாதவாதம் மாதிரியான விஷயங்கள்தான் நம்பிக்கையிழக்கச்செய்யுது. கஷ்டமா இருக்கு. மனிதன் மேலேயே நம்பிக்கை இல்லாமப் போகுது.

(12-02-2005 ல் தருமபுரியில் உள்ள பிரம்மராஜனின் இல்லத்தில் பதிவுசெய்யப்பட்டது)

பிரதாப ருத்ரன் கவிதை

ஒற்றைப் பனைமரத்து ஆணியில்

அறைபட்டுக்கிடக்கிறது

முடமாகிய நினைவுகள்

மீட்பரற்ற இரவுகளில்

உருமாறிய சுவர்களுடன்

பெரும்பாலும்

புணர்ச்சி

நானுக்குத் தெரியாது நானை

முட்டிக்கொண்டதில்

இரத்தம் கசியும் சுவர்கள்

காலடியில் நொறுங்கிய

நத்தைக் கூடாய்

உதிர்கிறது எதிர்காலம்

அண்டசராசரத்தில் எங்கோ

ஒளிமங்கி மண்டைக்குள்

மையம்கொண்ட புயலாய்

சர்ச்சித்தும் ஏற்காத கல்மனம்

உன்மனம்

உளியாகியும்

சிற்பமாகா தேரைமனம்

என் மனம்

புழுவரித்த இலையாய்

மலைக் குரங்குகளின்

கூடலுக்குப்பின்

பொழியத் தொடங்கும் மழை.

ஸ்ரீசங்கர்

இறந்தொளிரும் மொழி

சுவர்களினுள்ளிருந்து

வெளியேறுகிறேன்

மழை நிலமிறங்கிப்

படர

குன்றுகள்

பறவைகளற்ற பரப்பில்

மங்கலாய் மிதக்கிறது

மறுப்பேதும்மற்றதுபோல் உயிர்

கவ்வும் மொழியை

முன்மேசையில் வைத்து

செல்கிறாய்

நீலவண்ண உடையோடு நழுவின

காலம் திரும்புகிறது

இயல்போடு

தவித்து ஒண்டின

மனிதர்கள் ஜீவித்திருக்கின்றனர்

ஆங்காங்கே

மழைப் பிரக்ஞையற்ற எருதுகள்

பசுந்தரையை மேய்கின்றன

இன்றைய தினத்தின் துக்கம்

முடிந்ததாய்

புகைத்தபடி கலைகின்றனர்

அறைக்குத் திரும்புகிறேன்

கதவைச் சாத்தியபடி

கழிந்தகால மஞ்சள்நிற மொழி

இறந்தொளிரும் நிறம்

வெளியெங்கும்.

மனோன்மணி

கிழவன் உட்கார்ந்த மனை

ஒவ்வொரு புத்தகத்திலிருந்தும் (ஒரே புத்தகதின் பிரதிகள்தாம்)

ரத்தக்காட்டேறிகள் எழும்பின் (ஒரே ரத்தக்காட்டேறிதான்)

செம்பதிப்புச் சொம்பில் வழியும் ஆதர்ஸம்

புத்திசாலிப் பையன் பாட்டலில் ஆவிகளை விற்பவன்

தூர ஓட்டிய குட்டிப் பேய்கள் அருகமர்ந்து சேவகம் பழகும்

புதிய கோட்டணிந்த கிழட்டு மாந்திரிகனுக்கு

கிட்டப்பார்வை ரொம்பவும் கிட்டப்பார்வை

பிடித்தவர் மட்டுமே தெரியும் மாயக்கண்ணாடியில்

நேற்று வேண்டாதது இன்று வேட்டலில்

எழுந்தருளப் பண்ணுவான் நினைவோடை

தள்ளிப் பிணங்கள் புரளும் காய்ந்த பாசி

உலர்ந்த தலைபிரட்டைகள் அழுகிப் புழுத்து

குடல்புரட்ட மனம் பிறாண்டும் பழைய கதைகள்

கொஞ்சம் மறதியின் ஞாபகங்கள்

யாமோ வித்தைகள் எதுவும் செய்வதில்லை

ஒரே சத்திய ஆவேசம்தான் வேடிக்கை பார்க்கையில்

பீடம் எப்போது காளியாக இருந்தது? இது வேறுபீடம்ஙு

உட்கார வைத்தான் அப்பனை மகன்

வியந்தவர்கள் பயந்துதான் போனார்கள் கொஞ்சம்ஙு

(செத்துப் போகாது இன்னும் வந்து மிரட்டும் அரூப் தருமு சிவராம் என்கிற பிரமிளுக்கு)

குலசேகரன் கவிதை

கழற்றிச் சென்றிருந்த

உடலின் மிகு பகுதியை

தேவதையின் துணிக் கொடியிலிருந்து

ரகசியமாய் மீட்டெடுத்தேன்

உலகிடமிருந்து மறைக்கும் பரவசம்

ஓடுகிறது ஒரு சுனையாக

என் அந்தரங்க மூலையில் ஒண்டி

அடிக்கடி மேலெடுத்துக் காண்கையில்

வேர்வையும் அழுக்கும் இறுகணைக்கிறது

கண்களில் உயிருண்டு எழும்புகிறது

கவர்ச்சியும் மென்மையிலுமான சருமம்

வடிவோடு ஒட்டிப்பிறந்து

நரம்புகளோடி சதைப் பற்றி

அங்கமாக உருமாறி

துடிக்கிறது விரல்கள்தோறும்

இரத்த ஓட்டத்தின் மெல்லதிர்வு

நினைவுகளில் பார்த்துப் படிந்து

பாலருந்தி வளர்ந்த ஞாபகங்களோடு

களிக்கிறேன் கைகளிலேந்தி

நீயற்றுப் போனாலும் இன்று

கண்டடைந்தேன் உன் பாகத்தை

பின் வரும் பெருங்காலம்

அதனுடனேக் கழித்துவிடலாம்தான்.

பொன்.இளவேனில்

அமிழ்தல்

தபதப வென

உயிர்தெழுந்த நெருப்பு

கருக்க வியலாமல்

முடங்கியிருந்தது

நெட்டக்குத்தலாய் உயர்ந்த

வெண் சுவற்றில்

ஊர்ந்து கொண்டிருக்கிறது பார்வை

சொற்கள் கறையாத நீரில்

வளையங்கள்

ஓய்தபாடில்லை.

அமைதியின்மை

திருகி எறிய முடியாத பாடலை

மேடை ஒலித்துக்கொண்டிருக்கிறது

பித்துப் பிடித்து அதி நடனம்

புரிகிறது பேரமைதி

பீதிக்குள்ளான ரிஷியும்

விடுதலை வேண்டுகிறான்

கருவியென பொருத்திய நிலவை

ஆசுவாசமாய் கடந்து செல்கிறது மேகம்

எத்தனை முறைதான்

அழித்தழித்து சித்திரத்தை

வரைந்து கொண்டிருப்பது.

கட்டுரை:

பழனிவேள்

ஒரு மீனின் பேரண்ட வேட்கை

இருவேறு நிலைகளை ஒன்றினைத்து சொல்லில் உருகும் பிரமிளின் ளஎழுத்துஹ கால கவிதைகள் எந்த வகையிலும் உவகையின்றி இருப்பதோடு கவிதைக் கான முஸ்தீபுகளை மட்டுமே கொண்டுள்ளன. ளவிமர்சனக் கவிதைகள்ஹ அனைத்தும் தனது தீவிரத்தின் மூலமாக அடைந்த படைப்பின் பலத்தை தனக்கு கவிதை இன்னெதென்று அறிந்து விட்டதாக நினைத்த செருக்கின் காழ்பில் கொட்டிய வறட்சியான உரைநடை வடிவங்கள் மட்டுமே. இவற்றில் உள்ள பெயர்கள் ஆட்கள் தகவல்கள் இன்று வழக்கொழிந்த விஷயங்களாகி விட்டன. அதே நேரத்தில் எதையும் மறைத்துக் கொள்ளாத கடவுளாகவும் சாத்தா னாகவும் தானே சதுரங்கத்தை மாறிமாறி ஆடிப்பார்த்ததும் தெரிய வருகிறது. ஒரு கண்ணாடியாகவும் அவரை உருவகப் படுத்தலாம்.

கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல், மேல் நோக்கிய பயணம் தொகுப்புகளில் பொதுவாகக் காணப் படும் அம்சமாக குழந்தை தன்மை, நுண்ணுணர்வு, உருமாற்றம், பேரண்ட வேட்கை, மனக்காமம், வேறொன்றாக மாறுவதன் வலி, அளப்பறியா மனிதத்தன்மையின் விழைவு, மனித மயத்தின் எதிர்ப்பு, ரட்சிப்பற்ற உலகின் குரூரம், ஈகோவும் அநாத்மாவும் இவற்றை சொல்லலாம்.

பிரமிள் கவிதைகளில் கவிஞனும் வாசகனும் உருமாற்றம்காணும் நிலையில் மனநிலை தீவிரமடைவதும் வார்த்தைகள் உதைத்துக்கொண்டு மேலெழுவதும் துரிதகதியிலான புனைவம்சமும் மிகமுக்கிய காரணிகளாகின்றன. இந்த கூற்றை எல்லா கவிதைகளுக்கும் பொருத்த முடியாமலும் போகிறது. மனத் தேட்டமும் சிந்தனையும் சந்திக்கும் ஒரு புள்ளியில் தோன்றும் பரப்பரப்பான எழுச்சியில் கவிஞனால் பிடிக்க முடிவது மிகசிறியதானாலும் அதனை வசமாக்கி மேலும் வளர்த்தெடுக்கும் ஆற்றல் அவரிடம் இருந்தாலும் தான் அடைந்தவற்றை வாசகன் அடைய தடையாக இருப்பது சொல்தேர்வில் அவர்காட்டும் புராணிகத்தன்மை. உடனே வசப்படாத தமிழ்சொல்லுக்கு பதிலாக வடமொழியை எடுத்துக் கொள்கிறார். கவிஞனோடு தாவியேறும் கணத்தில் இவை அல்லல்படுத்து கின்றன. வேறுமொழியில் எழுதி பிழைப்பு நடத்த விரும்பாதவராகத் தன்னை வெளிகாட்டும் பிரமிள் மரபார்ந்த தமிழ் இலக்கணப் பயிற்சி இருந்தும் வடசொற்களை தொடர்ச் சியாக பயன்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அதோடு இந்தியாவின் மூத்தமொழிகளாக தமிழையும் சமஸ்கிருதத்தையும் கலப்பதன் மூலம் ஒரு இந்தியத்தன்மையை மறுகட்ட மைப்பு செய்ய முயன்றாரா இல்லை கீழைதேய தேட்டத்தை இருமொழியின் பொது களத்தில் வைத்து அணுக முயன்றாரா என்பது மொழியியல் ஆய்வாளர்களாலேயே உறுதி செய்ய முடியும் என்று தோன்றுகிறது. வடமொழிச் சொற்களில் உள்ள இசைக்காக இருக்கலாம். சில சொற்களை மட்டும் குறித்துக் கொள்வோம்:

கோத்ரம், சூர்ய, சூர்யஉபாச, ஜலம், ஜடம், கபந்தம், கோதம உக்கரம், அக்ஷர, நக்ஷத்ரம், விஸ்பரூபம், வருஷம், பிரதிஷ்டை, ராக்ஷஸ, ஜாக்ரதை, ஜபி, ஸ்தலம், அஸுர, ருஜீ, இந்ர உபாச, கோதம இந்ரம், ஸ்தாவரம்.

அவரது மேல்நோக்கிய பயணம் நெடுங்கவிதை, “சேற்றில் விழுந்த சொற்கள் தானியமாயின / புல்தரைமீது பூக்களாயின / சருகுகளாகி / தெருவில லைந்தன பல என்று ஏறுமுகத்திலிருந்து திரை இரைச்சல், புகை இருப்பு, வேட்டை, சர்ஜரி, கர்ப்பம் என்று அடுத்தடுத்துவரும் பகுதிகளால் சரிவை நோக்கி விழுகிறது.

செழிப்பான செவ்வியல் கூறுகளை உள்வாங்கி பக்தி இலக்கிய காலத்திலிருந்து பாரதி வரை தொடர்ச்சியாக இசையாதிக்கம் மிகுந்த பாடல்-கவிதைகளைத் தவிர்த்து அடுத்த நிலையான பார்வைக்காட்சியாகாத செவிக்காட்சித் தன்மை கொண்ட அரூப ஓவிய சாத்தியங்களைக் கொண்ட கவிதைகளின் துவக்கம் பிரமிளின் காலம்.

வியப்பு, உற்றுநோக்கல் போன்ற குழந்தைத்தனம் பிரமிளின் கவிதைகள் காணப்படுகின்றன. அதேபோன்று அறிவின் ஆழத்திற்குள்போய் ஒரு புதிருக்குள் சிக்கிக்கொள்வதும் நடக்கிறது. பார்வை, பிரமிட், பாலை, நம்பிக்கை, அற்புதம், அருவுருவம், கவிதை, வண்ணத்துப்பூச்சியும் கடலும், கிரணம், திசைமாற்றம் போன்ற கவிதைகளைச் சொல்ல முடியும். அறிவைத்தேடும் விழைவு குழந் தையின் வியப்போடு அதிகபட்ச நுண்ணுனர்வும் துல்லியமும் கொண்டவை.

அற்புதம் கவிதை:

துருப்பிடித்த

இரும்புக் கோடுகளினூடே

சிதறும்

பயனற்ற

உப்பு நீர்ப் பாறைகள்

வரண்ட நதிபோல் கிடக்கும்

ஒரு துறைமுகத் தெரு

எங்கும்

இரும்பின் கோஷம்,

முரட்டு இயக்கம்

ஒரு தொழிலாளி

சூரியனை அவனது சிரசு மறைக்க

பனை உயர கிரேனின் உச்சியிலிருந்து

பீடிப் புகையோடு

காறித் துப்புகிறான்

அற்புதம்

விரல்கள் வில்நீத்த அம்பாய் நடுங்க

பரிதியின் விரித்த கையிலிருந்து

ஒரு மழைத்துளி பிறக்கிறாள்

முகத்தில்

வைரத்தின் தீவிரம் அவள்

மூளையில் ஒரு வானவில்

எச்சில் துளி

என் விழிப்பந்தில் வீழ்கிறது

அக்கணம், ஒரு கணம்

கிரேன்கள் லாரிகள் யாவும்

தொழிலற்றுச் சமைந்தன.

உச்சியில் நிற்கும் வாழ்க்கை பாட்டுக்கான உழைப்பாளி மீதான வியப்பு, வியர்வைத் துளியை பெண்பாலாக கருதுதல் (சமஸ்கிரு தத்தில் ஆண்பால் பெண்பால் என்ற வகையிலேயே அனைத்தும் பேசப்படுகிறது) வியர்வைத்துளியை மழைத்துளியாக பாவித்தல். அத்துளிக்குள் ஒரு மூளையில் வானவில் இருந்தாலும் வெளியே துளியின் உருவம் வைரம் போன்று தோன்றகிறது. அவன் துப்பிய எச்சில் நம் கண்ணை மூடவல்லது. குழந்தையின் நுண்ணறிதல் அடுத்தவருக்கும் அறிவிப்பது நாம் பார்க்கும் போது எதுவுமில்லை. எல்லாமே உறைநிலையில் இருப்பது போல் தோன்றுகிறது.

கண்ணாடியுள்ளிருந்து, கைப்பிடியளவு கடல் இரண்டு தொகுப்பிலுமே வரிக்குவரி கவிதையும் கவிஞனும் வாசிப்பவனும் உருமாற்றம் பெறுகிறார்கள். கவிஞன் எழுப்பும் அலைவரிசையை கிரகிக்க முடியும் போது அடையாளங்கள் வடி விழக்கின்றன. இது இயல்பாக நிகழவேண்டும். வேறொன்றாக மாறும்போது அதன் தீவிரகதியில் அது நெகிழ்வற்ற திண்மையாக மாறி விடவும் வாய்ப்புள்ளது. பிரமிளின் பல கவிதைகள் உடைக்க முடியாத பொருளாக வாசகன் முன் இடறிவிட நிற்கின்றன. கவிதை திடத்தன்மைக்கு மாறுவதன் பின்னால் கவிஞனின் மனமூர்க்கம் முன் நிற்கிறது. குறிப்பாக பிரமிளுக்கு உள்ள இந்திய புராணிகங்கள் மீதான ஆர்வம், சங்க இலக்கியத்தின் முகிழ்வு, இந்திய இதிகாசம் எனப்படும் இராமாயண மகாபாரதங்களில் உள்ள ஈடுபாடு, மரபார்ந்த நம்பிக்கைகளில் உள்ள அழுத்தமான வெளிப்பாடுகளை ஏற்பது, தத்துவ சரித்திர அறிவு, இவற்றோடு மிகமுக்கியமாக சோதிட அறிவு, வானியல் அறிவு இவை பிரமிளையும் நம்மையும் சோதிக்கிறது. ஒருகணம் திகைப்பையும் ஏற்படுத்துகிறது.

வெறும் விஞ்ஞானத்தால் மட்டுமே வானியலை புரிந்துகொள்ள முடியாது என்பதால் கீழைத்தேட்ட முறையான சோதிடத்தையும் எண் வழி கணிதத்தையும் மிக ஆழமாகப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்கிறார். வானியல் சாஸ்திர குறிப்புகள் மிகுதியாக உள்ள சமஸ்கிருதத்தையும் ஒரு அறிவியல் மொழியாக தனக்கு சார்புபடுத்திக்கொள்கிறார். அதேபோல மிக அதிக கணிதத்தரவுகள் உள்ள அரபி மொழி மீதும் காதல் இருந்திருக்கிறது.

ராகு, கோத்ரம், அடிமனம், வருகை, நம்பிக்கை, கனவு, பசி, கோதம-இந்ரம், கிழக்குவாசல் இவை அறிவு சோதிடம் இரண்டும் செறிந்த கவிதைகள்.

பிரமிளுக்கு எப்போதும் வானவெளி பற்றி பேசுவது பேருவகையாக இருந்தது. தானும் ஒரு நட்சத்திர மாகிவிடவும், அங்கே செல்ல ஒரு பறவை போன்று ஸ்தூல உடலோடு பறந்து சென்றுவிட எத்தனிக்கும் அளவு வானவியல் மீதும் பேரண்ட வெளி மீதும் வேட்கை இருந்தது. இவ்வாறு பறக்க முனைந்த கணித பௌதீக மேதைகளின் முயற்சி தற்கொலை என்ற அளவில் அபத்தமாக புரியவும் வாய்ப்புள்ளது. மிக அதிகபட்ச சாத்தியங்களை நிகழ்த்த உடல் லாயக்கானதல்ல என்ற அளவில் சுயசாவு தேர்ந்தெடுக்கப்படுகிறது. சில எழுத்தாளர்களின் சாவு ஒரு சிருஷ்டி யாகவே கணிக்கப்படுகிறது. தன் வாழ்நாள் முழுவதும் பறத்தலுக்காக காத்திருக்கும் கிரையோஜெனிக் எந்திரமாக பிரமிள் உடலை பாவிக்கிறார். இந்த எந்திரம், பற்றவைத்தும் பறக்காதபோது அதனுள் தகித்தசூடு வெறொன்றாக மாறுகிறது: மூர்க்க காமம். தீர்க்க முடியாத இது துல்லியத்திலும துல்லியத்தை அவாவுகிறது.

கருகாத தவிப்புகள் கூடி

நாவின் திரி பிளந்து

அணையாது எரியும் ஒரு பெயர்

நீ!

…………………………………………….

தழுவ விரியும்

தொடைகள் திரண்டு

பிரித்து பரித்து

இடையே ஓர்

தலைகீழ்க் கருஞ்சுடர்

எரித்து எரிந்தழைக்கும்

…………………………………………….

நிச்சலனத்தை

ஊடுருவும்

உன்மத்த விகற்பங்களில்

…………………………………………….

தசைச் சுவர்வீசும் இப்

புவன நிழல் வெளியில்

சுடர்கள் ஆடுகின்றன

பெண்குறி விரிப்பு

தசைநிழல் பிளவு

அவற்றை நோக்கி

காற்றில் ஏறும்

மயானச் சாம்பலாய்

எனது லிங்கம்

மீண்டும் எழுகிறது

பனிவிரலாய் நிற்கிறது.

பிரமிளின் தூரதிருஷ்டி-சிருஷ்டி பெண்ணின் சரணாகதியில் பறக்க முடியாமல் போய்விடுமோ என்று துரத்தத் துவங்குகிறது. அவரால் எதிலுமே சரணாகதி அடைய முடிந்ததில்லை. அறிதலும் திரும்பு தலும் மாத்திரமே. சாதகமான ஆட்களை, கருத்துகளை ஆதர்ஸ மாக்கிக்கொண்டார். புத்தர், ஜே.கே., சூஃபி என்று. அநாத்மாவை முன்வைத்து நகர்ந்தார். ஆத்மாவை ஏற்க சரணாகதி தேவை. பிராமணிய எதிர்ப்புகூட சரணாகதியிலிருந்து விடுபடவே. ஒரு பெண்ணறுப்பை திருப்திபடுத்தவே சம்பத்யம், குடும்பம், வீடு என்று தளைகள் உருவாவதாக கவிதைகளில் விவரிக் கிறார்.

தன்னையே கண்டு அவர் மிரண்டு போனார் என்பதற்கு கண்ணாடி யுள்ளிருந்து குறுங்காவியம் மிகச்சிறந்த உதாரணம். அவரது பதட்டம் கண்ணாடியில் எதிரொளிக்கும் பிரதியுருவே ஒரு பெண்பாலாக கருதினார். தன்னில் தன் உரு கண்டு காமுறும் மகாபாரத நகுலனும்கூட காலத்தை கணிக்கும் ஜோதிட வல்லுனன்தான். கண்ணாடியில் எதிரொளிக்கும் தானின் மற்ற நான்களை அசைபோடுகிறார். எல்லாமே அதிசயமாக இருக்கிறது. தனக்குள்ளே உலகின் புறத்தோற்றமும் காண்கிறார். இதுவே தன்னை வேறொன்றாக காண்பதன் வலி.

காமத்திலிருந்து விடுதலை என்றில் லாமல் காமத்திலிருந்து தப்பித்தலே தனக்கான ஆன்மீகமாக பிரமிள் கருதுகிறார். காமம் என்பதற்கு ஆசை என்றும் பொருள் உள்ளதால் ஆசைகளைப்பேசி அதனை களைத் தெடுப்பதும் அதாவது காமத்தை குடும்பத்தின் வழியில் கடக்காமல் யோகவழியிலும் கடக்காமல் பால்வீதியில் கடக்கும் முயற்சியே. இம்முயற்சியில் தோல்விகாண்பதும் பிரமாண்டமானதுதான். அதே சமயத்தில் ஒரு பெண் உடலை எதிர்கொள்வதில் உள்ள தனது இயலாமையை இப்படி திசை திருப்பிவிட்டாரோ ஏன்றும் சந்தேகிக்கத் தோன்றுகிறது. காமச்செவ்வியல் புதிய தரிசனம் அடைகிறது.

ஒரே சமயத்தில் மனிதத்தன்மை மீது உவகையும் மனிதமயமாதல் மீது வெறுப்பும் இரண்டற கலந்து வெளிப்படுகிறது. ஒட்டுமொத்த மனித குலத்தின்மேல் இருந்த நேசம்தான் தொடர்ச்சியான பார்வை வீச்சோடு தன் குறைந்த கவி காலத்தை செப்பனிட முடிந்திருக்கிறது. இந்த வீச்சு மேலெடுத்துச் செல்லமுடியாத அளவு மறைந்து திரியும் சிறுபத்திரிக்கை உலகத்தின் எதிர்முகமற்ற தன்மையால் அவரது கவி உலகம் வானியல், காமம், புராணிகம், நம்பிக்கைகள் எல்லாமே சிறு எத்தனிப்போடு முடிந்துபோகிறது. ஒரு மின்னலைப்போல மிகுந்த பரபரப்போடு தோன்றி மறைந்து விடுகிறது. அதுவும் பிரமிளுக்கு இருந்த சுயநீட்சித்தன்மை எந்த எதிர் வினைக்கும் செவி சாய்க்க முடியாத அளவு அவருக்குள் பிரமாண்ட நஞ்சுக்கொடியாக வளர்ந்துவிட்டது. அவருக்குள்ளிருந்த ஞானச் செருக்கு தன்னை ஒரு அளவுகடந்த மனிதனாக பாவிக்கச் செய்தது. எல்லாவற்றின்மீதும் அலட்சியம் ஏற்படச் செய்தது.

பிரமிளின் பாய்ச்சல் ஒரு நேர்க்கோட்டில் இருந்திருக்குமானால் தமிழ்கூறு நல்லுலகிற்கு ஒரு வானியல் அறிஞன் கிடைத்திருப்பான். பயணம் திசை திரும்பிப்போனதால் பிரமிள் என்ற முரட்டு நவீன இலக்கியவாதி தமிழுக்கு வாய்த்தது.

பிரமிளால் பறந்து கடக்க முடியாவிட்டாலும் நீரின்மீது துள்ளும் மீனாகத் துடிக்கிறார். ஆற்றோட்டத் திற்கெதிரே நீந்திநீந்தி உயிர்ப்பின் ஆதாரசக்தியின் ஊற்றுக்கண்ணையும் தரிசித்து அதையும் தாண்டி ஒன்று மில்லாமல் போகிறார்.

சிறுகதை:

சாயல்

ஜீ.முருகன் (G Murugan)

கண்களை மூடிக்கொண்டான். சிறுவனுடைய அழைப்பை அவன் பொருட்படுத்தவில்லை. எதுவும் பேசாமல் தூங்குபவன் போல இருந்தான். மதியப்பொழுதில் தூங்குவது அவனுக்கு வழக்கம்தான். மாலையில் அவன் திரும்பவும் ஓவியங்கள் வரைய புறப்பட்ட போது சிறுவனும் அவனைப் பின்தொடர்ந்து போனான். யார் யார் வீட்டுச்சுவர்களையோ தேர்ந்தெடுத்து வரைந்து கொடுத்தான். பொழுது சாய்ந்து மேற்கு மலையை நோக்கி நகரநகர ஏமாற்றம் கவியத்தொடங்கியது. இருள் மூடும் வரை காத்திருந்தான். அவன் வருவதாகத் தெரியவில்லை. சோர்வுடன் வீடு திரும்பினான். மறுநாள் பள்ளிக்கூடம் போகாமல் அவன் பின்னாலேயே சுற்றிக்கொண்டிருந்தான். அன்று மதியம் திரும்பவும் அவனுக்கு அருகில் போய் நின்று கேட்டான், “இன்றைக்கு வர முடியுமா?”.

அப்போதுதான் முதன்முதலாகப் பார்ப்பது போல அவன் பார்த்தான். தலையை சீவிக்கொண்டே கேட்டான், “எங்க?”.

எங்க வீட்டுக்கு, அம்மா வரச்சொன்னாள்

என்ன சொல்லப் போகிறானோ என்ற எதிர்பார்ப்புடன் அவன் தெருவிலேயே நின்றுகொண்டிருந்தான். அந்த ஓவியன் தனது பையைத்திறந்து வண்ணப்பொட்டலங்களை எடுத்து சோதிக்கத்தொடங்கினான். திரும்பவும் பையில் வைத்து மூடினான்.

அப்புறம் வருவதாகப் போய்ச்சொல்

இந்த பதில் வெறும் சமாதானத்திற்காகவே சொல்லப்பட்டதாக அவனுக்கு ஒலித்தது. நம்பிக்கையை இழந்தான். முகம் வாடிப்போனது. அழுகையின் விளிம்பிலிருந்து சொன்னான், “அம்மா காசுகொடுப்பாங்க

அந்த காசை அவுங்களையே பத்திரமா வச்சிக்கச்சொல்லு

மதிய தூக்கத்திற்கான ஆயத்தத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டானே தவிர இவனைப்பற்றிய கவனம் கொள்ளாதவனாகவே காணப்பட்டான். கண்களில் ஈரம்கொப்பளிக்க அங்கிருந்து கிளம்பிப்போனான் சிறுவன்.

ஏதோ ஒரு உள்ளுணர்வின் எச்சரிக்கை அவனை தடுத்துக்கொண்டே இருந்திருக்கவேண்டும். அவனைப்போன்ற நாடோடிகள் கடைபிடிக்கும் ஒருவித ஒழுங்குமுறைகளுக்கு கட்டுப்பட்டவனாகவே அவன் காணப்பட்டான். கிராமத்தவர்களிடம் ஒட்டி உறவாடவில்லை. பேச்சுகூட அவசியம் கருதித்தான். பெண்களிடம் பெரும்பாலும் அவன் பேசுவதில்லை. தனக்கான ஒரு உலகத்தில் உள்அமிழ்ந்துகிடப்பவனைப்போலவும், வேண்டிய பொழுது வெளியேவந்து நடமாடிக்கொண்டிருப்பவனைப்போலவும் காணப்பட்டான். காசைக்கூட பிரதானமாகக் கருதுவதில்லை. கொடுப்பதை வாங்கிக்கொண்டான். சிலர் சன்மானமாக தானியங்களைக் கொடுத்தபோது அதை கடையில் விற்று காசாக்கி வைத்துக்கொண்டான். அவனுடைய சுருண்ட தலைமுடி ஒரு தேன்கூட்டைப் போல இருபுறமும் நீண்டு தொங்கியது. அதை அவன் பிரத்யேகமாகப் பராமரித்தான். ஒவ்வொரு ஓவியத்தை வரைந்து முடித்தப் பின்னும் சீப்பினால் முடியை ஒழுங்குபடுத்திக் கொண்டான். தொலைவிலிருந்து வருபவர்களிடம் காணப்படும் பேச்சு வேற்றுமைகளும், உடல் அசைவுகளும் அவனிடம் காணப்பட்டன. இதுவரை காணாத புதுவகை நாடோடியாக இருந்ததில் அவன் செயல்கள் வினோதமானவையாகவே அவர்களுக்குத் தோன்றின.

ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்ட இரண்டு பைகளை தோளில் முன்பின்னாக தொங்கவிட்டபடி ஊருக்குள் நுழைந்தவன், முதல் ஓவியத்தை ஊர்ப் பெரியவர்களின் அனுமதியுடன் பிள்ளையார் கோவிலில் வரைந்தான். தனது விரல்களையே தூரிகையாகப் பயன்படுத்தினான். வண்ணங்கள் குழைக்கப்பட்ட பாத்திரங்களிலிருந்து ஒற்றி எடுத்த விரலை சுவரில் வைத்து நகர்த்திக் கோடுகளை உருவாக்கினான். கோவில் வாசலின் இருபக்கமும் இரண்டு ஓவியங்கள். ஒருபக்கம் சிவன் பார்வதி மடியில் பிள்ளையார் உட்கார்ந்திருப்பது போன்றும், இன்னொரு பக்கத்தில் பெருத்த ஆகிருதியுடன் நின்று கொண்டிருக்கும் ருத்திர விநாயகர். ஆசிரியர்கள் கேட்டுக்கொண்டதற்காகப் பள்ளியின் சுவர்கள் முழுக்கவும் வண்ணங்களால் நிரப்பினான். குமிழ்களைப்போன்று மிதக்கும் மேகங்களுக்கிடையே பறவைகள் பறந்தன. செடிகொடிகளுக்கு மத்தியில் விலங்குகள் திரிந்தன. இந்திய வரைபடத்தையும் அதில் பாரதமாதா தேசியக்கொடியைப் பிடித்துக்கொண்டு நிற்பது போல ஒரு பெரிய ஓவியத்தை சாரங்களின் உதவியுடன் வரைந்த போது ஊரே அவனுடைய திறமையைத் திகைத்து நின்று பார்த்தது.

ஊர்கவுண்டரின் வீட்டில் அண்ணாதுரையையும், எம்ஜியாரையும் வரைந்தான். கருணாநிதியும், எம்ஜியாரும்தான் ஊர்முழுக்க சிரித்துக்கொண்டிருந்தார்கள். சில வீடுகளில் இயற்கை காட்சிகளை வரைந்தான். அவற்றில் மான்கள் இடம்பெற்றன. காட்டில் மேய்வது போலவும் தாவி ஓடுவது போலவும் தடாகத்தில் நீர் அருந்துவது போலவும். ஒன்றின் வாலை இன்னொன்று பற்றி வரிசையாகச்செல்லும் யானைக்கூட்டத்தை நீண்ட சுவர்களில் வரைந்தான். சில இடங்களில் தாயுடன் நின்றுக் கொண்டிருக்கும் குட்டி யானை.

யாரு?”

நான்தான்

இரவு நடுஜாமத்தை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் அவனைத்தேடி வந்திருந்தாள். சட்டையணியாமல் வெற்றுடம்புடன் அவன் தாழ்வாரத் தரையில் படுத்திருந்தான். இந்த நேரத்தில் அவனை காணவந்திருக்கும் துணிச்சல் அவளுக்கே வியப்பையளித்தது. யாராவது பார்த்துவிடுவார்களோ என்று தாழ்வாரத்திற்குள் வந்து தூணருகே நின்று கொண்டாள். சிறுகல்லை எடுத்து தூணில் லேசாகத்தட்டினாள். மிரண்டவனாக அவளைப் பார்த்தான்.

இந்த நேரத்தில் என்ன?”

பையன்கிட்ட சொல்லி அனுப்பியிருந்தேன்

……..

என் வீட்டுக்காரோட படத்தை வரையனும்

இறுகி முடியப்பட்ட அவளுடைய கூந்தலினால் அவள் முகம் முன்நகர்ந்து வருவது போலத்தோன்றியது. தூணைப் பிடித்திருந்த கையின் நளின நீட்சியினால் அவன் கவரப்பட்டான். இது போன்ற ஒரு சந்திப்பை அவன் எதிர்பாக்கவே இல்லை. அவனுடைய மனம் அச்சத்தில் படபடத்தது.

போட்டோ எதாவது இருக்கா

இல்ல, எடுத்து வைக்கல

பின்ன எப்படி…?”

பதில் எதுவும் சொல்லாமல் சிறிது தயங்கி நின்றவள் சொன்னாள், “உன் ஜாடதான் அதுக்கும்

நீரின் ஆழத்திற்குள் கட்டற்று நீந்திக்கொண்டிருக்கும் அவனைக் குறிவைத்து ஒரு வலை இறங்கி வருகிறது. ஒரு பெண்ணின் தனிமை, அவளுடைய அருகாமை, இணக்கம்…

அதுக்கும் உன்ன மாதிரி சுருட்ட முடிதான்

………..

கண்ணுகூட பொடிகலராத்தான் இருக்கும்

நடுஇரவு நேரத்தில் வந்து அவனை பெயரிட்டு அழைக்கும் ஒரு பிசாசாகவே அவள் அவனுக்குத் தோன்றினாள். ஏதோ ஒன்று அவளை நகர்த்திக்கொண்டுவந்து இங்கே நிற்கச்செய்செய்கிறது. அவளுடைய நினைவுகளில் எங்கும் நிறைந்திருக்கும் அவள் கணவன்; அவளுடைய உடலில் தன்னை படியவிட்டுச் சென்றவன்; முயன்றால் அவளிலிருந்து அவன் உருவத்தை பெயர்த்தெடுத்துவிட முடியும் போலத் தோன்றியது. அவனுடைய விரல்கள் தொடும் தூரத்தில்தான் அவள் நின்றிருக்கிறாள். துணிச்சலுடன் அவளுடைய கையைப்பற்றி அழுத்தினான். நடுக்கத்துடன் அவள் தனது கையை இழுத்துக்கொண்டாள்.

தையல் இலையைக் கொண்டுவந்து அவனுக்கு முன் வைத்தாள். ஒரு உருண்டை களியை வைத்து கீரையை ஊற்றினாள். அவன் சாப்பிட்டான். அவர்கள் எதையும் பேசிக்கொள்ளவில்லை. ஓவியனின் வரவை அறிவிக்க அவளுடைய மகன் அவசரமாக நண்பர்களைத்தேடி ஓடினான்.

சாப்பிட்டு முடித்தப்பின் இலையை எடுக்கப்போனவனைத் தடுத்தாள். கையைக் கழுவிக்கொண்டுவந்து திண்ணையில் உட்கார்ந்தான். பையிலிருந்து ஒரு அட்டையை எடுத்தான். அதுவரை அவன் உபயோகித்து அவர்கள் பார்த்தேயிராத சிறிய வண்ணக்குழாய்களையும், ஒரு தூரிகையையும் எடுத்தான்.

நான்கைந்து சிறுவர்களுடன் அவள் மகன் வந்து சேர்ந்தான். அவனிடம் ஒரு தட்டு வேண்டுமென்று கேட்க, உள்ளே ஓடிப்போய் ஒரு தட்டை எடுத்துவந்து கொடுத்தான். அதில் வண்ணங்களைக் குழைத்து அட்டையில் வரையத்தொடங்கினான். கொஞ்சம் கொஞ்சமாக உருப்பெற்று எழுந்த ஓவியத்தை அவனும் அவனுடன் வந்திருந்த சிறுவர்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வரைந்து முடித்தப்பின் அதை பையனிடம் கொடுத்தான். அதுவரை அவன் கண்டிராத ஒருமனிதனின் உருவம் அதில் வரையப்பட்டிருந்ததை குழப்பத்துடன் பார்த்தான்.

உன் அம்மாகிட்ட கொண்டுபோய்க் காட்டு… வண்ணக் குழாய்களையெல்லாம் எடுத்துவைக்கத் தொடங்கினான்.

அவள் சொன்னாள், “உன் அய்யாதான்.

கண்களில் பொங்கி வந்த கண்ணீரை முந்தானையால் துடைத்துக்கொண்டாள். உள்ளுக்குள் கிளர்ந்தெழுந்த உணர்வலைகளால் சிதறித் தெறித்துவிடுபவளாகத் தெரிந்தாள். கைகளால் பற்ற முடியாத வாழ்வின் கணங்கள் அவளுக்கு மேலே ஒரு இலையைப்போல அசைந்து நகர்ந்துகொண்டிருந்தது.

அவள் வெளியே வந்த பார்த்தபோது பையை எடுத்துக்கொண்டு தெருவில் இறங்கி நின்றிருந்தான் அவன்.

நான் வர்றேன்

அவன் கண்களை சந்தித்துவிட்டு கீழே குனிந்துகொண்டாள்.

ஏதோ சொல்ல விரும்பியவனைப்போல தயங்கி நின்றவன் அவளுடைய மகனின் வருகையால் தடுக்கப்பட்டவனாக, மாலை வெய்யிலின் ஆரஞ்சி நிற ஒளியோடு தெருத் திருப்பத்தில் மறைந்து போனான்.

அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். நிச்சயமில்லாமல் எல்லாமே ஒரு பெரிய மிருகத்தின் உடல்மேல் அசைவுகொள்வது போலவும், மிருகம் புறண்டு படுக்கும்போது காட்சிக்குள்ளதெல்லாம் நிலைகுலைந்து சரியும் என்பதாகவும் அவளுக்குத் தோன்றின.

இதுதான் அவனுடைய கடைசி விடைபெறுதலோ என்ற எண்ணம் தோன்ற துணுக்குற்றாள். ஏன் யோசனைகள் இப்படி போகவேண்டும் என்று தன்னையே கடிந்து கொண்டாள். அவன் விட்டுச் சென்ற நிழல் அதோ நிற்கிறது பார், அவன் நிச்சயம் போகமாட்டான் என்றது மனம்.

நம் உடலும் மனமும் சமாதானம் கொண்டாலும் கனவுகள் ஏன் இரக்கமற்று அலைகின்றன? அன்று பின்னிரவு நேரத்தில் ஒரு துர்க்கனவால் இப்படித்தான் அவள் துயரமுற்றாள்; அவன் ஊரைவிட்டு போய்விட்டதுபோல. சுவர்களிலிருந்த மான்களும், யானைகளும், தேவர்களும், தலைவர்களும் அவன்கூடவே புறப்பட்டுப் போய்விட்டிருந்தார்கள். சுவர்கள் வெறிச்சிட்டுக் கிடக்கின்றன. அவனை ஏமாற்றுக்காரன் என்றும், சூன்யக்காரன் என்றும் பேசிக்கொண்டு அலைகிறார்கள் மனிதர்கள். கனவின் இறுதியில் ஒரு பாறையின்மேல் சந்திக்கிறாள் அவனை. பாறையின் கதகதப்பு அவளுடைய வெற்று முதுகை அழுத்துகிறது. குளித்துக்கொண்டிருக்கும்போதே ஈர ஆடைகளுடன் புறப்பட்டு வந்திருக்கவேண்டும். கால்களுக்கு நடுவிலிருந்து சிரிக்கிறான் அவன். அந்த ஓவியனோ, அவளுடைய கணவனோ இல்லை, முன்பொரு நாள் கரும்புத் தோட்டத்தில் இணைசேர அழைத்த கங்காதரக் கவுண்டன்தான் அவன். துணுக்குற்றவளாக அவனை தள்ளிவிட நினைத்தாலும் அவளால் முடிவதில்லை. கை கால்கள் செயலிழந்து கிடக்கின்றன. வாயிலிருந்து பேச்சும் எழவில்லை. உள்ளுக்குள் உடல் நொருங்கி விழுவதுபோல இருக்கிறது. பாரம் விலகிய கணத்தில் விழிப்பு கொள்கிறாள்.

காலை வெளிச்சம் வெள்ளியை உருக்கி ஊற்றியது போல ஊடுருவி வருகிறது. எவ்வளவு நேரம் தூங்கிவிட்டோம் என்று பதட்டம் கொள்கிறது அவள் மனம். ஜாமத்தை கடந்து தூங்கியதுதான் காரணம். உடலின் களைப்பு அவளை மீண்டும் படுக்கையில் வீழ்த்த எத்தனிக்க அவள் வெட்கமுறுகிறாள். உடலே கசகசப்பில் அமிழ்ந்து கிடப்பது போல தோன்றுகிறது.

அருகே படுத்திருக்கும் மகனைப் பார்க்கிறாள். அவனிலிருந்து விலகிப் போய்க்கொண்டிருப்பதுபோன்ற ஒரு உணர்வு வந்து தாக்குகிறது. அவளைப்பற்றியே அவளுக்குள்ளிருக்கும் ஒரு நம்பிக்கையின்மைதான் கரணமா? அவன் முகம் முன்பு போல இல்லாமல் ஏதோ ஒன்றாக மாறித்தெரிவதைக்கண்டு திடுக்கிடுகிறாள். இல்லை தூக்கத்தில் இருப்பதால் அப்படி தோன்றுகிறதோ என்னவோ. ஒருவேளை அவனும் தன்னைப் போல ஏதோ கனவினால் ஆகர்ஷிக்கப்பட்டிருக்கலாம் என்று சமாதானம் கொள்கிறாள். ஆரஞ்சு நிற ஒளி ஒன்று அவன் முகத்தில் படிந்து மறைகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: